தந்தை பியோவும் காவல் சம்மனசுகளும் -5

“ அவர் உன் துணைக்கு வந்த காவல் தூதர்தான் “

1947-ல் மார்கரிட்டா கஸ்ஸானோ என்னும் பாத்ரே பியோவின் ஞான மகள், அவரது மடத்திலிருந்து வெகு தொலைவிலிருந்த ஒரு சின்ன அறையில் தங்கியிருந்தாள். அந்நாட்களில் ரோட்டாண்டாவில் தெரு விளக்குகள் இருக்கவில்லை. சாலையும் கற்கள் நிறம்பி பாதுகாப்பற்றிருந்தது. மார்கரீட்டா தினமும் தந்தை பியோவின் திருப்பலியில் பங்கு பெறுவதற்காக பின்னிரவு மூன்று மணிக்கே எழுந்து தயாராகி புறப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். மடத்தை நோக்கி கும்மிருட்டில் அவள் நடந்து வரும்போது  தனக்கு மிக அருகில், “ ஒன்று, இரண்டு… “ என்னும் ஓர் ஆண் குரலைக் கேட்டாள். இது அவளுக்கு முதலில் மிகுந்த அச்சத்தை வருவித்தது. ஆனால் பாத்ரே பியோவிடம் இது பற்றிக் கூற அவளுக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவர் அவளிடம்:

“ அது உன்னோடு துணைக்கு வரும் உன் காவல் தூதரின் குரல்தான். அவர் உன் காலடிகளை எண்ணியபடி உன்னுடன் வருகிறார். உன்னைக் காவல் காத்தபடி தாம் எப்போதும் உன்னருகில் இருப்பதை உனக்கு காட்டுவதற்காக இப்படி செய்கிறார் “ என்று சொல்லி அவளுக்குத் தைரியம் தந்தார்.

2.  “ என் காவல் தூதர்தான் உன் காரை ஓட்டி வந்தார் “

பியர் ஜார்ஜியோ பியாவாட்டி என்பவர் 1960-ல் ஒரு நாள் ஃப்பிளாரன்ஸ் நகரிலிருந்து ரோட்டோண்டோவுக்கு கார் ஓட்டியபடி வந்து கொண்டிருந்தார். நெப்போலி நகரை நெருங்கியபோது களைப்பும், தூக்க மயக்கமும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. எனவே ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு அவர் காஃபி அருந்தினார். இனி மூன்று மணி நேரப் பயணம் எஞ்சியிருந்தது. இனி நடந்ததை அவர் கூறக்கேட்போம்.

“ எஞ்சினை ஸ்டார்ட் செய்து, ஸ்டீயரிங்கில் கைகளை வைத்தது மட்டும்தான் எனக்கு நினைவிருக்கிறது. அதன் பின் எனக்கு எதுவும் நினைவில்லை. ரோட்டோண்டோ மடத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை என் கார் அடைந்த போதுதான் யாரோ என்னை உலுக்கி என்னை எழுப்பி, “ இனி நீங்களே கார் ஓட்டுங்கள் “ என்று சொல்வதை நான் கேட்டேன். ஆனால் யாரையும் நான் காணவில்லை “.

பியாவாட்டி பாத்ரே பியோவிடம் இதுபற்றி அறிவித்த போது அவர் பதிலுக்கு, “ நீ சொல்வது சரிதான். நீ வழி முழுவதும் தூங்கிக் கொண்டு வந்தாய். என் காவல் தூதர்தான் உன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார் “ என்றார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

சிந்தனை : நாம் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் மோட்சத்தில் வாழ்வதைப் போல வாழலாம்…பல சலுகைகள்  நமக்குக் கிடைக்கும்.. இது போன்ற சலுகைகளும் அதில் அடங்கும்.… இறைப்பற்றும், விசுவாசமும் இருந்தால் போதும்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !