அழியா நாவும் அற்புதங்களும்

"உம்மிடமிருந்து வரும் உதவியை நினைத்து என் நெஞ்சம் அக்களிப்பதாக...” (சங்.125) 

அந்தோனியார் இறைவன் திருவடி சேர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கல்லறை திறக்கும் நிகழ்ச்சி 1263-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. கப்பூச்சின் சபை பெரும் மேலாளர் பெனவெந்தூர் உடன் இருந்தார். அவரது உடல் அழிந்து விட்டது. எலும்புகளே இருந்தன. ஆயினும் அவரது நாக்கு அழியாமல் இருந்தது. இதனைக் கண்ட பெனவெந்தூர் உணர்ச்சி வசப்பட்டடு, ''ஓ! ஆசீர்வதிக்கப்பட்ட நாவே! நீ எப்பொழுதும் ஆண்டவரைப் புகழ்ந்தாய்! பிறரையும் புகழச் செய்தாய்! இறைவனுக்கு முன் நீ பெற்ற பெருந் தகுதியை நாங்கள் இப்பொழுது கண்கூடாகக் காண்கிறோம்'' என்றார்.

இப் பெனவெந்தூரும் திருச்சபையின் மறைஇயல் மேதை. பின்னர் புனிதர் பட்டம் பெற்றவர்.

இன்றைய இறைவாழ் மக்களுக்கு புனிதரது நாவு பாடம் கற்பிக்கிறது. கோள், புறணி, மற்றவரை கெடுத்துப் பேசுதல், தகாத வார்த்தைகள், பொய்யுரை இறைவனை இகழ்தல் போன்றவைகளை நம் நாவு செய்து வருகின்றது. துயருற்றவருக்கு நம் நாவு ஆறுதல் சொல்கின்றதா? மற்றவர் மனதை மகிழ்விக்கின்றதா? இறைவனைப் புகழ்கின்றதா? பல பேரரசுகள் எழ-விழ நாவன்மையே காரணம். நீதி மன்றத்தில் வழக்குரைஞரின் நாவன்மையால் கொலை பாதகன் விடுதலை பெறுகிறான்.

வாழ்க என்பதும் வீழ்க என்பதும் ஒரே நாவு. பொய்யான நாவினால் வருங்கேடு உயர இருந்து கட்டாந் தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது” (சீராக். 20/20) என்றவாறு அவர் தன் நாவைக் கையாண்டார்.

அவரது நாவு இதுவரை அழியவில்லை . பதுவாபுரி பேராலயத்தில் ஒரு அழகிய பேழையில் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 1310-ம் ஆண்டு அந்தோனியாரின் உடல் ஆலய மத்தியில் அடக்கஞ் செய்யப்பட்டது. இறுதியாக உடலை கல்லறைக்கு மாற்றுதல் 1350- ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு 9-ஆம் லூயிஸ் மன்னரின் கொள்ளுப்பேரன் கருதினால் கிதோ-டி-மொண்ட் போர்டு முன்னிலையில் நிகழ்ந்தது. அவர் கூஜே : செல்லும் வழியில் கடும் பிணியுற்றார். நலம் பெற்றால் புனிதரது எலும்புகள் மாற்றும் வைபவத்தில் கலந்திடுவதாக வேண்டினார். குணம் கிடைத்தது. எனவே அவரும் இதில் பங்கு கொண்டார்.

ஒரு அழகிய சிற்றாலயம். பேராலயத்தினுள் எழுப்பப்பட்டு, இந்த அருளிக்கப்பெட்டி அதில் மிக மரியாதையுடன் வைக்கப்பட்டது.

வீடு திரும்பும்போது, தனது மறை மாவட்டமான கூஜேவிற்குத் தூயவரின் அருளிக்கம் சிறிதளவு எடுத்துச்சென்றார்.

மறை மேதை பட்டம்

"அகமகிழ்வாய் ஆனந்த போர்த்துக்கலே சந்தோஷ பதுவையே" எனப்புகழ்பாடி 1646 - ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16-ம் நாள் பாப்பிறை 12-ஆம் பத்திநாதர் “அந்தோனியார், திருச்சபையின் மாமேதை” என்ற பட்டத்தை அளித்தார். அதாவது பெரும் வேதபாரகர் என்பதாகும். இப்பட்டம் பெற்ற புனிதர்கள் ஒரு சிலரே.

கடிதங்கள் அற்புதமாய்ச் செல்லுதல்

அந்தோனியார் இறக்குமுன் ஒரு கடிதம் எழுதி தன் மேசைமேல் வைத்தார். அது சபை மேலாளருக்கு கொண்டு செல்லப்படவேண்டியது. எடுத்துச் சென்றிட எவரும் இல்லை. மேசை மீது வைத்து விட்டு வெளியே வந்தார். கடிதத்தைக் காணவில்லை. தேவதூதர்கள் அதனை எடுத்துச் சென்றனர். பதிலும் கிட்டியது.

ஸ்பெயின் நாட்டு டான்றி வணிகன் தென்அமெரிக்கா சென்றான். அவனது மனையாள் கடிதம் எழுதினாள். பலநாட்கள் கடந்தும் பதிலில்லை . கடிதம் ஒன்று எழுதி மடத்திலுள்ள அந்தோனியார் சொரூபத்தின் கரத்தில் வைத்துவிட்டு வீடு சென்றாள். அடுத்த நாள் சொரூபத்தின் கையில் பதில் கடிதம் இருந்தது. கோவில் ஊழியன் அதை எடுத்து விட முயன்றும் இயலவில்லை . அப்பெண் வந்து கடிதத்தை எடுத்தாள். பிரான்சிஸ் சபைத்துறவி ஒருவர் அதனைத் தம்மிடம் தந்தார் என எழுதப்பட்டிருந்தது. அதனுள் 300 தங்கக்காசுகளும் இருந்தன. தன்மீது இரங்கி ஏழை பங்காளன் அந்தோனியார் தாமே அஞ்சலை எடுத்துச் சென்றார். என அறிந்து நன்றி நவின்றாள்.

இறந்த சிறுவனை உயிருடன் கொணர்தல்

அந்தோனியார் பெற்றோரின் மூத்தமகன் என வரலாறு கூறுகிறது. . அவருடன் பிறந்தோர் எத்தனைபேர் என அறிய இயலவில்லை . ஆயினும் அந்தோனியாரின் சகோதரி டோனா அம்மையார் என ஒருவர் இருந்தார் என்று ஒரு புதுமை வழி அறியலாகின்றது.

டோனா அம்மையாரும் அவரது கணவரும், பிள்ளைகளும் படகில் பயணம் செய்யும்போது படகு மூழ்கியது. ஐந்து வயதுள்ள சிறுவனை மட்டும் காணவில்லை . அவள் அழுது பிரலாபித்தாள். "என் அன்பு சகோதரனே, என்னை மறந்தீரோ? என்னை எவ்வளவாக நேசித்தீர்! நீர் யார்யாருக்கெல்லாமோ உதவி செய்து புதுமை வள்ளல் என்று பெயர் பெற்றீரே! புனிதர் பட்டமும் பெற்றீரே! என் குழந்தையைக் காப்பாற்றி உம் சொந்தத் தங்கைக்கு உதவலாகாதா?' என உரிமையுடன் தன் அண்ணனை நோக்கி மன்றாடினாள்.

புதுமையாக பையன் மீண்டும் கிடைத்தான்.

தன் தமையனுக்குச் செய்த வாக்குறுதிப்படி சிறுவனை பிரான்சிஸாரின் குருமடத்திற்கு அனுப்பினாள். சிறந்த துறவியாக வாழ்ந்தான்.

இறந்த மூவருக்கு உயிர் தருதல்

பதுவை நகருக்கருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் யூரோலியா என்ற சிறுமி குளத்தில் வீழ்ந்து இறந்தாள். சிறுமியின் தாய் அந்தோனியாரை வேண்ட, மாண்ட பெண் உயிர் பெற்றாள். தாயும் சேயும் புனிதரின் கல்லறைக்குத் திருயாத்திரை சென்றனர்.

டிரவிஸோ என்ற ஊரிலுள்ள விறகு வெட்டியின் ஒரே மகன் இறந்தான். தந்தை அந்தோனியாரின் பக்தன். தமக்கு ஞான வள்ளல் உதவி செய்வார் என முழுமனதுடன் நம்பி சடலத்தை சவப்பெட்டியில் வைத்திட அவன் மறுத்தான். மூன்றாம் நாள் புதல்வன் உயிருடன் எழுந்தான்.

1775ல் அந்தோனியார் பிறந்த பட்டணமான லிஸ்பனில் பெரும் நிலநடுக்கத்தால், பலத்த சேதம் ஏற்பட்டது. அந்தோனியார் பீடத்திற்கு எந்த அழிவும் ஏற்படவில்லை . இந்த ஆபத்து வேளையில் ஆலயத்தினுள் ஒரு சிறுவன் சிக்கினான். அவன் மூன்று நாள் வரை அற்புதமாய் ஆகாரம் அளிக்கப்பெற்று உயிருடன் மீண்டான்.

பதுவை நகரிலுள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறு குளத்தில் ஒன்றரை வயதுள்ள குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. அந்தோனியாரை உறுதியுடன் வேண்ட அக்குழந்தை உயிர் பெற்றது. மகிழ்ந்த தாய் நன்றியறிதலாக சிறுவனின் நிறைக்கேற்ப தானியம் அன்பளிப்புச் செய்தாள்.

மனந்திரும்பிய அராபியர்

தமாஸ்கு பட்டணத்தில் அராபியத் தளபதி ஒருவர் வாழ்ந்தார். இரண்டாவது உலகப்போரின் போது அவர் மனைவியையும், சிறுமிகளையும் பாதுகாப்பிற்கென பிரான்ஸ் மாநகரில் விட்டு வந்தார். அவர் திரும்பியதும் துக்க செய்தி அவருக்காகக் காத்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸைப் பிடித்து விட்டார் என்பதே அச்செய்தி. தன் மனைவி, மகள் கதி என்ன ஆனதோ? என நினைத்து மனம் உடைந்தார். பிரான்ஸ் சென்ற அவருக்கு ஒரு புலனும் கிடைக்கவில்லை. இவர் நண்பர் ஒருவர், வத்திக்கானுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் இதனைக் கண்டுபிடித்து உதவுவர் என்றார். பாப்பானவரால் இத்தகைய பணிக்கென்று உண்டாக்கப்பட்ட அலுவலகத்துடன் தொடர்பு கொண்டனர். அவர்களும் உதவி செய்ய முன்வந்தனர். புனித அந்தோனியாரை மன்றாட தம் நண்பரை ஊக்குவித்தார். இவர் நண்பர் வெள்ளப்பெருக்கில் திக்குமுக்காடும் தனக்குக் கிடைத்த மிதப்புக்கட்டை என, அவரும் தூயவரிடம் நம்பிக்கை வைத்தார்.

ஜேர்மெனிக்குச் செல்லும் வழியில் அவன் மனைவி இறந்தாள் என்றும், மில்லா என்ற சீமான், மகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார் என்றும் வத்திக்கான அறிவித்தது. அங்கு சென்று, தேடி அலைந்தார்.

ஒரு நாள் அந்தோனியார் ஆலயம் சென்று செபித்துக் கொண்டி ருக்கும் போது 12 வயது சிறுமியொருத்தியும் செபித்த வண்ணமிருந்தாள். அவளை யாரோ ஒருவர் "மிர்ஸர்' என அழைத்தார். அவள் என் பெயர் மேரி என்றாள். அவளே தன் மகள் எனக் கண்டு கொண்ட அராபியத் தளபதி மிர்ஸ்சருடன் இல்லஞ் சென்றார். சம்பாசணையின் போது இவர் தந்தையென அவர்கள் அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அராபியரும் கத்தோலிக்கரானர்.