அந்தோனியார் செய்து வந்த செபங்கள்

"என்னை நோக்கிக் கூப்பிடுவான். அவன் செபத்தைக் கேட்பேன். துன்ப வேளையில் அவனோடு இருப்பேன். அவனைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவேன்" (சங்.90/15)

தேவதாய் மீது

புனித அந்தோனியார் நாள்தோறும் ஆன்ம தூய்மையைக் காப்பாற்ற தேயதாய்க்கு தம்மை முழுவதும் அர்ப்பணித்து அதற்காக பின்வரும் 3 ஜெபங்களைச் சொல்லி 3 அருள்நிறை மரியே... செபித்து வருவார்.

செபத்தின் வல்லமையை அறிந்த அவர், கற்புக்கு விரோதமான சோதனை உள்ளவர்கள் தம்மிடம் ஆலோசனை கேட்க வரும்போது அச்செபத்தையே சொல்லி வர புத்தி சொல்வார்.

செபம்

தேவ பாலனைப் பெறும் முன்னும் கன்னிகையான மரியே! என் ஆத்தும சரீரத் தூய்மையைப் பாதுகாத்தருளும். (ஒரு அருள்)

தேவ பாலனைப் பெறும்போதும் கன்னிகையான மரியே! என் ஆத்தும சரீரத் தூய்மையைப் பாதுகாத்தருளும் (ஒரு அருள்)

தேவ பாலனைப் பெற்றபின்னும் கன்னிகையான மரியே! என் ஆத்தும சரீரத் தூய்மையைப் பாதுகாத்தருளும். (ஒரு அருள்)

இறைவன் மீது

ஓ! பேரொளியே, மட்டில்லாத இறவைா! நித்திய பிதாவே, அறிவை அளிப்பவரே! ஆதியில் இருந்து அனைத்தையும் அறிந்தவரே! இருளையும் ஒளியையும் படைத்தவரே! ஞான விவரங்களை சொல்லொண்ணா விதமாய் வழங்கும் தூய வள்ளலே! உமது சத்தியத்தை வெளியிட்டு நிலைநாட்ட, கூரிய வாள்போல் உதவும்படி இவைகளை நடத்தியருளும்.

ஓ ஆண்டவரே! உம் அற்புதங்களை அனைவருக்கும் எடுத்துரைக்க என் நாவை கூரிய அம்புக்கு “ஒத்ததாகச் செய்தருளும்.

ஓ! இறைவா! உமது சத்தியங்களை என் இதயத்தில் சரியாய் உணரவும், என் மனதில் நன்றாய் நினைக்கவும், ஆன்மாவில் செம்மையாய் தியானிக்கவும் உமது தூய ஆவியை வரவிடும்.

நான் பக்தியாயும், தூய்மையாயும், அன்பாயும், இரக்கத்துடனும் - பேச எனக்கு ஆர்வத்தையூட்டும். முதலில் இருந்து இறுதிவரை எனக்கு ஞானத்தைக் கற்பித்து நல்வழிகாட்டி என் சிந்தனை அரண்களைக் காத்தருளும். என்னைத் திருத்தி நடத்த உமது அருள் எனக்கு எவ்வேளையும் வேண்டும். உமது கறையில்லாக் கருணையால் இப்போது பரலோக ஞானம் தந்து என்னைப் பலப்படுத்தும். (இச்செபத்தை அந்தோனியார் ஒவ்வோரு மறையுரை செய்யும் முன்னும் செபித்தார். இதன் கையெழுத்துப் பிரதி இன்று வரை பதுவாபுரியில் உள்ளது)

புனிதரது தாயார் பாடிய தாலாட்டு

இப்பாடலை புனிதர் இறப்பதுவரை பாடி வந்தார். ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே! எக்காலமும் ஆசீர்வதிக்கப்பட்டவளே!

மனுக்குலத்தில் தோன்றிய சகல பெண் இனத்திலும் மேலானவளே! மாசற்ற அன்னையின் அன்புடன் இறைவனுக்கு உமது பாலுாட்டி வளர்த்தவளே!

ஏவாளின் பாவத்தால் நாங்கள் இழந்து போனவற்றை உம்மிடம் உதிர்ந்த மலர் மீண்டும் அடையச் செய்கின்றது.

துயருறும் ஆன்மாக்களுக்கு பேரின்ப வீட்டை அளிக்க அறத்தின் கதவுகளைத் திறக்கின்றது.

ராஜாதி ராஜன் தோன்றிய வாயிலே! இருளை ஓட்டி ஒளியை வீசிய கூடமே!

தேவரீரின் கன்னிமைகெடாத உதிரத்தில் நின்று பிறந்தவரே: அவரால் சிறை மீட்கப்பட்ட சகல மக்களும் புகழ்ந்து வாழ்த்துகின்றனர்.

கன்னியிடம் பிறந்த இயேசுநாதருக்கு எல்லா மனிதரதும் வான கணங்களதும் வாழ்த்துண்டாவதாக!

பிதாவாகிய இறைவனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை என்றென்றும் சொல்லப்படுவதாக. ஆமென்.