மதுவிலக்கு மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ***


திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது உவரி. உப்புக் காற்று தழுவும் கடலோடிகளின் கிராமம். ஊருக்கு மையத்தில் வீற்றிருக்கிறது பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை. மாதாவின் சபையையே மதுவிலக்கு சபையாக மாற்றியிருக்கிறார்கள். அதிகாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது சத்தியப் பிரமாணம்.

“பரிசுத்த அமலோற்பவ மாதா சாட்சியாக...

புனித அந்தோணி சூசைநாதர் சாட்சியாக...

கடல் சாட்சியாக...

குருவானவர் சாட்சியாக...

இந்த நிமிஷத்திலிருந்து மது, சூது எதையும் தொட மாட்டோம்...

இது பரிசுத்த அமலோற்பவ மாதா மேல சத்தியம்!”

அந்த ஆலயத்தில் கூட்டமாகச் சிறுவர்கள், இளை ஞர்கள், வயதானவர்கள் வந்து மாதாவின் உருவச் சிலையின் முன்பாகச் சத்தியம் செய்கிறார்கள். அத்தனை பேரும் கடலோடிகள். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி நடக்கிறது. கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான கடலோடிக் குடும்பத்தினர் சபையின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு வைகோ மதுவிலக்கு கோரி நடைப்பயணம் ஆரம்பித்ததும் இங்கிருந்துதான்.

“1900-களின் தொடக்கத்துல எங்க கிராமம் ரொம்ப மோசமா இருந்தது. வீட்டுக்கு வீடு சாராயம் காய்ச்சுனாங்க. கடற்கரை பூராவும் சாராய ஊறல் தான். கள்ளச் சாராய சாவுகளுக்குக் கணக்கே இல்லாமப்போச்சு. அப்பதான் 1912-ம் வருஷம் இங்க பரிசுத்த அமலோற்பவ மாதா சபையைத் தொடங்குனாங்க. 1921-ம் வருஷம் அந்த சபைக்குப் புது குருவாக அந்தோணி சூசைநாதர் வந்தார். ஊரோட நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்ச அவர், மக்களைத் திருத்த முடிவு செய்தார். யாருக்கும் அடங்காத ஜனங்க மாதாவுக்கு மட்டும் கட்டுப்பட்டதை அவர் புரிஞ்சிக்கிட்டார். சபையை ‘பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை’ன்னு பெயர் மாற்றம் செய்தார்.

மாதாவைக் கும்பிடக் கோயிலுக்குள்ள வரணும்னா, இனிமே குடிக்க மாட்டேன், சூதாட மாட்டேன்னு சத்தியம் செஞ்சாதான் வர முடியும்னு கட்டளையிட்டார். ஆரம்பத்துல திகைச்ச மக்கள், படிப்படியா மாதாவுக்குக் கட்டுப்பட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு எங்க கிராமத்துல பெரும்பாலான கடலோடிகள் குடிப்பழக்கம் இல்லாம இருக்கிறாங்கன்னா அதுக்குக் காரணம் அமலோற்பவ மாதாதான்” என்கிறார் சபையின் மூத்த உறுப்பினரான அந்தோணிசாமி.

இங்கு கடலோடிகள் தவிர, வெளிநாடுகளிலும் கப்பல்களில் பணிபுரிவோரும் கணிசமாக உள்ளனர். அவர்கள் எங்கு இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை யேனும் சபைக்கு வந்து மதுவிலக்கு சத்தியம் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு வராதவர்கள், தவறிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். சபையை விட்டு நீக்கப்படுகிறார்கள். தவிர, ஒருவர் தவறு இழைத்தவராகக் கருதப்பட்டால் மாதாவின் சிலை முன்பாகப் பங்குத் தந்தை விசாரணை நடத்துகிறார். விசாரணையின்போது ஒருவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கலாம். ஒருவரின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மன்னிப்பு கிடைக்கும். மறுபடியும் தவறு செய்தால் ஆயுள்வரை ஆலயம் பக்கமே வரக் கூடாது!

சமீபத்தைய ஆண்டுகளில் கடலோடிகளின் வாழ்க்கையில் மது ஏற்படுத்தியிருக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ந்த இந்த சபை, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 13 கடலோடி கிராமங்களில் புதிய மதுவிலக்கு சபைகளைத் தொடங்கியிருக்கிறது. கன்னியா குமரி, கூட்டப்பனை, சின்னமுட்டம், கூடங்குளம், கூத்தன்குழி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக் கணக்கான கடலோடிகள் மதுவிலக்கு உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது. இந்த அலை தமிழகம் முழுவதும் வீசும் என்று நம்புவோம்!