பெண்களுள் பேறுபெற்றவள் நம் தேவதாய் ***

நம் அன்னை மரியாளை அனைத்துலக பெண்கள் அனைவரிலும் பேறுபெற்றவள் என கூறுவதன் காரணம் என்னவெனில், பெண் என்பவளுக்கு கடவுள் நியமித்துள்ள அனைத்து நிலைகளிலும் முழுமையாக வாழ்ந்தவள் அன்னை மரியாள் மட்டுமே.

கன்னிப் பெண்களுக்கான கலக்கம் :-
    நம் அன்னை வாழ்ந்த யூத சட்டம் மிகமிக கடுமையானது இன்றளவும் கூட, சில அற்ப காரணங்களுக்காக பெண்களை கல்லால் கொள்ளப்பட்ட கொடூரம் நிறைந்த காலத்திலே எவரும் ஏற்க்க முடியாத, ஒரு மாபெரும் சத்தியத்தை நம்பி தன் கன்னிமையை இறைமைந்தன் இயேசுவின் உறைவிடமாக கொள்ளவும், அதனால் தான் சந்திக்கப்போகும் போராட்டங்களைப் பற்றிய கலக்கம் அடைந்த தருணம் நாம் அறிந்ததே. "எந்த மனிதரும் தொடாதிருக்கையில், இது எப்படி நிகழும், நான் கன்னியாயிற்றே "( லூக்கா 1:34 ) நம் அன்னை மரியாளின் கலக்கம் உளமார நம்மை தொடவில்லையா?

மணவாழ்க்கை சிக்கல் :-
   பேரழகி நம் அன்னை, வயது முதிர்ந்த யோசேப்பை மணவாளனாக ஏற்று அவருக்கு முழுவதும் கீழ்படிந்து கண்ணியமாய் வாழ்ந்த நிலை, இவ்வுலக பெண்களுக்கு பெரும் சிக்கலான விஷயாமாக உள்ளவைகளில் இதுவும் ஒன்றே. அழகு, பணம், பதவி, இப்படிபட்ட தகுதிகளை வைத்த மணவாளனை தேர்வு செய்யும் நிலை. இந்த நிலையையும் கடந்து வந்தவள் நம் அன்னை

குழந்தை பேணுதல் :-

   பிறந்த சில மணித்துளிகளில் தன் குழந்தையின் உயிர்காக்க நாடுவிட்டு நாடு கடந்தவள். அன்னியர் நடுவில் வேற்று நாட்டில் அகதியாய் வாழ்ந்தவள்.

குடும்பம் பராமரிப்பு :-

    ஏழ்மையை மட்டுமே தன் குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக கொண்டு, எளிமையை அணிகலனாக பூண்டு " திருக்குடும்பம்" என்ற நிலையை உலகறியச் செய்தவள். ஆக வறுமையின் ஆழத்தை ருசித்தவள். அதை மனதரா ரசித்தவள் நம் அன்னை.

குழந்தையின் பிரிவு :-

   கண்ணின் மணியென திகழ்ந்த தன் மகனை மூன்று தினங்கள் தொலைந்து காணாமல் ஏங்கி தவித்து ஒவ்வொரு நொடியும் பரிதவித்து தன் அயராத தேடுதலால் கண்டடைந்தவள்.

குழந்தை வளர்ப்பு :-

   சிறுவயதிலேயே மறைநூல்களை கற்றறியச் செய்து கீழ்படிதல் என்னும் மாபெரும் நற்குணத்தை பயிற்றுவித்து. இவன் தாய் தந்தையர் பேறுபெற்றவர் என உலகம் போற்றும் வண்ணம் திகழ்தவள்.

இலட்சியப் பாதை :-

   தாங்க முடியாத துயரத்தின் மத்தியிலும் தன் மகனின் இலட்சியப் பிறப்பை கருத்தில் கொண்டு அவனுடைய பணிவாழ்வின் நிழலாக திகழ்ந்தவள்.

தாய்மையின் தியாகம் :-

   பாவக்கறையே படாத தன் மகனை பிறர் செய்த பாவத்திற்க்கான குற்ற பழியை சுமந்து தன் கண்ணெதிரே அணு அணுவாய் வதைக்கப்பட்டு கொலை செய்யப்படும் " சிலுவைப் பலியை " பார்த்து. அந்த வியாகுலத்தை நித்தியமாய் அனுபவிக்க சித்தமான தியாகத் தாய் நம் அன்னை.

அனாதை :-

   தனக்கென இருந்த அனைத்தையும் தன் மகன் உயிர் முதற்கொண்டு, இவ்வுலக மக்களுக்கு தாரை வார்த்து விட்டு அனாதையாக நின்றவள்.

பெண்களுள் பேறுபெற்றவள் :-

   நம் பணி முடிவடைந்து விட்டது என முற்றுபெறாமல் தன் மகனின் லட்சியப் பாதையில் தொடர் ஓட்ட நாயகியாகி இன்றளவும் அயராது ஓடிக் கொண்டிருப்பவள் நம் அன்னை. ஆக வாழ்வியல் அடிப்படையில் பெண்களுக்கான அனைத்து நிலைகளையும் கடந்து வந்தவள். ஆம் பெண்களுக்கான அனைத்து நிலைகளையும் அணு அணுவாய் அனுபவித்து கடந்து வந்தவள். ஒரு உண்மை தெரியுமா ? இதுவரை உலகில் படைக்கப்பட்ட எந்தப் பெண்ணும் மரியாள் வாழ்ந்த இத்தனை நிலைகளில் வாழ்ந்தது கிடையாது. இதற்கு மேலும் இப்படி ஒருத்தி இவ்வுலகில் பிறக்க போவதுமில்லை. நித்தியத்திற்கும் நம் அன்னை " பரிசுத்த கன்னிமரியாள் " மட்டுமே, பெண்களுள் " பேறுபெற்றவள் நீரே " என்ற கடவுள் வாழ்த்துரைக்கு சொந்தமானவள்.