அன்னையின் அமல உற்பவம் ***

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு. இவளது மேன்மை இவளது இறைத்தாய்மையிலிருந்தாலும், இத்தாய்மைக்காக இறைவனாலேயே சிறப்பான விதத்தில் காக்கப்பட்டதால், மாந்தரனைவரும் அடையவேண்டிய இலக்கான மங்களத்தின் நிறைவான மாசற்ற அமலத்துவத்தில்தான் பரிமளிக்கிறது என்றால் இக்கூற்று மிகையல்ல.

மரியாள் அமலியாக அவதரித்தவள். இவள் அமல உற்பவி. ஆதிப்பெற்றோரின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த தூய நிலையிலேயே இவ்வவனியில் அருமையாக அவதரித்தவள். இத்தகு பெருமையால் மரியாள் இறைவனால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், இந்த ‘அமலி’ என்னும் அங்கீகாரம் வரலாற்றில் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றை நோக்கும்போது, நூற்றாண்டுகளையல்ல, ஆயிரமாண்டுகளைக் கடந்து, அறிவு, நம்பிக்கை, விசுவாசம், போராட்டம், பகிர்வுகளைக்கடந்து பலமான எதிர்பார்ப்புகள் மற்றும் மக்களின் ஏக்கங்களுக்கிடையேதான் மறைக்கோட்பாடாக முழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மறைக்கோட்பாடு கடந்து வந்த வரலாறு மற்றும் பாரம்பரியப்பயணம் அதி நீளமானது. இதனை ஆழமாக நோக்குமுன், மரியாள், “அமலி” என்று அழைக்கப்படுமளவிற்கு அவளை உயர்த்திய, மக்களுக்கு உணர்த்திய சில விவிலிய மற்றும் விசுவாசக்கலவைகளையும் அவற்றின் பயணங்களையும் அவற்றின் பொருளையும் புரிந்துகொள்ள விழைவது நன்மை பயக்கும்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கடவுளின் அருட்கொடைகள் மனிதனுக்கு தடைப்பட்டன. ஊறவு நிலை பாதிக்கப்பட்டது. தந்தை கடவுள் மனிதனோடு கொண்டுள்ள உறவைச் சரிசெய்ய, புதுப்பிக்கக் கன்னிமரியாளைக் கருவியாகவும், பாலமாகவும், பயன்படுத்தினார்.
இறைவனின் மீட்புத்திட்டத்தின் தொடக்கத்திலேயே மரியா தோன்றுகிறார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன்தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). பெண்ணின் வித்துக்கும் அலகையின் வித்துக்கும் இடையே நடைபெறும் மாபெரும் தொடர் போரில் பெண்ணின் வித்து நிச்சயமாக வெற்றி அடையும். இதுதான் தவறிய மனிதனுக்கு இறைவன் வழங்கிய முதல் நற்செய்தியாகும்..

திருமுழுக்கு வழியாக ஒருவருடைய சென்மப்பாவம் நீக்கப்படுகிறது. ஆனால் மரியாவைச்செனமப்பாவம் தீண்டாதபடி இறைவன் பாதுகாத்தார். மீட்பரின் தாய் மரியா பாவத்தின் ஆட்சிக்கு ஒரு நொடியும் உட்பட்டிருப்பது, ‘மீட்பரின் தாய்’ என்னும் அவருடைய தனிச்சிறப்பான அழைத்தலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அவரை ‘அருள் மிகப்பெற்றவராக’ (லூக் 1:28) அதாவது, சென்ம பாவக்கறையின்றி இறைவன் படைத்தார்.
இதனைத்தான் வானதூதர் கன்னி மரியாளிடம்
    அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்

என வாழ்த்தொலியாக லூக்கா 1:28இல் என்று வாழ்த்துகிறார். மரியா அன்றும் இன்றும் என்றும் “அருள் மிகப்பொற்றவர்”.
தூய பவுல்,

  நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்

(எபே. 1:4) என்கிறார். உலகம் உருவாகும் முன்பே ஒவ்வொரு கிறிஸ்த்தவரையும் இறைவன் கிறிஸ்து வழியாகத் தேர்ந்துகொண்டது உண்மை என்றால், இவ்வுண்மை மீட்பரின் தாய் மரியாவுக்கு இன்னும் எவ்வளவோ அதிகமாகப்பொருந்தும்!
மரியா மீட்பரின் தாய் என்றாலும் அவரும் இயேசுவின் இறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்கப்பட்டார். மரியாவுக்கு இயேசு கொண்டுவந்த மீட்பை இறைவன் முன்னரே வழங்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டே மரியா அமல உற்பவியாகப் பிறந்தார். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், “தம் மகனின் பேறு பலன்களை முன்னிட்டு அவர் உன்னத முறையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப்பெற்றிருக்கிறார்… ஆயினும் அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப்பெறவேண்டிய மக்கள் அனைவருள் அவரும் ஒருவராகின்றார்”. (திருச்சபை எண்.53). திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “மீட்பரின் தாய்” என்னும் தமது மறைத் தூது மடலில் மரியா ‘அருள் நிறைந்தவர்’ என்பதற்கு ஆழமான விளக்கம் தருகிறார் (மீட்பரின் தாய், எண்கள் 8-11).
மரியாவைப்பொருத்தமட்டில், சென்மப் பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் சென்மப்பாவம் நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.

   மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.

மரியாவின் அமல உற்பவத்திற்கு ஓர் இறையியல் வல்லுநர் கூறியுள்ள இரத்தினச் சுருக்கமான காரணம்:

  இறைவன் அதைச்செய்ய முடிந்தது: அது ஏற்புடையதாக இருந்தது: எனவே அவர் அதைச் செய்தார்.

அருள்மிகப்பெற்றவரும் அமல உற்பவியுமான மரியா நமக்கு வழங்கும் நற்செய்தி: பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ. 3:15). பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20). கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31). உலகம் உருவாகும் முன்பே இறைவன் நம்மையும் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டார் (எபே. 1:4). திருச்சபையானது மாசு மறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27). நாமும் மரியன்னையுடன் இறை மாட்சிமையில் பங்கு பெறுவோம் (உரோ. 8:28-30).

இவ்வுண்மைகளை நாம் திறந்த உள்ளத்துடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து தீமையின் அச்சாணியை முறித்து, புனிதம் கமழும் புத்துலகைப்படைப்பதே நாம் நம் தாய்க்குப்பாடும் தன்னிகரில்லாத் தாலாட்டு ஆகும்.

   கடவுளின் மீட்புத் திட்டத்தை இறைமகன் இயேசுவும், கன்னி மரியாளும் பற்றுதியோடுச் செய்து முடித்தனர். (தொ. நூ. 3:4-15,20) கீழ்ப்படியாமையால் ஆதாம் ஏவாள் எப்படி இறைவனின் அருட்கொடையை இழந்தனர் என்பதைப் பற்றியும், இந்த நிலை ஒரு பெண்ணால் மீண்டும் புதுபிக்கப்படும் என்பது பற்றியும் தெளிவாகக் கூறுகிறது. இதில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்தான் கன்னி மரியாள். கீழ்ப்படியாமையால் விளைந்தத் தீமை, கீழ்ப்படிதலால் சரிசெய்யப்பட்டது. கன்னி மரியாயும், இறைமகன் இயேசுவும் கீழ்ப்படிதல் மூலம் இறைத்திட்டத்திற்குப் பணிந்தனர்.

    நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்க நிகழட்டும்

லூக்கா, 1:38-இல் என்று மரியாவும்

     ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உம் விருப்பப்படியே

என்ற லூக்கா. 22:42-இல் இயேசுவும் கூறி இறைத்திட்டத்தை நிறைவேற்றினர்.

நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். கன்னி மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்.

இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம்? இன்றைய உலகம் பாவ உணர்வு என்றால என்ன என்பதை மறந்து கொண்டு வருகிறது. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்கு மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட சோதனைகளைத் தாங்கி கொண்டு வாழ்ந்தார்.  பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும். இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம் தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும் கன்னி மரியாளிடமும் தொடர்ந்து செபிப்போம்.