"கடவுள் உலகிற்கு அனுப்ப இருந்த தம் மகனுக்கு உடலைத் தயார் செய்ய, படைப்பு ஒன்றின் சுதந்திரமான ஒத்துழைப்பை நாடினார். இதற்காக காலங்கள் அனைத்திலும் இருந்து இஸ்ரேலின் மகள் ஒருவரை, கலிலேயாவின் நாசரேத்தைச் சேர்ந்த யூத இளம்பெண்ணை, 'தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமான கன்னி மரியாளை' (லூக்கா 1:27) தம் மகனுக்குத் தாயாக கடவுள் தேர்ந்தெடுத்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 488) எனவேதான் மரியாள், "தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்" (லூக்கா 1:48) என்று கூறுகின்றார்.
"அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க கொண்ட ஆவலால், 'காலம் நிறைவேறிய போது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்,' (கலாத் தியர் 4:4-5) இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கி, தூய ஆவியினால் கன்னி மரியாள்விடம் உடல் எடுத்து மனிதரானார்." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "ஏவாளின் வழிமரபினர் நடுவினின்று, கன்னி மரியாளைத் தம் மகனின் தாயாகுமாறு கடவுள் தேர்ந்து கொண்டார். அருள் நிறைந்தவரான மரியாள், மீட்பின் தலைசிறந்த கனியாக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண்.508)
"எனவே, மரியாள் உண்மையாகவே 'கடவுளும் மீட்பருமானவரின் தாய்' என ஏற்றுக்கொள்ளப் பெற்று போற்றப்பெறுகிறார். இறைமகனின் தாய் என்ற இந்த உன்னத நிலையானலும் பெருமை யாலும் அணி செய்யப் பெறுகின்றார். இதன் காரணமாக, இறைத்தந்தைக்கு மிகவும் உகந்த மகளாகவும் பரிசுத்த ஆவியின் திருக்கோயிலாகவும் திகழ்கின்றார். இந்த மேன்மையான அருள் கொடையினால் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள மற்ற எல்லாப் படைப்புகளையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார்." (திருச்சபை எண். 53) எனவே, "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" (லூக்கா 1:49) என்ற கன்னி மரியாளின் சொற்களில் உள்ள உண்மையை உணர்ந்தவர்களாய், அவரைப் 'பேறுபெற்றவர்' என அழைப்பதில் தவறேதும் இல்லை.