கடவுளால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறும் அளவுக்கு மரியாளிடம் காணப்படும் சிறப்பு என்ன?

"பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத் திருநூல்களும் மாண்புக்குரிய மரபும் நிறவாழ்வுத் திட்டத்தில் மீட்பரின் தாய்க்குரிய பணியை மேன்மெலும் அதிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள், மீட்பரின் தாயான ஒரு பெண்ணின் உருவைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன. முதல் பெற்றோர் பாவம் புரிந்தபின், அலகையின் மேல் பெறப்போகும் வெற்றியைப் பற்றிய வாக்குறுதி அவர்களுக்கு அளிக்கப் பெற்றது. இவ்வாக்குறுதியில் மரியாள் இறைவாக்காக முன்னுருவகிக்கப் பெற்றதை (தொடக்க நூல் 3:15) பிற்கால முழு வெளிப்பாட்டின் ஒளியில் நாம் காணலாம். அதுபோல் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயர் பெறப்போகும் மகனை கருத்தாங்கிப் பெற்றெடுப்பார் (எசாயா 7:14) என்று கூறப்பெற்ற கன்னியும் இவரே." (திருச்சபை எண்.55)

மீட்கப்பெற வேண்டிய மக்களனைவருள் ஒருவராக இருந்தாலும், "மீட்பரின் தாயாகுமாறு, மரியாளை அந்நிலைக்குத் தகுந்த அருள் கொடைகளால் கடவுள் நிரப்பினார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 490) "மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, கிறிஸ்துவிடம் இருந்து வரும் தூய்மையின் ஒளியால் நிரப்பப்பெற்றார். படைக்கப்பட்ட மற்ற எந்த நபரையும் விட மரியாளுக்கு ஆசி வழங்கியுள்ள இறைத்தந்தை, 'தூயவராகவும் மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவரைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.' (எபேசியர் 1:4)" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 492) "தம் மகன் இயேசுவின் பேறுபலன்களை முன்னிட்டு சீரிய முறையில் மீட்கப் பெற்றுள்ள மரியாள், நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்." (திருச்சபை எண்.53)

"இறைவாக்கு மனிதரானதன் காரணமாக கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில் நித்தியத்திலிருந்தே கடவுளின் தாய் என முன் நியமனம்பெற்றவர் பரிசுத்த கன்னி. இவ்வுலகில் இவர் இறை மீட்பரின் அன்பு அன்னையாகவும், எவரையும் விஞ்சும் முறையிலே ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், மனத்தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்கினார். கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார்; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம்மகனோடு அவரும் துன்புற்றார். இவ்வாறு மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றியெரியும் அன்பு என்பவற்றால் நிறைவாழ்வு அலுவலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 61) இத்தகைய சிறப்புகளால், இறையன்னை மரியாள் நம் வணக்கத்துக்கு தகுதியானவராய் இருக்கிறார்.