மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு *** மறையுரை சிந்தனைகள்


தன் ஓய்வுநேரத்தையும் மற்றவருக்காகச் செலவழித்த தொழிலாளர்:

அமெரிக்காவைச் சார்ந்த பெரியதொரு குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் டேனி டி. டாப்சன். இவர் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் தொழிலாளர் ஒருவர் இருந்தார். அவர் சற்று வித்தியாசமாய்த் தனக்குக் கிடைத்த தேநீர் மற்றும் உணவு இடைவேளை நேரத்தில், நிறுவனத்தைச் சுற்றிவந்து, கண்ணில்பட்ட நெகிழிப் புட்டிகள், காகிதங்கள் ஆகியவற்றை ஒரு பையில் சேகரித்து வந்தார். அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பது டேனிக்குப் புரியாமலேயே இருந்தது.

ஒருநாள் டேனி பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் தலைவர் அங்கு வந்தார். அவர் வந்தநேரம், தொழிலாளர் வழக்கம்போல் நெகிழிப் புட்டிகளையும் காகிதங்களையும் சேகரிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்த நிறுவனத்தின் தலைவர், அந்தத் தொழிலாளரை அழைத்து, “நீர் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்?” என்றார். “நான் இவற்றையெல்லாம் சேகரித்து, விற்றுப் பணமாக்கப் போகிறேன்” என அவர் சொல்வார் என்றுதான் டேனி நினைத்தார்; ஆனால், டேனி நினைத்ததற்கும் மாறாக, “இவற்றையெல்லாம் நான் சேகரிக்கக் காரணம், என் பக்கத்து வீட்டில் உள்ளவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால், அவரால் எங்கும் வேலை செய்யமுடியவில்லை. அவருக்கு உதவுவதற்காகத்தான் நான் இதைச் செய்துகொண்டிருக்கின்றேன்” என்று அந்தத் தொழிலாளர் சொன்னதும், டேனிக்கு, ‘தனது ஓய்வுநேரத்தையும் பிறருக்காகப் பயன்படுத்தும் இவரல்லவா மனிதர்!’ என்று அவரது காலைத் தொட்டுக் கும்பிடவேண்டும்போல் இருந்தது.

இந்த நிகழ்வில் வருகின்ற தொழிலாளர் தன் ஓய்வுநேரத்தை வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தினார். நற்செய்தியில் இயேசு தனது ஓய்வுநேரத்தை மக்களுக்காகப் பயன்படுத்துகிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இடையறாத பணியிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக இயேசுவும் அவரது சீடர்களும் தனிமையான ஓர் இடத்திற்கு வருகின்றார்கள். அப்படி வருகின்றபொழுது மக்கள் அவரைத் தேடி வருகின்றார்கள். ‘ஓய்வெடுக்க வந்த இடத்தில் மக்கள் இப்படி வருகின்றார்களே!’ என்று இயேசு அவர்களைக் கண்டு எரிச்சலடையவில்லை. மாறாக, ஓர் ஆயனைப் போன்று அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். ஆயரில்லாத ஆடுகளின் நிலைமை மிகவும் பரிதாபமானது மட்டுமல்லாமல், ஆபத்தானதும்கூட. இது இன்றைய முதல்வாசகத்தில் நாம் படிப்பது போன்று, ‘ஆடுகளின் பெரும் ஆயரான’ இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, அவர் மக்கள்மீது பரிவுகொண்டு, கடவுளோடு எப்படி ஒன்றித்திருப்பது என்பதைப் பற்றியும், பலவற்றைப் பற்றியும் போதிக்கின்றார்.

சிந்தனைக்கு:

 நற்செய்தியை அறிவிக்காவிட்டால் அல்லது கற்றுத் தராவிட்டால் இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்படாது (உரோ 10: 17)

 இயேசு தனது ஓய்வுநேரத்தையும் மக்களுக்குப் பயன்படுத்தினார், நாம் நமக்குக் கிடைக்கும் பொன்னான நேரத்தை வறியவர்களோடும் வயதானவர்களும் பயன்படுகின்றோமா?

 பிறரிடமிருந்து நல்லவற்றைக் கற்றுக்கொள்ள மறுப்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவார் – விவேகானந்தர்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்’ (சீஞா 2: 11) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நாம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று, பரிவுடன் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.