வெற்றிக்குக் காரணம்:
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஜே.சி. பென்னி (J.C. Penney). ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபர். உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டபொழுது, அவர் சிறிதும் தாமதியாமல், “துன்பம், இயேசு கிறிஸ்து. இவைதான் என்னுடைய வெற்றிக்குக் காரணங்கள்” என்றார். கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்” என்று செய்தியாளர் மீண்டுமாக அவரிடத்தில் கேள்வியைக் கேட்டபொழுது, அவர் மிகவும் நிதானமாக, “பலர் தங்களுடைய வாழ்க்கையில் துன்பமே வரக்கூடாது என்று நினைப்பார்கள்; ஆனால், நான் என்னுடைய வாழ்க்கையில் துன்பம் வரும்பொழுது கவலைப்பட மாட்டேன். ஏனெனில் இயேசு கிறிஸ்து எனக்குத் துணையாக இருக்கின்றார். ஆகவே, நான் அவர்மீது நம்பிக்கை வைத்துத் துன்பங்களையும், வாழ்க்கையில் வருகின்ற சவால்களையும் துணிவோடு எதிர்கொள்வேன். அதனால் யாவும் வெற்றியாக அமைந்துவிடும். ஆகவேதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம் துன்பமும் இயேசு கிறிஸ்துவும் என்று சொல்கின்றேன்” என்றார்.
ஜே.சி. பென்னி தன்னுடைய வாழ்வில் துன்பம் வந்தபொழுது, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார். அதனாலேயே அவரால் வெற்றியாளராய் வலம்வர முடிந்தது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல் ஆண்டவரே நம் மீட்பு, அவரே நமது உயிருக்கு அடைக்கலம் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தாவீது மன்னரால் பாடப்பட்ட திருப்பாடல் 27, அவர் இஸ்ரேலின் மன்னராகத் திருப்பொழிவு செய்யப்படுவதற்கு முன்பாகப் பாடப்பட்ட திருப்பாடல் என்று சொல்லலாம். இஸ்ரயேலின் முதல் மன்னரான சவுல், தாவீதைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் தாவீது ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, “அவரே என் மீட்பு, அவரே என் உயிருக்கு அடைக்கலம்” என்று வாழ்ந்து வந்தார். அதுதான் இத்திருப்பாடலில் வெளிப்படுகின்றது. தாவீது மன்னரின் உயிருக்கு ஆபத்து வந்தது போன்று, நம்முடைய உயிருக்கும் ஆபத்து வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதே சிறப்பான ஒரு செயல்.
சிந்தனைக்கு:
நமது வாழ்வில் துன்பங்களும் சவால்களும் வருகின்றபொழுது நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா?
நமது வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மைச் செதுக்குவதற்குத்தானே அன்றி, சிதைப்பதற்கு அல்ல என்பதை உணர்ந்திருக்கின்றோமா?
நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன் (எபி 13: 5)
இறைவாக்கு:
‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ 8: 31) என்பார் புனித பவுல். எனவே, கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.