ஆகமன காலம் ***


ஆதிப் பெற்றோரின் பாவத்தால் கடவுளோடு மனிதன் கொண்டிருந்த உறவு அறுபட்டுப் போயிற்று; மோட்சம் அடைபட்டு விட்டது. ஜென்மப் பாவத்தால் பீடிக்கப்பட்ட மனுக்குலம் ஒளி இழந்து இருட்டுக்குள் தள்ளப்பட்டது. இருளின் குருட்டாட்டத்திலும் மரண நிழலிலும் உழன்றது பாவம். பாவம், பலவீனம், நோய், நோவு மற்றும் சாவு மனிதனை வாட்டி எடுத்தன. எங்கும் சாத்தானின் ஆட்சி; தீமைகளின் தாக்கம்.

இதிலிருந்து மனிதனை இரட்சிப்பது யார்? சர்வேசுவரனால் வாக்களிக்கப்பட்ட இரட்சகர்தான் வரவேண்டும்.

கடவுள் ஆபிரகாமைத் தெறிந்தெடுத்து அவரோடு உடன்படிக்கை செய்து, அவர் வழியாக ஒரு குலத்தை உருவாக்கி மெசியாவின் வருகைக்காக ஆயிரக்கணக்கான வருடங்களாய் தயாரித்து வந்தார். பழைய ஏற்பாடு முழுவதுமே இதற்கான ஆயத்தம்தான். பிதாப்பிதாக்களையும், தீர்க்கத்தரிசிகளையும் அவர்களிடையே தோன்றச் செய்தார். இரட்சகர் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தி வந்தார்.

ஏன் இந்த நீண்ட கால ஆயத்தம்? 

மனுக்குலம் தான் கட்டிக்கொண்ட பாவத்தின் கொடுமையையும், அதனால் தனக்குற்ற துன்பங்களையும் கடவுளின் அருளின்றி தனக்கு ஏற்பட்ட கதியையும், இரட்சிப்பின் அவசியத்தையும் நன்றாக உணர்ந்து இரட்சகரின் வருகையை ஏக்கத்தோடும், தாகத்தோடும் அவர் மட்டில் முழு நம்பிக்கையோடும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதற்காகவே.

ஆகமன காலம் :

ஆகமன காலம் என்பது இருளிலிருந்து வெளிச்சத்தை எதிர்பார்த்திருக்கும் காலம். மனுக்குலத்தின் இரட்சண்யத்திற்காக தேவவார்த்தையானவர் தோன்றிய மாபெரும் சம்பவத்தை வருடந்தோறும் நினத்து கொண்டாடுகிற விசுவாசிகள் தங்கள் முன்னோர்களைப் போல மிக்க ஆவலுடன் அவரது வருகைக்காக எதிர்பார்த்து, ஜெபத்தாலும், தவத்தாலும் உத்தமவிதமாய் ஆயத்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறது நம் தாய் திருச்சபை. இவ்வாறு ஆயத்தம் செய்யும் காலமே “ ஆகமன காலம் “ அதாவது திருவருகையின் காலம் எனப்படுகிறது. தேவ பிரஜைகள் நாலாயிரம் ஆண்டுகளாக இரட்சகரை எதிர்ப்பார்த்திருந்ததின் ஞாபகமாக நமக்கு நான்கு வாரங்களை ஆகமன காலமாக திருச்சபை தந்திருக்கிறது. 

ஆகமன காலத்தில் இரண்டு வேத நோக்கங்களைத் திருச்சபை நம் கண் முன் நிறுத்துகிறது. ஒன்று பாவங்களினால் சர்வேசுவரனை அவமதித்து அவர் நம் உள்ளத்தில் எழுந்தருளி வருவதற்கு இடயூராக இருக்கிறவைகளை நினைத்து மனஸ்தாப சிந்தனையினால் நம் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்துதல்.

மற்றொன்று உலக இரட்சகர் ஒவ்வொரு இருதயத்திலும் ஞான விதமாய் பிறந்து மக்களிடையே நம் சுவிசேசத்தால் வாசஞ்செய்ய வேண்டுமென்று ஆசித்தல் ( ஆசைப்படுதல்)

நன்றி : மாதா பரிகார மலர்

சிந்தனை : கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை கொண்டாட இருக்கின்ற நாம், நம்முடைய ஆன்மாவை கொஞ்சம் பரிசோதிப்போம் அதில் நமக்கு பிடித்தவைகள் இயேசுவுக்கு பிடிக்காதவைகள் எத்தனை என்று பார்ப்போம். நமக்கு பிடித்தவைகள் இயேசுவுக்கு பிடிக்காதவைகள் என்றால் அது கண்டிப்பாக பாவமாகத்தான் இருக்கும்.

அது என்ன பாவம் ? அது ஏன் நமக்குத் தேவை ? அது இல்லாமல் நம்மால் வாழ முடியாதா என்ன ? இயேசு இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இருக்கக் கூடாது. ஆனால் பாவம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியுமே. இயேசுவுக்காக ஏன் பாவத்தை விடக் கூடாது ? யோசிப்போம்…