ஃபெப்ரவரி 4 - புனிதர் அருளானந்தர் ***


புனிதர் அருளானந்தர்

(St. John De Britto)

மறைசாட்சி:

(Martyr)

பிறப்பு: மார்ச் 1, 1647

லிஸ்பன், போர்ச்சுகல்

(Lisbon, Portugal)

இறப்பு: ஃபெப்ரவரி 4, 1693

ஓரியூர், தமிழ் நாடு, இந்தியா

(Oriyur, Tamil Nadu, India)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

அருளாளர் பட்டம்: ஆகஸ்ட் 21, 1853

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்

(Pope Pius IX)

புனிதர் பட்டம்: ஜூன் 22, 1947

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்

(Pope Pius XII)

முக்கிய திருத்தலங்கள்:

புனித அருளானந்தர் ஆலயம்,

ஓரியூர்

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 4

பாதுகாவல்:

போர்ச்சுகல், சிவகங்கை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்

(Portugal, Roman Catholic Diocese of Sivagangai)

புனிதர் ஜான் டி பிரிட்டோ (புனிதர் அருளானந்தர்), போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை குருவும், மறைசாட்சியும் ஆவார். இவர் "போர்ச்சுகலின் புனித பிரான்சிஸ் சேவியர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்:

ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்ச்சுகீசிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை, பிரேசிலின் ஆளுநராக இருந்து இறந்தவர். கி.பி. 1662ம் ஆண்டில் இயேசு சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். கி.பி. 1673ம் ஆண்டில் மதப் போதனைக்காக தென்னிந்தியாவில் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். பின்னர் அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பி, கி.பி. 1683ம் ஆண்டு, லிஸ்பன் திரும்பினார். இரண்டாம் பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டியும், அவர் மீண்டும் 24 புதிய சமயப் பிரசாரகர்களுடன் கி.பி. 1690ம் ஆண்டு, மதுரை சென்றார்.

மதுரையில் பிரிட்டோ ஐரோப்பிய ஈடுபாடுகளற்ற இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்தார். இதற்காக அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றி புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். "இராபர்ட் தெ நோபிலி" இம்முறையையே தனது மதப்பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினார்.

கிழவன் சேதுபதியும் அருளானந்தரும்:

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. மறவர் சீமையின் தலைமை கிழவன் சேதுபதியிடம் இருந்தது. கிழவன் சேதுபதி கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் இருந்தார். அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் தடியத்தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.

முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது கி.பி. 1693ம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். ஜனவரி மாதம், 11ம் நாள் ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார்.

ஜனவரி மாதம், 31ம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் கி.பி. 1693ம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், 3ம் தேதி அவர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

"ஜனவரி மாதம், 28ம் நாள், என்னை விசாரித்து ரங்கநாதத் தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பு கூறப்பட்டது. கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய உறையூர் தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்துவந்த பணிகளுக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது. என் மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் ஆண்டவனைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததும், விக்கிரக ஆராதனையைத் தடுத்ததுமே. வீரர்கள் என்னையே கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேல் என்னால் எழுதுவது முடியாது..."

கி.பி. 1693ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதாம், 4ம் நாள், கொலையாளிகள் பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்று தலையைத் துண்டித்தனர்.