ஃபெப்ரவரி 3 - புனிதர் ஆன்ஸ்கர் ***


புனிதர் ஆன்ஸ்கர்

(St. Ansgar)

வடக்கின் அப்போஸ்தலர்/ பேராயர்:

(Apostle of the North/ Archbishop)

பிறப்பு: செப்டம்பர் 8, 801

அமியன்ஸ்

(Amiens)

இறப்பு: ஃபெப்ரவரி 3, 865 

ப்ரெமன் 

(Bremen)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

நினைவுத்திருநாள்: ஃபெப்ரவரி 3

பாதுகாவல்: 

ஸ்கேண்டிநேவியா

(Scandinavia)

புனிதர் ஆன்ஸ்கர், ஃப்ராங்க்ஸ் அரசின் (Kingdom of the East Franks) வடக்குப் பிராந்தியத்திலுள்ள "ஹம்பர்க்-ப்ரெமன்" (Hamburg-Bremen) மறைமாவட்டத்தின் பேராயராக (Archbishop) பணியாற்றியவர் ஆவார். ஐரோப்பாவின் வடக்கு நாடுகளில் கிறிஸ்தவ மறையை எடுத்துச் செல்வதிலும், மறைபரப்பு பணியாற்றியதாலும், இவர் வடக்கின் அப்போஸ்தலர் (Apostle of the North) என்று அழைக்கப்படுகின்றார்.

இவர், கி.பி. 801ம் ஆண்டு, வடக்கு ஃபிரான்சின் (Northern France) "அமியன்ஸ்" (Amiens) நகர் அருகே பிரபல "ஃபிரான்கிஷ்" (Frankish) குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் இவரின் சிறு வயதிலேயே மரணம் அடைந்ததால், இவர் "கோர்பி" (Corbie Abbey) எனும் துறவற மடாலயத்தில் வளர்ந்தார். "பிகார்டி" (Picardy) நகரிலுள்ள "பெனடிக்டைன்" (Benedictine monastery) துறவு மடத்தில் கல்வி கற்றார்.

ஆன்ஸ்கர், கி.பி. 831ம் ஆண்டு, “ஹம்பர்க்” (Hamburg) மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 831ம் ஆண்டு, நவம்பர் மாதம், இவர் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளுக்கு திருத்தந்தை நான்காம் கிரகோரி (Gregory IV) ஒப்புதல் அளித்தார். "பல்லியம்" (Pallium) (பேராயராக ஒருவர் அருட்பொழிவு செய்யப்படும் நிகழ்வின்போது அவர் அணிவதற்கான ஒருவித கம்பளியால் நெய்யப்பட்ட அங்கி, திருத்தந்தையால் அளிக்கப்படும். அதனை “பல்லியம்” என்பர்.) எனப்படும் மேலங்கியை பெற்றுக்கொள்வதற்காக ஆன்ஸ்கர் தாமே நேரில் ரோம் சென்றார்.

பின்னர் இவர் “டென்மார்க்” (Denmark), “நார்வே” (Norway), மற்றும் “ஸ்வீடன்” (Sweden) ஆகிய நாடுகளுக்கு திருத்தந்தையின் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாக சுவிசேஷப் பணியாற்றினார். இதன் பயனாக ஏராளமான பெனடிக்டைன் துறவு மடங்களை அங்கெல்லாம் நிறுவினார்.

ஆன்ஸ்கர் வாழ்நாள் முழுவதும் கடினமான மயிராடைகளையே (Rough Hair Shirt) அணிந்தார். ரொட்டி மற்றும் தண்ணீரையே உணவாக அருந்தினார். எழைகளின்பால் மிகுந்த பரிவும் கருணையும் காட்டினார். கண் பார்வையற்ற சகோதர சகோதரியர்க்கும், ஊனமுற்றோர்க்கும், ஏழை எளியோர்க்கும் கருணையுடன் சேவை புரிந்தார். இவர் நற்செய்திப் பணியாற்றுவதற்காக பல இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் இறுதிவரை தமது அழைத்தலில் மனந்தளராமல் இருந்து, நம்பிக்கை இழக்காமல் ஆர்வமுடன் பணியாற்றினார்.

ஸ்வீடன் நாட்டின் முதல் மறைப்பரப்பாளர் மற்றும் "நோர்டிக் நாடுகளில்" (Nordic countries) மறை பணியாளர்களின் வரிசைக் கிரமத்தினை (Hierarchy) அமைத்தவர் என்பதாலும் இவர் “ஸ்கேண்டிநேவியாவின்” (Patron of Scandinavia) பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டார்.