சிலுவை வழியே உயிர்ப்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய அதே சூழல் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது இன்றைய நாளில் சுற்றுச்சூழல் போராளியான முகிலன், மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். இவர் கடத்தப்பட்டு எங்கு இருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை. அதேவேளையில் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் ஒருவர் ஸ்னோலின் என்கிற 15 வயது செவிலியர் மாணவியும் அடக்கம். இத்தகைய நம்பிக்கை அற்ற சூழலில் இயேசுவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்பும் நமக்கு புரிதலையும் புது வழியையும் எடுத்து இயம்புகிறது.

சிலுவை: மகிமையின் சின்னம்

மாபரன் இயேசுவை நினைக்கும்போது சிலுவை தான் நம் கண்முன்னே தெரிகிறது. ஒரு சில வேளைகளில் சிலுவை என்பது மனித வாழ்வில் இடறலாக முரண்பாடாக பார்க்கப்படுகின்ற சின்னமாக விளங்குகிறது. "மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" என்று எழுதியுள்ளவாறு நமக்காக கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மை சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக்கொண்டார். (கலாத்தியர் 3:13) சிலுவையின் மேன்மையை திருத்தூதர் பவுல் விளக்குகிறார். கடவுளும் மனிதனும் சங்கமிக்கும் சின்னம் என்பது சிலுவையாகும். அவமானம், வெறுப்பு, மடமை, இடறல் இவைகளின் ஒட்டுமொத்த அடையாளமான சிலுவை மீட்பின் சிலுவையாக, மகிமையின் சின்னமாக, தியாகத்தின் வெளிப்பாடாக உருமாறி இருக்கிறது. சிலுவையிலிருந்து கிறிஸ்துவின் வாழ்வை திரும்பி பார்க்கிறோம். கிறிஸ்தவ அறநெறி, மனித இயல், வாழ்வியல் அனைத்தும் சிலுவையிலிருந்து ஊற்றெடுக்கின்றன. 

மனித துன்பங்களை பேசாமல் தீமையின் அவலங்களை, துயரங்களை கூறாமல் சிலுவையின் பொருளை அறிய முடியாது. இன்றைய சமூக சூழலில், மனிதர்கள் சிதைக்கப்பட்டு, மாண்புகள் மறுக்கப்பட்டு, காறி உமிழப்பட்டு, அவமானச் சின்னங்களாக, நடத்தப்படும் போது அதை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் தவறாகும். இந்நிகழ்வு இயேசுவின் சிலுவையை உதறித் தள்ளுவது போல் ஆகும். மீட்பும், வெளிப்பாடும், சிலுவையில் சந்திக்கின்றன. கடவுளுக்காக கீழ்படிந்து நீதிக்காக துன்புறுகையில், நாமும் கிறிஸ்துவின் துன்பத்தில் பங்கு பெறுகிறோம்.

சிலுவை: இறையாட்சிக்கான தற்கையளிப்பு

இறையாட்சியை பரப்பவே மாபரன் இயேசு நம்மில் ஒருவரானார். மேலும் தந்தையாம் கடவுள் இவ்வுலகத்தை அன்பு செய்ததினால், கிறிஸ்து மனுவருவெடுத்து இறையாட்சியை நிறுவினார். இறையாட்சியின் விழுமியங்களான நீதி, சுதந்திரம், அன்பு ஆகியவற்றை நிலைநாட்ட, இயேசு தம் போதனைகளினாலும், செயலினாலும் எடுத்துரைத்தார். இத்தகைய விழுமியங்கள் ஆதிக்கக்காரர்களை அச்சுறுத்தும் பண்புகளாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குபவையாகவும் உள்ளன. யாரெல்லாம் இயேசுவுக்கு எதிராக இருந்தார்களோ, அவர்கள் இயேசுவிற்கு சாவையே அளித்தார்கள். ஆனால் தந்தையாம் கடவுள் இயேசுவை ஏற்று உயிர்ப்பித்தார். சிலுவை என்பது தண்டனை அல்ல; மாறாக இறையாட்சிக்கான பரிசாகும். போர்சித் என்ற இறையியலாளர் 'கிறிஸ்து இறந்ததால் கடவுள் நம்மை அன்பு செய்யவில்லை, மாறாக கடவுள் நம்மை அன்பு செய்ததால் தான் கிறிஸ்து இறந்தார்' என்கிறார். 

சிலுவை: கடவுளின் உடனிருப்பின் சின்னம்

கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அளிப்பதன் மூலம் 'உண்மையான அன்பு இதுதான் இத்தகையது தான் என்று முன்மாதிரி காட்டி இருக்கின்றார்'. 'என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்' என்கிற இயேசுவின் கதறலில் தந்தையாம் கடவுளின் அமைதியானது வியப்பாக இருக்கிறது. ஆனால் இந்நிகழ்வில், தந்தையும் துன்புற்றார். தன் மகன் இயேசுவே மரணிக்கும் அளவிற்கு கையளிப்பதினால், கடவுளின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இத்தகைய கடவுளின் அமைதியும் ஒருவித அன்பின் வெளிப்பாடாக, மறை பொருளாக இருக்கிறது. 

கடவுள் மனிதனின் துன்பத்தைக் கண்டு மனம் இளகாதிருப்பவரல்ல, மறைந்திருப்பவரும் அல்ல, மேலும் மனித துன்பமும், துயரமும் கடவுளின் கரிசணைக்கு, பராமரிப்புக்கு அப்பாற்பட்டதல்ல, துன்பம், சிலுவை மீட்கும் கடவுளின் உடனிருப்பின் அடையாளமாகும். அவர் நேரடியாக மனித வாழ்க்கையில் நுழைகிறார். துன்பங்களில் இரண்டறக் கலக்கிறார். நமது துயர வாழ்வும் பயணத்தில் துணைவரும் நண்பராகத் துன்புற்று, புதுவாழ்வை காண்பிக்கிறார்.

சிலுவை: விளிம்பை மையமாக்கிய பாதை 

இயேசுவின் சிலுவை சாவிற்கு முழு முதற் காரணியாக இருப்பது அவரின் செயல்களும், வார்த்தைகளும் ஆகும். இயேசுவின் சிறப்பு தேர்வானது, ஏழைகள், பாவிகள், குழந்தைகள், பெண்கள் இன்னும் குறிப்பாக சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்கள் மீதுதான்  இருந்தது. குறிப்பாக இம்மக்களை அதிகார வர்க்கத்திற்கு முன்பாக நடுவே நிறுத்தி, மக்கள் அனைவருக்கும் கற்பித்தார். அவரது புதுமைகள் அனைத்தும் சமூக மாற்றத்திற்கு புதுவழிகளாக இருந்தன. அடிமை சமுதாயத்தில், அடக்குமுறைகளில் ஆதிக்க சமுதாயத்தில், நடுவராக, நிதியாளராக, உண்மையாக வாழ்ந்திருக்கிறார். "நெஞ்சுக்கு நீதி" என்ற மையப் பொருளில், அன்பையும், அறத்தையும் மையமாக்கி வாழ்ந்து காட்டியிருக்கிறார். சமூகத்தாலும், சட்டங்களினாலும், மதத்தினாலும், அறியாமையினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தினார்.  இயேசுவின் முன்னுரிமை அதிகாரத்தில் இருப்பவர்களை பயமுறுத்தியது. பெரும்பான்மை மக்களின், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுப்பது தான் சிலுவையின் அடியில் நிற்பதாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் படி, திருச்சபையை பொருத்தமட்டில், வறியோர் பால் விருப்பத்தேர்வு என்பது சமுதாய பகுப்பாய்வின் விளைவால் வந்ததல்ல. இறைவனின் அழைப்பு, இயேசுவின் சொல், செயல், வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து வந்தவையாகும். 

சிலுவை: அன்பின் அடையாளம் 

இயேசு நமக்குக் காட்டிய அன்பானது, முன்மாதிரியைக் காட்டும் காலடி கழுவுதலினாலும், என்றுமுள்ள உடன்படிக்கையான நற்கருணையினாலும் மற்றும் பிறருக்காக உயிரை அளித்தல் என்னும் நிகழ்வுகளாலும் வெளிப்பட்டது. இயேசுவுக்கும் சிலுவைக்கும் உள்ள உறவில் மானுடத்தில் புதிய அறநெறி தொடங்கியிருக்கிறது. புதிய வாழ்வு தானாக பிறப்பெடுப்பது இல்லை. மாறாக அன்பினாலும், தியாகத்தினாலும் தான் நிகழ்கிறது. சிலுவையினுள் மறைந்திருப்பது இயேசுவின் வாழ்வு, போதனையுமாக இருக்கிறது. கடவுளின் ஆற்றலும், ஞானமும், அதே வேளையில் அவரது வலிமையின்மையும் வெறுமையும் சிலுவையில் காண்கிறோம். தந்தையாம் கடவுள் இயேசுவோடு இணைந்து துன்பத்தில் பங்கெடுப்பது மறை பொருளாக இருக்கிறது.

சிலுவை: சமூகப்புரட்சி 

இயேசுவின் சிலுவை, உயிர்ப்பு வழியில் கடவுளை உணர்ந்து புரிந்து கொள்ளும் போது, நம்மை ஒரு நெருக்கடிக்கு, ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்கிறது. கார்ல் மார்க்ஸ் தேடலில், சமூகம் முரண்பாடுகளின் ஊடாக, அவற்றின் தீர்வை நோக்கி பொருள் வகை சக்தியாக, தொழில்படக் கூடிய ஒரு வர்க்கம் தோன்ற வேண்டும். அது தன்னை மட்டும் விடுதலை செய்து கொள்ளக்கூடிய வர்க்கமாக இருத்தல் போதாது. மொத்த சமூக முரணின் வெப்பத்தையும், தண்ணீர் சுமக்கும் வர்க்கமாக இருக்கவேண்டும். பூரண இழப்பு என்ற ஒரு நிலையை எட்டி, பூரண மீள்வாக, அது எழுச்சி பெறுவதாக இருக்க வேண்டும். அது சீர் குலைந்து உருமாற வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்பது ஏழைகளை மையப்படுத்திய வளர்ச்சியாகும். தனியொருவன் தனித்து நிற்பதல்ல வளர்ச்சி, மாறாக ஒவ்வொருவரும் தனித்துவமாக வளர்வது தான் உண்மையான வளர்ச்சியாகும். பெரும்பான்மை மக்களுக்கான சமூகம் என்பது விளிம்பில் உள்ளவர்களை அங்கீகரிப்பதும், கஷ்டப்படுவார்களுடன் உடனிருப்பதும், 'விடிவுகாலம் பிறக்காதா 'என்று ஏங்கித் தவிப்பவர்களுடன் மாற்று சமூக சிந்தனைகளை செயலாக்கத்திற்கு வழிவகுப்பதுமாகும். "மக்களாட்சி தோற்றது என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை" என்கிறார் அம்பேத்கார். 

சிலுவை வழியே உயிர்ப்பு 

யாரொருவர் மக்களுக்காக போராட முன்வருகிறாரோ ஒருங்கிணைந்த மனதும், நம்பிக்கையும், இழப்பை ஏற்க தயார் நிலையும், வேரோட்டமான திறந்த மனநிலையும் கொண்டிருக்கிறாரோ அவர் மக்கள் மனதில் நித்தமும் குடி கொள்ளலாம். உரிமைக்காக மக்கள் நலனை முன்னிறுத்தி போராட்டக் களத்தில் குதிப்பது திருஅவையின் கடமையாக இருக்கிறது. நீதிப் போராட்டத்தில் திருஅவை பார்வையாளராக இருக்கக்கூடாது. இறைவாக்கினரை போன்று இடித்துரைக்க வேண்டும். மானிடரை விவேக படுத்தவேண்டும். மக்களை நல்ல செயல்பாட்டிற்கு ஊக்கப்படுத்தவேண்டும். வேறுபாடுகளை களைந்து அனைவரையும் ஒன்றித்து ஆக்கபூர்வமான செயல்களை செய்வது என்பது கிறிஸ்தவர்களின் கடமையாகும்.

இயேசு துன்பம் என்றால் என்ன என்பதை விளக்க வரவில்லை. ஆனால் அதை தனது உடனிருப்பால் நிரப்ப வந்தார். துன்பத்தை கூண்டோடு அழிக்க அல்ல, நமது துன்பத்தில் பங்கேற்க வந்தார். சிலுவையை நீக்க அல்ல அதில் அறைபட வந்தார். நாம் சிலுவையில் அறையப்படவில்லையெனில், உயிர்ப்பை பெற இயலாது. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பினை ஏற்று மாபரன் இயேசுவைப் போன்று ஏழை மக்களை தயக்கமின்றி தேடிச் செல்ல வேண்டும். நாம் பெற்ற இன்பத்தை தாராளமாக அவர்களோடு பகிர்ந்து கொள்வோம். சிலுவைகளை கண்டு அஞ்சாமல் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்.
அருட்தந்தை க.பெர்க்மான்ஸ் சே.ச, அருள்கடல்
நன்றி - நம் வாழ்வு