சிலுவை சுமப்போம்

1. சீடராக வாழ இயேசு அழைக்கிறார் 

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28) என்னும் இயேசுவின் அழைப்பை நாம் நன்கறிவோம். ஒருவேளை இயேசுவின் இந்தக் கூற்று தான் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும். இக்கூற்றில் துயருறும் மனிதர்களை மதம், மொழி, இனம், நிறம், ஜாதி, பால் வேறுபாடு, பொருளாதார வேறுபாடு, தகுதி வேறுபாடின்றி அனைவரையும் தன்னிடம் வருமாறும் தாம் வழங்கும் இளைப்பாறுதலில் விடுதலை அடைந்து மகிழுமாறும் இயேசு அழைக்கிறார். இந்த வாக்குறுதியினால் பயனடைந்த பயனாளிகள் ஏராளமானோர்.

இயேசுவிடமிருந்து ஆறுதலும் விடுதலையும் மீட்பும் பெறுவதிலேயே நின்றுவிடுவோர் அநேகர். ஆனால் இப்பயனாளிகளை, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத் 4:20) என்று இயேசு அழைக்கிறார். இக்கூற்று அதிகம் வலியுறுத்தப்படவில்லை.

இயேசுவிடமிருந்து நன்மைகளை ருசிப்பவர்களாக மட்டுமல்ல அவரை பின் செல்லும் சீடர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆதலால் தான் தாம் உயிர்த்தபின், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத் 28:19) என்று 11 சீடருக்கும் கட்டளை பிறப்பித்தார். 

இன்றைய கிறிஸ்துவத்தில் திருஅவையில் இயேசுவின் அருளால் பயன் பெற்ற பயனாளிகள் தான் அதிகம். ஆனால் அவரைப் பின் செல்லும் சீடர்களோ மிகவும் குறைவு. இந்த அவலநிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். 

நற்செய்திக் கூட்டங்களிலும், மறையுரை மேடைகளிலும், கிறிஸ்துவை இதழ்களின் எழுத்துக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் "செழிப்பு போதனைகள்" அதிகம் இடம்பெறுகின்றன. சீடராக வாழ சிலுவை சுமக்க சான்று பகர தியாகங்கள் புரிய "நலமான போதனைகள்"  (1 தீமொ 1:3-11) அரிதாகவே வெளிப்படுகின்றன. கிறிஸ்தவரும் கிறிஸ்தவமும் "சமநிலை" தவறி தன் அழைப்பிலிருந்து வீழ்ந்திருப்பதற்கும் இன்றைய காலத்தில் நோஞ்சானாக இருப்பதற்கும் சீடத்துவம் பற்றியும் சிலுவை சுமத்தல் பற்றியும் போதுமான வலியுறுத்தலும் புரிதலும் இல்லாததே காரணம். சீடராய் வாழ்வதும் சிலுவை சுமப்பதும் சவால்கள் நிறைந்த கிறிஸ்தவ வாழ்வு ஆகும். 

2. சிலுவை சுமக்க இயேசு பணிக்கிறார் 

"என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23). நம் ஆண்டவர் இயேசுவின் இவ்வார்த்தைகள் அவரைப் பின் செல்ல விரும்பும் சீடர்களுக்கு கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. அது அறிவுரையோ, பரிந்துரையோ அல்ல, மாறாக அது கட்டளை. 

இக்கூற்று மத்தேயு லூக்கா நற்செய்தி நூல்களில் இரு முறைகளும் (மத் 10:38; 16:34 லூக் 9:23; 14:27) மாற்கு, யோவான் நற்செய்தி நூல்களில் ஒவ்வொரு முறையும் (மாற்று 8:34; யோவான் 12:25) வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இயேசுவின் கூற்றுகளுள் வேறெந்த கூற்றும் இவ்வளவு அதிகமாக வலியுறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குணமளிக்கும் இயேசுவின் அற்புதங்களை சுவைக்க எண்ணறிய மக்கள் அவரைத் தேடி வருகின்றனர். ஆனால் அவரை பின்பற்றுவதற்கான சவால்களை அறியாத காரணத்தினால் பலர் பின் வாங்கிவிடுகின்றனர். ஆதலால் தான் இன்றைய கிறிஸ்தவரில் பலர் உலக அறிவில், தொழிலில் பட்டதாரிகளாகவும், மேதைகளாகவும், சாதனையாளர்களாகவும் உள்ள அதே வேளையில் கிறிஸ்தவ அறிவில், வளர்ச்சியில் பாலர் பள்ளி குழந்தைகளாகவே உள்ளனர். இந்நிலை மாறி நாம் முதிர்ச்சி அடைய வேண்டுமாயின் சீடனாய் மாறுவதற்கும் சிலுவை சுமப்பதற்கும் இயேசு விடுவிக்கும் சவாலை, நிபந்தனையை, கட்டளையை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். 

இயேசு சிலுவை சுமந்தற்கும் சீடராகிய நாம் சிலுவை சுமப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதைக் கவனித்தல் வேண்டும்.

இயேசு சிலுவையை சுமந்தார்; பின்னர் அதில் இறந்தார். நாமோ முதலில் இறக்கவேண்டும். பின்னரே சிலுவையை சுமக்க வேண்டும். இந்த உண்மை தத்துவத்தை நன்கு மனதில் இருத்துதல் வேண்டும். இந்த இடத்தில் இயேசுவின் கூற்றை மீண்டும் ஒருமுறை நிதானத்துடன் வாசித்தல் நன்று. 

"என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." இக்கூற்றில் "தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்ற கட்டளைக்கு முன்பாக "தன்னலம் துறந்து" என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் இக்கூற்றில் உள்ள கருத்துக்களின் வரிசையையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது முதலில் தன்னலம் துறக்கவேண்டும். பின்னரே தன் சிலுவையை சுமக்க வேண்டும். 

தன்னலம் துறத்தல் என்பது தான் இறத்தல் என்ற உருவாக பொருளாகும். "நான், எனது, ஆணவம், அகந்தை, சுயம்......"  என்ற பொருளில் தன்னலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதை இழந்தால்தான், இவற்றிற்கு இறந்தால்தான் பின்னர் வாழ்வில் சிலுவை சுமப்பது என்பது எளிதாகும்.   தன்னலம் துறவாது சிலுவை சுமப்பது என்பது கடினமானது மட்டுமல்ல; இயலாததும் ஆகும்.

3. சிலுவையின் பொருளைப் புரிந்து கொள்வது கடினமானது 

ஒத்தமை நற்செய்தி நூல்களில் குறிப்பாக மாற்கு நற்செய்தியில் சிலுவையில் தான் அனுபவிக்கப்போகும் பாடுகள் பற்றி ஒருமுறை அல்ல மாறாக மும்முறை இயேசு முன்னறிவிக்கிறார்.(மாற்று 8:30; 9:30; 10:30) முதல் உள்ள வசனங்கள். 

இயேசுவின் அறிவுரைகள், உவமைகள், புதுமைகள், அன்றாட நிகழ்வுகள் இவற்றின் ஊடே பயணம் செய்யும் சீடர்களே இயேசுவைப் பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ளத் தடுமாறினார்கள். சிலுவை பற்றிய பொருளை விழ்ந்தும் எழுந்தும் தான் கற்றுக் கொண்டார்கள். 

எடுத்துக்காட்டாக மாற்கு 8: 31-இல் இயேசு முதன் முறையாகத் தம் பாடுகளை  முன்னறிவிக்கிறார். "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரை அழைத்து கடிந்து கொண்டார் என்று வாசிக்கின்றோம். மேலும் இயேசு பேதுருவை நோக்கி "என் கண்முன் நில்லாதே சாத்தானே, ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" எனவும் கடிந்து கொண்டார். 

மாற்று 9:31 - இல் இரண்டாம் முறையாக இயேசு தம்  பாடுகளை முன்னறிவிக்கிறார். வசனம் 32 ல் "இயேசு சொன்னது சீடர்களுக்கு விளங்கவில்லை அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்" என வாசிக்கிறோம். மேலும் தொடர்ந்து வசனம் 33 முதல் உள்ள பகுதியில் தங்களுக்குள் யார் மிகப் பெரியவர் என்பது பற்றி வாதாடினர் என்று பார்க்கிறோம். ஆதலால் இயேசு சிலுவையின் படிப்பினையை விளக்க, "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினார். மேலும் ஒரு சிறு பிள்ளையை முன்னுதாரணம் காட்டி நாமும் குழந்தை உள்ளம் கொண்டிருந்தாலே சிலுவை வலி எனவும் விளக்கினார். 

சிலுவையின் பொருளை இரண்டாம் முறை விளக்கியும் சீடர்கள் புரிந்துகொண்டார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆதலால் தான் முழுமையாக மூன்றாம் முறையும் இயேசு முன்னறிவிக்க நேர்ந்தது. 

மாற்கு 10:33 இல் மூன்றாம் முறையாக சீடர்களிடம் தம் பாடுகளை எடுத்துச் சொல்கிறார். ஆனால் இந்த நேரத்தில்தான் வேடிக்கையான நிகழ்வு நடைபெறுகிறது. சீடர்களில் இருவர் யாக்கோபும் யோவானும் தன் தாயின் மூலம் எருசலேமில் இயேசு அரசராக ஆளும்போது அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் வலிமை வாய்ந்த அமைச்சர்களாக வலம்வர பரிந்துரை செய்கின்றனர். வசனம் 41  இல், "இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபம் கொள்ளத் தொடங்கினர் என வாசிக்கின்றோம். "ஐயோ! இந்த மறைவான திட்டம் தங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே! தாங்களும் தங்கள் இப்படி பரிந்துரைக்க மாமா, அத்தையை அழைத்து வந்து இருக்கலாமே" என ஆதங்கம். 

மூன்று முறை இயேசு தம் பாடுகளை முன்னறிவித்தும் சீடர்கள் சிலுவையின் பொருளைப் புரிந்து கொள்ள தடுமாறினர். ஆம் சிலுவையின் பொருள் புரிந்து கொள்ளவே கடினமானது. இதில் இன்னொரு உண்மை என்னவென்றால் சிலுவையின் பொருளை விரும்புவது அல்லது செயல்படுத்துவது என்பது மிகமிகக் கடினமானது என்பது தான்.

4. சிலுவையை மையப்படுத்திய திருத்தூதர் பவுல்  

புனித பவுலின் முதல் மறையுரைகள் சிலுவையை பற்றியது அல்ல. அவை உயிர்ப்பை பற்றியவை. இயேசுவின் இரண்டாம் வருகையை பற்றியவை; கடவுளின் குணநலன்களைப் பற்றியவை ஆகும். (1 தெச. 4:16; 5:23). தனது பணிவாழ்வில் பதினைந்து இருபது ஆண்டுகள் கழித்து சிலுவை பற்றிய படிப்பினையில் பவுலுக்கு பிடிப்பு ஏற்பட்டது. தொடக்கத்தில் பவுல் ஒரு நல்ல மறையுரையாளரும் அல்ல; நல்ல சொற்பொழிவாளரும் அல்ல; கவர்ச்சியில் ஈர்த்து இழுப்பவரும் அல்ல (1கொரி. 2:1-5). யூத்திகு என்னும் இளைஞன் பவுலின் மறையுரையைக் கேட்டு தூங்கி விழுந்து இறந்தான் என்பது வேடிக்கையான உண்மை (திப.20:9). பவுல் தன் அன்றாட பணி வாழ்வில் பல சிலுவைகளை சந்திக்க நேர்ந்தது. 

1. தான் செல்லும் இடமெல்லாம் மிகுந்த அன்போடு சந்தித்த யூதர்களில் பெரும்பான்மையோர் பவுல் அறிவித்த நற்செய்தியை ஏற்கவில்லை. இது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

2. தான் உருவாக்கிய சபைகளில் ஒற்றுமையின்மை, உட்கட்சி பூசல், போட்டி மனப்பான்மை போன்ற பல வகையான குறைபாடுகள் அவரது உள்ளத்தை அதிகம் க்வாட்டின. 

3. ஓய்வில்லாமல் ஓடியாடி உழைத்த பவுலின் தனி வாழ்விலோ துயரங்களும், ஏற்றமும், இரக்கமுமான உணர்ச்சிப் பெருக்குகளும், சோர்வும், தளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகமாகி விரக்தியை உருவாக்கின. 

4. பலமுறை கடவுளிடம் மன்றாடியும் அவர் குணமளிக்காத ஒர் உடல் நோய் (முள்) அவரை மிகவும் மனமுடையச் செய்தது (2கொரி.12:7).

பவுல் சிலுவைப் பற்றிய போதனைகளைப் படிப்படியாகவே கற்றுத் தேர்ந்து முதிர்ச்சி அடைந்தார்.

1. ஏதென்ஸ் நகரில் இயேசுவை உயிர்த்த ஆண்டவராக பிற இனத்தவர் மத்தியிலே பேசுகிறார். இந்தப் பேச்சு தண்ணிலே ஒரு சிறந்த சொற்பொழிவு தத்துவமாக அமைந்தது. இதனால் அதிக பலனும் கிட்டியாதாகத் தெரியவில்லை (திப 17:22). 

2. கொரிந்து நகரில் இருந்த சபையில் பிளவுகள் ஏராளம் இருந்தன. பிரச்சினைகளும் குறைவில்லாமல் இருந்தன. இவர்களுக்கு பவுல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறார். அவர்களையும் பிரச்சினைகளையும் சிலுவையில் நடுவில் கொண்டு வந்து சேர்க்கிறார். இங்கே நூற்றுக்கணக்கான மக்கள் மனம் மாறுகிறார்கள். இயேசுவின் செய்தி அறிவைத் தொடுவதற்கு அல்ல. மாறாக இதயத்தைத் தொடுவதற்கு என்பதனை பவுல் கற்றுக் கொள்கிறார்.

3. கலாத்திய அனுபவத்திலிருந்து சிலுவைத் தியானம் இன்னும் வலுக்கிறது. கலாத்திய சபை புனித பவுல் உருவாக்கிய சபை. இச்சபையை இன்னொரு பணியாளர் குழப்பிவிட்டார். ஆகவே அவர்களை இதிலிருந்து விடுவிக்க "நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவை அன்றி வேறெதிலும் பெருமை பாராட்ட மாட்டேன்" என்று சான்று பகர்கிறார் (கலா 6:14). சிலுவையில் வெளிப்பட்ட கடவுளின் அன்பை உணர்த்துகிறார். உயிர்ப்பு என்பது மனித அறிவை கடந்த ஒன்று. ஆனால் சிலுவை துன்பம் என்பவை அன்றாட மனிதனின் அனுபவங்கள். மேலும் அவை யாராலும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை. ஆகவேதான் கலாத்தியர் 2:19 -இல் "நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன், வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்" என்கின்றார். இங்கே சிலுவை அனுபவத்தில் புனித பவுல் வளர்ச்சி பெற்று இருப்பதை நாம் காண முடிகிறது. 

4. புனித யோவான் நற்செய்தியில் கடவுளின் அன்பு உயரே பறக்கும் கழுகுப் பார்வை கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் புனித பவுலின் அனுபவமோ கீழிருந்து சிலுவையை உற்றுப் பார்க்கும் ஓர் அடிமட்ட பார்வையாக இருக்கிறது. அன்பு, ஞானம், வல்லமை இவற்றில் அன்பே பெரியது என்பது பவுலின் கருத்து. சிலுவையில் இறைவன் சிரிக்கிறார். தன்னை முழுமையாய் வெளிப்படுத்துகிறார் என்பது பவுலின் பார்வையாகும். 

5. புனித பவுலின் போதனைகளுள் மையமாய் அமைந்துள்ள இறையியல் கருத்து எது? என்னும் கேள்விக்கு பிரிந்த சகோதரர்களும் கத்தோலிக்கரும் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு கருத்துக்கள் வைத்துள்ளனர். ஏற்புடைமையா? கிறிஸ்துவுக்குள் புது வாழ்வா? என்பது பட்டிமன்றத்தின் தலைப்பாகக் கொடுக்கலாம். ஆனால் பவுலின் எழுத்துக்களை ஆழ்ந்து படிக்கும் ஒருவர் பவுல் தன் போதனைகள் அனைத்தின் முடிவிலும் ஆண்டவரின் சிலுவையை கொண்டு வந்து முற்று புள்ளி வைப்பது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

புனித பவுல் தன்னுடைய திருத்தூதர் பணி வாழ்வில் சிலுவையை கற்றார். 2 கொரி ஒன்று 1:8 - இல் சொல்வதுபோல் சாக வேண்டுமென்றே நினைத்தார். ஆயினும் உரோமையர் 8:17 - இல் சான்று பகர்வதைப் போல அவரது பாடுகளில் பங்கெடுப்பதே அவருக்கு மறுமை மகிமையை தரும். இம்மை பரிசாய் இருக்கிறது. ஆகவே தான் உரைமையர் 8:
35 இல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உறுதிபடக் கூறுகிறார். "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எது பிரிக்க முடியும்" என்று. புனித பவுலின் கடைசி நாள்கள் யாவருடைய கண்களையும் குணமாக்கக் கூடியவை. கிறிஸ்துவுக்காக அவர் வாளால் வெட்டிக் கொல்லப் படுகிறார். நம்மை அன்பு செய்தவரின் செயலால் நாம் வெற்றி அடைகிறோம் என்பது பவுலின் நம்பிக்கை (உரோ. 8:38,39). 

சீடன் எனப்படுகிறவன் சிலுவையின் அடியில் நின்று அதை உற்றுப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். சுமைக்கிறவனாய் இருத்தல் வேண்டும். சிலுவையை பின் செல்ல வேண்டும். விசுவாச அறிக்கை செய்பவனாகவும் தன் பிரச்சினைகள் அனைத்தையும் சிலுவையின் அடியில் ஒப்புவிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். ஆகவேதான் லூக்கா 9:23 - இல் "தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து வர வேண்டும்" என்று இயேசு சீடர்களுக்குக் கட்டளையிடுகின்றார்.  2கொரி. 11 20-23 ஆகிய பகுதியில் புனித பவுல், தாம் சுமந்த சிலுவைகளைப் பட்டியலிடுகிறார். கேட்பதற்கே இதயம் கனக்கிறது. அவற்றை அனுபவித்த பவுலுக்கு எப்படி இருந்திருக்கும். ஆகவேதான் அப்பட்டியலில் இறுதியில் என் வலுவின்மையில் நான் பெருமை பாராட்டுகிறேன் என்கிறார் பவுல் (2கொரி 11:30).

5. சீடர்களாய் வாழ்வோம்! சிலுவை சுமப்போம்! 

சிலுவை, துன்பம், நோய், பிரச்சனைகள், துயரம் என்னும் வாழ்வின் எதார்த்தங்களுக்கு இயேசுவின் வழியில் நாம் செயல்படுத்த வேண்டிய பதில் மொழி அன்பு, மன்னிப்பு, தியாகம் ஆகும். தன்னலத்தை மறந்தலும் பிறர்நலத்தை நாடுதலும் ஆகும். எளிமை, தாழ்ச்சி, கனிவு, இரக்கம், நீதி ஆகிய வையும் ஆகும். 

இயேசுவின் படிப்பினைகளை ஆழமாய் கற்றறிந்த பவுல் தம்மால் முடிந்த மட்டும் அதற்கு செயல்வடிவம் தந்துள்ளார். நமக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார். சிலுவை பற்றிய போதனைகளும் செயல்முறைகளும் அரிதாகிக் கொண்டு வரும் இக்காலத்தில் அதை மீட்டெடுப்பது நமது கடமையாகிறது சிலுவையின் பொருளை நாம் மீட்டெடுக்க முயல்வோம். 

பழைய ஏற்பாட்டில் கடவுள் அற்புதங்களில் தன்னை வெளிப்படுத்தியதால் யூதர்கள் அடையாளங்களை கேட்கிறார்கள். அறிவு, தத்துவம் இவற்றில் வளர்ந்த கிரேக்கர்கள் ஞானத்தை நாடுகிறார்கள். புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களோ மடமையாய் தோன்றுகிற சிலுவையில் பெருமை பாராட்டுகிறார்கள் (1கொரி. 1:18-24).

பவுலின் காலத்தில் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் இருந்தனர் (பிலி.3:18). ஆயினும் பவுல் போன்றோர் "நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னை பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்" என்கிறார் (கலா.6:14). 

நாமும் இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து சான்று பகர்வோம். சிலுவை சுமக்க பழகுவோம்.