கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 8 /25 ***


 “ இதோ உம் உறவினரான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனை கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை “

             லூக்காஸ் 1: 26-27

பாருங்கள் எலிசபெத்தும் மரியாளின் உறவினள். ஆக மீட்பு நம் அன்புத்தாயின் குடும்பத்தை சுற்றியே வருகிறது. 

ஸ்ஞாபக அருளப்பரின் பெற்றோர்களான சக்கரியாசும், எலிசபெத்தும்,

“ ஆண்டவருடைய கற்பனைகளின் முறைகளின்படி குறைகூற இடமில்லாமல் நீதிமான்களாய் வாழ்ந்து வந்தனர். லூக்காஸ் 1:5.

மாதாவின் பெற்றோர்களையும் பார்த்தோம். மாதாவின் உறவினர்களையும் பார்க்கிறோம். இயேசு கூட தன் தாய்வழி சொந்தமான சின்ன யாகப்பரை தன் சீடராக தேர்ந்து கொண்டார். அவர்தாய் வழி பெண் சீடர்களும் உண்டு. பெரிய யாகப்பர், அருளப்பர் தாயான சலோமியும் தேவதாய்க்கு உறவினர்தான்.

சொல்ல வருவது என்னவென்றால் கடவுளுக்காக கடவுள் பணிக்காக நீதிமான்களாக, நல்லவர்களாக, மற்றவர்களுக்கு தானே போய் உதவி செய்பவர்களாக தூய்மை உள்ளம் கொண்டவர்களாக அன்புத்தாயின் குடும்பம், அவர் உறவினர்களின் குடும்பம் தலை முறை தலை முறையாய் வாழ்ந்து வந்துள்ளது..அதனால்தான் கடவுள் அந்த குடும்பங்களை மீட்பின் திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.

சற்றே திரும்பி பார்ப்போம். பாரம்பரிய கத்தொலிக்க கிறிஸ்தவக்குடும்பங்களான நம் குடும்பங்களின் இப்போதைய நிலமை என்ன? பக்தியில் திளைத்திருந்த நம் குடும்பங்கள், காலை திருப்பலி, மாலை ஜெபமாலை என்று கோவிலுக்கு சென்று வந்திருந்த நம் குடும்பங்களின் தற்போதைய நிலமை என்ன? சாயங்காலம் அல்லது இரவு குடும்ப ஜெபமாலை சொல்லாமல் உறங்கியதே இல்லை என்று இருந்த நம் குடும்பங்களின் இன்றைய கதி என்ன?

கடவுளும், புனிதர்கள் மட்டும் திருச்சபையையோ, இந்த உலகத்தையோ தாங்குவதில்லை, அழிவுகளிலிருந்து காப்பதில்லை. நம் கிறிஸ்தவ குடும்பங்கள் செய்யும் ஜெபங்களிலிருந்தும் உலகம் அழிவிலிருந்து காக்கப்படுகிறது என்பது உண்மை.

ஜெபம் செய்ய நேரம் ஒதுக்காமல், டி.வி புரோகிராம்களிலும், சீரியல்களிலும் நேரத்தை செலவழித்து, தூங்கும் வரை டி.வி முன்னாலே இருந்துவிட்டு தூங்குவதுதான் கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமல்ல 98% சதவிகித குடும்பங்களின் நிலை.

பின்பு குடும்பங்களில் சமாதானம், சந்தோசம் எப்படி வரும் ?.

இப்போது பார்க்க முடிகிறது எல்லாம்..

பெற்றோருக்கும் - பிள்ளைகளுக்குமான இடைவெளி, கணவனுக்கும் – மனைவிக்குமான இடைவெளி, சகோதர, சகோதரிக்குள் இடைவெளிகளை பார்க்கமுடிகிறது. பரஸ்பரம், பாசம் குறைந்து எல்லாமே கடமைகளாகவும், கடமைக்காகவும் ஆகிவிட்டது.

திருவிவிலியத்தின் கதைகளையோ அல்லது பிள்ளைகளுக்கு பிடிக்கும் கதைகளையோ சொல்லி அவர்களை தூங்க வைத்த காலம் எங்கே ?  நம் குழந்தைகள் நல்லவர்களக வளரவேண்டும் என்ற சிந்தனைகள் போய், திறமைசாலிகளாக, அப்படி, இப்படி வளர்க்கவேண்டும் என்ற சிந்தனையே நிற்கிறது. திறமைகள் கண்டிப்பாக வளர்க்கப்படவேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் நல்லொழுக்கங்கள் அவர்களுக்கு சாப்பாடு போல் ஊட்டப்படவேண்டும்..

ஜெபம் : திருக்குடும்பமே உங்களுக்குள் எத்தனை விட்டுக்கொடுத்தல்கள், எத்தகைய நேசங்கள், எத்தகைய அன்பு, உணர்வு பரிமாற்றங்கள் எப்பேற்பட்ட தியாகங்கள் உலகத்துக்கே உதாரன குடும்பம் உங்கள் குடும்பம்தான். உங்கள் குடும்பத்தின் முன்மாதிரியை பின் பற்றி எங்கள் குடும்பமும், ஒருவர் ஒருவருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களை புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சிபடுத்தி முக்கியமாக உமக்கு நேரம் ஒதுக்கி குடும்பமாக அமர்ந்து இறைவார்த்தைகளை தினமும் வாசித்து, குடும்ப ஜெபமாலை சொல்லி தங்களுக்காகவும், பிறருக்காகவும் ஜெபிக்கவும், உம் பிறந்த நாளுக்காக குடுபம்பமாக எங்களை தயாரிக்க வரம் தாரும்

- ஆமென்