இன்றைய புனிதர் - ஜனவரி 3 - புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா ***


புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா

(St. Kuriakose Elias Chavara)

CMI மற்றும் CMC ஆகிய சபைகளின் நிறுவனர்/ சிரிய கத்தோலிக்கரின் தலைமை ஆட்சியர்:

(Founder of CMI and CMC Congregations; Vicar General of Syrian Catholics)

பிறப்பு: ஃபெப்ரவரி 10, 1805

கைநக்கரி, குட்டநாடு, திருவிதாங்கூர் இராச்சியம் (தற்போதைய ஆலப்புழா மாவட்டம், கேரளா, இந்தியா)

(Kainakary, Kuttanad, Travancore (Now in Alappuzha District, Kerala, India)

இறப்பு: ஜனவரி 3, 1871 (வயது 65)

கூனம்மாவு, கொச்சி இராச்சியம் (தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம், கேரளா, இந்தியா)

(Koonammavu, Kingdom of Cochin (Now in Ernakulam, Kerala, India)

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை (சிரோ மலபார் திருச்சபை)

(Catholic (Syro Malabar Church)

அருளாளர் பட்டம்: ஃபெப்ரவரி 8, 1986

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

புனிதர் பட்டம்: நவம்பர் 23, 2014

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித சூசையப்பர் ஆலயம் – மன்னானம், கோட்டயம், கேரளா, இந்தியா.

புனித ஃபிலோமினா ஃபோரேன் ஆலயம் - கூனம்மாவு, கொச்சி, கேரளா, இந்தியா.

(St. Joseph's Church, Mannanam, Kottayam, Kerala, India and 

St.Philomena's Forane Church, Koonammavu, Kochi, Kerala, India)

பாதுகாவல்: அச்சுத் தொழில், ஊடகம், இலக்கியம், சபைகள்

நினைவுத் திருவிழா: ஜனவரி 3 (சிரோ மலபார்)

புனிதர் குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தவரும், கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவரும் ஆவார்.

இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண் துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியாளின் கார்மேல் சபை” (Carmelites of Mary Immaculate (C.M.I.) என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண் துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” (Congregation of the Mother of Carmel (C.M.C.) என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு:

குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா, இந்தியாவின் கேரள மாநிலத்தில் “கைநக்கரி” (Kainakary) என்னும் கிராமத்தில் “நசரானி கிறிஸ்தவர்கள்” (Nasrani Christian) என்று அழைக்கப்படுகின்ற “புனித தோமா கிறிஸ்தவ” குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை “இகோ குரியாக்கோஸ் சாவரா” (Iko Kuriakose Chavara) ஆவார். தாயார் “மரியம் தோப்பில்” (Mariam Thoppil) ஆவார். குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா பிறந்த நாள் 1805ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 10ம் நாளாகும். “சென்னம்காரி” (Chennamkary) ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 17ம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது.

சொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்ற இவர், 1818ம் ஆண்டு, “பள்ளிப்புறத்தில்” (Pallipuram) அமைந்திருந்த குருமடத்தில் இணைந்தார். அந்த குருமடத்தின் அதிபராக, (Rector) அருட்தந்தை “பாலக்கல் தோமா மல்பான்” (Palackal Thoma Malpan) இருந்தார். குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, 1829ம் ஆண்டு, நவம்பர் மாதம், 29ம் நாள், குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

குருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள், “பாலக்கல் தோமா மல்பான்” (Palackal Thoma Malpan) மற்றும் “போருக்கர தோமா கத்தனார்” (Porukara Thoma Kathanar) ஆவர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் “மாசற்ற மரியாளின் ஊழியர்” என்பதாகும். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் நட்டார். அவர் 1846ம் ஆண்டிலும், அதற்கு முன் தோமா மல்பான் 1841ம் ஆண்டிலும் இறந்தார்கள். 1855ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாள் குரியாக்கோஸும், அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ், மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். "காலணியற்ற கார்மேல் சபை” (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.

சமூக சீர்திருத்தர்:

குரியாக்கோஸ் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார். உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று பாடுபட்டார்.

1846ம் ஆண்டு, அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக இருந்தபோது, 1864ம் ஆண்டில், ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

குரியாக்கோஸ் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன.

இந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை “தீபிகா”.

திருச்சபை அளவில் பணி:

கேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்தி முயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்தி முயற்சிகள் பரவ வழிவகுத்தார்.

ஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866ம் ஆண்டு நிறுவினார்.

இறப்பு:

குரியாக்கோஸ், கூனம்மாவு என்ற ஊரில் 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். அவருடைய உடலின் மீபொருட்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித சூசையப்பர் ஆலய மடத்தில் 1889ம் ஆண்டும், மே மாதம், 24ம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.

அவருடைய நினைவுத் திருவிழா அவர் இறந்த நாளாகிய ஜனவரி 3ம் நாள் கொண்டாடப்படுகிறது.

புனிதர் பட்டம்:

குரியாக்கோசை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936ம் ஆண்டு வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோஸுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955ம் ஆண்டு, சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 7ம் நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு “வணக்கத்துக்குரியவர்” என்னும் பட்டம் கொடுத்தார்.

1986ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் ஃபெப்ரவரி மாதம், 8ம் நாள் குரியாக்கோசுக்கு “அருளாளர்” பட்டம் வழங்கினார்.

2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 3ம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.

திருத்தந்தை ஃபிரான்சிஸ், 2014ம் ஆண்டு, நவம்பர் மாதம், 23ம் நாள் கிறிஸ்து அரசர் பெருவிழாவின் தருணத்தில், வத்திக்கான் நகர புனித பேதுரு பேராலய வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது குரியாக்கோஸ் எலியாஸ் சாவராவுக்குப் புனிதர் பட்ட அருட்பொழிவு வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண் துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த “யூப்ரேசியா எலுவத்திங்கல்” (Euphrasia Eluvathingal) என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.