இன்றைய புனிதர் - ஜனவரி 2 - அலெக்ஸாண்ட்ரியா நகர புனிதர் மாகாரியஸ் ***


அலெக்ஸாண்ட்ரியா நகர புனிதர் மாகாரியஸ்

(St. Macarius of Alexandria)

துறவி, சந்நியாசி:

(Monk, Ascetic)

பிறப்பு: கி.பி 300

எகிப்து (Egypt)

இறந்தது: கி.பி 395

எகிப்து (Egypt)

ஏற்கும் சமயம்/ சபைகள்:

கத்தோலிக்க திருச்சபை

(Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபைகள்

(Eastern Orthodox Churches)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்

(Oriental Orthodox Churches)

நினைவுத் திருநாள்: ஜனவரி 2

அலெக்ஸாண்ட்ரியாவின் புனிதர் மக்காரியஸ், நைட்ரியன் பாலைவனத்தில் (Nitrian Desert) வாழ்ந்திருந்த ஒரு துறவி ஆவார். அவரது சமகாலத்தில் வாழ்ந்திருந்த, எகிப்தின் புனிதர் மக்காரியஸ் (Macarius of Egypt) என்பவரைவிட சற்றே இளையவராக இருந்த காரணத்தால், இவர் இளைய மக்காரியஸ் (Macarius the Younger) என்றும் அழைக்கப்படுகிறார்.

அலெக்ஸாண்ட்ரியாவில், கி.பி. சுமார் 300ம் ஆண்டில் பிறந்த மக்காரியஸ், தமது நாற்பது வயதுவரை, எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் (Alexandria, Egypt) ஒரு வெற்றிகரமான வணிகராக இருந்தார். கத்தோலிக்க விசுவாசத்திற்கு மனம் மாறிய இவர், திருமுழுக்கு பெற்று, கி.பி. சுமார் 335ம் ஆண்டில், மேல் எகிப்தின் தெபாய்டில் (Thebaid, Upper Egypt) ஒரு துறவியாக ஆனார். மேலும் தனது வாழ்நாளின் எஞ்சிய ஆண்டுகளை தவத்திலும், சிந்தனையிலும் ஒரு துறவியாகக் கழித்தார். தம்முடைய பெரும் எளிமையான நடவடிக்கைகளுக்காகவும், நிகழ்த்திய பல அற்புதங்களுக்காகவும் அறியப்பட்டார்.

ஜெருசலேமின் "ஆரிய இன குலபதியான" (Arian Patriarch of Jerusalem) லூசியஸ் (Lucius)  என்பவனுடைய கிறிஸ்தவ துன்புறுத்தலின்போது, நைல் நதிக்கரையில் உள்ள ஒரு தீவுக்கு (An Island in the Nile) வெளியேற்றப்பட்ட மக்காரியஸ், பின்னர் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார். மாகாரியஸ் தனது பெயரில் நைட்ரியா (Nitria) என்னுமிடத்தில், தமது பெயரிலுள்ள ஒரு துறவு மடத்துக்கு ஒரு ஒழுங்கு விதியை எழுதினார். இந்த ஒழுங்கு விதியை, பின்னர் புனித ஜெரோம் (St. Jerome) தனது துறவு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்.

அந்த நேரத்தில், பல துறவிகள் பாலைவன தனிமையை கைவிட்டு, நகரங்களில் ஆத்மாக்களுக்காக உழைக்க தங்களை அர்ப்பணிக்க விரும்பினர். புனித மக்காரியஸ் அவர்களுக்காக பின்வரும் கதையை எழுதினார்:

ஒரு சிறிய ஊரில், ஒரு முடிதிருத்தும் தொழிலாளி இருந்தார். அவர் ஒவ்வொரு முடி திருத்தும் பணிக்கும், மூன்று நாணயங்களை வசூலித்தார். இவ்வகையாக, ஒவ்வொரு நாளின் வேலையின் முடிவில், அவர் தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் சம்பாதித்திருந்தார். மேலும் எதிர்காலத்திற்காக ஒரு சிறிய தொகையையும் மிச்சப்படுத்தினார். எவ்வாறாயினும், அருகிலுள்ள ஒரு பெரிய நகரத்தில் முடி நிறுத்துவதற்கான கூலி மிக அதிகமாக இருப்பதாக அவர் கேள்விப்பட்டார். சில ஆலோசனைகளின் பிறகு, தனது வாடிக்கையாளர்களைக் கைவிட்டு அந்த நகரத்திற்குச் சென்று, குறைந்த வேலைக்கு அதிக லாபம் ஈட்டுவது ஒரு பெரிய நன்மை என்று அவர் முடிவு செய்தார்.

எனவே, அவர் தன்னிடம் இருந்ததை விற்றுவிட்டு, அருகிலுள்ள நகரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உண்மையில், முதல் நாளின் முடிவில், அவர் ஒரு பெரிய தொகையைப் சம்பாதித்திருந்தார். மாலை வேளையில், தனக்குத் தேவையானதை வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார், ஆனால் அங்கே பொருட்களின் விலை மிகவும் உயர்ந்தவை என்பதை உணர்ந்தார். பொருட்களை வாங்கிய பின்னர், அவரது சட்டைப் பையில் பணம் இல்லை. இதன் மூலம், அவர் தனது தவறை உணர்ந்து, தனது வேலையைத் தொடரவும், தனது முதுமையை காப்பாற்றவும் தனது சொந்த ஊருக்கே திரும்பினார்.

புனித மக்காரியஸ் இவ்வாறு தனது கதையை முடித்தார். துறவிகள் தனிமையில் பெறப்பட்ட சிறிய பலன்களில் திருப்தி அடைய வேண்டும் என்றும், நகரத்தில் பல ஆத்மாக்களைக் காப்பாற்ற முயற்சிப்பதை விட, பாலைவனத்தில் தங்கள் சுய பரிசுத்தமாக்கும் பாதையில் இருப்பது நல்லது என்றும், ஏனென்றால் அதன் தொடர்ச்சியான திசைதிருப்பல்கள் மற்றும் சிதறல்களால் அவர்கள் நினைவுகூரும் உணர்வை இழக்க நேரிடும் என்றார்.

வணக்கத்துக்குரிய புனிதர் பெரிய பச்சோமியோஸ் (Venerable St. Pachomios the Great) என்பவருடைய தலைமையிலுள்ள "தபெனீசியட்" மடாலயத்தில் (Tabbenesiot Monastery) அனுசரிக்கப்படும் துறவற வாழ்க்கைக்கான மிகக் கடுமையான விதிமுறையைப் பற்றி அறிந்து கொண்ட மக்காரியஸ், மதச்சார்பற்ற உடையில் மாறுவேடமிட்டு, முழு 40 நாள் தவக்காலத்திலும் ரொட்டியோ, அல்லது வேறு உணவுகளோ சாப்பிடவில்லை. தண்ணீர் குடிக்கவில்லை. அவர் சாப்பிடுவதையோ உட்கார்ந்திருப்பதையோ யாரும் பார்த்ததில்லை. அவர் நின்று கொண்டிருந்தபோது பனை ஓலைகளைக் கொண்டு கூடைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். அங்கிருந்த துறவிகள் புனித பச்சோமியஸை நோக்கி: "இந்த மனிதனை இங்கிருந்து வெளியேற்றுங்கள், ஏனென்றால் அவர் மனிதரே அல்ல" என்றனர். பின்னர், ஒரு தெய்வீக உத்வேகம் மக்காரியஸின் அடையாளத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தியது. துறவிகள் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற விரைந்தனர். மனத்தாழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பாடம் கற்பித்த புனித மக்காரியஸ் தனது சொந்த மடத்துக்கு திரும்பினார்.

73 வயதான மக்காரியஸையும், எகிப்தின் மக்காரியஸையும், பேரரசர் வலென்ஸ் (Emperor Valens) ஒரு தீவுக்கு நாடுகடத்தினார். பின்னர் அவர்கள் அந்த தீவையே கிறிஸ்தவமயமாக்கினர்.

கிழக்கு மரபுவழி பாரம்பரியத்தின்படி, அலெக்ஸாண்ட்ரியாவின் மக்காரியஸ் கி.பி. 395ம் ஆண்டு, ஜனவரி மாதம், 2ம் நாளன்று, மரித்தார்.