தவக்கால சிந்தனைகள் : 17 இயேசு நாதர் சுவாமி சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார் ***

விழுதல் நமக்குண்டான ஒன்று. அதிலும் பாவத்தில் விழுதல் அடிக்கடி நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வு.

“ ஆவி ஊக்கமுள்ளதுதான்; ஆனால் ஊனுடலோ வலுவற்றது “ என்றார் நம் இயேசு தெய்வம்.

இதோ நம் தெய்வத்தைப்பாருங்கள். எப்போதுமே அவரின் ஆவியும் ஊக்கமுள்ளது; அவரின் ஊனுடனும் வலுவுள்ளது. அதனால் அவரிடம் சாத்தானின் எந்த தந்திரமும் செல்லாது. பாவத்தின் நிழல்கூட அவர் மேல் பட்டதில்லை. அப்பேற்பட்ட சர்வேசுவரன் ஊக்கமுள்ள ஆவி உடைய சர்வேசுவரன். வலுவான உடலைக்கொண்ட சர்வேசுவரன் இன்று வலுவிழந்து காணப்படுகிறார். அவரின் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பெல்லாம் காயம். அவர் உடலின் எந்தப்பகுதியும் காயமின்றி இல்லை. தலையில் முள்முடி, கன்னத்தில் அடி, தாடையைப்பிய்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், உலகுக்கு தெறிந்த சித்திரவதை தவிர தெறியாத ரகசிய சித்ரவதை வேறு. அவர் உடல் நொறுக்கப்பட்டு காயங்களால் அவர் உடல் அபிசேகம் செய்யப்பட்டிருந்தது.

இது போதாதென்று பாரமான சிலுவையை வேறு அவர் சுமக்க வேண்டும். என்ன கொடுமை ஒரு பாவமும் செய்யாத கடவுளுக்கு.. கடவுளின் செம்மறிக்கு கேடுகெட்ட பாவிக்கு இழைக்கும் கொடுமை.. நம் பாவத்திற்காக நமக்கு கிடைக்க வேண்டிய கொடுமையை அந்த மாசில்லா செம்மறி சுமக்கின்றது.

தலைவர் சிலுவையின் பாரத்தால் அவர் விழுந்திருக்க மாட்டார். ஆனால் யாருக்காக அவர் சிலுவை சுமக்கிறாரோ அந்த மக்களில் பலர் அவரை உணரவில்லை. கண்டுகொள்ளவில்லை. இதுபோதாதென்று அவரை நகைக்கிறார்கள்; பழிக்கிறார்கள் பரிகாசம் செய்கிறார்கள்.

“ என் மகனே ! என் மகளே ! உனக்காகத்தானே சிலுவை சுமக்கிறேன்; அடி படுகிறேன். பாடுகள் படுகிறேன். ஆனால் நீ உன்னையும் உணரவில்லை, என்னையும் உணரவில்லை. உண்மையையும் உணரவில்லை. நான் சிலுவையின் பாரத்தால் விழவில்லை. உன் ஆன்மாவில் உள்ள பாவத்தின் பாரம் என்னை அழுத்துவதால் நான் விழுகிறேன்”

இன்றும் இப்போதும் சேசு சுவாமிக்கு அதே நிலைதான். அன்று அந்த மக்கள்..
இன்று நாம்... நம் சிலுவைப்பாதைப் பாடலில் பாடுவோமே,

“ இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ... மறந்திடுவாயோ மனிதப்பண்பிருந்தால்... இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ..”

அவர் அன்பை மறந்ததால்தானே மீண்டும்.. பாவத்தில் விழுகிறோம்.. நாம் பாவத்தைவிட்டு எழும் வரை மீண்டும் மீண்டும்... நம் சர்வேசுவரனை தரையில் விழ வைக்கிறோம்.. சிலுவை தூக்க வைக்கிறோம்.. சிலுவையில் அறைகிறோம்...

அவர் துன்பம் தீர வேண்டுமானால் நாம் நிரந்தரமாக பாவம் செய்வதை நிறுத்த வேண்டும்.. நிறுத்தியே ஆக வேண்டும்.. இல்லையென்றால் நம் சர்வேசுவசுவரன்.. நிலை மிகவும் கவலைக்குறியது.

எங்கள் அன்பு இயேசுவே ! எங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்படும் வரம் தாரும்.. மீண்டும் பாவம் செய்யாத.. தவறி விழாத வரத்தை தந்து தூய ஆவியானவரை எங்களுள் பொழிந்து உம் வரப்பிரசாத உதவியால் பாவமின்றி என்றுமே விழாமல் வாழ வரம் தாரும் ஸ்வாமி.. ஆமென்.

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.... தயவாயிரும்....

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !