கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 12 /25 ***


எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்பபெற்று,   

 “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே “

              லூக்காஸ் 1 : 42

அருள் நிறைந்த மரியே என்ற ஜெபத்தில் அதாவது ஜெபமாலையில் பாதியை உரைத்தவர்கள் பிதாவாகிய கடவுளும், பரிசுத்த ஆவியானவரும்தான். அன்று கபரியேல் தூதர் கொண்டு வந்த கடவுளின் செய்தி “ அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” !பாருங்கள் இப்போது எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரம்ப பெற்று கூறிய வார்த்தைகள் அல்ல வாழ்த்துக்கள். ஜெபமாலையில் மீதி அன்னையிடம் நம் வேண்டுதல்,

“ அர்ச்சிஷ்ட்ட மரியாளே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்”

ஜெபமாலை உருவானது இயேசு பிறப்பின் அறிவுப்பின்போதுதான். அன்னை எலிசபெத் சந்திப்பின் போதுதான் நம் ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு முன்பே தோன்றிய ஜெபம் அருள் நிறைந்த மரியே ஜெபம். அன்னை மரியாள் அருள் நிறைந்தவள், பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

ஏவாள் துடங்கி இன்று வரை அல்ல எத்தனை ஆயிரம் வருடம் உருண்டாலும் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் அன்னை மரியாதான் அன்னை மரியாளேதான். அந்த தூய தாயை கடவுள் வாழ்த்துகிறார், பரிசுத்த ஆவியானவர் வாழ்த்துகிறார். ஏன் நாம் வாழ்த்துகிறோம். சிலர் மட்டும் தூற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சரி அவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை. இதை மேலோட்டமாக விவிலியத்தின் புதிய பதிப்பில் சொன்னாலும் கவலை இல்லை.

ஆக ஜெபமாலையில் என்ன இருக்கிறது ? ஜெபமாலை ஏன் சொல்ல வேண்டும் ? யாருக்காக சொல்ல வேண்டும் ?

ஜெபமாலையில் மூவொரு இறைவனின் வார்த்தையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையும் இருக்கிறது. ஜெபமாலை மூவொரு இறைவனுக்கும், சுதனாகிய இயேசுவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் விருப்பமான ஜெபம். இந்த ஜெபத்தில் கடவுளையையும், கடவுளின் அன்னையையும் மகிமை படுத்துகிறோம்.

ஐந்து காயங்களை ஐம்பது ஆண்டுகளாக சுமந்த தந்தை பியோ திருப்பலி நேரம் தவிர மற்ற நேரங்கள் அவர் கரங்கள் அவர் அணிந்திருக்கும் அங்கியின் பாக்கெட்டில் ஜெபமாலையை உருட்டிகொண்டே இருக்கும் அவர் வாய் ஜெபமாலையை சொல்லிக்கொண்டே இருக்கும். அவருக்கு இயேசுவின் காய வேதனையை சுமப்பதற்கு ஜெபமாலை வலிமை கொடுத்தது. ஒரு முறை அவரை பார்க்க ரொம்ப தொலைவிலிருந்து வந்தவர் “ தந்தையே உம்மைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளேன் என்று சொன்னவரிடம் தந்த சொல்லிய பதில்  நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்,

“ என்னைப்பார்க்கவா இவ்வளவு தொலைவிலிருந்து வந்தீர்கள். அதற்கு பதில் மிக பக்தியோடு ஒரு அருள் நிறைந்த மந்திரத்தை சொன்னாலே போதுமே “ என்றார்.

“ ஜெபமாலை சொல்ல எனக்கு நேரமே இல்லை “ என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டிய வார்த்தை.

இதேபோல் புனித தொன்போஸ்கோவின் கனவும் ஜெபமாலையின் மகிமையை வெளிப்படுத்தும்..

“ அவர்காட்டுக்குள் செல்கிறார். ஒரு பயங்கர தோற்றமுள்ள, ஒரு வடிவமே இல்லாத ஒரு மிருகம் படுத்துக்கிடக்கிறது. அதை பார்த்ததும் தன் இடையில் கட்டியிருந்த ஒரு கயிற்றை எடுத்து அதன் மேலே அவர் போட, அந்த கயிரு தானாகவே அந்த மிருகத்தை இருக்கி அந்த மிருகம் துண்டு துண்டாகி கடைசியில் காணாமலே போய்விட்டது. அதன் பின்தான் அவருக்கு விளங்கியது தான் போட்ட கயிறு ஜெபமாலை என்பது..சாத்தானை ஜெயிக்கும், அழிக்கும் வலிமையான கருவி ஜெபமாலை. நாம் சரியாக பயன்படுத்துகிறோமா?

ஜெபம்: இப்போதெல்லாம் ஜெபமாலையின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. ஜெபமாலை சொல்லும் பழக்கமும் நிறைய பேரிடம் இல்லை என்றே சொல்லலாம். ஜெபமாலை பக்தி முயற்சி நம்மை இறைவன் இயேசுவிடம்தான் கொண்டு வந்து சேர்க்கும். இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை எதிர் நோக்கி இருக்கும் கால கட்டத்தில் இந்த உலகத்தில் மீட்பு வர காரணமாயிருந்தவள், கிறிஸ்து பிறக்க கடவுளின் கருவியாக இருந்தவள், இறைத்திட்டம் முழுவதும் உடனிருந்து அது நிறைவேற உற்ற துணையாக இருந்து தன்னையே அர்ப்பணித்து ஒவ்வொரு ஆன்ம மீட்புக்காக இன்றும் ஆர்வமோடும், ஆசையோடும் காத்திருக்கும் அன்னையை மறக்கலாமா?. சிந்தித்து இயேசுவின் பிறப்புக்கு நம்மை தயார் செய்வோம்- ஆமென்