109 தூய இரபேல் அதிதூதர் ஆலயம், வல்லம்


தூய இரபேல் அதிதூதர் ஆலயம்

இடம் : வல்லம்.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
பங்குத்தந்தை : அருட்பணி இ ஆரோக்கிய ராஜ்.

நிலை : பங்குதளம்
கிளைகள் :
காசிமேஜர்புரம் , இலஞ்சி, சிலுவைமுக்கு, தென்றல் நகர் & வாஞ்சிநகர்.

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.

குடும்பங்கள் : 225
அன்பியங்கள் : 8

திருவிழா : செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வரலாறு :

பொதிகை மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் குற்றால நீர் வீழ்ச்சியின் வடக்குத் திசையில் சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வல்லம். வல்லம் என்ற பெயருக்கு தமிழ் அகராதியில் 'மதிப்பு, வலிமை, ஆற்றல் மற்றும் விரைவு' என்ற அர்த்தத்தைக் குறிக்கின்றது.

சுற்றிலும் தென்னை, மா மரங்களைக் கொண்ட தோப்புகளால் அணி செய்யப்பட்டுள்ள இவ்வூரில் பிறந்தவர் திரு சவரிமுத்து என்பவர் ஆவார். இவர் காட்டிலுள்ள மரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு விற்பனை செய்கின்ற தொழிலை செய்து வந்தார். எனவே இவ்வூர் மக்கள் இவரை கரிக்கங்கானி என்று அழைத்து வந்தனர். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தூய இரபேல் அதிதூதர் வெண்குதிரை மீது அமர்ந்து இவருக்கு காட்சி தந்துள்ளார். அப்போது அதிதூதர் திரு சவரிமுத்து அவர்களிடம் உனது பூர்வீக இடத்தில் எனக்கு ஒரு கோயில் கட்டு என்று சொல்லி மறைந்து விட்டார். திரு சவரிமுத்து அவர்களுக்கு அதிதூதரைப் பற்றிய விபரங்கள் சரியாக தெரியாததால் அவர் அதை பெரிதாக நினைக்கவில்லை. அவர் ஒருநாள் வேலையாட்களுடன் காட்டிற்கு கரிமூட்ட சென்ற போது பெரிய மரக்கிளை முறிந்து அவர் தலை மீது விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டார்.

திரு சவரிமுத்து அவர்களின் மூத்த மகள் சவரியம்மாள் ஆவார். இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர். சவரியம்மாள் அவர்கள் தனது தந்தையின் அறிவுரையின் பேரில் இரபேல் அதிதூதர் கனவில் தன் தந்தையிடம் கூறிய தங்களது பூர்வீக இடத்தில் ஓலையாலான சிறு குடிசை கட்டி, பனை ஓலையில் சிலுவை செய்து வைத்து, மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி தினமும் ஜெபம் செய்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு வயதான பின்னர் தனது சகோதரன் திரு மரியமுத்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்து விட்டார்கள்.

திரு மரியமுத்து அவர்கள் வல்லத்தில் வசித்த கிறிஸ்தவ மக்களையும் ஊர் மக்களையும் ஒன்று சேர்த்து சீட்டு நடத்தி, அதில் கிடைத்த பணத்தை வைத்து தமது சகோதரி சவரியம்மாள் சொன்ன பூர்வீக இடமான 20 சென்ட் நிலத்தில் 1923 ம் ஆண்டு தூய இரபேல் அதிதூதர் ஆலயத்தைக் கட்ட துவங்கினார்கள். இதே ஆண்டில் தென்காசி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பாப்பையா அடிகளார் காலத்திலிருந்து மக்களால் தூய இரபேல் அதிதூதருக்கு ஆலயத்தை சுற்றி சப்பரபவனி ஏடுத்து திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அருட்தந்தை சலேத் அவர்களின் பணிக்காலத்தில் வல்லம் தலத்திருச்சபை விரிவடைந்து, அருட்தந்தை பெர்க்மான்ஸ் பணிக்காலத்தில் ஆலயம் அழகுற விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தின் 25 ம் ஆண்டை முன்னிட்டு தென்காசி பங்குத்தந்தையும் வட்டார அதிபருமான அருட்தந்தை சகாய சின்னப்பன் அவர்களின் முயற்சியால் 09-06-2016 அன்று வல்லம் திருச்சபை தேர்வுநிலைப் பங்காக உயர்த்தப் பட்டது. மேலும் 24-05-2017 அன்று பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தி, அருட்தந்தை இ. ஆரோக்கிய ராஜ் அவர்களை முதல் பங்குத்தந்தையாக நியமித்தார்.

'கடவுளின் மருந்தாக' என்ற பெயரைப் பெற்று விளங்கும் தூய இரபேல் அதிதூதர்; தோபித்தின் பயணத்தில் நல்வழி காண்பித்தவராக, சாராவிடமிருந்து பேய்களை விரட்டியவராக, தோபித்துக்கு திருமணம் செய்து வைத்தவராக, தோபியாவிற்கு கண்பார்வை அளித்தவராக இருக்கின்றார். இன்றும் நம் புனிதர் தனது வலிமை மிக்க பரிந்துரையால், நமது துன்பங்களை இன்பமாக்கி அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்றுத் தருகின்றார். நம்பி வந்து செபியுங்கள்..! நலம் பெற்றுச் செல்லுங்கள்.