பாத்திமா காட்சிகள் - நடைபெறாத நான்காம் காட்சி

நகராட்சி மன்றத்தின் உத்தரவைப் பெற்றுக்கொண்ட மார்ட்டோ தம் இயல்புப்படி திடமனதுடன் பேசினார்:  “இத்தனை இளவயதுக் குழந்தைகளை இப்படி ஒரு நீதி விசாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது அர்த்தமற்றது.  அது மட்டுமல்ல.  இங்கிருந்து அது (ஆட்சி மன்றம் இருந்த இடம் அவ்ரம்) 9 மைல் தூரம். அவர்களால் நடக்க சாத்தியமிராது!  சவாரி செய்யவும் அவர்களுக்குத் தெரியாது. என் பிள்ளைகளை நான் அழைத்துச் செல்லப் போவதில்லை.  நான் போய்க் காரணங்களை விளக்கிச் சொல்லிக் கொள்வேன்” என்றார் உறுதியுடன். 

ஆனால் லூஸியாவின் தந்தை அந்தோனி சாந்தோஸ், “குழந்தைகள் அங்கு வரட்டும். வந்து எப்படியும் சமாளித்துக் கொள்ளட்டும்.  இதெல்லாம் என்னவென்றே எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று கூறினார்.  அவர் தன் மனைவி மரிய ரோஸாவின் கருத்தை ஆதரித்தார்.  “லூஸியா சொல்வதெல்லாம் பொய்யயன்றால், அவளுக்கு இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும். அவள் கூறுவது உண்மையானால், (அதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.) தேவதாய் அவளைக் காப்பாற்றிக் கொள்வார்கள்” என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.

இந்த உரையாடலை லூஸியா கேட்டு மிகவும் வேதனை யடைந்தாள்.  “என் தந்தை என் மாமாவையும், அத்தையையும் போல் இல்லையே!  தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க அவர்கள் தங்களை ஆபத்துக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் அதிகாரிகள் என்ன செய்தாலும் சரி என்று ஒரு கவலையுமில்லாமல் என் பெற்றோர் என்னை அவர்களிடம் ஒப்படைக்கிறார்களே! ஆனால் நான் பொறுமையாயிருப்பேன். என் ஆண்டவரே! உமதன்பிற்காக நான் அதிகம் துன்பப்பட நேரிடும். அவற்றையயல்லாம் பாவிகள் மனந்திரும்பும்படி நான் அனுபவிப்பேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஆகஸ்ட் மாதம் 11-ம் நாள் சனிக்கிழமை.  லூஸியாவைக் கூட்டிக் கொண்டு அவள் தந்தை அந்தோனி சாந்தோஸ் அவ்ரம் என்ற பட்டணத்திலிருந்த நகர ஆட்சி மன்றத்திற்குப் புறப்பட்டார்.  ஏற்றமும், இறக்கமும், கரடு முரடுமான பாதையில் லூஸியா அவ்வளவு தூரம் நடக்க இயலாதென்று அவளை பர்ரோ என்று அழைக்கப்படும் குட்டையான ஒரு பொதிமிருகத்தின் மேல் அமர  வைத்து  அவர்  அதை ஓட்டிச் சென்றார்.   

போகும் வழியில் மார்ட்டோ வீட்டின் முன் நிறுத்தினார்.  அவர் எப்போது புறப்படுகிறார் என்று விசாரித்தார். மார்ட்டோ தன் பிள்ளைகளை அவ்ரத்திற்குத் தான் அழைத்துச் செல்லப் போவதில்லை என்று தீர்மானமாகக் கூறினார்.  மேலும் தமக்குக் குதிரை இருப்பதால், தாம் சற்றுப் பிந்திப் புறப்படுவதாகவும், அவர்கள் அவ்ரம் நகரில் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் லூஸியா இறங்கி ஜஸிந்தாவைக் காணச் சென்றாள். அவளைக் கண்டதும் அழுது விட்டாள்.  வீட்டில் நடந்த காரியங்களைச் சொன்னாள். லூஸியாவுக்கு ஆட்சி மன்றத்தில் என்ன நடக்குமோ என்று ஜஸிந்தா பயந்தாள். ஆயினும் அவள் திடத்தை வரவழைத்துக்கொண்டு, “பரவாயில்லை லூஸியா.  அவர்கள் உன்னைக் கொல்வார்களானால், நீ அவர்களிடம் பிரான்சிஸும் நானும் கூட உன்னைப் போலவே இருப்பதாகவும், நாங்களும் இறக்க விரும்புவதாகவும் சொல்லு.  இப்போ பிரான்சிஸும், நானும் கிணற்றருகில் சென்று உனக்காக ஜெபிக்கப் போகிறோம்” என்று கூறி அவளைத் தேற்றினாள்.

இரு குழந்தைகளும் ஒருவரையயாருவர் கட்டிப்பிடித்து அழுதார்கள்.  லூஸியாவைப் பர்ரோவின் மீது மீண்டும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் அவள் தந்தை. பகல் 12 மணிக்கு நகர மன்றத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும்!  நேரமாகிக் கொண் டிருந்தது.  தகிக்கும் வெயில்.  பர்ரோவை வேகமாக ஓட்ட, லூஸியா இதனால் மூன்று தடவை கீழே விழுந்து, சிறு காயங்களுடன் பயணத் தைத் தொடர்ந்தாள்.

அவ்ரம் நகரை அடைந்து ஆட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்றார்கள்.  அங்கே யாரும் இல்லை.  எந்த சந்தடியும் இல்லை.  யாரிடமாவது விசாரிக்கலாம் என்று சந்தைப் பக்கமாக அவர்கள் சென்ற போது, அங்கே மார்ட்டோ தன் குதிரையிலிருந்து இறங்கு வதைக் கண்டார்கள்.  பின் மூவரும் சற்று பசியாறியபின், மன்றம் எங்கே என்று கேட்டதில், அது வேறு ஒரு தெருவிற்கு மாற்றப்பட்டு விட்டதாக அறிந்து அங்கு சென்றார்கள். அங்கு சென்ற சிறிது நேரத்தில் ஆட்சித் தலைவர் ஆர்ட்டுரோ ஒலிவேய்ரா என்பவரின் முன் நிறுத்தப்பட்டார்கள்.

ஆர்ட்டுரோ ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்கர்தான். ஆனால் இளமையிலேயே உலகாதாயக் கொள்கையும், பகுத்தறிவு வாதமும் அவரை சிந்திக்க விடாமல் பற்றிக் கொண்டன.  1910-ல் நடந்த  புரட்சி  இவரை  ஒரு சமய எதிர்ப்பாளனாக மாற்றி விட்டது எனலாம். கூரிய அறிவு, சாதுர்யம், தலைமை தாங்கும் ஆற்றல் எல்லாம் அவரிடம் உண்டு.  அவற்றை தேவ திருப்பணியில் செலவிட்டிருந்தால், திருச்சபைக்குப் பெரிய மகிமையாக அவர் விளங்கியிருப்பார். 

ஆனால் திருச்சபையை எதிர்ப்பதற்கே அவர் இத்திறமைகளைச் செலவிட்டார். தன் பிள்ளைகளுக்கு ‘ஜனநாயகி,’‘குடியரசி,’ ‘சுதந்தரி’ என்று பெயர் வைத்து, பகுத்தறிவே வேதம் என்ற முறையில் திருச்சபைக்குப் புறம்பாக வளர்த்து வந்தார். அவ்ரம் நகரில் ஆட்சித் தலைவராகவும், வணிகர் சங்க துணை நீதிபதியாகவும், அம்மாவட் டத்திற்கே ஒரு மன்னன் போலவும் பல அதிகாரங்களைத் தன் கைக்குள் சாமர்த்தியமாக எடுத்துக் கொண்டார்.

மக்களிடமுள்ள வேத விசுவாசம்தான் எல்லாப் பிற்போக்கு களுக்கும் காரணம் என்ற தப்பான எண்ணம் அவரை முற்றும் ஆட்கொண்டிருந்தது. எனவே வேதம் நசுக்கப்பட வேண்டும் என்ற ஆத்திரத்தில் இருந்தார்.  இச்சமயத்தில் கோவா தா ஈரியாவில் பரிசுத்த கன்னிமாமரி காட்சி கொடுப்பதாக நம்பி, தன் அதிகாரத்திற்கு உட்பட்ட மூவாயிரம் மக்கள் கடந்த ஜூலை மாதம் 13ம்நாள் அங்கு சென்று ஜெபித்தார்கள் என்று அறிந்ததும், அவர் ஆத்திரம் அதிகரித்தது.  

ஆகஸ்ட் மாதத்தில் காட்சி நடைபெற இருக்கிறது.  மூன்று குழந்தைகள்தான் இதற்கெல்லாம் கருவியாகப் பயன்படுத்தப் படுகிறார்கள் என்று கேள்விப்பட்ட ஆர்ட்டுரோவுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. 

ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் (1911) லிஸ்பன் நகர் கர்தினால் 5 நாள் அவகாசத்திற்குள் நாடு கடத்தப்பட்டார்;  நூற்றுக்கணக்கான குருக்கள், கன்னியர் பிரான்ஸ் நாட்டுக்கும், இதர நாடுகளுக்கும் விரட்டப்பட்டனர்; பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்களையே இந்தப் பாடுபடுத்த முடியு மானால், கேவலம் மூன்று குழந்தைகள்!  ஒரே வீச்சில் பாத்திமாவில் கன்னிமாமரியின் காட்சி என்ற பித்தலாட்டத்தை மடக்கி விடலாம் என்ற அசட்டுத் துணிச்சல் ஆர்ட்டுரோவுக்கு இருந்தது.

தன் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று நபர்களையும் ஒரு பார்வையால் அளந்து விட்டு, தன் கையாட்களான நிர்வாக உதவியாளர் நடுவில் சிங்கம் போல் நிமிர்ந்து, கடுமையான குரலில், 

‘அந்தப் பையனை எங்கே?’ என்று கேட்டார்.  தன் மகன் பிரான்சிஸைத்தான் அதிகாரி குறிப்பிடுகிறார் என்று அறிந்த மார்ட்டோ பதில் கூறினார்:

“ஐயா, இங்கிருந்து எங்கள் ஊர் 9 மைல் தூரம் உள்ளது. அக்குழந்தைகள் இவ்வளவு தூரம் நடக்க முடியாது.  குதிரையிலோ, அல்லது பர்ரோ முதுகிலோ சவாரி செய்து பழக்கமில்லாததால் அது பாதுகாப்பாக இல்லை” என்றார்.

இத்தனை இளவயதுக் குழந்தைகள் நீதி விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுவதா என்று கேட்டுவிட மார்ட்டோ நினைத்தார். ஆனால் சமயோசிதமாக நிறுத்திக் கொண்டார்.

மார்ட்டோவையும் அந்தோனி சாந்தோஸையும் அவர்கள் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டதற்காகவும், இவ்வளவு பிந்தி வந்ததற்காகவும் கண்டித்துப் பேசிய பின் ஆர்ட்டுரோ லூஸியாவைப் பார்த்தார்.  லூஸியா நேரே பார்த்த பார்வையுடன் நின்றாள்.

“நீ கோவா தா ஈரியாவில் ஒரு பெண்ணைப் பார்த்தாயோ? அவள் யாரென்று நினைக்கிறாய்? அப்பெண் ஒரு இரகசியம் சொன்னாளாமே, உண்மைதானா?  அந்த இரகசியம் என்ன?  நீ இனிமேல் அங்கே போகக் கூடாது தெரிகிறதா?” என்று பல கேள்வி களை ஆர்ட்டுரோ அடுக்கினார்.  லூஸியா பேசாமல் நின்றாள்.

“அந்த இரகசியத்தை என்னிடம் கூறு” என்று மீண்டும் கேட்டார் தலைவர்.

“கூற மாட்டேன்” என்றாள் லூஸியா.

ஆர்ட்டுரோவின் ஆத்திரம் மீண்டும் பொங்கியது.

“இங்கே பாருமய்யா... நீர்தான்!  பாத்திமாவில் இதை மக்கள் நம்புகிறார்களா?” என்று லூஸியாவின் தந்தையிடம் எரிச்சலுடன் கேட்டார் அதிகாரி.

“இல்லை ஐயா! ஒருவரும் நம்பவில்லை.  இதெல்லாம் பெண்களின் கதை.  அவ்வளவுதான்” என்றார் அவர்.

“நீர் என்ன சொல்கிறீர்?” என்று மார்ட்டோவிடம் திரும்பி னார் ஆர்ட்டுரோ.

“உங்கள் உத்தரவுப்படி இங்கு நிற்கிறேன்.  என் பிள்ளைகளும் நான் கூறுவதுபோலவே சொல்லுகிறார்கள்.” 

“அதாவது, இதெல்லாம் உண்மையயன்றுதான் நீர் நினைக் கிறீரா?” 

“ஆம். அவர்கள் சொல்வதையயல்லாம் நான் நம்புகிறேன்.” 

மார்ட்டோ இப்படிச் சொன்னவுடன் அங்கிருந்த எல்லாரும் கேலியாகச் சிரித்தனர்.  மார்ட்டோ அதைப் பொருட்படுத்தாமல் நேராக நின்றார்.

ஆர்ட்டுரோவுக்கு, இந்தப் பிரச்சினை வேறு முறையில் அணுகப்பட வேண்டும் என்று தோன்றியது.  இவர்களை இங்கு நிறுத்தி இப்படிக் கேள்வி கேட்டு எதுவும் நடவாது.  எனவே மூவரையும் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.  அவர்கள் வெளியே செல்கையில் அவர் எழுந்து கதவு வரையிலும் சென்று, லூஸியாவைப் பார்த்து, “நீ அந்த இரகசியத்தைக் கூறாவிட்டால், உன் உயிரை இழக்க நேரிடும்” என்று கடுமையாகக் கூறி எச்சரித்தார்.  லூஸியா திடுக்கிட்டுப் போனாள்.

வீடு வந்து சேர மாலையாகி விட்டது.  லூஸியா தன் தாயின் கோபத்தையும், சகோதரிகளின் கேள்விகளையும் தவிர்ப்பதற்காக கிணற்றுப் பக்கம் சென்றாள். அங்கே பிரான்சிஸும், ஜஸிந்தாவும் முழங்காலிலிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்!

“லூஸியா!” என்று கூப்பிட்டுக் கொண்டே ஜஸிந்தா ஓடி வந்து லூஸியாவைக் கட்டிக் கொண்டாள்.  “உன்னைக் கொன்று விட்டார்கள் என்று உன் அக்காள் கூறினாளே!” என்றாள்.  மூவரும் மகிழ்ச்சியால் உற்சாகமடைந்தனர்.  லூஸியாவை எதிர்பார்த்து ஜெபித்துக் கொண்டிருந்த இரு உள்ளங்களும் லூஸியாவின் வரவால் கவலையயல்லாம் மறந்து விட்டன.  நடந்த விவரங்களை லூஸியா சொல்லக் கேட்டு அவள் மீண்டு வந்து விட்டதால் குதூகலமடைந் தனர்.

ஆகஸ்ட் மாதம் 12-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அல்யுஸ் திரலிலும், அந்த வட்டாரத்திலுள்ள எல்லா ஊர்களிலும் குக்கிராமங் களிலும் ஒரு விதமான எதிர்பார்ப்பு உணர்வு தோன்றியிருந்தது.  மறு நாள் 13ம் தேதி.  அன்று என்ன நடக்க இருக்கிறதோ?  காட்சி வருமோ?  வந்து என்ன செய்தி தருமோ?  ஆட்சி பீடம் இடர் செய்யுமோ என்று பலவகையான பேச்சுக்கள் நடந்தன.

வெளியூர்களிலிருந்து திருயாத்ரீகர் கூட்டம் ஞாயிறன்றே வர ஆரம்பித்து விட்டது. குடும்பமாக, குழுக்களாக, தனியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர்.  பலர் கால்நடையாகவும், சிலர் வண்டி களிலும் வெகு சிலர் மோட்டார்களிலும் வந்து கொண்டிருந்தனர். அன்று இரவை கோவா தா ஈரியாவில் வெட்டவெளியில் கழிப்பதற்கு ஆயத்தமாக போர்வைகளுடனும், உணவுப் பொட்டலங்களுடனும், தண்ணீர் ஜாடிகளுடனும் காணப்பட்டனர்.  

இப்புனிதப் பயணிகளில் பலர் குழந்தைகளைக் கண்டு பேச வேண்டும் என்று அல்யுஸ்திரலுக்கு வந்து குழுமினர். பிள்ளைகளைப் படம் எடுக்க போட்டோ காமராக்களுடன் சிலர் வந்தனர். பலர் தங்கள் வளைவு விண்ணப்பங்களை மாதாவுக்குத் தெரிவிக்க குழந்தைகளைக் கேட்டுக் கொள்ள வந்தனர்.

மரிய ரோஸாவுக்கு இக்கூட்டங்களைப் பார்க்கவும் கோபம் தான் மிஞ்சியது. அதுவும் தன் மகள் கூறிய பொய்ப் பேச்சால் அல்லவா இந்த உபத்திரவம் ஏற்படுகின்றது என்று அவள் எண்ணி யதும், அவளுடைய கோபமெல்லாம் லூஸியா மீதுதான் மூண்டது.  தன் தாயின் கோபம் லூஸியாவை நிலைகலங்கச் செய்தது. அவளுடைய உறவினளான ஒரு பெண் லூஸியாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டிருந்தாள்.  

இந்த ஆரவாரம் எல்லாம் அடங்கும் வரை லூஸியாவைத் தன் வீட்டில் மறைத்து வைத்துக் கொள்ளலாம் என அப்பெண் எண்ணினாள்.  தேவ அன்னை தன்னை கோவா தா ஈரியாவுக்கு மறுநாள் வரும்படி கூறியிராவிட்டால், லூஸியாவும் தன் தாயின் கோப முகத்தை விட்டு மறைந்து கொள் ளும்படி அங்கு செல்ல சம்மதித்திருப்பாள்.  தேவ அன்னையை ஏமாற விடக்கூடாது என்பதற்காகவே லூஸியா அந்த உறவினளுடன் செல்ல மறுத்து விட்டாள்.

மாலை நேரம் ஆனதும், லூஸியா வீட்டைச் சுற்றி ஆட்கள் ஒரே கூட்டம்!  “ஒரு சிறுமியின் கையிலகப்பட்ட பந்தைப் போல நாங்கள் அந்த ஆட்களின் கைகளில் அகப்பட்டுக் கொண்டோம்.  ஒவ்வொருவரும் தங்கள் கேள்விகளைக் கேட்டு,யாருக்கும் நாங்கள் பதில் சொல்ல நேரம் கொடாதபடி எங்களைத் தங்கள் பக்கமாக இழுத்தனர்” என்று லூஸியா குறிப்பிடுகிறாள்.

இது இங்ஙனமிருக்கையில் மூன்று போலீசார் வந்து, குழந்தைகள் மூவரும் மார்ட்டோ வீட்டில் வந்து காத்திருக்கும் ஆட்சித் தலைவர் ஆர்ட்டுரோவை உடனே சந்திக்க வரும்படி கூறினர்.  மேலும் அந்த இரகசியத்தை அவர்கள் வெளியிடா விட்டால், மரண தண்டனை கூட விதிக்கப்படும் என்றும் பேசினர்.

“அப்படியானாலும் பரவாயில்லை.  அவர்கள் நம்மைக் கொன்றால் நல்லதுதான்.  நாம் சேசுவையும், நம் அம்மாவையும் பார்க்கலாம் அல்லவா?” என்றாள் ஜஸிந்தா மெதுவான குரலில்.

மார்ட்டோ வீட்டில் ஆர்ட்டூரோ இருந்தார். குழந்தைகளிடம் அந்த இரகசியம் என்னவென்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். குழந்தைகள் வாயே திறக்கவில்லை.  அவருக்கு ஒன்றும் ஓடவில்லை.  தன் யுக்தியை மாற்றிக் கொண்டாலன்றி, காரியம் எதுவும் நடக்காது என்று உணர்ந்தார். உடனே அவரிடம் பெரிய மாறுதல் -- இனிய குரல், கனிந்த பேச்சு, சாந்தமான முகம் ஏற்பட்டது!  

மிகவும் பட்சமாகப் பேசத் துவக்கினார்.  நாளைக் காலையில் கோவா தா ஈரியா வுக்குச் செல்ல குழந்தைகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறினார்.  ஆனால் அங்கு செல்லும் வழியில் பங்குக் குருவைப் பார்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்று மட்டுமே கோரினார்.  அவர் கேட்டதில் எதற்கும் மறுப்புச் சொல்ல எதுவும் இல்லை யாதலால் யாரும் எதுவும் சொல்லவில்லை.  அத்துடன் ஆட்சித் தலைவர் விடைபெற்றுக் கொண்டார்.

காலை புலர்ந்தது. ஆகஸ்ட் 13-ம் நாள்.  மார்ட்டோ தன் வீட்டுப் பக்கத்திலிருந்த தம் வயலில், சிறு வேலையயான்று செய்து விட்டுத் திரும்பியதும், அங்கே ஆர்ட்டுரோ மீண்டும் வந்தார்.  “ஐயா, தாங்கள் வந்த காரியம் என்ன?” என்று கேட்டார் மார்ட்டோ.

“நானும் அந்த அற்புத நிகழ்ச்சியைப் பார்க்க விரும்புகிறேன்.” 

இந்தப் பதிலை ஆட்சித் தலைவரிடமிருந்து மார்ட்டோ எதிர்பார்க்கவில்லை.  ஏதோ, எங்கோ ஒரு மறைபொருள் உள்ளது என அவர் உணர்ந்தார்.  அதற்குள் ஆட்சித் தலைவரே மீண்டும் பேசத் தொடங்கினார்.

“நாம் எல்லோரும் சேர்ந்து போகலாம் அங்கே. குழந்தை களை என் வண்டியில் நானே ஏற்றிச் செல்கிறேன்.  அங்கு வந்து நான் தோமையாரைப் போல கண்டு விசுவசிக்க வேண்டும்.  ஆமாம், குழந்தைகளை எங்கே?  நேரமாகிறதல்லவா?  அவர்களை அழைத் தால் நல்லது” என்றார்.

“அவர்களைக் கூப்பிடத் தேவையேயில்லை.  ஆடுகளை எப்போ திருப்பிக் கொண்டு வர வேண்டுமென்றும், எப்போ   புறப்பட வேண்டுமென்றும் அவர்களுக்குத் தெரியும்” என்றார் மார்ட்டோ.

அந்நேரம் குழந்தைகள் அங்கு வந்தார்கள்.  ஆர்ட்டுரோ முகத்தில் ஒரே மகிழ்ச்சியும், புன்சிரிப்பும் காட்சியளித்தன.

“வாருங்கள் குழந்தைகளே, கோவா தா ஈரியாவுக்கு என் வாகனத்தில் என்னுடன் வாருங்கள்.” 

“நன்றி ஐயா.  வேண்டாம், நாங்கள் வரவில்லை” என்றான் பிரான்சிஸ்.

“நாங்கள் நடந்தே வந்து விடுவோம்” என்றாள் ஜஸிந்தா.

“வண்டியில் போனால் சீக்கிரம் போய் விடலாம். வழியில் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் அல்லவா?” என்று ஆர்ட்டுரோ கூறினார்.

“ஐயா, நீங்கள் சிரமப்பட வேண்டாம்” என்றார்    மார்ட்டோ.

ஆர்ட்டுரோ விடவில்லை.  “இல்லை, நான் ஏன் சொல்கிறேன் என்றால் பாத்திமாவில் பங்குக் குருவிடம் பேசக் கூடக் கொஞ்ச நேரம் கிடைக்குமல்லவா?  அவரும் பிள்ளைகளிடம் இன்னும் சில கேட்க விரும்புகிறார்” என்றார்.

இதற்கு மேல் யாருக்குமே பேச வரவில்லை. குழந்தைகள் வண்டியில் ஏற வேண்டியதாயிற்று.  பிரான்சிஸ் முன்னாலும், மற்ற இரு சிறுமியரும் பின்னாலும் அமர்ந்தனர்.  ஆர்ட்டுரோ வண்டியை ஓட்ட, மார்ட்டோவும், லூஸியாவின் தந்தையும் வண்டியின் பின்னால் நடந்தனர்.

பாத்திமாவின் பங்குக் குரு இல்லத்தை அடைந்தவுடன் ஆர்ட்டுரோ சத்தமாக, 

“முதலில் நீ” என்றார்.

“நீயயன்றால் யார்?” என்றார் மார்ட்டோ.

“லூஸியா” என்றார் தலைவர்.

“நீ போ லூஸியா” என்று மார்ட்டோ உத்தரவு கொடுக்கவும் லூஸியா இறங்கி பங்குக் குருவிடம் சென்றாள்.

பங்குக் குருவின் மனதில் சலிப்பும், எதிர்ப்பும் நிரம்பி யிருந்தது.  ஏற்கெனவே திருச்சபைக்கு எதிர்ப்பும், ஆட்சியாளர்களால் துன்பமும் அதிகரித்து வரும் வேளையில் இப்படி காட்சி, காட்சி என்று ஒரு சிறுமி கூறித் திரிவதை அவர் விரும்பவில்லை.  லூஸியா வைக் கண்டதும் அவர் கோபத்துடன்,

“உனக்கு இதையயல்லாம் யார் சொல்லிக் கொடுத்தார்கள்?  நீ சொல்லிக் கொண்டு அலைகிறாயே, இவைகளை?” என்றார்.

“கோவா தா ஈரியாவில் நான் பார்த்த அந்த அம்மா.” இது லூஸியாவின் அமைதியான பதில்.

“நீ சொல்வது போன்ற மோசமான பொய்களைப் பரப்பு கிறவர்கள் அது உண்மையாயில்லாவிட்டால் தண்டனை பெற்று நரகத்திற்கே செல்வார்கள். மேலும் மேலும் மக்கள் உன்னால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்” என்றார் குரு மீண்டும் ஆத்திரத்துடன்.

“பொய் சொல்கிறவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்றால், நான் அங்கு போக மாட்டேன்” என்று நிதானத்துடன் பதில் அளித்தாள் அந்தப் பத்து வயதுச் சிறுமி. அவள் மேலும் தொடர்ந்து கூறினாள்: “ஏனென்றால் நான் பொய் பேசவில்லை.  நான் பார்த்ததையும், அந்த அம்மா என்னிடம் கூறியதையும்தான் நான் சொன்னேன்.  அங்கு வரும்படி நாங்கள் யாரையும் கூப்பிடுவதில்லை. அவர்கள் விருப்பப் பட்டுத்தான் அங்கு அக்கூட்டம் போகிறது.” 

“அந்த அம்மா உன்னிடம் ஒரு இரகசியம் கூறியது உண்மை தானா?” 

“ஆம் சுவாமி.” 

“அதைச் சொல்லு.” 

“அதை நான் சொல்லக் கூடாது.  ஆனால் அதை நீங்கள் அறிய விரும்பினால், நான் அந்த அம்மாவிடம் கேட்கிறேன்.  அவர்கள் உத்தரவு அளித்தால் சொல்கிறேன்.” 

“சரி சரி. இதெல்லாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வி­யங்கள்” என்று இடைமறித்த ஆட்சித் தலைவர், “நாம் புறப்படலாம்” என்றார்.

லூஸியா வண்டியில் ஏறவும் ஆர்ட்டுரோ வண்டியில் தாவி ஏறி, சாட்டையைச் சுழற்றினார். வண்டி வேகமாக ஓடியது.  மார்ட்டோவும் அந்தோனி சாந்தோஸும் வண்டியுடன் நடந்து செல்ல முடியவில்லை.  வண்டி வேகமாய்ச் சென்று கோவா தா ஈரியாவை நோக்கிப் போகாமல் வேறொரு பாதையில் திரும்பியது.  அவ்ரம் நோக்கிச் சென்றது!

வண்டிக்குள் இருந்தபடியே, “இது தப்பான பாதை” என்று சத்தமிட்டாள் லூஸியா.

“சரிதான், சரிதான். அவ்ரம் பங்குக் குருவிடமும் கொஞ்ச நேரம் பேச வேண்டியுள்ளது. அங்கிருந்து உங்களை என் மோட்டாரில் ஏற்றி கோவா தா ஈரியாவுக்குக் கொண்டு சேர்த்து விடுகிறேன். சரியான நேரத்திற்கு அங்கே நீங்கள் போய்விடலாம்” என்று கூறிய ஆர்ட்டுரோ, முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்திருந்த சில போர்வைகளைக் குழந்தைகள் மீது போட்டு மூடி, யாத்ரிகர்களின் பார்வைக்கு அவர்களை மறைத்து விட்டார்.

மார்ட்டோவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவேளை ஏதோ ஒரு காரணத்திற்காக ஆட்சித் தலைவர் வேறு பாதை வழியாகக் குழந்தைகளைக் கோவா தா ஈரியாவுக்குக் கொண்டு வரக் கூடும் என்று எண்ணினார்.  இருவரும் நேராக கோவாவைச் சேர்ந்தார்கள்.

அங்கு பார்த்தால் கூட்டம் ஆறாயிரமும், அதற்கு மேலும் இருக்கும்!  கால்நடையாகவும், வண்டிகளிலும், மோட்டாரிலும் எல்லையில்லாத அசெளகரியங்களுக்கிடையே இத்தனை ஜனம் எங்கிருந்து வந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அங்கே மரிய கரெய்ரா என்ற பெண்ணின் முயற்சியால் ஒரு கட்டப்பட்டிருந்தது.  ஒரு மேஜை மீது பூக்களை வைத்து, ஒரு சாதாரண பீடமும் அமைக்கப்பட்டிருந்தது.  இரவில் வெளிச்சத் திற்காக அந்த வளைவில் ஒரு விளக்கும் கட்டப்பட்டிருந்தது.

எல்லோரும் குழந்தைகளின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.  நடுப்பகலாகிக் கொண்டிருந்தது. குழந்தைகளைக் காணோம்!  அவர் களை எங்கே?  பிள்ளைகளை எங்கே? நேரமாயிற்றே என்று எல்லாரும் கவலைப்படத் தொடங்கினார்கள்.  12 மணியளவில் அந்த அஸின் ஹேரா மரத்தைச் சுற்றி நின்ற சிலர் ஜெபமாலை சொல்லத் தொடங்கினார்கள். சீக்கிரத்தில் எல்லோருமே அதில் சேர்ந்து கொண்டு ஜெபித்தார்கள். 

திடீரென ஒரு மெல்லிய இரைச்சல் கேட்டது. அதைத் தொடர்ந்து மழை மேக முழக்கம்போல் ஒரு ஒலி கேட்டது.  சிலர் பீதியடைந்து எழுந்து ஓடினார்கள்.  “நாம் சாகப் போகிறோம்!” என்று சில குரல்கள் எழும்பின.  ஆனால் கூட்டம் மவுனமாக அச்சத்துடன் நின்றது.  அச்சமயம் ஒரு ஒளி வீசுதலை அவர்கள் கண்டார்கள். ஒரு மெல்லிய வெண்மேகம் கிழக்கில் காணப்பட்டது. 

அது மெல்ல இறங்கி அந்த அஸின்ஹேரா மரத்தின் மேல் வந்து தங்கியது. சில விநாடி களுக்குள் அது மீண்டும் எழுந்து நீல வானில் கரைந்து மறைந்து விட்டது. இவை நிகழும்போது அங்கு நின்றவர்கள் மீதும், தரையிலும் ஆகாயத்திலும் வானவில்லின் நிறங்கள் படிந்திருந்ததை மக்கள் கண்டனர். மரிய கரெய்ரா கூறுவது: “நம் அம்மா நிச்சயம் வந்தார்கள்.  ஆனால் அவர்கள் குழந்தைகளைக் காணவில்லை” என்று.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்து மக்களின் நினைவுகள் தெளிவு பட்டவுடன் எல்லோரிடமும் எழுந்த கேள்வி, “குழந்தைகளை எங்கே?” என்பதுதான். எல்லோருக்கும் ஒருவித ஆத்திரம். குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டது பற்றி மார்ட்டோ யாதொன்றும் கூறவில்லை. ஆனால் தற்சமயம் அங்கு வந்து சேர்ந்த சிலர், குழந்தை களை முதலில் பங்குக் குருவிடமும், அதன் பின் அவ்ரம் நகரில் தன் வீட்டுக்கும் ஆர்ட்டுரோ கடத்திக்கொண்டு போய்விட்டார் என்ற செய்தியை வெளியிட்டனர்.

ஜனக் கும்பல் இதைக் கேள்விப்பட்டதும் கொந்தளிப்பு தொடங்கிற்று.  நகர அதிகாரியும், பங்குக் குருவும் சேர்ந்துதான் இந்தக் கடத்தலைச் செய்து, தேவதாயை ஏமாற்றி விட்டனர் என்ற முடிவுக்கு வந்தார்கள் மக்கள். எரிச்சலும், கோபமும் மேலிட, “ஆர்ட்டுரோ ஒழிக!” “பங்குக்குரு ஒழிக!” என்று அவர்கள் போட்ட கூச்சல் இரண்டு மைல் தொலைவிலுள்ள அல்யுஸ்திரல் வரை கேட்டது! 

மக்களின் ஆத்திரத்திற்கு ஓர் அளவில்லை.  எத்தனை நாள் வேலையை விட்டு, வேலைக் கூலியை இழந்து, நடந்து, இரவு பகல் திறந்த வெளியில் தங்கி, உண்ண உணவும், பருக நீரும் இன்றி வாடி, அன்னையின் காட்சியைக் காண வேண்டும் என்ற ஒரே நோக்கத் துடன் வந்திருந்த அத்தனை மக்களும் அடக்க முடியாத சக்தியாக மாறி, ஆட்சித் தலைவரையும், பங்குக் குருவையும் தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்று புறப்பட்டு விட்டனர்.  

“பாத்திமாவுக்குப் புறப்படுங்கள்.  பங்குக்குருவைப் பழி தீர்ப்போம்”--“அவ்ரம் சென்று ஆர்ட்டுரோவை ஒழிப்போம்” என்று கத்திக் கொண்டு கூட்டம் நகர்ந்தது.  அப்போதுதான் மார்ட்டோ துணிந்து முன்வந்தார்.

“நண்பர்களே” என்று உரக்கக் கூவினார்.  “நண்பர்களே, ஆத்திரப்படாதீர்கள்!  யாருக்கும் தீங்கு செய்ய வேண்டாம்.  தண்டனைக்குரியவர்கள் அதை அடைந்தே தீருவர்!  இதெல்லாம் நடைபெறுவது கடவுளின் வல்லமையால் மட்டுமே” என்று ஆணித் தரமாகவும், உறுதியான குரலிலும் அன்புள்ள அதிகார தோரணை யிலும் கூறினார். கூட்டம் சற்று நின்றது.  மார்ட்டோவின் சொற்கள் நல்ல ஒரு மாற்றத்தை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தின.  நின்ற கும்பல் ஆத்திரம் அடங்கி சிறு சிறு கூட்டங்களாய்ப் பிரிந்து  திரும்பிச் சென்றது.

மார்ட்டோ வீடு சென்றார்.  தன் பிள்ளைகளைக் காணோம் என்று அவர் மனைவி ஒலிம்பியா அங்கே அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.