பாத்திமா காட்சிகள் - மக்கள் மத்தியில்

இதுவரை, மூன்று காட்சிகள் நடைபெற்றுள்ளன.  மக்களின் கருத்துக்கள் எத்தனையோ வகையில் உருவாயின.  

போர்த்துக்கல் முழுவதும் இந்தச் செய்தி வேகமாகப் பரவி விட்டது.  கத்தோலிக்கப் பத்திரிகைகள் பாத்திமா காட்சிகள் பற்றி சிறு சிறு கட்டுரைகள் வெளியிட்டன. ஆனால் காட்சி உண்மையா அல்லது ஏமாற்றமா என்ற கேள்வியையும் எழுப்பின.  முற்றும் முடிய ஆராயாமல் முடிவு சொல்லக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி வந்தன.

திருச்சபையின் ஞான அதிகாரிகள் பாத்திமாவில் எதுவும் நடந்ததாகத் தங்களுக்குத் தெரியும் என்பதைக் கூட காட்டிக் கொள்ளவில்லை.  லிஸ்பன் நகர் கர்தினால் கோவா தா ஈரியாவுக்குப் போகவும் கூடாது என்று தமக்கடியிலுள்ள குருக்கள் எல்லாருக்கும் தடையுத்தரவு பிறப்பித்தார்.  முதல் காரணம், பசாசு ஒளியின் தூதனைப் போல் வேடம் மாற்றிக் கொண்டு விசுவாசிகளை ஏய்க்கக் கூடும் என்பது. இரண்டாவது காரணம்,வேத விரோதியான ஆட்சி பீடம் பாத்திமாவில் கூடும் கூட்டத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு மத சம்பந்தமுள்ள வெளியரங்க பக்தி முயற்சிகளைக் கூட தடை செய்து விடக் கூடும் என்ற பயம்.

அந்நாட்களில் போர்த்துக்கல் அரசு வேதவிரோதிகளின் கையில் இருந்தது. அவர்களுடைய பத்திரிகைகள் எல்லாம் இக்காட்சி களைக் கேலி செய்து எழுதிக் கொண்டிருந்தன! குருக்களின் சுயநலத் துக்காக இப்படி ஒரு கண்டுபிடிப்பு.  மக்களை ஏமாற்றும் வித்தை என்று அவை தூற்றின. போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பன் நகரிலிருந்து வெளிவந்த “ஓ சேக்குலோ” என்ற நாளிதழ் “மோட்சத்தில் இருந்து செய்தி--வியாபார நோக்கம்” என்ற கட்டுரையை மூன்றாம் காட்சி நடந்த எட்டாம் நாள் வெளியிட்டது.  

சுய மரியாதைப் போக்குள்ள எழுத்தாளர் பலர் காட்சிகளைப் பற்றி எந்த வரம்புமில்லாமல், அவை அக்குழந்தைகளின் மனக்கோளாறினால் தோன்றியவை என்றும், கால் கை வலிப்பு நோயின் அடையாளம் என்றும், சுய ஊக்கத்தால் ஏற்பட்ட மனப் பிரமை என்றும் கண்டபடி எழுதி வந்தனர்.  மொத் தத்தில் திருச்சபைக்கெதிராக ஒரு கலகமே உருவாக்கப்படுவது போல் நாட்டில் இக்காட்சிகள் பற்றிய கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட எதிர்ப்புகளைப் பற்றி எதுவும் அறியாமல் அல்யுஸ்திரல் கிராமத்தில் வாழ்ந்து வந்த குழந்தைகள் மூவருக்கும் வேறு விதமான உபத்திரவங்கள்;  புனித யாத்திரிகர்களும் பக்தர் களும், புதுமைச் செய்தி விரும்பிகளும் தினமும் அக்கிராமத்துக்கு வந்தார்கள். 

குழந்தைகளைக் கண்டு இல்லாத கேள்விகளைக் கேட்டார்கள்.  தங்கள் கருத்துக்களுக்காக மன்றாடும்படி விண்ணப்பித்தார்கள். “மாதா சிறுமியாயிருந்தபோது ஆடு மேய்த்தார்களோ?” “மாதா உருளைக்கிழங்கு சாப்பிட்டார்களோ?” என்பன போன்ற அர்த்தமற்ற, அநாவசிய கேள்விகள் பல கேட்டு, அச்சிறுவரைப் போதிய மட்டும் புண்படுத்தினார்கள். இவற்றையயல்லாம் பிரான்சிஸால் சகிக்க முடியவில்லை.  

ஒருநாள் அவன் ஜஸிந்தாவிடம்: “நீ வாயை மூடிக் கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? அப்போ ஒருவருக்கும் இவ்விஷயம் தெரிந்திருக்காது அல்லவா?  நாம் ஒன்றையும் காணவில்லை என்று சொல்வது பொய்யாக மட்டும் இல்லாதிருந்தால், அப்படி எல்லோரிடமும் கூறிவிடலாம்.  அத்துடன் இதெல்லாம் நின்று போகும்” என்றான்.

சில ஆட்களுடைய வினோதப்பிரியமும், அவர்கள் தோண்டித் துளைத்துக் கேட்ட கேள்விகளும் இம்மூவரையும் மிகவும் பாதித்தன.  அந்த மனிதர்களை எப்படித் தவிர்ப்பது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.  ஆனால் வெகு துரிதத்தில் அவர்களுக்கு ஒரு யுக்தி தோன்றியது.  தங்களைத் தேடி வருகிற ஆட்களைச் சற்றுத் தொலைவிலிருந்தே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. எனவே அவர்கள் தப்பிக்க சரியான முறையையும் கற்றுக் கொண்டார்கள்.

ஒருநாள் சில ஆண்களும், பெண்களும் ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். இம்மூவரும் சற்றுத்  தொலைவில் ஏற்கெனவே ரோட்டில் நடந்து வந்ததால் இனி அவர்கள் கண்ணைத் தப்பி ஓடி ஒளிய அவர்களால் கூடாதிருந்தது. அந்த ஆட்கள் குழந்தைகளின் பக்கத்தில் வந்ததும், “மாதாவைக் கண்ட ஆடு மேய்க்கும் குழந்தைகளின் வீடு எது?” என்று கேட்டார்கள்.  

“அதோ” என்று கூறி, தங்கள் வீடுகளைப் பற்றித் துல்லியமான அடையாளம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள் குழந்தைகள். அவர் களுக்கு நன்றி கூறிவிட்டு அந்த ஆட்கள் நகர்ந்ததும் இம்மூவரும் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டு, ஒரு மதில் ஏறி விழுந்து, மறைவாக ஓடிப் போய் லூஸியா வீட்டுக்குப் பின்னால் நின்ற ஒலிவ மரங் களுக்கிடையில் பதுங்கிக் கொண்டார்கள்.

“இதுதான் சரி.  இனி எப்போதும் இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று திருப்தியுடன் கூறினாள் ஜஸிந்தா.

சாதாரண ஆட்கள் மட்டுமல்ல, பல குருக்களும் அல்யுஸ்திர லுக்கு வந்து சிறுவர்களைக் கண்டு பேசினர்.  அவர்கள் கேட்ட நுட்பக் கேள்விகள் பல.  எதையுமே நம்பாத அவிசுவாசிகளைப் போலவே கேள்விகள் இருக்கும்.  சில குருக்கள் எதிர்ப்பு மனப்பான்மையோடு குழந்தைகளிடம் கண்ட கேள்விகளும் கேட்டனர். குருக்கள் வருவதை தூரத்தில் கண்டதும் குழந்தைகள் தக்க தயாரிப்புகளைச் செய்து கொண்டனர்.  

“ஒரு குரு வருவதைக் கண்டால், எங்களால் முடிந்த மட்டும் எப்போதும் ஓடி ஒளிந்து கொள்வோம்.  ஒரு குருவின் முன் அகப்பட்டுக் கொண்டால், ஒரு பெரிய பரித்தியாகத்தைச் செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்க எங்களையே தயார்படுத்திக் கொள்வோம்” என்று குறிப்பிடுகிறாள் லூஸியா.  

ஆனால், எல்லாக் குருக்களும் அப்படி அல்ல. காட்சிகளைப் பற்றி நல்ல கருத்துடையவர்களும் இருந்தனர்.  அவர்களுள் சிறந்தவர் சங். குரூஸ் சுவாமி.  இவர்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் லூஸியா வின் முதல் பாவசங்கீர்த்தனம் கேட்டவர்.  அப்போது, “மகளே! உன் ஆன்மா இஸ்பிரீத்துசாந்துவானவரின் (பரிசுத்த ஆவியானவரின்) இல்லமாயிருக்கிறது.  அதில் அவர் செயல்புரியுமாறு எப்போதும் அதைத் தூய்மையாக வைத்திரு” என்று கூறியவர் இந்தக் குருதான்.  

அன்னையின் தரிசனத்தைப் பற்றிக் குழந்தைகளிடம் கேட்டு அறிந்த பின் காட்சி நடைபெற்ற இடம், அந்த மரம், சூழல் எல்லாவற்றையும் நேரில் காண விரும்பினார். எனவே குழந்தைகள் மூவரும் அவருடன் சென்று அவர் விரும்பிய எல்லா விவரங்களையும் கூறினர்.  சங். குரூஸ் சுவாமிக்கு நடைபெற்றதெல்லாம் சர்வேசுரனின் திருவுளப்படியே நடந்துள்ளன என்ற உறுதி ஏற்பட்டு விட்டது.  ஆகவே அவர் குழந்தைகள் பக்கமாக ஆதரவு காட்டி வலியுறுத்திப் பேசலானார்.

எந்த ஆதரவும் லூஸியாவின் வீட்டாரை மட்டும் அசைக்க முடியவில்லை.  நேர்மாறாக லூஸியாவின் பெற்றோரும், சகோதரி களும் முன்னை விட அதிக எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.  அவள் தந்தை அந்தோனி சாந்தோஸ் முதலில் “இதெல்லாம் பெண்கள் கதை” என்று அலட்சியம் செய்தார்.  ஆனால் ஜூலை மாதக் காட்சிக்குப் பின் அவர் கோவா தா ஈரியாவில் தம் காய்கனி வயல்கள் ஜனக்கூட்டத்தால் மிதிபட்டுப் பாறைபோல் இறுகிப் போனதைக் கண்டதிலிருந்து லூஸியாவை வெறுக்கத் தொடங்கினார்.

அவர் மனைவியும், மூத்த மகள்களும் அவருடன் சேர்ந்து கொண்டு லூஸியாவைச் சித்திர வேதனைகளுக்கு உட்படுத்தவும் தயங்கவில்லை. “காட்சி காண்கிறேன் என்று கூறி வீட்டைப் பட்டினிக் கோலத்துக்குக் கொண்டு வந்து விட்டாயே” என்று இடை விடாமல் வசை பேசினார்கள். 

லூஸியா பசிக்கிறது என்று சொன்னால் போதும், “போய் கோவா தா ஈரியாவில் முளைத்திருக்கிறதைத் தின்னு” என்று அவள் சகோதரிகள் ஏளனமாய்க் கடுமொழி பேசுவார்கள்.  ஒரு நாள் மரிய ரோஸா லூஸியாவிடம், “ஆமாம்.  உனக்குச் சாப்பாடு போடும்படி அந்தப் பெண்ணிடம் போய்க் கேள்.  எல்லா ஜனங்களையும் கோவா தா ஈரியாவுக்குப் போக வைத்தாயல்லவா?  அங்கே போய்ச் சாப்பிடு” என்று கோபமாய்க் கூறினாள்.

வீட்டு வாசல் பக்கம் நின்ற ஜஸிந்தா, இதைக் கேட்டு, “நாங்கள் ஒருவரையும் போகச் சொல்லவில்லை.  அவர்கள்தான் போனார்கள்” என்று லூஸியாவுக்காகப் பரிந்து பேசினாள்.  யார் எதைச் சொன்னாலும் மரிய ரோஸாவின் மனம் மேலும் மேலும் இறுக்கமடைந்தே வந்தது.  எவ்வளவு தூரத்திற்கென்றால், ஒருவேளை உணவு கூட வாய் திறந்து கேட்கப் பயந்த லூஸியா அநேக நாட்கள் வெறும் வயிற்றோடு பட்டினியாய்ப் படுக்கச் சென்றாள்.

தன் மகளின் “பிடிவாதத்தை” உடைக்கும்படி இடைக் கிடையே அவளைப் பங்குக் குருவிடம் அழைத்துச் சென்றாள் மரிய ரோஸா.  எத்தனையோ தடவை லூஸியாவைக் கண்டு பேசிய பிறகும் பங்குக் குரு, “இதைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரிய வில்லை” என்று கூறிவிட்டார். கற்றறிந்த ஒரு குருவே இதை நிச்சயித்துக் கூற முடியவில்லையே, ஆதலால் இந்தச் சிறுமியை எப்படி நம்புவது என்ற ஐயம் மரிய ரோஸாவிடம் வேரூன்றி நிலைத்து விட்டது.

இதற்குள் ஜூலை மாதம் முடிந்து  ஆகஸ்ட் மாதம் வந்து விட்டது.  வேத எதிர்ப்பாளர் தங்கள் எதிர்ப் பிரச்சாரத்தைத் தீவிர மாகச் செய்து வந்தனர்.  காட்சியின் பெயரால் அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் நடப்பதாக பொய்யும் புரட்டும் அச்சேறி பத்திரிகை வடிவில் விற்பனையாகி வந்தன. 

ஆகஸ்ட் 13-ம் நாள் நெருங்கிக்கொண்டு வந்தது. அன்று காட்சி நடைபெறுமா, என்ன நடக்கும் என்று எங்கும் அதே பேச்சாகவே இருந்தது. நகர அதிகாரம் இவ்வி­யத்தை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றது.  லூஸியாவின் தந்தை அந்தோனி சாந்தோஸுக்கும், பிரான்சிஸ், ஜஸிந்தாவின் தந்தை மார்ட்டோ வுக்கும் ஆகஸ்ட் 11-ம் நாளன்று நகர ஆட்சி மன்றத்தில் காட்சி கண்ட குழந்தைகளுடன் ஆஜராகுமாறு உத்தரவுகள் வந்தன!

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.