பெரிய வெள்ளி சிந்தனை: நம் இயேசு தெய்வத்தின் முப்பத்து மூன்றரை ஆண்டு கால மனித வாழ்க்கை முழுவதும் போராட்டமும், பரிகாரமே!

பிறப்பே ஒரு போராட்டம்.. அவர் பிறக்க இடம் தருவார் யாரும் இல்லை.. கடைசியில் மாட்டுத் தொழுவம்.. பிறந்தவுடன் எதில் கிடத்தப்பட்டார்.. கழனித்தொட்டி ( தீவனத்தொட்டி) இப்போது இருக்கும் கழனித்தொட்டியே கரடுமுரடாக இருக்கிறது.. 2020 வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்.. தீவனத்தொட்டியில் வைக்கோல்களுக்கு மேலே  நம் பரிசுத்த தெய்வம் கிடத்தப்பட்டார்.. பிறந்ததும் எந்த வாசனை அவர் மூக்கை துளைத்திருக்கும்.. மாட்டுசாணம், மாட்டின் மூத்திரத்தின் வாசனைதானே.. நாம் கற்பனை செய்து பார்த்தால் ஒரு மாட்டுத்தொழுவத்தின் வாசனை நம் மூக்குக்கு வந்துவிடும்..

ஒரே குளிர்.. அது என்ன நான்கு பக்கம் சுவர் இருக்கும் வீடா? இல்லை.. நான்கு புறமும் திறப்பு.. குளிர் தாக்குகிறது.. அன்னையின் அரவணைப்பைத் தவிர குளிருக்கு இதமாக அவருக்கு வேறு ஒன்றும் இல்லை.. பிறக்கும்போதே நம் பாவங்களுக்கு பரிகாரம் செய்து கொண்டே பிறந்தது இந்த தெய்வீகக் குழந்தை..

பிறந்து “ அப்பாடா ! ஒரு வழியாக இந்த உலகத்துக்கு வந்துட்டோம்னு “ மூச்சு விடுமுன் எகிப்துக்கு ஓட்டம்.. பிறந்து சில நாட்களே ஆகியிருந்த இந்த தெய்வீகக்குழந்தை பெற்றோரோடு எகிப்திற்கு அகதியாய் சென்றது.. அந்த பயனத்தில் எத்தனை இன்னல்களை சந்தித்ததோ.. வெயில்.. பனி…காற்று என்று எத்தனையோ இன்னல்கள்.. உலகை மீட்க வந்த கடவுள் எகிப்தில் அகதியாக..
“ அப்பாடா! இங்கேயாவது நிம்மதியாக இருக்கலாம்னு “ நினைக்கிறதுக்குள்ளே திரும்பவும்  சொந்த ஊருக்கு ஓடு.. நாசரேத்துக்கு போ“ என்று கடவுள் உத்தரவு.. மீண்டும் பிரயாணம்.. வெயில், குளிர், காற்று, பசி.. பட்டினி.. மீண்டும் கடவுள் குழந்தை மனிதனின் பாவங்களுக்கு பரிகாரம் செய்கிறது…

ஆன்ம வலிமையோடு வளர்ந்த சிறுவன் இயேசு வசித்த வீடு ஒரு கோழிக்கூடு .. வசதி குறைவு.. பிதாப்பிதாவிய சூசையப்பருக்கு நன்றாக தொழில் இருந்தால் நல்ல சாப்பாடு.. கூடவே தானம்.. தர்மம் தொழில் இல்லையென்றால் பசி..பட்டினி.. எளிய வீட்டிலும் நமக்காக பரிகாரம்.. செய்கிறார் சிறுவன் இயேசு…

பணிரெண்டு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது ஆன்ம தாகம்.. அப்பா பிதாவோடு நெருக்கம்.. ஆலயத்தில் தஞ்சம்.. அம்மாவைப் பற்றிய நினைப்பு இல்லை… வளர்க்கும் அப்பாவைப் பற்றிய நினைப்பு இல்லை..சாப்பாட்டைப் பற்றிய அக்கரை இல்லை… பயம் இல்லை.. மூன்று நாட்களாக பிதா அப்பாவின் இல்லத்தில் பசி தூக்கத்தை மறந்து அப்போதே சிறிய நற்செய்திப்பணியை ஆரம்பித்துவிட்டார்.. அங்கேயும் பரிகாரம்..

இளைஞனானபோது அப்பா மறைந்துவிட தாயைக் காக்கும் பொறுப்பு  நம் தனையனுகு.. அப்பா செய்த.. கற்றுக்கொடுத்த தச்சுத் தொழிலை செய்து தன் தாயைக் காப்பாற்றுகிறார்.. வல்லரான கடவுள் எளிய ஏழைத்தொழில், கடினமான தொழிலை முனுமுனுக்காமல் செய்து அங்கேயும் பரிகாரம் செய்கிறார்..

நற்செய்திப்பணிக்கு தன்னை தயாரிக்க நாற்பது நாள் கடுமையான தவம் செய்தாலும் அங்கேயும் அவரை சோதிக்க அலகை வருகிறது.. அலகையுடன் போராடி ஜெயிக்கிறார்..

வீதிக்கு வந்து நிறைய இடங்களுக்கு சுற்றித் திரிந்து நற்செய்தி அறிவித்து,  நல்லதை போதித்து நன்மை மட்டுமே செய்த இயேசு ஆண்டவருக்கு அவார்டா கொடுத்தார்கள்..  ஏச்சு.. பேச்சு.. குறை.. குற்றம் கண்டுபிடித்து அவர் நிம்மதியைக் கெடுத்தார்கள்.. எத்தனையோ அற்புதம் செய்தாலும்..இறந்தவர்களை உயிர்ப்பித்தாலும்.. அவரை ஏற்றுக்கொள்ள ஒரு குரூப்பிற்கு முடியவில்லை… அங்கேயும் போராட்டம்..

மூன்றரை ஆண்டுகால நற்செய்திப்பணியில் வெட்ட வெளியில் தங்கி..இரவு கண் விழித்து ஜெபித்து பசி, உறக்கம் மறந்து ஆன்மாக்களைத்  நேசத்தோடும் அக்கரையோடும் தேடித் தேடி மீட்கிறார்.. அதிலும் பாதிபேர் அவரை புரியாமல் விலகிப்போகின்றனர்.. அங்கேயும் போராட்டம்.. பரிகாரம்…

மூன்றரை ஆண்டுகாலம் கூடவே இருந்தவன் அவரைக் காட்டிக்கொடுக்கிறான்.. கடவுள் என்ற முறையில் அவன் என்ன செய்ய இருக்கிறான் என்று தெறிந்திருந்தும்.. அவனோடு பேசுகிறார்.. பழகுகிறார்..உறவாடுகிறார்.. அவனுக்கும் நன்மை செய்கிறார்.. அதிலும் பரிகாரம்..

தான் கடவுளாக இருந்தாலும், அதுவும் வல்லமை வாய்ந்த கடவுளாக இருந்தாலும், தான் படைத்த படைப்பிடமே அடி வாங்குகிறார், காரி உமிழப்படுகிறார், சவுக்கால் அடிவாங்குகிறார், மோசமாக அவமானப்படுத்தப்படுகிறார்.. அவர்களாலே சிலுவையில் அறையப்பட்டு மரித்து அங்கேயும் ஒரு பெரிய பாவப்பரிகாரம், மிகப்பெரிய பரிகாரம் செய்து தன் இரத்தம் முழுவதையும் சிந்தி பாவப்பரிகாரம் செய்து நம்மை மீட்கிறார்..

அகில உலகத்தையும் படைத்தவர், எதிலும் அடக்க முடியாதவர் தன் தாயின் கருவரையில் அடங்கினார்.. அந்த தாய்க்கு கீழ்ப்படிந்தார்.. வளர்ப்பு தந்தைக்கும் கீழ்படிந்தார் அவர்களிடம் பாடம் கற்றார் அவர்கள் சொல்லியதைக் கேட்டார்.. இது ஒரு பரிசுத்தமான பரிகாரம், தாழ்ச்சி..

ஆனால் இங்கே அகில உலகத்தையும் படைத்த எல்லாம் வல்லவரான கடவுள் வலுவிலந்து அதுவும் பாவிகளிடம் கையளிக்கப்பட்டு ஒரு அவமான மரணம் அடையும் பொருட்டு தன்னையே தாழ்த்தி உலகை மீட்கிறார்..இங்கேயும் பரிகாரம்.. போராட்டம்..

வீரர்களுக்கு போர் இருந்தால்தான் போராட வேண்டும்.. இந்த உலக இரட்சக வீரருக்கு வாழ்க்கை முழுவதும் போர்.. போராட்டம்… பரிகாரம்…

ஒரு வல்லமையான கடவுள் ஒரு மனித உருவம் எடுத்து மனிதன் படுகின்ற மற்றும் பட முடியாத அத்தனை வேதனைகளையும் பட்டு.. போராடி கடைசியில் வெற்றியும் பெற்றுவிட்டார்..

இப்போது நம் வாழ்க்கைக்கு வருவோம்..
நாம் சின்ன சின்ன கஷ்ட்டங்கள் வந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்புவதும், முனுமுனுப்பதும் சரியான செயலா? நமக்கு மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும்.. எல்லாம் நடக்க வேண்டும்.. ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்க வேண்டும்.. எப்போதும் சிறிய வசதி கூட குறைவில்லாமல் எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.. என்று நினைப்பது சரியா.. நம்மை படைத்த கடவுளை குறை கூறுதல் முறையா?

ஆனால் நம் ஆண்டவர் வாழ்க்கை எப்படி இருந்தது..?

வாழ்க்கை என்றால் கஷ்ட்டங்கள் இருக்கத்தான் செய்யும், பிரச்சனைகள் வரத்தான் செய்யும், நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்…
ஆனால் அந்த கஷ்ட்டங்களை, துன்பங்களை, இன்னல்களை, இடையூறுகளை ஏற்று ஆண்டவர் இயேசுவைப்போல பரிகாரமாக மாற்றுகிறோமா.. ஆண்டவர் இயேசுவை விடுங்கள்.. அட்லீஸ்ட் அந்த நல்ல கள்ளன் செய்தது போலவாவது அதை பரிகாரமாக மாற்றி நிலையான மோட்சத்தை சம்பாதிக்கிறோமா?

அல்லது அந்த விசுவாசங்கெட்ட, நன்றி கெட்ட இஸ்ராயேல் மக்கள் செய்தது போல எத்தனையோ வல்ல செயல்கள் செய்தாலும், செங்கடலையைப் பிளந்தாலும், பாறையிலிருந்து நீர் வர வைத்தாலும், காடையைக் கொடுத்தாலும் எப்போதும் முனுமுனுத்துக்கொண்டே இருந்து பாலும், தேனும் பொழியும் கானான் தேசத்தை இழந்தார்களே(அவர்கள் பிள்ளைகள்தான் சென்றார்கள்) .. அது போல நாமும் முனுமுனுத்து மோட்சத்தை இழக்க போகிறோமா?

இன்றைய நாளில் நம் கல்வாரி ஆண்டவர்.. உலக அரசர் போதிப்பது இதைத்தான்..

நம் வாழ்க்கை முறையில் இனியாவது மாற்றம் இருக்குமா? கடவுள் சித்தப்படி வாழ பழகுவோமா? நம் மீட்பரிடம் இருந்து பாடம் படிப்போமா? அல்லது இந்த தவக்காலம் போய் எத்தனை தவக்காலம் வந்தாலும் நாம் அப்படியேதான் இருப்போமா?

சிந்திப்போம்…

ஆறுதலுக்காக...

ஒன்றுமில்லையாமையிலிருந்து சகலதையும் உருவாக்கியவர் கடவுள்.. ஒரு  நொடியில் சகலத்தையும் மாற்ற வல்லவர் கடவுள்.. ஏன் இந்த கொரோனோவைக்கூட ஒரு நொடியில் அவரால் போக்க முடியும்..

“ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை..” லூக் 1: 37

அதனால் எப்போதும் கடவுளையே நம்பியிருப்போம்.. அவரையே சார்ந்திருப்போம்.. அவர் சித்தத்தையே நாடியிருப்போம்..
நன்மையானதை மட்டும் அவர் நமக்குத் தருவார்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !