சிலுவைப் பாதை

நிலை 1 - தீர்ப்பு தவறாகிறது

அன்புச்சகோதரரே வெளிவேடமாகப் பேசுகிறவர்களை விட்டுவிடுகிறீர்கள். வெளிப்படையாகப் பேசிய என் மேல் விசாரணை வைக்கிறீர்கள். தோழரே!கட்டுகளை அவிழ்த்துப் போகவிடுங்கள் என்றேன். கட்டுகளை அவிழ்க்க வந்த என்கரங்களையே கட்டிவிட்டீர்கள். என்னுடைய ஆதங்கமெல்லாம். உங்கள் அநியாய தீர்ப்பு என்னோடு முடிந்து விடட்டும் என்பதே. தீர்ப்புகளால் மட்டுமல்ல மூர்க்கத்தனமான பேச்சுகளால் எத்தனை மொட்டுக்கள் சருகாகியிருக்கின்றன. தவறான வார்த்தைகளால் எத்தனை தற்கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. போதும் சகோதரமே! போதும்! உங்கள் வார்த்தைகள் வாழ்வைக் கெடுப்பதற்கல்ல, வாழ்வைக் கொடுப்பதற்கு. இனிமையான பேச்சுக்கள் இதயங்களை எழுப்பட்டும் கனிவான வார்த்தைகள் கலங்கிய உள்ளங்களைத் தேற்றட்டும்.

செபம் : இறைவா, பேச்சால் பிறரைத் தீர்ப்பிட்டோம், செயலால் பலரைத் தீர்ப்பிட்டோம். மன்னியும். இனியாவது, பிறரைக் குறை கூறுவதைக் களைந்து, நிறைகளால், மனநிறைவு பெற அருள்தாரும். ஆமென்.

நிலை 2 - உண்மைக்குப் பரிசு

அன்புச்சகோதரரே, சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, சுமைகளைத் தாருங்கள் என்றேன். என்னையே சுமையயன நினைத்துச் சுமத்தினீர்கள் என்மீது சிலுவையை - என் சிந்தை கலங்குகிறேன். இனிமேலும், யார் மீதும் சிலுவையை ஏற்றாதீர்கள். வறுமைக் கொடுமையால், வேலையில்லாத் திண்டாட்டத்தால், வரதட்சணை அவதியால், துன்ப துயரத்தால் ஏழை மீது ஏற்றப்பட்டிருக்கும் இரக்கமற்ற சிலுவைகளை இறக்கிவைக்கப் பாடுபடுங்கள்.

செபம் : இறைவா, சிலுவையைச் சுமப்பதற்குப் பதிலாக சிலுவையாக மாறினோம். உம்மைப் போன்று சுமை தாங்கியாக பிறர் சிலுவையையும் சேர்த்துச் சுமக்கும் மனநிலையைத் தாரும். ஆமென்.

நிலை 3 - வெற்றிப்பாதையில் முதல் தடை

தோழனே, ஏன் விழுந்து விட்டேனென்று எண்ணுகிறாயா? விழவில்லை நான், விழுத்தாட்டப்பட்டிருக்கின்றேன். என் கால்கள் இடறுவதை நினைத்து கலங்கவில்லை. உன் வார்த்தையில் அடிக்கடி வழுக்கி விழுகிறாயே, அதற்குத்தான் வருத்தப்படுகிறேன். எழுந்து நட, ஏற்றமிகு சமுதாயம் காண் என்று சொன்னவனை? விழுந்துகிட என்ற வேதனையைச் சுமக்க வைத்துள்ளாய் மானிடனே, வாழ்த்தப் படுவோரெல்லாம் வாழ்ந்து விடுவதில்லை, வீழ்த்தப் படுவோரெல்லாம் வீழ்ந்தே கிடப்பதில்லை. காலம் ஒருநாள் மாறும். இன்னும் ஏன் விழுந்து கிடக்கிறாய் நீ? நீ வீழ்ந்து கிடக்கும் வரை மட்டுமே இவர்கள் வாலாட்டுவார்கள். நீ எழுந்து விட்டால் இவர்கள் தலை கவிழ்ந்து விடுவார்கள்.

செபம் : இறைவா, விரக்தியில் வீழ்ந்தோம், பாவத்தால் வீழ்ந்தோம். வீழாமலும் பிறரை வீழ்த்தாமலும் வாழ வரம் தாரும். ஆமென்.

நிலை 4 - வாட்டமடைந்தாள் ஊட்டி வளர்த்தவள்

ஈன்ற தாய் எவருக்கும் ஏற்படக் கூடாத சோகம் எனக்கு வந்துள்ளது. தோளிலே சிலுவை, தலையிலே முள்முடி கிழிக்கப்பட்ட தேகம், அழிக்கப்பட்ட கோலம், கண்ணெதிரே கதறும் மகனைக் காட்டி மகிழ்கிறார்கள். பெற்றோர்களே, உண்மைக்கு உரமாகும் உங்கள் பிள்ளைகளை ஊரார் வதைத்தாலும் உதாசினப்படுத்தி விடாதீர்கள். உதாசீனப்படுத்தி விட்டால் உடைந்து போவார்கள். வார்த்தைகளால்தான் நெருப்பாகி, குழந்தைகளை வெறுப்பாக்க, பொறுப்பான வேலைகளைவிட்டு, மனப்போராட்டங்களில் அழிகிறார்கள். பெற்றோர்களே, என்னைப்போல் நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தேற்றினீர்களென்றால் இனி வருபவர்கள் உன் மகன்களாகத் தான் இருப்பார்கள்.

செபம் : இறைவா, உமதன்னையின் சந்திப்பு உமக்கு ஆறுதல் தந்தது. பெலன் தந்தது - எழுந்து நடக்க முடிந்தது. ஆனால் நான் சந்தித்ததோ பணம், புகழ், பெருமை இவற்றால் நான் நிம்மதி இழந்தேன். தன்னலம் துறக்க, தற்பெருமை மறக்க, உம்பெருமை நினைக்க வரம் தாரும். ஆமென்.

நிலை 5 - தோள் கொடுத்த தோழன்

என் பயணம் பாதியில் முடிந்து விடுமோ எனப்பயப்படுகிறார்கள். என் சிலுவையைச் சுமக்க வழியில் வந்தவனுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். சீமோன் பிறரின் சுமையைச் சுமந்ததால் பெரியோனாகக் கருதப்பட்டான். பிறர் சுமையைச் சுமப்பவர்களே பெரியோர்களானால், பிறருக்குச் சுமையாய் இருப்பவர்கள் சிறியோர்களே, அப்படியானால் நம்மில் எத்தனை பெரியோர்கள் நடமாடுகிறார்கள். சுமைகளைச் சுமக்கும் சோக உள்ளங்களுக்கு நம் தோள்கள் துணையிருக்கத் துணிவோடு நடைபோடுவோம்.

செபம் : இறைவா, பிறருக்கு உதவவும் மறந்தோம். உதவியவர்களையும் தடுத்தோம். இனியாவது உமக்கு உதவ முன்வந்த சீமோனாக வாழ வரம் தாரும். ஆமென்.

நிலை 6 - பேறு பெற்றவள்

கனத்த சிலுவையோடு கனிந்த இதயம் கொண்டவர், கால் தடுமாற, பயணத்தைத் தொடரும்போது கன்னி ஒருத்தி கைமாறு கருதாது, கறை படிந்த திருமுகத்தைத் துடைக்கிறாளே, ஈராயிரமாண்டுகளுக்கு முன் எப்படி வந்தது இந்தத் துணிவு. வெரோணிக்காள், இப்போது வீரமங்கை, நெஞ்சில் இரக்கம் இறங்கியதால் ஈரமங்கை. பெண்ணே, எழுந்திடு, தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாகும், நீ புறப்பட்டு விட்டால் புயல்கூட தன் பயணத்தை நிறுத்திவிடும். விமர்சனங்களுக்குப் பயந்து வீட்டுக்குள் பதுங்காதே, சம்பிரதாயத்திற்குப் பயந்து சரித்திரத்திலிருந்து ஒதுங்காதே, பெண்ணே, இனியும் நீ மாளப் பிறந்தவள் அல்ல, உலகை ஆளப்பிறந்தவள்.

செபம் : இறைவா, உம்திருமுகக்கோலத்தைப் பார்த்து, பெண்ணின் கரம் செயலாற்றியது. நாங்கள் பிறர் துன்பத்தில் உதவும் கரமாகி உருமாற அருள்தாரும். ஆமென்.

நிலை 7 - இரண்டாம் முறை நிலை தடுமாறும் பாங்கள்

சென்று சேரவேண்டிய இடம் இன்னும் வரவில்லை, அதற்குள் இன்னொருமுறை மின்னல் வேகத்தில் மண்ணில் விழுந்தேன். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நீயாக இருக்கட்டும் என்று மெளனமாயிருக்கிறேன். போராட்டங்களைச் சந்தித்தவர்கள்தான் சரித்திரத்தில் இருக்கின்றார்கள். விழுப்புண் இல்லாத வெற்றியுமில்லை. விழுந்தால் விதையாக விழு. எழுந்தால் மலையாக எழு.

செபம் : இறைவா அன்று நீர் வீழ்ந்த போது எண்ணற்ற உள்ளங்கள் பதறியது, பரிதவித்தது. ஆனால், இன்றோ, நாங்கள் விழும் போது பரிகசிக்கிறது. பாதிப்பை உண்டாக்குகிறது. இன்றைய உள்ளங்கள் உம்மைப்போன்று உயர்ந்த உள்ளத்தைப் பெற்று நிமிர்ந்து வாழ அருள்தாரும். ஆமென்.

நிலை 8 - மனம் நொந்த மங்கையர்

மங்கையரே, புதிய யுகத்தின் பலர் விடியலான எனக்கே முள்முடி சூட்டினார்கள், என்னைச் சுற்றியிருந்தவர்கள் காட்டிக்கொடுத்த துரோக முட்களைவிடவா இவை துளைத்து விடப்போகிறது. ஆறுதல் சொல்ல, ஆண்டவரின் முகம் காண மனம் கசிந்து கண்ணீர் புரண்டோட கதறி, ஐயோ ஆண்டவரே நீ வீதிகளில் பேசியதும், எல்லோருக்கும் தர்மம் செய்ததும் அன்று வீணாகப் போனதோ என்று தாய்மார்கள் அழுதார்கள். எனினும் எனக்காக அழாதீர்கள் உங்களுக்காக அழுங்கள், ஒன்றாய் வாழக்கற்றக்கொள்ளுங்கள், உங்களையே காத்துக்கொள்ளுங்கள்.

செபம் : இறைவா, எங்களது பேச்சால், சுயநலச் செயல்களால் பிறரை அழவைக்கின்றோம். எங்களின் அநீத செயல்களை அகத்தில் ஆய்வு செய்து, எங்கள் தவறுக்காய் அழவும், அழுது புலம்புவோருக்கு ஆறுதலாய் இருக்கவும் வரம் தாரும். ஆமென்.

நிலை 9 - மூன்றாம் முறை சுமை தாங்கியே சரிந்தது

களைத்த உடம்பில் அழுத்தும் சிலுவை இங்கு சுமை தாங்க வந்த இறைவனே சாய்ந்து போன கோரக்காட்சி, கல்வாரிக்கு முன் நான் காலமாகிவிடக் கூடாது. வேண்டாம் சகோதரனே உன் கரங்கள் எனக்கு வேண்டாம். வாழ்வை இழந்தவனுக்கு, வரதட்சணையால் தவிப்பவருக்கு, ஏழ்மையில் வாடுபவருக்கு, இயலாமையால் வருந்துவோருக்கு, அண்டி வருவோருக்கு நீட்டாத உன் கரங்கள் எனக்கு மட்டும் வேண்டாம். இன்று இந்த பூமியில் எழ முடியாமல் தவிப்போர் எத்தனை பேர். உடனே போய் உதவிசெய் சகோதரனே, உதவி செய்.

செபம் : இறைவா உம் திருமகனின் திருஉடல் தீயவர்களால் வதைக்கப்பட்டு, துவண்டு விழுவதைப் பார்க்கையில் என் இதயம் சுக்கு நூறாய் உடைகிறது. நான் இவ்வுலகில் வாழும் வரையில் எல்லாருக்கும் நல்லதே செய்து, நல்வழியில் நடக்க மன உறுதியை எனக்குத் தந்தருளும். ஆமென்.

நிலை 10 - அனைத்தையும் இழந்தார்

ஆண்டவன் பார்ப்பது ஆடையை அல்ல, அகத்தினை. என் துகில் உரிப்பவர்களே, வரதட்சணையால் பெண்ணை வதைக்கும் வக்கிர எண்ணத்தை உரித்துப்போடுங்கள், கண் முன்னால் இனிமையாகவும், காணாவிட்டால் குழிபறிக்கும் முகமூடி வாழ்வை உரித்துப்போடுங்கள். துணியைமட்டுமல்ல, என் தோலையும் கொடுத்துவிட்டேன். இனி வரும் தலைமுறைக்கு இப்படிச் செய்துவிடாதீர்கள். முடிந்தால் போர்த்துங்கள். ஏழைக்குச் செய்ததை எனக்கே செய்வதாய் எண்ணுங்கள், எல்லோரையும் வாழவையுங்கள். இல்லையேல் வாழவிடுங்கள்.

செபம் : இறைவா, நன்மையால் உம்மைப் போன்று மனிதர்களுக்கு ஆடையாய் மாற அருள்தாரும். ஆமென்.

நிலை 11 - சிலுவையில் ஓர் திராட்சைக் கொடி

நமக்கேன் வம்பென்று ஒதுங்காத, நன்மை செய்யத் தயங்காத நல்லவர்களை வாசலில் இருந்து வரவேற்பது சிலுவைச் சாவுதான். ஐயிரண்டு மாதமாய்ச் சுமந்து, பெற்றெடுத்த பெற்றோரை, முதிர்ந்த வயதில் சுமையயனக் கருதிச் சுமைகளை ஏற்றிச் சிலுவையில் அறைகிறார்கள். என்ன நியாயம், எத்தனைக் காலம்தான் வேதனைத் தீயில் பிறரை வேகவைப்பீர்கள். அடிக்கின்ற கரங்களை அப்புறப்படுத்திவிட்டு, பிறரை அணைக்கின்ற கரங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், பிறருக்குச் சேவை செய்ய விரிகின்ற கரங்களும் பிறரின் தேவைக்காய் ஓடுகின்ற கால்களும் எந்நாளும் உங்களோடு இருக்கட்டும்.

செபம் : இறைவா, பிறர் உயர, நான் தாழ்ந்து என் முதுகை ஏணியாக்கவும், என் உழைப்பினாலே பிறரை ஊக்கப்படுத்தவும் எனக்கு வரம் அருள உம்மை மன்றாடுகிறேன்.

நிலை 12 - ஜீவனும் தேய்ந்தது

மனித நேய மணிகாட்டியின் உயிர் மலை உச்சியில் நம் ஜென்ம பாவத்தால் போனதே. சிலுவையில் நீ அடைந்த வேதனையில் உன் பாசம் புரிகிறது. உன் மீட்பு தெரிகிறது. கடவுளின் திட்டம் நிறைவேறுகிறது. உன் புரட்சிக் கனவால், இலட்சிய நோக்கத்தில் விளைந்தது உன் சாவு. உன் சாவு பூமியில் நடவாமல் அந்தரத்தில் நடந்ததை எண்ணிச் சிந்தை அழுகிறேன். எனக்காக நீ சிலுவையில் தொங்க நான் என்ன தவம் செய்தேன்?

செபம் : இறைவா நான் மனிதனாய் இருக்க எனக்கென்றே பிறந்து வந்தாய், வாழ்ந்து இறந்தாய், உன் வழி, என் வழியாகி நல்லவை நிலைக்க, என்னைக் கொடுக்க வரம் தாரும்.

நிலை 13 - மெளன மொழிகள்

இந்த மனிதர்களின் கோபம் ஒரு கொலையானது, என் மகனைக் கொன்றுவிட்டு அப்படியயன்ன மகுடம் சூட்டப்போகிறீர்கள். உங்களில் பலபேருக்கு உயிர் பிச்சையளித்தவர், வாட்டும் நோய்களின் கட்டுகளை அவிழ்த்தவர், கலங்கவைத்த பேய்களின் கழுத்தை நெறித்தவர், அவர் உண்மையைச் சொன்னதற்காக உயிரை எடுத்தீர்கள். இறுதியாக உங்கள் நெஞ்சங்களில் இதாவது இருக்கட்டும். நீங்கள் தானே என் மகனைக்கொன்றீர்கள். என் மகனைத் தாருங்கள், இல்லை மகனாய் மாறுங்கள்.

செபம் : அன்பின் இறைவா, அன்று அன்னை மடி உமக்குத் தாலாட்டுப் பாடியது. இன்று அதே அன்னையின் மடி உம் திரு உடலை அள்ளி அணைத்துக் கதறுகிறது. எங்கள் குழந்தைகளைச் சமுதாய நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க அருள்தாரும். ஆமென்.

நிலை 14 - அனைத்தும் ஓய்ந்தது

விண்ணுக்கும் மண்ணுக்குமிருந்த வேறுபாடு களைவதற்கு இந்த மண்ணுக்கு வந்த மானிட மகனை மண்ணுக்குள்ளே வைத்தனர். மண்ணைத் தோண்டியல்லவா தங்கத்தை எடுப்பர். இங்கு மண்ணைத் தோண்டி தங்கத்தையே புதைக்கின்றனர். அன்பை விதைத்வருக்கு, அருளைக் கொடுத்தவருக்கு, வாழ்வைக் கொடுக்க வந்தவருக்கு, வாழ்வாக மாறியவருக்கு, ஏன் இந்த கொடுரம்? வளர்கின்ற தலைமுறையே, வன்முறையை எத்தனைக்காலம் தான் வளர்க்கப்போகிறீர்கள்? இனிவரும் தலைமுறை இயற்றட்டும் புது முறை. வாழும் வரை தீமைக்கு தீயிட்டு, நன்மைக்கு மாலையிட்டு பொற்காலம் பிறக்க, புத்துணர்ச்சி பெறுவோம்.

செபம் : அன்பின் சிகரமே, பிறருக்கு நல்லதைச் சொல்லுமளவிற்கு எங்கள் வாழ்வும், சாவும் இருக்க வரம் தாரும்.

I Year Theology Brothers, (2011) Good Shepherd Seminary Coimbatore