ஏழு தலையான பாவங்கள் - உலோபித்தனம் அல்லது பேராசை!

உலோபித்தனம், அல்லது பேராசை என்பது உலகப் பொருட்களின் மீதுள்ள ஒழுங்கற்ற பற்று ஆகும். உலகப் பொருட்களைக் குவித்து வைக்க வேண்டும், அவற்றைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆசைதான் அது. அவற்றைச் சேர்ப்பதற்காக நியாயமான, அல்லது நியாயமற்ற எல்லா வழிகளையும் பயன்படுத்தும்படி அது நம்மைத் தூண்டுகிறது. உண்மையில் அது சர்வேசுரனிடத்திலும் அவருடைய பராமரிப்பிலும் நமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதின் அடையாளமாக இருக்கிறது.

உலோபித்தனமுள்ளவர்களாக நாம் இருந்தால், சர்வேசுரனையோ, நம் அயலாரையோ, நம்மையோ நாம் நேசிக்க மாட்டோம். பணத்தையும், உடைமைகளையும் மட்டுமே விரும்புவோம். சர்வேசுரனை நேசிக்கவோ, அவரை சேவிக்கவோ நம்மால் முடியாது. ஏனெனில் எந்த மனிதனும் ஒரே நேரத்தில் சர்வேசுரன், மம்மோன் ஆகிய இரண்டு எஜமானர்களை நேசிக்கவோ, சேவிக்கவோ முடியாது. கிறீஸ்துநாதருடைய வார்த்தைகளிலிருந்து (மத். 6:24) இதை நாம் அறிந்திருக்கிறோம். நம் அயலாரையும் நம்மால் நேசிக்க முடியாது. ஏனெனில் நம் சொந்த செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தகைய அநீதியையும் செய்து முடிக்க நாம் தயாராக இருக்கிறோம், அல்லது செய்து முடிக்கிறோம். நம்மையே கூட, அல்லது குறைந்த பட்சம், நம் ஆத்துமத்தைக் கூட, நம்மால் நேசிக்க முடியாது; ஏனென்றால் நாம் நம் உடைமைகளை, பரலோகப் பொக்கிஷத்தை அடைவதற்காகப் பயன்படுத்தாமல், நம் ஆத்துமத்தைப் பசாசுக்கு விற்பதற்காகப் பயன்படுத்துகிறோம். நாம் சர்வேசுரனையோ, நம் அயலாரையோ, நம்மையோ நேசிக்கவில்லை என்றால் சிநேகம் என்பது நம்மிடம் இல்லை. அது இல்லாமல் நாம் எப்படி மோட்சத்தில் பிரவேசிக்க முடியும்? சிநேகம் இல்லாமல் சர்வேசுரன் மட்டில் நமக்குள்ள கடமைகளை நாம் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? நாம் அவரை மறுதலித்து, கைவிட்டு விடுவோம். “பணத்தாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது” என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது (1 திமோ.6:10).

ஒழுங்கற்ற நம் நேசம் அல்லது உலோபித்தனம் வெறும் பணத்தைப் பற்றியதாக மட்டுமல்லாமல், புத்தகங்கள், படங்கள், கைவினைப் பொருட்கள், இரும்புக் கருவிகள், நகைகள், வாகனங்கள், வீடுகள், நிலங்கள் போன்ற, வேறு எந்த உலகப் பொருட்களைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். எனவே, நாம் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, நம்மிடம் உலோபித்தனம் என்ற இந்தப் பாவம் இருக்கக் கூடும். மற்ற காரியங்களில் நிகழ்வது போலவே, தீமையை எந்த அளவுக்கு நாம் ஆதரித்து, மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு அது அதிகரிக்கிறது.

ஏழைகள், நம் உறவினர்கள் ஆகியவர்கள் மட்டில் நம் இருதயத்தின் கடினத் தன்மையைக் கொண்டு, அல்லது, திருச்சபையை ஆதரிக்கும்படி பண உதவிகள் செய்வதற்கு நமக்குள்ள தயக்கத்தைக் கொண்டு, இந்த உலோபித்தனம் என்கிற தீமை நம்மில் இருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம். நம் உடமைகளை எவ்வளவு கஞ்சத்தனமாக நாம் பயன்படுத்துகிறோம், நாம் நியாயமாக பயன்படுத்த வேண்டியவைகளைக் கூட எவ்வாறு சேர்த்து வைக்கிறோம் என்பதைக் கொண்டு இந்தத் தீமையை நாம் பகுத்தறியலாம். பிறர் சிநேகச் செயல்களில் நமக்குள்ள அசமந்தம், நமக்கு ஏதாவது செலவு வைக்கக் கூடிய காரியங்களில் நம் ஆர்வக் குறைவு, பணத்தைச் சேர்த்து பதுக்கி வைத்தல், அல்லது நம்முடைய வேறு எந்த தனிப்பட்ட உலகப் பற்றைக் கொண்டும் இந்தத் தீமை நம்மிடம் இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் நம் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் கருமித்தனம், கொடுக்கவோ, கடன் கொடுக்கவோ மறுத்தல், அற்ப இழப்புகளாலும் கூட கலக்கமடைதல், ஆகியவற்றிலும் அது வெளிப்படுகிறது.

ஓர் உண்மையான உலோபியின் துர்க்குணமானது வெளிப்படையானதும், கலகம் விளைவிப்பதுமான தீமையாக இருக்கிறது. தனது செல்வத்தை அதிகரிக்கத் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவன் தவற விடுவதில்லை. நீதி, அநீதி பார்க்காமல், தன் சேமிப்பைப் பெருக்கிக் கொள்ள எல்லா வழிகளையும் அவன் கையாள்கிறான். வறுமையுள்ள, பரிதாபமான வாழ்வு வாழ்கிறான்; மிகச் சிறிய கேடு அல்லது இழப்பு நேர்ந்தாலும் முறையிடுகிறான், முனகுகிறான். தன் பணம் என்ற ஒரே ஒரு சிந்தனை மட்டுமே அவனுக்கு உண்டு. திரளான செல்வம் இருக்கும் போதும்கூட, மிகப் பெரும்பாலும், அசுத்தங்கள் நிரம்பிய சூழலிலும், தரித்திரத்திலும்தான் அவன் மரிக்கிறான்.

நம்மை நாம் உலோபிகள் என வகைப்படுத்த வேண்டியதில்லாமல் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தீமையை மிகக் குறைந்த அளவில் கொண்டிருப்பதும் கூட நம் ஞான வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி விடும். அது ஞான காரியங்களின் மதிப்பை நாம் காண முடியாமல் நம் கண்களைக் குருடாக்கி விடுகிறது. உலகாதாயமான, நிலையற்ற பொருட்களை எப்போதும் நாம் தேடிக் கொண்டிருக்கும் போது சர்வேசுரனுக்குத் தர நமக்கு நேரமிருக்காது, அவருடைய காரியங்களில் எந்தச் சுவையுமிருக்காது. நாம் விழிப்பாயிருக்கவில்லை என்றால், உலகக் கவலைகளும் செல்வங்களும் நம் ஆத்துமத்தில் விசுவாசம், தேவபக்தி ஆகியவற்றின் விதைகளைச் சூழ்ந்து நெறித்து அவற்றைப் பயனற்றவையாக ஆக்கி விடும் என்று நம் ஆண்டவர் ஓர் உவமையில் நம்மை எச்சரிக்கிறார். உலகப் பொருட்களில் நாம் கொள்ளும் பற்றினால் விளைவது வெறும் அற்பப் பாவமாக இருக்கலாம், ஆனாலும் “எவ்வித அக்கிரம துர்க்குணத்திலும், காமம், உலோபம், துஷ்டத்தனத்திலும் மூழ்கினவர்களாய், பொறாமை, கொலை, சண்டை., வஞ்சனை, தீக்குணம் நிறைந்தவர்களாய், காதுக்குள் தூற்றுகிறவர்களாய், புறணி சொல்கிறவர்களாய், தெய்வத்துக்கு வெறுப்பானவர்களாய், இடும்புக் காரராய், அகங்காரிகளாய், அகந்தையுள்ளவர்களாய், தீங்கு உண்டுபண்ணுகிறவர்களாய், பெற்றோருக்கு அடங்காதவர்களாய், மதியீனராய், அவையடக்கமற்றவர்களாய், பற்றுதலற்றவர்களாய், பிரமாணிக்கந் தவறுகிறவர்களாய், இரக்கமற்றவர்களாய்” இருக்கிறவர்களைப் (உரோ. 1:29-31) பற்றி எழுதுகிற போது அர்ச். சின்னப்பர் உண்மையான உலோபித்தனத்தையும் மிகப் பெரிய பாவங்களோடு பட்டியலிடுகிறார்.

உடைமைகளைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஆசை நம் மனித சுபாவத்தில் ஆழமாக வேரோடியிருக்கிறது. அது கட்டுப்படுத்தவும், அழித்து அகற்றவும் மிகக் கடினமான பசியாகும். அதற்கு அடிமையாயிருக்கும்போது நாம் பொருள் சேர்ப்பதற்கு எல்லாவிடங்களிலும் சாக்குப்போக்குகளைத் தேடுகிறோம்: என் குடும்பத்திற்கு வேண்டியதைத் தர வேண்டும், எங்கள் வயோதிகத்தில் எங்களுக்குப் பணம் வேண்டும், எங்கள் ஆரோக்கியத்திற்கு, எங்கள் பாதுகாப்பிற்கு, எங்கள் மகிமைக்கு எங்களுக்குப் பணம் தேவை. எங்களுக்கு கொஞ்சம் உல்லாசம் வேண்டும் என்று சாக்குப் போக்கு சொல்கிறோம். பணம் சம்பாதிக்கவும், நாம் விரும்புகிற அளவு பணத்தையும், சொத்துக்களையும், அந்தஸ்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும், பேராசையால் தூண்டப்பட்டு, சட்டபூர்வமானதும், சட்டத்திற்கு எதிரானதுமான எல்லா வழிகளையும் தேடுகிறோம். இதற்காகப் பொய் சொல்கிறோம், ஏமாற்றுகிறோம், திருடுகிறோம், இலஞ்சம் வாங்குகிறோம், பொய்சாட்சி சொல்கிறோம், நண்பர்களைக் காட்டிக் கொடுக்கிறோம். மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறை கொலை ஆகியவற்றைக் கூடச் செய்யத் துணிகிறோம். நாம் இச்சிக்கிறவைகளை அதிகமதிகமாக அடைந்து கொள்வது, அல்லது குறைந்த பட்சம் நம்மிடம் இருப்பதைக் காத்துக் கொள்வது என்ற ஒரே நோக்கம் உள்ளவர்களாய் நாம் இருப்பதால், கொடூரமானவர்களாகவும், இறுகின இருதயமுள்ளவர்களாகவும் கூட நாம் இருக்கக் கூடும்.

 “ஒருவன் உலகப் பொருட்களை மிக அபரிமிதமாகச் சேர்க்கிறான் என்றால் அவன் மற்றொருவன் தனக்கு அத்தியாவசியமானவை கூட இல்லாமல் இருக்கச் செய்கிறான், அப்படி இல்லாமல் அவன் அவற்றை இப்படிச் சேர்க்க முடியாது” என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் குறித்துக் காட்டுகிறார். இதற்கான சான்றுகளை நாம் எல்லாவிடங்களிலும் காண்கிறோம். பலரிடம் உலகப் பொருட்கள் அபரிமிதமாய் இருக்கும் போது, அங்கே மற்றவர்களுக்கு அநீதி நிகழ்கிறது. பேராசையானது அதிகமான திருப்தியற்ற நிலையையும், சச்சரவையும் ஏற்படுத்துகிறது. செல்வர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே அது ஒற்றுமையின்மையைத் தூண்டுகிறது.