ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள்

ஆங்காரத்தை வெல்ல ஒரே வழி தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பது ஆகும். அது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம்; ஆனால் தாழ்ச்சியுள்ள மனிதன் தான் ஆங்காரமுள்ளவன் என்று கண்டுபிடிக்கிறான்; உண்மையான ஆர்வத்தோடு, தன் வாழ்வில் ஆங்காரத்தின் வெளிப்பாடுகளின் மீது வெற்றி கொள்ளப் பாடுபடுகிறான்.

தாழ்ச்சியை அடையப் பாடுபடுவதில், நாம் நம் கண்களுக்கு முன்பாக நம் ஆண்டவரையே முன்மாதிரிகையாகக் கொண்டிருக்க வேண்டும். தாழ்ச்சியுள்ளவர்களுக்கு ஆதரவாக அவர் அருளிய வாக்குத்தத்தங்களையும், ஆங்காரமுள்ளவர்களைப் பழிவாங்க அவர் செய்துள்ள ஏற்பாடுகளையும் நாம் நம் மனதில் இருத்தி சிந்தித்து வர வேண்டும்.

சர்வேசுரனையே பற்றிப் பிடித்துக் கொண்டு நம் முழு ஆத்துமத்தோடும் அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்; இந்தப் புண்ணியத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு, ஜெபத்தில் தஞ்சமடைய வேண்டும்; சர்வேசுரனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்க வேண்டும்.

சுய-மறுதலிப்பையும், பிற கிறீஸ்தவப் புண்ணியங்களையும், விசேஷமாக, பொறுமை, சுயவொடுக்கம், பிறர்சிநேகம், சாந்தம், கையளித்தல், சர்வேசுரனுக்கு முழு அர்ப்பணம், தேவ சித்தத்திற்கு ஒத்திருத்தல், இரக்கம், தேவ நம்பிக்கை, பாவத்தின் மீது அருவருப்பு, அடக்கவொடுக்கம் ஆகியவற்றையும் பயிற்சி செய்ய வேண்டும். 

உலக மகிமைகளை நாம் தேடக் கூடாது; மாறாக நம் ஒன்றுமில்லாமையையும், புண்ணியங்கள் நம்மில் குறைவுபடுவதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். 

அவமானங்களை ஏற்றுக் கொள்ள விருப்பமுடன் இருப்பதோடு, எல்லாக் காரியங்களிலும் நாம் சர்வேசுரனைத் தேடவும் பாடுபட வேண்டும்.