பாத்திமா காட்சிகள் - குழந்தைகளின் குடும்பங்களின் நிலை

அல்யுஸ்திரலில் லூஸியா குடும்பமும், பிரான்சிஸ், ஜஸிந்தா குடும்பமும், ஒருமாதிரி வியப்புக்குரியதும், எதிர்பார்ப்பு ஏக்கம் நிறைந்ததுமான, என்னவென்று விவரிக்க முடியாத நிலையில் இருந்தன.  

லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவருக்கும் அன்னையின் நினைவும், சேசுவைப் பார்க்கலாம் என்ற ஆவலும் மிகுந்திருந்தன.  அவர்கள் கலங்கவுமில்லை, பயங்கொள்ளவுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அந்த இரவு எப்படியோ பயமூட்டுவதாக இருந்தது. ஆனால் மார்ட்டோ திடமாகவே இருந்தார்.

அக்டோபர் 13 புலர்ந்தது! அன்று சனிக்கிழமை. இரு குடும் பத்தினரும் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டார்கள். மரிய ரோஸாவுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்றே ஒன்றும் ஓட வில்லை.  குடும்பத்தில் யாரும் அமைதியாக எதையும் பேசவோ, செய்யவோ முடியாமல் அநேக மக்கள் இவ்விரு வீடுகளையும் முற்றுகை போட்டது போல் வளைந்து கொண்டார்கள். 

காட்சி காணும் குழந்தைகளைப் பார்க்கவும், அவர்களோடு பேசவும் ஏற்பட்ட ஆவலால் மரியாதை சம்பிரதாயம் எதையும் கவனிக்காமல் சும்மா வீட்டினுள்ளே கும்பல் நுழைந்து விட்டது. மார்ட்டோ வீட்டிலும் இதே கூட்டமும் சந்தடியும்தான். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. ஒலிம்பியாவுக்கு எரிச்சல் ஏற்பட்டது. பிள்ளைகளைக் கோவா தா ஈரியாவுக்கு அனுப்பக் கூட தயார் செய்ய முடியவில்லை. “எல்லாரும் வெளியே போங்கள்” என்று சத்தமிட்டாள் ஒலிம்பியா.  மார்ட்டோ சாந்தமாக அவளைப் பார்த்து, “சும்மா இரு.  வீடு கொள்ளுமட்டும் ஆள் வரும். அப்புறம் வர இடமிராது” என்று கூறினார்.

அல்யுஸ்திரல் கிராமவாசி ஒருவர் மார்ட்டோவிடம் வந்து மெதுவாக, “மார்ட்டோ, இன்றைக்கு நீர் மட்டும் கோவா தா ஈரியாவுக்குப் போக வேண்டாம். ஏதும் தவறு என்றால் உம்மை ஜனக் கூட்டம் அடித்து நொறுக்கி விடும். குழந்தைகள் மிகவும் சிறியவர்களாயிருப்பதால், அவர்களை ஒருவரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்” என்றார்.  

மார்ட்டோ மிகுந்த தைரியத்தோடு பதில் கூறினார்.  சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி, “நான் வெளிப்படையாகத்தான் அங்கு போகப் போகிறேன்.  யாருக்குமே நான் பயப்படவில்லை.  எல்லாம் குறிப்பிட்டபடியே நடைபெறும் என்பதில் எனக்கு சந்தேகமே கிடையாது” என்று கூறினார்.  ஒலிம்பியாவுக்கு உள்ளே பயம். தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் அவள் ஜெபித்துக்கொண்டே இருந்தாள். 

ஆயினும் பிரான்சிஸ், ஜஸிந்தா இருவரும் இருந்த அமைதியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.  அது மட்டுமல்ல, இக்குழந்தைகள் இப்பெரும் கூட்டத்தில் இறந்து விடவும் ஆயத்தமாக இருந்தது அதை விட அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “அவர்கள் எங்களைக் கொன்றால், நாங்கள் உடனே மோட்சத்துக்குப் போவோம். ஆனால் அவர்கள், பாவம்! நரகத்துக்குப் போவார்களே!” என்று கூறினாள் ஜஸிந்தா.

சில நாட்களுக்கு முன்பு கூட இந்த ஏழு வயதுச் சிறுமி கூறிய ஒரு பதில் அவள் பெற்றோர்க்கு மிகவும் வியப்பையும், உள் தைரியத்தையும் ஊட்டியது.  பாத்திமா இறுதிக் காட்சியில் பெரிய புதுமை நடைபெறுமாம் என்று எங்கும் பேச்சு ஆரம்பித்ததுமே திருச்சபையை வெறுத்த ஆட்சியாளரும், நாத்திகரும் மிகவும் கோபமடைந்தனர். 

அவர்களில் மூன்று பேர் ஒரு நாள் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று, “இதோ பாருங்கள் பிள்ளைகளே, அந்த இரகசியத்தை  நீங்கள் வெளியிட்டு விடுங்கள். இல்லையேல் உங்களைக் கொலை செய்து விடுவோம்” என்று எச்சரித்தார்கள். ஆனால் ஜஸிந்தா  உடனே இடைமறித்து, “ரொம்ப நல்லது!  சேசுவையும், அம்மாவையும் நாங்கள் எப்படி நேசிக்கிறோம் தெரியுமா? நாங்கள் அவர்களிடம் சீக்கிரம் போய்ச் சேர்ந்து விடுவோம்” என்றாள்!

இன்னொரு நாள் குழந்தைகளின் பெற்றோர் எங்கும் திரண்டு எழும்பி வந்த எதிர்ப்புகளைக் கண்டு மிகவும் பயந்து தங்கள் குழந்தைகள் அக்டோபர் மாதம் 13ம் நாள் ஊரில் இல்லாதபடி அவர்களை வேறு எங்காவது அனுப்பி விட வேண்டும் என்று பேசினார்கள்.  அவர்கள் பயப்படக் காரணமும் இருந்தது.

குழந்தைகளும்  அவர்களது  பெற்றோரும்  ஆட்சி மன்ற நீதி விசாரணைக்குக் கொண்டு வரப்படுவார்கள் எனவும், அஸின்ஹேரா மரத்தடியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு குழந்தைகள் கொல்லப்படுவார்கள் எனவும் பெரிய பேச்சாக இருந்தது.  

ஆனால் பெற்றோரின் பேச்சைக் கேட்டு குழந்தைகள் பயப்படவில்லை.  “நாங்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லை. சீக்கிரம் மோட்சத்துக்குப் போய்விடுவோம்” என்று கூறி 13-ம் தேதி குறிப்பிட்டபடி கோவாவுக்குச் சென்றே ஆக வேண்டும் என்றனர்.

இவ்வளவு திடமும் அமைதியும் இந்தச் சிறு குழந்தைகளுக்கு எங்கிருந்து வரக்கூடும்? இது தேவ அன்னையின் உதவியாகத்தான் இருக்க முடியும் என்று பெற்றோர் எதுவுமே சொல்ல முடியாமலும் மனம்கேளாமலும் கடவுளே கதி என்ற விட்டுக்கொடுத்தல்   நிலைக்கு வந்து விட்டனர்.  

மார்ட்டோ மட்டும் தேவ அன்னையின் வாக்கு பொய்க்காது என்று திடமாயிருந்தார். பிரான்சிஸுக்கும் ஜஸிந்தாவுக்கும் கொஞ்சம் காலை ஆகாரம் கொடுப்பதற்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டது ஒலிம்பியாவுக்கு.  அத்தனை கூட்டம் வீட்டினுள்.

புறப்படும் நேரம் ஆயிற்று.  மரிய ரோஸா தன் மகள் லூஸியாவுடன் புறப்பட ஆயத்தமாகி விட்டாள்!  ஒரு துண்டை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, “லூஸியா, உன்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.” இப்படிச் சொல்லும்போது மரிய ரோஸா அழுது விட்டாள்.  “ஆயினும் நீ எப்படியும் அங்கு போகத்தான் வேண்டுமென்றால், நானும் உன்னுடன் வந்து சாகிறேன்” என்று கூறினாள்.

ஒரு பெரும் சீமாட்டி, லூஸியாவுக்கு நீல நிற உடுப்பும், ஜஸிந்தாவுக்கு வெள்ளை உடுப்பும் விலையுயர்ந்த துணிகளில் தைத்துக்கொண்டு வந்திருந்தாள். அதை அணிந்துகொண்டு செல்லும்படி எவ்வளவோ வற்புறுத்தினாள். அச்சிறுமிகள் அதை மறுத்து விட்டு, தங்கள் சாதாரண வெள்ளை உடுப்புகளை அணிந்து கொண்டு கோவா தா ஈரியாவுக்கு மூவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.