பாத்திமா காட்சிகள் - அன்னையின் ஆறாம் காட்சி

மக்கள் திரண்டனர்

1917 அக்டோபர் மாதம் 12-ம் நாள் மாலையிலிருந்தே மக்கள் கூட்டம் கோவா தா ஈரியாவில் திரள ஆரம்பித்தது.  வானம் கறுத்து அடைத்துக் கொண்டிருந்தது.  கடும் புயலும், மழையும் எந்நேரமும் வரலாம். இந்த அறிகுறிகளைக் கண்டு மக்கள் பின்வாங்குவதாயில்லை.

கொஞ்ச நாட்களாக ஆட்சி பீடமும், வேத எதிர்ப்புப் பத்திரிகைகளும் மக்களின் விசுவாசத்தை உடைக்கவும், முடிந்த அளவு குறைக்கவும் ஒன்றுதிரண்டு முயன்றன. நிந்தையும், பரிகாசமும், ஏளனமும் மிகுந்தன.  அச்சுறுத்தல்கள் பல பக்கங்களிலும் கேட்டன.  “உலகம்” என்ற பிரபல நாளிதழில் திருச்சபைப் பழிப்பும், பாமர மக்களின் விசுவாசப் பரிகசிப்பும் நிறைந்திருந்தன.  எதிர்ப் பிரச்சாரத் துண்டுப் பிரசுரங்கள் எங்கும் விநியோகிக்கப்பட்டன.

ஆனால் விசுவாசம் சந்தேகத்தை விட வலிமை வாய்ந்தது.  அன்பு பகையை விட அதிக சக்தியுடையது.  இவ்வுண்மையை நிலை நாட்டுவது போல் போர்த்துகல் எங்குமுள்ள கத்தோலிக்க மக்கள் எறும்பு ஊர்ந்து வருவது போன்று எல்லாத் திசையிலுமிருந்து கோவா தா ஈரியாவை நோக்கி நடந்த வண்ணமிருந்தனர்.  

உணவுக்கு என்ன செய்வோம், உறங்க எங்கு செல்வோம், மழையில் எங்கு தங்குவோம் என்ற எண்ணம் எதுவுமே இல்லாமல், கையில் உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், குடை சகிதமாக மக்கள் திரண்டு கொண்டிருந்தனர். கூட்டங்கூட்டமாக அவர்கள் ஜெபமாலை ஜெபித்தபடி வந்தார்கள். 

ஒவ்வொரு கூட்டத்திலும் சிலர் அருள் நிறை மந்திரத்தின் முதல் பாகத்தைச் சொல்ல, மற்றவர்கள் மறு பாகத்தைச் சொல்லி மாமரியை வாழ்த்திக்கொண்டே வழிநடந்தார்கள். மாதா மீது பாடல்களும், மாதா பிரார்த்தனையும் எங்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.  மனமகிழ்ச்சியால் எழுந்த இனிய சிரிப்பொலியைக் கேட்ட போது, அந்த மக்களுக்கு தேவ அன்னையின் நினைவைத் தவிர வேறு எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை என பார்வையாளர் கருதினர்.

இக்கும்பலில் பலர் நோயாளிகள், பற்பல உடல் நோய்களால் நொந்தவர்கள். நடக்க முடிந்தவர்கள் நடந்து வந்தார்கள்.  நடக்க இயலாதவர்களை மற்றவர்கள் சுமந்து கொண்டோ, வாகனங்களில், அல்லது பர்ரோ என்ற குட்டைக் கழுதை மீது ஏற்றியோ கொண்டு வந்தார்கள். மிகப் பலர் மனக் கவலையாலும், உள்ள வேதனையாலும் நொந்தவர்கள்.  

இன்னும் பலர் வேத எதிர்ப்பாளர்கள்.  கடவுளைக் கூட ஏற்காத நாஸ்திகர்.  சிலர் பெரிய தனவந்தர்கள்.  உல்லாசமாய் உடுத்து, மோட்டார் வாகனங்களிலும், குதிரை வண்டிகளிலும்    வந்து கொண்டிருந்தார்கள்.  அநேகர் சும்மா வேடிக்கை பார்க்கவும், பொழுது போக்கவும், இங்கு என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் என்ற வினோதப் பிரியத்தாலும் அங்கு சென்றார்கள். மிகப் பெருவாரியான யாத்ரீகர்கள் சாதாரண பாமர மக்கள்தான்.

இரவு ஆக ஆக, கோவா தா ஈரியாவில் கூட்டம் பெருகிக் கொண்டேயிருந்தது.  ஒரு விதமான அடைப்பு அடைத்துக் கொண்டு வானம் எந்நேரம் மழை ஊற்றுமோ என்ற நிலையில் இருண்டு உறுமிக் கொண்டேயிருந்தது.