அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 15

பரிசுத்த திருக்குடும்பம் எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வந்ததை தியானிப்போம்.

தியானம்.

கொடுங்கோல் மன்னனான ஏரோது இயேசுகிறிஸ்துவின் பிறப்பால் தனது நாட்டிற்கு கெடுதல்வரும் என்று எண்ணி மாசில்லாத குழந்தைகளை அநியாயமாய் வெட்டிக் கொல்ல கட்டளையிட்டான். ஆனால் இறையருளால் பாலன் இயேசு பத்திரமாக எகிப்து நாட்டில் இருந்தார். சில வருடங்களில் எல்லோராலும் கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தான் ஏரோது. எகிப்து நாட்டிற்கு இயேசுமரி சூசை சென்று ஏழு ஆண்டுகள் கடந்தபின் வானதுதர் புனித சூசையப்பரின் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார்  (மத் 2:20).

மரியன்னையும் புனித சூசையப்பரும் தங்களை எகிப்து கொண்டு சேர்த்த இறைவன் மீண்டும் பத்திரமாக இஸ்ராயேல் நாட்டிற்கு கொண்டு சேர்ப்பார் என நம்பினர். கொடிய காட்டுப்பகுதி வழியே துன்பத்தோடு நடந்தனர். குழந்தை இயேசுவோ ஏழு வயது சிறுவனாக இருந்ததால் நடப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டார். நாற்பத்தைந்து மைல் துரத்தினை நின்று, நின்று இளைப்பாறி , என மிக, மிக துன்பத்துடன் கடந்து தனது சொந்த நாட்டை அடைந்தனர்.

ஏரோது அரசனுக்குப்பின் அவனது மகன் அற்கெலாவூஸ் யூதேயா நாட்டை ஆட்சி செய்கிறான் என்பதை கனவில் இறைவனால் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டிற்கு சென்றார். தாம் வாழ்ந்த நாசரேத்தில் இல்லாமல் சற்று தள்ளி குடியேறினர். மிக அதிக நாட்கள் வாழ்ந்த இடம் நாசரேத் என்பதால் நாசரேத்தார் என அழைக்கப்பட்டனர். அப்பெயர் இயேசுவின் சிலுவையில் பொறிக்கப்பட்டது. அவரது முப்பது வயதில் போதிக்க துவங்கும் வரை தமது பெற்றோருக்கு  கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தார்.

எகிப்து நாட்டில் துன்பப்பட்ட திருக்குடும்பத்தை எவ்வித கெடுதலுமின்றி பாதுகாத்து அவர்களை ஏரோது அரசன் இறந்த பிறகு பாதுகாப்பாக மீண்டும் அவர்களது சொந்த ஊருக்கு இறைவன் கொண்டு வந்து சேர்த்தார். முழுமனதோடு இறைவனை நம்பினால் ஒருபோதும் நாம் கைவிடப்பட மாட்டோம். பறவைகளுக்கு  உணவும் பூக்களுக்கு அழகையும் கொடுக்கிற இறைவன், இறைவனின் மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவின் சகோதரர்களுக்கும் உணவும் உடையும் உறைவிடமும் அளிக்காமல் இருப்பாரா?

 பூவுலகில் இருப்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இப்பயணத்தில் நாம் முயற்சி, துன்பம், இடையூறு, மனப்பயம், ஏழ்மை, நோய், அவமானம், சிறுமை போன்றவை நமக்கு நேரிடும்போது மரியன்னையும், புனித சூசையப்பரும் ஏற்றுக்கொண்டதுபோல் நாமும் ஏற்றுக்கொண்டால் நாம் புண்ணியம் சேர்க்க உதவியாய் இருப்போம். நாம் செய்துகொண்டிருக்கிற பயணத்தை மோட்சம் சேருமட்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக செய்தால் இறைவன் தகுந்த பலனளிப்பார் என தாமஸ் அக்வினாஸ் கூறுகிறார்.

நம் பாவத்தால் இயேசுநாதரை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புலி ஒளிந்திருக்கிற இடத்திற்கு சென்றவன் சேதமடையாமல் வருவானா? பாம்பு புற்றில் கைவைத்தால் பாம்பு கொத்தாமல் விடுமா? வெறிநாயை தடவுகிறவன் கடிபடாமல் வருவானா? அதுபோலத்தான் பாவத்திற்கு காரணமானதெல்லாம் இருக்கிறது. எனவே, நாம் அவற்றிற்கு காரணமான வழிகளை விலக்கித் தள்ளவேண்டும்.

புதுமை

வாழ்வானது மனிதனுக்கு பல சோதனைகளை வெல்லும் போர்க்களமாக உள்ளது. இவற்றில் வெற்றிபெறுகிறவர்கள் அதிக மகிமையும் வல்லமையும் அடைவார்கள். தோல்வியடைகிறவர்கள் நித்திய நரகத்திற்கு செல்வார்கள். சோதனைகளை வெல்ல நம்பிக்கையோடு கேட்பவர்களுக்கு புனித சூசையப்பர் உதவுவார் என நாம் நம்பலாம். பக்தியுடன் கன்னியர் ஒருவர் கன்னியர் இல்லத்தில் ஒழுங்குகளை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். பசாசானது சோதனைக் கொடுத்து அவரது மனதில் பயமும், சோர்வும் உண்டாக்கிற்று. அவநம்பிக்கைத் தோன்றி அவரை அலைக்கழித்தது. அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அகல வேண்டுமென்று பயந்து செபத்தையும், தவத்தையும் தொடர்ந்து செய்தபோதும் இவைகள் அவரைவிட்டு நீங்கவில்லை.

ஒருநாள் மரியன்னையிடம், பசாசின் சோதனைகளை என்னால் தாங்க இயலவில்லை, என்னைக் காக்க மோட்சத்திலுள்ள யாரிடம் நான் செபிக்க வேண்டுமென எனக்கு அறிவுறுத்தும் என அன்னையிடம் செபித்தார். அந்த நேரத்தில் அவரது மனம் தெளிவடைந்ததுமல்லாமல் புனித சூசையப்பரால் தான் காப்பாற்றப்படலாம் என்பதை தனது செய வலிமையால் தெரிந்து கொண்டு தன்னை அவரது அடைக்கலத்தில் ஒப்படைத்தார். அதன்பின் அவரது மனப்பயம் எல்லாம் நீக்கி தனது வாழ்வில் சோதனைகளை வென்று இறுதியில் நன்மரணம் அடைந்தார்.

1844-ஆம் ஆண்டு பெண் ஒருத்தி கன்னியர் இல்லம் சேர்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்து தேர்வு எழுதும்போது பசாசின் சோதனையால் அவமானப்பட்டு தன் பெற்றோரிடமே திரும்பி விடலாம் என முடிவெடுத்தாள். இதனை அறிந்த சக கன்னியர் ஒருவர் இது பசாசின் வேலையா அல்லது இறைவனின் சித்தமா என்பதை அறிய நாம் புனித சூசையப்பரிடம் ஒன்பது நாள் செபிப்போம் என்றார். இருவரும் சேர்ந்து செபிக்கத் தொடங்கினார்கள். செபம் முடிவுற்றதும் இவருடைய சோதனையெல்லாம் நீங்கி நித்திய வார்த்தைப்பாட்டினை அளித்தாள். பாக்கியம் புனித சூசையப்பரால் தனக்கு கிடைத்தது எனக்கூறி புண்ணிய வாழ்வு வாழ்ந்து இறந்தார்.

நாமும் நமக்கு சோதனைகள் வரும்போது சோர்ந்துவிடாமல் மரியன்னையிடமும் புனித சூசையப்பரிடமும் அடைக்கலம் தேட வேண்டும். (3 பர, அரு, பிதா)

செபம்

எகிப்து நாட்டைவிட்டு நாசரேத் என்ற ஊரில் வாழ்ந்த புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நீர் துன்பப்பட்டபோதெல்லாம் இறைவனை நம்பிக் கொண்டிருந்தீர். உமது நம்பிக்கை வீணாகவில்லை. வாழ்க்கைப் பயணத்தை நாங்கள் நம்பிக்கையோடு தொடர பலவீனர்களாகிய எங்களுக்கு உதவும். துன்பப்படுகிறவர்களுக்கு ஆதரவாயிருந்து அவர்களைத் தேற்றியருளும். உமது புண்ணியங்களை அறிந்து உமக்கு சீடராக இருக்கிற நாங்கள் எல்லோரும் இவ்வுலக பயணத்தில் இடறி விழாமல் மோட்ச வீட்டினை சென்று சேர உதவியருளும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

புனித சூசையப்பரே! நாங்கள் எல்லாவற்றிலும் இறைவனை நம்ப செய்தருளும். புனித சூசையப்பரே! நாங்கள் அனுபவிக்கிற துன்பங்களில் துவண்டுவிடாமல் உறுதியாக இருக்க செய்தருளும். புனித சூசையப்பரே! பாவத்திற்கு காரணமான, பார்வை, பகை, துற்போதனை போன்றவற்றையும் விலகச் செய்தருளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

வறுமையில் வாடும் ஏழையை வாழவைத்து உணவளித்தல்.