அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 14

புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் வசித்ததை தியானிப்போம்.

தியானம்.

இயேசுமரி சூசை எகிப்து நாட்டிற்குள் நுழைந்தபோது பல அசுத்த அரூபிகளில் கோவில்கள் இடிந்து விழுந்ததென்றும், அவைகளின் பீடங்கள் தகர்ந்ததுமல்லாமல், அவைகளுக்குச் செலுத்தப்பட்டு வந்த ஆராதனைகள் நின்றதாகவும், வேதவாக்கு என தவறுதலாக கூறி வந்தவர்கள் ஊமையாக மாறியதாகவும் அலெக்சாந்திரினுாஸ் கிளமென்ஸ் என்பவர் எழுதியுள்ளார்.

இயேசுமரி சூசை அந்த நாட்டுக்குக் கொடுத்த வல்லமைமித்த ஆசீர்வாதத்தால் இயேசுகிறிஸ்து மரித்த பின்னர் பிற மதங்களைவிட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மக்கள் மனம்மாறி வநதனர் . இயேசு கிறிஸ்துவின் தவ வாழ்வையும் பணிவையும் பார்த்து மக்கள் மனம்மாறினர். பலர் மறைசாட்சிகளாக தங்கள் இன்னுயிரைத் துறந்தனர். இயேசுமரி சூசை கால்நடையாக நடந்து சென்ற இடங்களில் எல்லாம் செடிகள் பூத்து குலுங்கியது. அங்கு புனித வனத்து சின்னப்பரும், பெரிய அந்தோனியார், இரண்டு துறவிகளும் எண்ணில்லா மக்களும் தவம் செய்து வானதூதர்களுக்கு சமமானார்கள்.
திருக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக புனித சூசையப்பர் இரவும் பகலும் உழைத்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தம்மிடம் வருகிறவர்களுக்கு நல் ஆலோசனை வழங்கியும் வந்தார்.

நம்மிடையே நற்கருணை வடிவில் இயேசுகிறிஸ்து வருவதற்காக நாம் தக்க முறையில் தவமும், செபமுமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு நற்கருணை பெற வேண்டும். புனித சூசையப்பர் எகிப்தில் வாழ்ந்த ஏழு வருடங்களும் எளிமையையும், ஏழ்மையையும் அனுபவித்து வந்தார். மனைவி கணவனை விட்டு விலகாதவள் போல். கிறிஸ்துநாதரும் வறுமையை விட்டுப் பிரியாதவராக இருந்தார். "நரிகளுக்கு வளை உண்டு, பறவைகளுக்கு கூடு, உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என இயேசு குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களே, நீங்கள் ஏழையாக இருந்தால் இறைவனுக்கு பிரியமானவர்கள், நீங்கள் செல்வந்தர்களாக இருந்து தங்கள் செல்வங்கள் மேல் பற்று கொண்டு ஏழ்மையை உணராதிருந்தால் விண்ணரசை அடைவது கடினம். நாம் இயேசு மரி சூசையைப் பார்த்து சிந்தித்து மனதில் ஏழைகளாக வாழ வேண்டும்.

புனித சூசையப்பர் எவ்வளவு கடினமாக உழைத்தார், பாவிகளான நாம் உடல் வருந்தி உழைக்க வேண்டாமா? சோம்பல் பல பாவங்களுக்குக் காரணமாக இருப்பதால் நாம் நமது வயது, தகுதிக்கேற்ப பொழுதை வீணாக்காமல் நேர்மையாக உழைக்க வேண்டும்.

புதுமை

சத்திய வேதத்தின் மகிமையால் பல கன்னியர் இல்லங்களும் - துறவற இல்லங்களும் - சபைகளும் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அதைத் தோற்றுவித்த தூயவர்களின் பெயர்கள் அந்தந்த சபைகளுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புனித சூசையப்பரின் பெயரால் ஐந்து சபைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் நிறுவவில்லை. அச்சபைகளில் உள்ள கன்னியர்கள் எப்போதும் ஏழ்மையாய், கன்னியர்களாய், கீழ்ப்படிந்து வாழ்வோம் என உறுதிமொழி  எடுத்துள்ளார்கள். அவர்கள் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி, நம்பிக்கை வைத்து பல நன்மையால் புண்ணியங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் புனித சூசையப்பரை தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருக்கவும் பணிவோடு செபிக்கிறார்கள்.

கன்னியர்கள் தங்கள் இல்லத்தில் தையல், நூல் நூற்றல், சரிகை வேலை , எழுத்து கற்பித்தல், மறைநூல் கற்பித்தல் போன்று பல கைத்தொழில் போன்றவற்றை பெண்களுக்கு கற்றுக்கொடுத்து பக்தியையும் வளர்த்துவருகிறார்கள். சிலர் தகப்பன், தாய் இல்லாத குழந்தைகளை சேகரித்து மனம் தளர்ந்துவிடாமல் இல்லத்தில் வைத்து காத்து ஞானப் பெற்றோர்களாக இருந்து அவர்களுக்குரிய பணிவிடை புரிகிறார்கள்.

சிலரோ வயோதிக வியாதிக்காரர்களை ஒரு கூடத்தில் சேர்த்து வந்து அவர்களுக்கு மருந்துகளையும், உணவுகளையும், உடைகளையும் அளித்து பணிவிடை செய்வர். மற்றும் சிலரோ அவஸ்தையாய் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல் அருட்சாதனத்தைப் பெறச் செய்து நல்மரணம் அடைய உதவுகிறார்கள். தங்களுக்கும் ஒருவித சுகவீனம் வரும என்ற எண்ணம் சிறிதும் இன்றி சேவை செய்து வருகிறார்கள். இப்படி சேவை செய்து வருகிறவர்களை - பெண்களை பயனற்றவர்கள் என்று கூறலாமா? இவர்கள் ஆற்றிவரும் சேவைகளை கண்டு எத்தனையோ துஷ்டர்கள் உணர்ந்து மனம் மாறி உதவியுள்ளனர்.

கன்னியர்களில் சிலர் தன் சொந்த நாட்டை விட்டு கப்பலேறி பொல்லாதவர்களிடமும், பிற மதத்தவரிடமும் தங்கி இருந்து பயப்படாமல் மறைப்பணியும், அம்மக்களுக்கு மருத்துவம், உறைவிடம், உணவு, உடை சேவையும் செய்வதைப் பார்த்து எத்தனையோ பேர் உணர்ந்து மனந்திரும்பி சுத்த வேதத்திற்கு மாறியுள்ளனர். பெண்கள் முதலாய் புண்ணிய வழியில் சென்று கிறிஸ்துவுக்காய் உழைத்ததைப்போல் நாமும் உழைக்க ஆவலாய் இருப்போம். (3 பர, அரு, பிதா)

செபம்

எகிப்து நாட்டில் வசித்தபோது அதிக துன்பங்களை அனுபவித்த தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். திருக்குடும்பம் அங்கு நுழையும் முன்பாக அசுத்த ஆவிகளுடைய ஆலயங்களும், பீடங்களும், சிலைகளும் இடிந்து விழுந்ததுபோல் இந்திய நாட்டில் பொய்யான கடவுளர்களுடைய ஆராதனைகள் நீங்கவும் அனைவரும் உம்மை அறிந்து வணங்கவும் செய்தருளும். அவர்களிடமிருக்கும் ஆங்காரம், கோபம், மோகம், சோம்பல், துர்போதனையை விலக செய்தருளும். நீர் பட்ட துன்ப துயரங்களை நினைத்து நாங்கள் புண்ணிய நெறியில் தவறாது வாழ வரம் அருள உம்மை மன்றாடுகிறோம்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! பிற மதத்தவரை மனந்திருப்பியருளும். இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! சத்திய வேதத்தில் கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தியருளும். இயேசுமரி சூசை என்கிற திருக்குடும்பமே! உமக்குரிய தொண்டர்களாகவும் பக்தர்களாகவும் இருக்கிற எங்களை ஆசீர்வதித்தருளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

அசுத்த ஆவிகளுக்கு ஆராதனை செய்வதை விட்டுவிடவும். தேவனை அறிந்து விசுவசித்து சேவிக்கவும் செய்தருளும்.