அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 09

புனித சூசையப்பர் குழந்தை இயேசுவை தன் மகனாக வளர்த்ததை தியானிப்போம்.

தியானம்.

இறைவனால் படைக்கப்பட்ட பெற்றோர் அனைவருமே தம் பிள்ளைகளிடம் பற்றும் பாசமும் உடையவர்களாக இருக்கிறார்கள். தந்தை தன் மகனிடம் காட்டும் அன்பைவிடவும் அதிகமாக புனித சூசையப்பர் இயேசு பாலனிடம் காட்டினார். இறைவன் தன் மகனிடம் காட்டிய அன்பை புனித சூசையப்பரும் இயேசு பாலனுக்கு காட்டினார். புனித சூசையப்பர் இறைமகன் இயேசுவைத் தன் மகன் என அழைக்கும் பெருமை அடைந்தார். இயேசு பாலன் அவரை, அப்பா, தந்தை, பிதா என அழைத்து அன்பு செலுத்தினார். மகனே என அவர் அழைத்தபோது அவரது அன்பானது தேனினும் இனிதாகவும், கடலைவிட பெரிதாகவும் இருந்தது.

இறைமகன் புனித சூசையப்பரின் அரவணைப்புக்கு வந்தபோது உலக செல்வங்கள் அவருக்கு கிடைக்கவில்லை, மாறாக துன்பமே அதிகமாகபட்டார். முன்னர் அவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்து அங்கும் இங்கும் அலையாது அன்றாட வாழ்வை சிரமமின்றி கழித்து வந்தார். ஆனால் இயேசு பாலன் அவரிடம் வந்தபோது தன் சொந்த வீட்டைவிட்டு பெத்லேகேமுக்குச் சென்று மாட்டுத் தொழுவத்தில் தங்க வேண்டியிருந்தது. பின் ஏரோது மன்னனுக்கு பயந்து ஏழு ஆண்டுகள் பரதேசியாய் ஓடி தாயையும், மகனையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. பனிரெண்டாம் வயதில் தாயையும், தந்தையையும் விட்டு அறிவிலி போதகர்களிடம் வேதம் போதித்ததால் காணாமல் சென்றபோது மிகவும் கவலை அடைந்தார். அவர் இயேசு பாலனுக்கு தந்தையாக இருந்ததால் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. நீதிமான்களை இறைவன் அதிகம் சோதிப்பார். மரியன்னைக்கும் இயேசு பாலனுக்கும் அதிகமாக முன்மாதிரி செய்ய வேண்டியிருந்தது. அவர் ஏரோது மன்னனுக்கு பயந்து வீட்டை விட்டுச் சென்றபோது இவர்களுக்கு உணவு மற்றும் அடைக்கலம் அளிக்கவே அவர் பெரிதும் துன்பமுற்றார். அவை வானதுதர்களால் மட்டுமே உணரமுடிந்தது.

இதன்மூலம் நாம் அறிய வேண்டியது எத்தகைய சூழ்நிலையிலும் புனித சூசையப்பர் இயேசு பாலனிடம் அளவிட முடியாத அன்புடன் நடந்து கொண்டார். நாமும் நம்மை மீட்க இயேசு கிறிஸ்து வறுமையிலும் புனித சூசையப்பரோடு தச்சு வேலையிலும் வாழ்ந்து, பாடுபட்டு சிலுவையில் மரித்தார் என்பதால் நாம் அவரை அதிகமாக அன்பு செய்ய வேண்டும். புனித பவுல் இயேசுவை நேசிக்காதவன் சபிக்கப்பட்டவன் என்று கூறுகிறார். எனவே, நாம் சாவான பாவத்தின் சந்தர்ப்பங்களை விலக்கி சாபத்திலிருந்து விடுபட்டு அவரை அதிகமாக நேசிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறவன் சிலுவையின்மீது அதிக விருப்பு கொண்டு அதனை சுமக்க தயாராய் இருக்க வேண்டும். சிலுவையினால் நித்திய வாழ்வு உண்டு, மீட்பு உண்டு, பாவங்களை வெற்றிகொள்ள தைரியம் உண்டு, ஆன்ம பலமும் முடிவில்லா இன்பமும் உண்டு. சிலுவையால் மனதுக்கு மகிழ்ச்சியும், தூய்மையும் கிடைக்கும். எனவே, நம்முடைய சிலுவையாகிய துன்பங்களை சுமந்து அவர் பின்னே செல்வோம், நித்திய வாழ்வை அடைவோம்.

புனித சூசையப்பர் இறைச்சித்தத்திற்காக துன்பங்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டதுபோல் நாமும் நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்வோம். நமது முன்மாதிரியான வாழ்விலிருந்து பாவிகளையும் பிறரையும் இறைவன் அன்பில் பண்பில் இழுத்து வருவோம். அப்படி நாம் முயற்சி செய்வதே இறைவனுக்கு விருப்பமான செயல் என்பதறிவோம்.

புதுமை

பிரான்ஸ் நாட்டில் மொன் மொஹான்சி என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு சகல செல்வங்களும் இருந்ததால் அகங்காரம் கொண்டு அரசரின் முதல்மந்திரிக்கு எதிராக கலகம் உண்டாக்கி போர் செய்தார். ஆனால் பொரில் தோல்வியடைந்து கலகம் உண்டாக்கியதற்காக மரண தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவரது மனைவி அவருக்கு பெரிய கல்லறை கட்டுவித்து தான புனித பிரான்சீஸ் சலேசியூஸ் தோற்றுவித்த கன்னியர் இல்லத்தில் சேர்ந்தார். அவர் இதற்குமுன் சகல உலக செல்வங்களை அனுபவித்தாலும் அவர் முற்றும் துறந்து புனித சூசையப்பரை நன்மாதிரியாய் கொண்டு ஏழ்மையோடு, கீழ்ப்பழந்து இல்லத்தின் கட்டுப்பாடுகளுக்கேற்ப எல்லா வேலைகளையும் செய்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தார். புனித சூசையப்பரின் புண்ணியங்களை தானும் கடைப்பிடித்து வந்ததால் சில ஆண்டுகளுக்குப் பின் அவர் கன்னியர் இல்லத்தின் தலைவியானார். அப்போது அவருக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு புனித சூசையப்பரின் புகழை பரப்பினார்.

இந்த சூழ்நிலையில் அப்பெண்மணிக்கு ஒரு கால் நடக்க முடியாமல் போனது. எந்த மருந்தும், மருத்துவரும் குணப்படுத்த இயலவில்லை.  எனவே கன்னியர் இல்ல ஒழுங்குப்படி நோயின் நிமித்தம் இவருக்கு ஒழுங்குகள் கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. உடனே அவள் புனித சூசையப்பருக்கு நவநாள் செய்ய தொடங்கினாள். நவநாள் தொடங்கிய நான்காம் நாளன்று இரு கன்னியர் துணையோடு திருப்பலிக்கு சென்றபோது தனது கால் வலி அற்புதமாய் நீங்கி குணமடைந்தது. திருப்பலி முடிந்ததும் யாருடைய துணையும் இன்றி நடமாடிக் கொண்டிருந்தாள். அவளும் கன்னியர்களும் இந்த புதுமை புனித சூசையப்பரால் நடைபெற்றது என்பதை உணர்ந்து அவருக்கு பீடம் கட்டி அவரை வணங்கி அவரது புகழை பரப்பி நல் மரணத்தை அடைந்தாள்.

நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கெல்லாம் புனித சூசையப்பர் ஆதரவாய் இருப்பார். நாம் புண்ணிய வழியில் நடக்க உதவுவார் என்பதை நம்பி அவரிடம் அதிக பக்தியாய் இருப்போம். (3 பர, அரு, பிதா)

செபம்

இயேசு பாலனையும், அன்னை கன்னிமரியையும் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்த புனித சூசையப்பரே! உம்மை வணங்குகிறோம். பூவுலக மக்கள் அனைவரும் நன்றியோடு உம்மை வணங்குகிறார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து வான் வீட்டை அடையச் செய்ய அவர்களை ஆசீர்வதித்தருளும். உமது பக்தர்களான நாங்கள் அனைவரும் எங்களுக்கு வரும் துன்ப துயரங்களை பொறுமையோடு சகித்துக்கொள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இயேசுகிறிஸ்துவை முழுமனதோடு நேசித்த புனித சூசையப்பரே!எங்களுக்கு இறையன்பு வர செய்தருளும். மிகவும் துன்ப துயரங்களோடு இயேசுநாதரை வளர்த்த புனித சூசையப்பரே நாங்கள் பொறுமையோடு துன்பங்களை சகிக்க உதவிசெய்யும். இயேசுநாதருக்காக அதிக பிரயாசைப்பட்ட புனித சூசையப்பரே, நாங்கள் அவருக்கு மட்டுமே சேவை செய்ய உதவி செய்யும்.

செய்ய வேண்டிய நற்செயல்

ஒரு ஏழை குடும்பத்திற்கு நம்மால் இயன்ற அளவு உதவுதல் வேண்டும்.