அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 10

புனித சூசையப்பர் குழந்தை இயேசு பிறந்த 8-ஆம் நாள் இயேசு என பெயர் சூட்டியதை தியானிப்போம்.

தியானம்.

இயேசு பிறந்த எட்டாம் நாள் அக்கால வழக்கப்படி திருச்சடங்கு நிறைவேற்றி "இயேசு' என பெயரிடப்பட்டது. இது ஜென்மப் பாவத்தைப் போக்குவதற்காக நிறைவேற்றப்படும் சடங்காக கருதப்பட்டது. இத்திருச்சடங்கில் சிறுகுழந்தையின் உடலில் விருத்தசேதனப் படுத்தி, பின்னர் மருந்திடுவர். குழந்தைகள் அப்போது அழுவதுண்டு. புனித சூசையப்பரும் அக்கால வழக்கப்படி அருட்சாதனங்களை இயேசுவுக்கு அளிக்கசெய்தார். புனித சூசையப்பர் எல்லாக் கடமைகளையும் சரிவர நிறைவேற்றிவந்தார். இயேசு பாலனிடமிருந்து வந்த இரத்தத்தினைக் கண்டு புனித சூசையப்பரும் மரியன்னையும் வேதனையடைந்து, சிந்திய இரத்தத்தினை இறைவனுக்கு காணிக்கையாக்கி இயேசு என்ற திருப்பெயரை உடையவர் தங்களைப் படைத்த இறைவனின் திருக்குமாரன் என்பதை அறிந்து வானதுதர்கள் மகிழ, பசாசுகள் பயந்து பணிந்து வணங்கியது. மேலும் இயேசு என்ற திருநாமம் நறுமணத் தைலத்தைப்போல் இருக்கிறது வேத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு என்னும் பெயர் நறுமணத் தைலத்தைப்போல் இருப்பதால் ஞான ஒளிக்கும், ஞான உணவிற்கும் உதவும் என புனித பெர்நர்தூஸ் கூறியுள்ளார். இப்பெயர் அக இருள், பாவ இருளை அகற்றுவதோடு பக்தியும் விசுவாசத்தோடும் கூறுகிறவர்களுக்கு ஞானப்பலன் கிடைக்கும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் பசாசின் சோதனை வழியாக வரும் பாவ இருளில் மூழ்காதபடியும், நமக்கு வரும் துன்ப துயரங்களை பொறுமையோடு தாங்கிக் கொள்ளவும் இப்பெயர் போதும். இந்த திருநாமத்தை அறிக்கையிட்டு நாம் கூறுவதால் மோட்சத்திற்குச் செல்லலாம். வேறு எவ்வழியிலும் வான்விடு செல்ல இயலாது என பேதுரு கூறியுள்ளார். மனதில் இயேசு என்னும் பெயரை உச்சரித்தால் பரிபூரண பலன் உண்டு. ஒவ்வொருதடவை கூறும்போதும் பலன் உண்டு என்பதை அறிவோம்.

புதுமை

பாரீஸ் என்னும் நகரத்தில் ஒருவன் பல வருடங்களாக தீய வழியில் சென்று கொண்டிருந்தான். துறவியாக இருந்த இம்மனிதனின் சகோதரன் இவருடைய மரணத்தையும், இறைவன் அளிக்க இருக்கிற தீர்ப்பையும், அதனால் வரக்கூடிய தீய பலன்களையும் அமுக்க, தன் சகோதரனுக்கு விவரித்து வந்தார். இவ்வுலகில் தீயோர்க்கு வருகிற வியாதி, துன்ப துயரங்கள், அவமரியாதை, அவமானம இவற்றினை எடுத்துக்கூறியும் நாளுக்கு நாள் பாவச்சேற்றினில் அமிழ்ந்து கொண்டே இருந்தான். இந்த துறவியோ தனது முயற்சியில் பலனற்றும் போவதை கண்டு பெரிதும் மனம் வருந்தி புனித சூசையப்பரின் உதவியை நாடினார். இந்த கொடியவன் மனம் திருந்த ஒன்பது நாட்கள் திருப்பலி புனித சூசையப்பரைக் குறித்து நிறைவேற்றினார். பின்னர் அடுத்த ஒன்பது நாட்கள் சில புண்ணியவான்களை நற்கருணை உட்கொள்ள செய்தார். அப்போது அத்தீயவன் தொழு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் அவதியுற்றபோது மனந்திரும்பி இறைவன் தன் பாவங்களை மன்னிக்கும்படி ஒப்புரவு அருட்சாதனத்தைப்பெற்று அவன் மனந்திரும்பியதும் புனித சூசையப்பரின் தயவால் நோய் குணமானது. பின்னர் பக்தி முயற்சிகளிலே ஈடுபட்டு நன்மரணம் அடைந்தான். ஒரு புண்ணியவதி ஒரு தடவை தவறி மோக பாவம் செய்தாள். அதனை ஒப்புரவில்கூற வெட்கப்பட்டு மறைத்து வந்தாள். அதனால் மனம் வருந்தி பயத்தோடு வாழ்க்கை நடத்தி வந்தாள். புனித சூசையப்பரிடம் தனக்கு திடமான மனதும தைரியமும் கிடைக்கப்பெற்று நல்ல ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதற்காக செபித்தாள். புனித சூசையப்பரின் அருளால் ஒப்புரவில் தன் பாவங்களை மறைக்காது வெளிப்படுத்தினாள். அவளுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைத்தது. நாம் ஒப்புரவு அருட்சாதனத்தினை பெறும்போது வெளிப்படையான நல்ல இறைவனுக்கு ஏற்புடைய விதத்தில் பாவங்களை வெளியிட புனித சூசையப்பரிடம் வேண்டுவோம். (3 பர, அரு பிதா)

செபம்

இயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு இயேசு எனப் பெயரிட்ட புனித சூசையப்பரே! உம்மை பணிவன்புடன் வணங்கி புகழ்கின்றோம். இயேசு என்னும் நற்பெயரை மூவுலகத்தாரும் தாழ்ச்சியுடன் வணங்குவார்களாக! இப்பெயரால் அசுத்த ஆவிகளின் சக்தி முறியடிக்கப்படவும், திருச்சபையின் எதிரிகள் மறையவும், பிற மதத்தவர் மனந்திரும்பவும் செய்வீராக! உமது பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் இத்திருப்பெயரை எக்காலமும், வாழ்நாளிலும், மரண வேளையிலும் உச்சரிக்க உதவும்படி உம்மை நோக்கி பணிவாக செபிக்கிறோம்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

இயேசு என்ற திருப்பெயருக்கு எக்காலமும் புகழ் உண்டாகுக . இயேசு என்ற திருப்பெயரை கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்குவோம். இயேசு என்ற திருப்பெயருக்கு அசுத்த ஆவிகள் பயந்து ஓடக்கடவதாகும்.

செய்ய வேண்டிய நற்செயல்

பிறமதத்தவர்கள் மனந்திரும்ப இயேசுநாதரிடம் செபிப்பது.