ஏக திருச்சபை

88. (46) சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.


1. இக்காலத்தில் கிறீஸ்து வேதம், அல்லது கிறீஸ்து சபை, அல்லது திருச்சபை எனப்பட்ட சபைகள் அநேகம் உண்டா? 

உண்டு.

(1) ஆதித்துவக்கத்தில் இருந்த உரோமன் கத்தோலிக்க திருச்சபையென்றும்,

(2) கிரேக்க திருச்சபையென்றும்,

(3) கீழ்த்திசையில் பல வகுப்புகளாய் உண்டான திருச்சபைகளென்றும்,

(4) பிற்காலத்தில் உண்டான 300-க்கும் அதிகமான புரோட்டஸ்டாண்டு சபைகளென்றும் இப்படிப் பல உண்டு.


2. சேசுநாதர் அநேக திருச்சபைகளை ஸ்தாபித்தாரா? 

இல்லை. அவர் அர்ச். இராயப்பரை நோக்கி: “நீ கல்லாயிருக்கிறாய்.  இந்தக் கல்லின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” என்றார் (மத். 16:18).  சேசுநாதர் பல சபைகளை ஸ்தாபிக்க மனதாயிருந்திருந்தால் என் சபையை என்று சொல்லாமல் என் சபைகளை என்று சொல்லியிருப்பார்.

“ஒரே ஆண்டவரும், ஒரே விசுவாசமும்... சகலருக்கும் தேவனும், பிதாவுமானவர் ஒருவரே” (எபே. 4:5,6).


3. சேசுநாதர் தாம் ஒரே ஒரு திருச்சபையை உண்டாக்கி யிருந்தாலும் நாளாவட்டத்தில் கிறீஸ்துவ சபைகளென்று தங்களைத் தானே அழைத்துக் கொள்ளும் பற்பல கள்ளச் சபைகள் உண்டாகுமென்று நமக்கு அறிவிக்கவில்லையா? 

சேசுநாதர் இவ்வுலகத்தில் இருந்தபோது கள்ளப் போதகர்கள் எழும்பி, தமது பேராலே போதித்து, விசுவாசிகளை வஞ்சிக்கும்படி பிரயாசைப்படுவார்களென்று முன்னதாகவே அறிவித்திருந்தார். அவர் பிரசங்கித்து வரும்போது தமது சீஷர்களை நோக்கி: “ஒருவனும் உங்களை மயக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் என் நாமத்தைத் தரித்துக் கொண்டு வந்து... அநேகரை மயக்குவார்கள்” (மத். 24:4,5) 

“அந்நாளிலே (அதாவது நடுத்தீர்வை நாளில்) அநேகர் என்னை நோக்கி: “ஆண்டவரே!  ஆண்டவரே!  உமது நாமத்தால் தீர்க்கதரிசனம் சொன்னோம், உமது நாமத்தினால் பேய்களை ஓட்டினோம், உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களையும் செய்தோமல்லோ?” என்பார்கள்.  அப்போது நான் அவர்களை நோக்கி: “உங்களை ஒரு போதும் அறியேன் என்று பிரசித்தமாய்ச் சொல்லுவேன்” என்றார் (மத். 7:22,23).

இந்தத் தேவ வாக்கியங்களால் பல கள்ளப் போதகர்களும், கள்ளச் சபைகளும் காலாவட்டத்தில் உண்டாகுமென்று சேசுநாதர் நமக்கு நன்றாய் அறிவித்திருக்கிறார்.