87. (45) மற்ற அப்போஸ்தலர்களுக்கு பதிலாளியாயிருக் கிறவர்கள் யார்?
மேற்றிராணிமார்கள்.
1. எப்படி மேற்றிராணிமார்கள் மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறார்கள்?
வேதம் போதிக்கவும், திருச்சபையை ஆளவும் அப்போஸ்தலர்களுக்கு சேசுநாதர்சுவாமியால் கொடுக்கப்பட்ட அதிகாரம், மேற்றிராணிமார்களுக்கு இருக்கிறபடியால், அவர்கள் அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறார்கள்.
2. மேற்றிராணிமார்களை நியமிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
அர்ச். பாப்பானவருக்கு மாத்திரம் இப்பேர்ப்பட்ட அதிகாரம் உண்டு. மேற்றிராசனம் எனப்படும் திருச்சபையின் ஒரு பாகத்தை ஆண்டு நடத்தும்படி அவர்தான் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார்.
3. திருச்சபையை நடத்துவதற்கு மேற்றிராணிமார்களுக்கு இருக்கிற உரிமை எப்பேர்ப்பட்டது?
அர்ச். பாப்பானவர் உலகத்துக்கெல்லாம் போதித்து, திருச்சபையை நடத்த உரிமையும், அதிகாரமும் கொண்டிருக்கும் போது, மேற்றிராணிமார்களோ தங்களுக்கு அர்ச். பாப்பானவரால் குறிக்கப்பட்ட மேற்றிராசனப் பகுதியில் மாத்திரம் அதிகாரம் செலுத்தவும், உபதேசிக்கவும் உரிமை கொண்டிருக்கிறார்கள்.
4. மேற்றிராணிமார்களுக்கு இருக்கிற விசேஷ உரிமையும் அதிகாரமும் எது?
(1) மேற்றிராணியார் தமக்குக் குறிக்கப்பட்ட மேற்றிராசனத்திலுள்ள குருக்களுக்கும், விசுவாசிகளுக்கும் தலைவராயிருந்து, சகலத்திலும் பிரதம ஸ்தானத்தை வகிக்க அவருக்கே உரிமை உண்டு.
(2) தமது விசாரணையைச் சேர்ந்தவர்களுக்குச் சட்ட திட்டங்களை ஏற்படுத்தவும், நீதி செலுத்தவும், குற்றவாளி களைத் தண்டிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. ஆகையினாலே ஒரு மேற்றிராசனத்திலுள்ள குருக்கள் தங்கள் மேற்றிராணியாருடைய உத்தரவின்றிப் பிரசங்கிக்கவும், எந்தத் தேவத்திரவிய அநுமானத்தையும் நிறைவேற்றவும் கூடாது.