சம்மனசுகள் - பொது விளக்கம்

1. சம்மனசுகள் என்றால் யார்?

புத்தி மனதுள்ள சுத்த அரூபியான ஞான வஸ்துவே சம்மனசு என்னப்படும்.


2. சம்மனசுக்களை வேறு எவ்விதம் அழைக்கிறோம்?

தேவ தூதர்கள் என்று அழைக்கிறோம்.


3. சம்மனசுக்கள் உண்டென்று நாம் எப்படி அறிவோம்?

பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சம்மனசுகள் உண்டென்று சந்தேகமறக் காட்டுகின்றன.


4. பழைய ஏற்பாட்டில் சம்மனசுக்கள் உண்டென்று காட்டும் சில உதாரணங்களைச் சொல்லு.

(1) சர்வேசுரன் ஆதித்தாய் தகப்பனைச் சிங்காரத் தோப்பினின்று துரத்திவிட்டபின்பு, அவர்கள் திரும்பி அவ்விடத் திற்கு வராதபடி தேவதூதர்களை அதின் வாசற்படியில் காவலாக வைத்தார் (ஆதி. 3:24).

(2) ஆபிரகாம் வாளை எடுத்துத் தன் மகனைப் பலியிட எத்தனித்திருக்கையில் ஒரு தேவதூதன் வந்து அவரைத் தடுத்தார் (ஆதி. 22:10,11).

(3) இரு சம்மனசுக்கள் வந்து லோத் என்பவரைச் சோதோமிலிருந்து இரட்சித்தார்கள் (ஆதி. 19:12).

(4) தோபியாஸ் என்பவருடைய குமாரனுக்கு வழித் துணையாக இரஃபாயேல் என்னும் ஒரு சம்மனசானவர் சர்வேசுர னால் அனுப்பப்பட்டார் (தோபி. 5:5,6).

(5) தானியேல் என்பவர் சிங்கத்தின் குகையிலிருக்கும் போது, சர்வேசுரனால் அனுப்பப்பட்ட ஒரு சம்மனசு வந்து அவரைக் காப்பாற்றினார் (தானி. 6:12).


5. புதிய ஏற்பாட்டில் சம்மனசுக்கள் உண்டென்று காட்டும் சில உதாரணங்களைச் சொல்லு.

(1) சக்கரியாஸ் பலிபீடத்தில் தூபம் காட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு தேவதூதன் அவருக்குத் தரிசனையானார் (லூக். 1:11).

(2) கபிரியேல் சம்மனசானவர் தேவமாதாவுக்குத் தரிசனையாகி, அவர்களிடத்தில் சேசுநாதர் அற்புதமாய்ப் பிறக்கப்போகிற தேவ இரகசியத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் (லூக்.1:26).

(3) ஏரோது குழந்தைகளைக் கொல்ல ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் ஒரு தேவதூதன் அர்ச். சூசையப்பருக்குத் தோன்றினார் (மத். 2:13).

(4) சேசுநாதர் சுவாமி வனாந்தரத்தில் பசாசின் சோதனையைத் தள்ளிவிட்ட பின், சம்மனசுக்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள் (மத். 4:11).

(5) சேசுநாதர் சுவாமி பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்து அவஸ்தைப்படும்போது, ஒரு சம்மனசு தோன்றி அவரைத் தேற்றினார் (லூக். 22:43).

(6) மரிய மதலேனம்மாள் சேசுநாதரின் கல்லறைக்குள் பிரவேசித்த போது, அங்கு இரு தேவதூதர்களைக் கண்டாள் (அரு. 20:12).

(7) அப்போஸ்தலர்களுடைய சங்கிலியை உடைத்து சிறைச்சாலையினின்று அவர்களை இரட்சித்தவர் ஒரு சம்மனசு தான் (அப். நட. 5:19).


6. சர்வேசுரன் சம்மனசுக்களை எப்பொழுது உண்டாக்கினார்?

சர்வேசுரன் அவர்களை எப்பொழுது உண்டாக்கினாரென்று வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.  அவர்கள் மனிதர்களுக்கு முன் உண்டாக்கப்பட்டார்கள் என்பதை மாத்திரம் அறிவோம்.


7. சம்மனசுக்களை நம் சரீரக் கண்ணாலே காணவும், கையாலே தொடவும் முடியுமா?

அவர்கள் சரீரமில்லாமலும், ரூபமில்லாமலும், வெறும் அரூபிகளாயிருக்கிறபடியினாலே, அவர்களைக் காணவும் தொட வும் முடியாது.


8. சாப்பிடுவதும், தூங்குவதும், இளைப்பாறுவதும் அவர் களுக்குத் தேவையா?

மேற்சொன்னபடி அவர்கள் சரீரமில்லாத அரூபிகளா யிருக்கிறபடியினாலே, நமது சரீரத்துக்கு வேண்டிய காரியங்கள் அவர்களுக்குத் தேவையில்லை.


9. அவர்களுக்கு மனுஷனைப்போல், ஆசாபாசத்தின் மயக்கமும், ஐம்புலன்களுக்கடுத்த நன்மைகளின் மட்டில் பற்றுதலும் உண்டா?

இல்லை.  ஏனென்றால், அவர்களுக்குச் சரீரமில்லாத படியால், ஆசாபாசத்தின் மயக்கமும் கண்டிப்புள்ள வஸ்துக்களின் மட்டில் பற்றுதலும் இருக்க முடியாது.


10.  சம்மனசுக்கள் இறந்து போவார்களா? 

பகுக்கக் கூடிய பாகங்கள் அவர்களுக்குக் கிடையாததினால் அழிவும், சாவும் அவர்களை அண்டாது.


11. சம்மனசுக்கள் தவிர வேறே அரூபியான வஸ்துக்கள் உண்டோ?

சர்வேசுரனும், நமது ஆத்துமமும் அரூபியான வஸ்துக்களாம், ஆனால் சர்வேசுரனும், சம்மனசுக்களும் சுத்த அரூபியான வஸ்துக்களாயிருக்க நமது ஆத்துமமோ சுத்த அரூபியல்ல.


12. சம்மனசுகள் சர்வேசுரனைப் போல் சுத்த அரூபிகளானால் அவர்கள் சர்வேசுரனுக்குச் சரிசமானமானவர்களா யிருக்கிறார்களா?

இல்லை.  சர்வேசுரன் சம்மனசுக்களைவிட அளவில்லாத உன்னத அரூபிகத்தைக் கொண்டிருக்கிறார்.


13. சம்மனசுக்கள் நமது ஆத்துமத்தைப் போல் ஒரு சரீரத்தோடு சேர்ந்து ஒரே சுபாவமாய் ஒன்றிக்க முடியுமா?

சம்மனசுகள் சுத்த அரூபியாயிருப்பதால், மனு­ னுடைய ஆத்துமத்தைப் போல் ஒரு சரீரத்தோடு சேர்ந்து, ஒரே சுபாவமாயிருக்க முடியாது.


14. வேதாகமத்தில் சம்மனசுகள் அவ்வப்போது சரீரத்தோடு மனிதருக்குக் காணப்பட்டார்களென்று எழுதியிருக்கின்றது. இது இப்படி யிருக்க சம்மனசுகள் ஒரு சரீரத்தோடு ஒன்றித்திருக்க முடியாதென்று எப்படிச் சொல்லலாம்?

காணக்கூடிய உருவத்தோடு அநேக முறை சம்மனசுகள் மனுஷருக்குத் தோன்றியிருந்தாலும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ கட்டளைகளை நிறைவேற்றும்படியாகவே அவ்வித உருவங் களை மனிதரின் புலன்களில் தோற்றுவித்தார்களேயயாழிய, அவர்கள் சுபாவத்துக்கு அந்த உருவங்கள் மெய்யாகவே உரியவை களாயிருந்ததில்லை. அத்தாட்சியாக: “உங்களுடன் நான் புசிப்பதாகவும், குடிப்பதாகவும் காணப்பட்டிருந்தேன்.  ஆயினும் நான் மனிதருக்குப் புலப்படாத அன்னத்தையும், பானத்தையும் அன்றோ உபயோகித்துக் கொள்ளுகிறேன்” என்று இரஃபாயேல் சம்மனசானவர் தோபியாசுக்கு அறிவித்தார் (தோபி. 12:19).


15. சுத்த அரூபிகளாயிருக்கையில் சம்மனசுகளை மனித உருவத்தோடு வரைவதேன்?

மேற்சொன்னபடி அவர்கள் மனிதர்களைப் போல் தோன்றினபடியால், அவ்வுருவத்தோடு அவர்களை வரைவது வழக்கமாம்.


16.சிறு குழந்தையின் முகத்தோடு அவர்களைக் காட்டுவதேன்? 

அவர்கள் பரிசுத்தமாயும், நித்தியத்திற்கும் அழகும் பலமும் குன்றாமலிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்தும் படியாகவே.


17. சம்மனசுகளுக்கு இறக்கை உண்டோ?

சம்மனசுக்கள் அரூபியாயிருப்பதால், அவர்களுக்குச் சரீரமுமில்லை, இறக்கையுமில்லை.


18. படத்தில் சம்மனசுகள் இறக்கையுடன் சித்தரிக்கப்பட்டிருப் பதற்குக் காரணமென்ன?

இறக்கையுள்ள பறவைகள் வெகு சீக்கிரமாய்ப் பறப்பது போல் சம்மனசுகளும் சர்வேசுரனுடைய கட்டளையை அனுசரிப்பதில் அவ்வளவு சுறுசுறுப்பாய்க் கீழ்ப்படிகிறார்கள் என்று காட்டும்படி இறக்கையுடன் சம்மனசுகள் படங்களிலும் சுரூபங்களிலும் காட்டப்பட்டிருக்கிறார்கள்.


19. சர்வேசுரன் சம்மனசுகளை எந்த அந்தஸ்திலே உண்டாக்கினார்? 

நீதியும் பரிசுத்தமுமான அந்தஸ்தில் அவர்களைச் சிருஷ்டித்தார்.


20. சர்வேசுரன் அவர்களுக்குக் கொடுத்த விசேஷ வரம் என்ன?

தேவ இஷ்டப்பிரசாதமாம்.


21. சர்வேசுரன் அவர்களுக்குக் கொடுத்த இலட்சணங்கள் எவை?

அரூபியான சகல சிருஷ்டிகளைப் போல் சம்மனசுகளுக்கும் சர்வேசுரன் புத்தி, அறிவு, மனது, சுயாதீனம் முதலிய இலட்சணங்களைக் கொடுத்தார்.  ஆகையினாலே ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கவும், விரும்பவும், தங்கள் எண்ணத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும் அவர்களுக்குச் சக்தியுண்டு.


22. சம்மனசுக்களுக்குரிய சத்துவங்களும், மனிதருக்குரிய  சத்துவங்களும் சரியொத்தவையா யிருக்கின்றனவா?

மனிதர்களின் சத்துவங்களை விட, சம்மனசுகளுடைய சத்துவங்கள் அதிக உத்தமமானவைகளே.  சகல மனிதருக்கும் உள்ள புத்தி, அறிவு, ஞானம், புத்தி கூர்மை, பலம், மனதைக் காட்டிலும் ஒவ்வொரு சம்மனசுக்கும் அதிகப் புத்தி கூர்மையும், மனதும், ஞானமும், பலமும் உண்டு.


23. சம்மனசுகளுடைய புத்தி, அறிவு மனிதருடைய அறிவை விட எப்படி உத்தமமாயிருக்கின்றது?

மனிதர் யோசனையினாலும், நியாய ஆதாரங்களைக் கொண்டும் ஒரு சத்தியத்தை அறிந்து கொள்ளுகிறார்கள். மேலும் அதிலிருந்து மற்றொரு சத்தியத்தைக் கிரகித்துக் கொள்ளுவார்கள்.  சம்மனசுகளோவென்றால் அப்படியல்ல. அவர்கள் தாங்கள் அறிய வேண்டிய சத்தியங்களையெல்லாம் முதல் பார்வையிலேயே எவ்வித பிரயாசையுமின்றி அறிந்து கண்டுபிடிக்கிறார்கள்.


24. சம்மனசுகளுடைய மனது மனிதருடைய மனதை விட எப்படி உத்தமமாயிருக்கிறது?

அவர்களுக்குச் சரீரமில்லாதபடியால், மனிதரைப் போல் ஆசாபாசத்தின் மயக்கமும், ஐம்புலன்களுக்கடுத்த நன்மைகளின் மட்டில் பற்றுதலும் அவர்களுக்கில்லை என்று முன் சொல் லப்பட்டிருக்கிறது.  ஆதலால் மனு­ரைப் போல், ஆசாபாசத்தால் ஏய்க்கப்பட்டு, பொய்யை மெய்யாக எண்ணி, தீமையை நன்மை யாக விரும்பாமல், உண்மையை உண்மையாகவும், நன்மையை நன்மையாகவும் அறிந்து கைப்பற்றுகிறார்கள்.


25. அவர்களுக்குச் சுயாதீனமுள்ள மனதுண்டோ?

புத்தியுள்ள சகல சிருஷ்டிகளுக்கும் இருப்பது போல், அவர்களுக்கும் சுயாதீனமுள்ள மனது உண்டு. ஆதலால் வெகுமானம் பெறவும், தண்டனையடையவும், மோட்சத்தைக் கைப்பற்றவும், நரகத்தில் விழவும் கூடியவர்களாயிருந்தார்கள்.


26. சம்மனசுகளுக்குப் பேச்சு இல்லாததால் அவர்கள் தங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்கு எப்படி வெளிப்படுத்தக் கூடும்?

அவர்கள் தங்கள் எண்ணங்கள் யாவையும், முழுதும் அரூபிக்குரியவிதமாய் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தக்கூடும். அவைகளை அறிவிக்கும்படி, வார்த்தைகள் உபயோகிப்பது அவசியமில்லை.  தங்களுடைய மனதைக் கொண்டே, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.  ஓர் சம்மனசு தன் நினைவுகளையும், விருப்பங்களையும், மற்ற சம்மனசுகளுக்கு அறிவிக்கும்படியாக அவர்களுக்கு அவைகளை வெளிப்படுத்த விரும்புவதே போதும்.  ஆனால் அவர் தெரிவிக்க வேண்டுமென்று விரும்புகிற காரியம் தவிர, மற்றெதுவும் மற்ற சம்மனசுகள் அறிய முடியாது.


27. சம்மனசுகளின் வல்லமை எத்தன்மையது?

மனிதர்கள் பலவீனராயிருக்கிறார்கள். இவ்வுலகில் உள்ள சகல சாதி சனங்களின் வல்லமையயல்லாம் ஒன்றுசேர்த்து ஒரே ஒரு சம்மனசின் வல்லமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சம்மனசின் வல்லமையே மேலானதாயிருக்கிறது.  ஆனாலும் சர்வேசுரனுடைய உத்தரவின்றி, அவர்கள் நமது பூலோகத்தில் யாதொன்றும் செய்ய முடியாது.


28. சம்மனசுகளின் சீவியம் எதில் அடங்கியிருக்கிறது?

தங்கள் சுபாவ முறைப்படி இடைவிடாமல் புத்தி மனதுக்குரிய செயல்கள் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது.


29. சர்வேசுரன் எத்தனை சம்மனசுக்களை உண்டாக்கினார்?

கணக்கில் அடங்காத சம்மனசுகளை உண்டாக்கினார். அவர்கள் தொகை எவ்வளவென்று தெரியாது.  “ஆயிரம் விசை ஆயிரம் சம்மனசுகள் சர்வேசுரனுக்கு சேவிப்பார்கள், கோடானு கோடிப் பேர் அவருக்கு முன்பாக நிற்பார்கள்” என்று தீர்க்கதரிசியான தானியேல் என்பவர் எழுதியிருக்கிறார் (தானி.7:10).  உலகின் துவக்கமுதல் அதன் முடிவு வரையில் பிறக்கக்கூடிய மனிதருடைய முழுத் தொகையைப் பார்க்கிலும், சம்மனசுகளுடைய தொகை பெரிதானதென்று சில வேதசாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.


30. சம்மனசுகளுக்குள்ளே ஒழுங்கு வரிசைகள் உண்டா?

சம்மனசுகளின் பெரிய கூட்டத்தில் மூன்று வகுப்பாய்ப் பிரிக்கப்பட்ட ஒன்பது விலாச சபைகளிருக்கின்றன.


31. அந்த ஒன்பது விலாசத்தையும் சொல்லு.

(1) பத்திசுவாலகர், 
(2) ஞானாதிக்கர், 
(3) பத்திராசனர் 

ஆகிய இவர்கள்தான் எல்லாத்துக்கும் மேலான வகுப்பினர். இவர்களுக்குப் பின் 

(4) நாதகிருத்தியர், 
(5) சத்துவகர், 
(6) பிராதமிகர் 

இரண்டாம் வகுப்பில் அடங்கியிருக்கிறார்கள்; 

(7) பலவத்தர்,
(8) அதிதூதர், 
(9) தூதர் 

இவர்கள்தான் கடைசி வகுப்பினர்.


32. சம்மனசுகள் ஒன்பது விலாசமாகப் பிரிக்கப்பட்டிருக்க, அவர்களுடைய சுபாவத்தில் வித்தியாசம் உண்டா?

யாதொரு வித்தியாசமும் இல்லை.  ஒவ்வொரு சம்மனசானவரும் அதே தன்மையான சுபாவத்தைக் கொண்டிருக்கிறார்.  அவர்களுடைய வெவ்வேறான பெயர் ஒவ்வொரு வகுப்பினருக் குரிய விசேஷ வேலையைக் குறிக்கிறதேயயாழிய சுபாவத்தில் வித்தியாசம் ஒன்றும் குறிக்கிறதில்லை.


33. சர்வேசுரன் சம்மனசுகளைப் படைத்த சமயத்தில் அவர்களுக்கெல்லாம் பெரியவராயிருந்த சம்மனசின் பெயர் என்ன?

லூசிபேர்; அதாவது ஜோதி, அல்லது பிரகாசம் உடையவன் என்று அர்த்தமாகும்.


34. சர்வேசுரன் சம்மனசுகளை எதற்காக உண்டாக்கினார்?

அவர்கள் தம்மை அறிந்து, சிநேகித்து, சேவிக்கவும், அதனால் மோட்சத்தில் நித்திய மகிமையையும், பாக்கியத்தையும் அடையவும் அவைகளை உண்டாக்கினார்.


35. சர்வேசுரன் சம்மனசுகளைப் படைத்த மாத்திரத்திலே அவர்களை மோட்சத்தில் சேர்த்துக் கொண்டாரா?

சர்வேசுரன் சம்மனசுகளை உண்டாக்கினபின் அவர் களை மோட்சத்தில் சேர்த்துக் கொள்ளாமல், அவர்களுடைய பிரமாணிக்கத்தைச் சோதிக்கும்படி அவர்களை ஒரு ஸ்தலத்தில் வைத்தார்.


36. ஏன் சர்வேசுரன் அவர்களைச் சோதிக்கச் சித்தமானார்?

சர்வேசுரன் மோட்ச பாக்கியத்தைச் சும்மா கொடுக்க மாட்டார்.  மனிதர்களும் சரி, சம்மனசுகளும் சரி, எல்லோரும் அதைப் பிரயாசைப்பட்டுச் சம்பாதிக்க வேணுமென்று அவர் சித்தமானார்.


37. சம்மனசுகள் பட்ட சோதனை என்னவென்று நமக்குத் தெரியுமா?

அது நமக்கு நிச்சயமாய்த் தெரியாது.  இதுகாரியத்தில் சில வேதசாஸ்திரிகள் சொல்லுகிறதாவது:  சம்மனசுகள் அதிக மேன்மையை விரும்பித் தேடாமல், சர்வேசுரன் தங்களுக்குக் கொடுத்த அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வேணுமென்று, அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார் என்கிறார்கள். வேறு சிலர்: சர்வேசுரன் இரண்டாமாளாகிய சுதனுடைய மனுஷ அவதாரத்தை அவர்களுக்கு அறிவித்து, சேசுநாதருடைய மனுUகத்தை ஆராதிக்க அவர்களுக்குக் கட்டளையிட்டாரென்று சொல்லுகிறார்கள். இன்னும் வேறே சிலர் தேவமாதாவைத் தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ள வேணுமென்று சர்வேசுரன் அவர்களுக்குக் கற்பித்தாரென்று உத்தேசிக்கிறார்கள்.