அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 20

அர்ச்.சூசையப்பர் தனிப்பட்ட அந்தரங்க வாழ்விற்கு நன்மாதிகையாய் இருக்கிறதை தியானிப்போம் 

தியானம் 

மனிதன் ஆங்காரத்தினாலும் தன்னலத்தினாலும் பிறர் தன்னை புகழ வேண்டுமென்று விரும்புவது ஜென்மப்பாவத்தோடுப் பிறந்த அனைவருக்கும் இருக்கும் மோசமான குணம். இந்த துர்க்குணத்தை போக்கவே சேசு தச்சர் மகனாக பிறக்க விரும்பினதுமல்லாமல்  அர்ச்.சூசையப்பரும் மாமரியன்னையும் தன்னோடு மறைந்த வாழ்வு வாழ வேண்டுமென்று சர்வேசுரன் விரும்பினார். அருஞ்செயல்களை செய்தபோதும்,சேசு  சிலுவையில் உயிர்விட்டபோதும் சர்வேசுரனுக்கு புகழ்ச்சியும் மனிதனுக்கு மீட்பும் கிடைக்க செபித்து வந்தார். அதைப் போல அர்ச்.சூசையப்பரும் தனது வேலையை செய்து, நாளுக்குநாள் புண்ணியம் செய்து பெரிய அர்ச்சியஷ்டவரானார். அவர் தன் அன்றாட அலுவல்களின் இடையே சர்வேசுரனைப் புகழ்ந்து வந்துள்ளார் 

தொடக்க காலத்தில் சர்வேசுரன் ஆபிரகாமைப் பார்த்து, "என்னைப் பின்பற்றினால் உன்னத மனிதனாவாய்" என்று கூறியுள்ளார் மோசேயின் வாழ்க்கையானது கண்ணால் காணமுடியாத சர்வேசுரனை நேரில் காண்பதுபோல் இருந்தது என அர்ச். சின்னப்பர் கூறியுள்ளார் அர்ச்.சின்னப்பரோ தான் செய்யும் தொழிலிலும், செபத்திலும் எல்லா செயலிலும் சர்வேசுரன் முகம் தெரிவதுபோல் நடந்து கொண்டார் 

மாமரியன்னையோ தமது திருமகனது வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்ந்துவந்தார்கள். மாமரி அன்னையின் நற்செயல்களையும், பக்தி, புண்ணியங்களையும் தினமும் காண்கிற சேசு அவற்றினை தம் இதயத்தில் பொக்கிஷமாக வைத்துக்கொண்டார். மனிதர்கள் புகழும்படியாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ சேசு வாழ்ந்ததில்லை. அவர் வெளிவேடங்களை வெறுத்து ஞானம், ஞான முயற்சிகளிலே ஈடுபட்டுவந்தார். நாம் இன்றைய தியானத்தின் மூலம்  அர்ச்.சூசையப்பர் எளிய வாழ்வு வாழ்ந்து பெரிய அர்ச்சியஷ்டவரானதை அறிந்தோம். நாமும் எளிய வாழ்வு வாழ்ந்து தேவச்சித்தத்திற்கு கீழ்ப்படிவோம். 

நமது சர்வேசுரனுக்காக அவமானம், அவப்பெயர் கிடைத்தால் நாம் பொறுமையோடும் நல் எண்ணத்துடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாம் மனிதர்கள் முன்பாக நல்ல செயல்களை செய்யாதபடி எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் வானுலகில் நமக்கு பலன் கிடைக்காது அதனால் நாம் தர்மம் செய்யும்போது பிறருக்குத் தெரியாமல் செய்ய வேண்டும். வலது கை செய்வது இடது கைக்குத் தெரியாமல் இரகசியமாய் உதவும்போது சர்வேசுரன் வானுலகில் சிறந்த பரிசளிப்பார் என சேசுவே கூறியுள்ளார் 

சர்வேசுரன் எங்கும் இருக்கிறார் என்பதை உணர்ந்து எங்கிருந்தாலும் சர்வேசுரனை புகழ வேண்டும். பரிசுத்த திருக்குடும்பம் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்ததை நாமும் கடைப்பிடிப்போம். 

புதுமை 

ஒரு பக்தியுள்ள கன்னியர் ஒருவர் இலவச பள்ளியில் ஏழை சிறுமிகளுக்கு பாடம் கற்பித்து வந்தார். அவர் அர்ச்.சூசையப்பரிடம் பக்தியோடு இருந்ததோடல்லாமல் தன்னுடைய மாணவிகளை பக்தி வழியில் நடக்க அறிவுறுத்தி வந்தார். ஒருவருடத்தில் மார்ச் மாத துவக்கத்தில் சிறுமிகளைப் பார்த்து, “இந்த மாதம்  அர்ச்.சூசையப்பருக்குரியது. இந்த மாதத்தில் பக்தியோடு  அர்ச்.சூசையப்பரிடம் உதவிகளைக் கேட்டால் அதனை தவறாது அளிப்பார். அதனால் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை தனித்தனியே ஒரு சீட்டில் எழுதி மறைத்து வைத்து  அர்ச்.சூசையப்பரின் திருச்சுரூபத்தின் பாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அவ்வாறே சிறுமிகளும் செய்தனர். மாதக் கடைசியில் சிறுமிகள் எழுதியதை எடுத்து வாசித்தார் 

அவர்களில் பத்து வயதான சிறுமியோ தன் தாய் தந்தையரைக் காப்பாற்றவேண்டுமென்றும், மற்றொரு சிறுமி தன் பெற்றோர் சண்டையிடாது அமைதியாக இருக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தனர். இன்னும் ஒரு சிறுமியோ தனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து நன்மரனம் அடைய வேண்டுமென்றும், மிகவும் வறுமையில் வாடிய சிறுமியோ, வறுமையில் வாழ்ந்த அர்ச். சூசையப்பரே நான் வறுமையைத் தாங்கும் வரம் அருளும். என்னுடைய பெற்றோரும் எளியவாழ்வு வாழ்ந்து உமக்கு மகிழ்ச்சியாய் கீழ்ப்படிந்து சேசுவை கண்டுபாவிக்க செய்தருளும் என எழுதியிருந்தாள். இப்படிப்பட்ட செபங்களுக்கு  அர்ச்.சூசையப்பர் இரங்கி அருள்புரிந்திருப்பார் என்பது உண்மையாகும் 

நாம் ஒவ்வொருவரும் நமது நிலைக்கு / தகுதிக்கு மேல் ஆசைப்படாமல், இருப்பதில் மனநிறைவு அடைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம் (1பர, 3அரு பிதா) 

செபம் 

தனிப்பட்ட வாழ்வுக்கு முன்மாதிரிகையான பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். சேசு கிறிஸ்து முப்பதாண்டுகள் மறைந்து வாழ்ந்து மகிமை அடைந்தாரே. எங்களது பாவங்களான ஆங்காரத்தையும் தன்னலத்தையும் அடக்கி நாங்கள் இவ்வுலகிற்கு மறைந்தவர்களாய் சர்வேசுரனுக்கு மட்டும் ஏற்புடையவர்களாக வாழச் செய்தருளும். நாங்கள் அன்றாடம் செய்பவைகளை பரிசுத்த எண்ணத்துடனும் பயபக்தியோடும் சர்வேசுரனின் முன்னிலையில் இருப்பதுபோல் இருக்கச் செய்தருளும் தனிப்பட்ட வாழ்வில் உமது சீடர்களாய் இருக்க உதவிசெய்ய  வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென். 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

தனிப்பட்ட வாழ்வுக்கு நன்மாதிரிகையான  அர்ச்.சூசையப்பரே வாழ்க 

தனிப்பட்ட வாழ்வில் அதிக மேன்மையடைந்த அர்ச்.சூசையப்பரே! வாழ்க 

தனிப்பட்ட வாழ்வில் நல்ல விதமாக நடக்கிறவர்களுக்கு உதவி செய்கிற அர்ச்.சூசையப்பரே! வாழ்க 

செய்ய வேண்டிய நற்செயல் 

இன்றைய செயல்களை எல்லாம் சர்வேசுரனின் முன் செய்வதாக எண்ணி நன்றாக செய்ய வேண்டும்