பாத்திமா காட்சிகள் - வானில் தோன்றிய அதிசயம்

“சூரியனைப் பாருங்கள்” என்று லூஸியா கூறியதும், கூட்டத் திலிருந்த மக்கள் எல்லோரும் மேலே பார்த்தனர்.

அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த மாபெரும் புதுமை சூரியனில் நடைபெற்றது.  மேகங்கள் திடீரென விலகிக் கொண்டன. வானம் நீல நிறமாக விரிந்து பரந்து எல்லையற்றுக் காணப்பட்டது.  சூரியன் நடுவானத்தில் கம்பீரமாகப் பிரகாசித்தது.  ஆனால் ஒரு மேகமும் சூரியனை மறைக்காமல் சூரியன் மட்டும் இருந்தாலும், எல்லோரும் வெறும் கண்ணால் அதைப் பார்க்க முடிந்தது!  கூட்டம் முழுவதும் மிகவும் ஆச்சரியத்துடன் கண் கூச்சமில்லாமல் சூரியனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது!

சற்று நேரம் அவ்வாறு காட்சியளித்த சூரியன் திடீரென நடுங்க ஆரம்பித்தது! ஆம்.  வானத்தில் சூரியன் நிலை தடுமாறி அசைந்து நடுங்கியது.  தன்னையே சுற்றவும் தொடங்கியது. அம்மாபெரும் தீப்பிழம்பு ஒரு ராட்சத சக்கரம் போல் நெருப்புப் பற்றிக் கொண்டு, நெருப்பால் எரியும் சக்கரம் போல் கணிக்க முடியாத வேகத்துடன் சுற்றியது!  

எத்தனை வேகம்!  ஆ, என்ன நெருப்பு!  நெருப்பின் ஒளி சூரியனைச் சுற்றிலும் பாய்ந்து கொண்டிருந்தது.  எந்தத் திசை நோக்கிச் சுற்றியதோ, அந்தத் திசை நேரே சூரியனின் முழு வட்டத்திலிருந்து சுடர்க் கதிர்கள் கற்றை கற்றையாக முழு வேகத்துடன் பாய்ந்து ஓடின!  இவ்வொளிக் கற்றைகள் தீப்பிழம்புகளாய் வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் எப்பக்கமும் அள்ளி வீசப்பட்டன!  கூட்டத்திலிருந்தவர்கள் இந்த அதிசயத்தை நிலைமறந்து நினைவிழந்தவர்கள் போல் பார்த்துக் கொண்டு நின்றனர்.  

மரம், செடி, கொடி, பாறை, மனிதர்கள், அவர்களின் உடைகள், பொருட்கள், தரை, எங்கும் இத்தனை நிறங்களும் மாறி மாறி துவைந்து வந்து கொண்டிருந்தன.  இவ்வாறு சற்று நேரம் சூரியன் சுற்றிய பின், ஒரு சில விநாடிகள் நின்றது.  பின் மீண்டும் சுழல ஆரம்பித்தது.  சக்கர வாணம் சுற்றும்பொழுது சுற்றிலும் தீச்சுடர் வீசப்படுவது போல் உலகத்திலும் எத்தனையோ மடங்கு பெரிய சூரியச் சக்கரம் நெருப்புக் கோளமாய்ச் சுற்றிச் சுழன்றதே ஒரு மாபெரும் பயங்கரக் காட்சியாக இருந்தது.

இவ்வாறு சுற்றிய சூரியன் மீண்டும் ஒருமுறை சற்று நின்றது. இப்படி அது நின்றது கூட்டத்தினருக்கு ஒரு ஓய்வு அல்லது தாங்கும் சக்தியைக் கொடுப்பது போலிருந்தது.  மீண்டும் அந்த மாபெரும் கோளம் சுழலத் தொடங்கியது. சுழன்றது மட்டுமல்ல, அதன் வேகமும் நெருப்பும், நிறங்களும் பல மடங்கு அதிகரித்தன!  

மாபெரும் ஜனக்கும்பல் ஒரு குறிப்பிட்ட அதிசயத்தைத் தேடி வந்திருந்தது. வாக்களிக்கப்பட்ட இப்பெரும் அற்புதத்தை அவர்கள் கண்ணாரக் காண்கிறார்கள்.  ஒருபோதும் சூரியனை இவ்வாறு உலகம் கண்டதில்லை. உண்மையாகவே இதுவே அக்குழந்தைகள் கூறிய அதிசய நிகழ்ச்சி என்ற எண்ணம் எல்லார் மனதிலும் உதயமாகிக் கொண்டிருந்தது.  

ஆனால் இது மட்டுமல்ல-- சுழன்று கொண்டிருந்த சூரியன் திடீரென தன் இடம் பெயர்ந்தது!  சகிக்கக் கூடியதாக இல்லை இக்காட்சி! சூரியன் இடம்பெயர்ந்து வலது பக்கமும், இடது பக்கமும் ஓடுகிறது! நடுங்கிக் குலுங்கி, அங்கும் இங்கும் நிலை தடுமாறிப் பாய்கிறது!   

உரைக்க இயலாத பெரும் நெருப்புச் சக்கரம் நிலைபெயர்ந்து விட்டது-- அங்கும் இங்கும் ஆடிச் சுழன்று அக்கினிப் பிழம்பை அத்தனை நிறங்களிலும் அள்ளி வீசியபடி கீழ்நோக்கி--பூமியை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து வருகிறது!  இதோ இக்கூட்டத்தை நோக்கிப் பாய்கிறது!  சூரியன் தன் நிலையை இழந்து விட்டது.  அதை வானத்தில் கட்டியிருந்த கயிறு அறுந்து விட்டது போல் வேகமாகக் கீழே விழுந்து கொண் டிருக்கிறது!  

ஆம், சூரியன் கீழே விழுகிறது!  அது நெருங்க நெருங்க வெப்பம் கூடுகிறது!  அவ்வெப்பம் அனைத்தையும் எரித்து, எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும்-- இன்னும் சில விநாடிகளில் எல்லாம் தீப்பிடித்துக் கொள்ளும்!  நட்சத்திரங்கள் பூமியில் விழும் என்று கூறப்பட்டது இதுதான்!  இதோடு உலகம் முடிந்தது!  இதோ எல்லாம் அழிந்தது!  பயங்கரம்!  அச்சம்!  மாபெரும் பயங்கரம்!  கூட்டத்தில் அழுகை ஒலி-- ஓலமிடும் சத்தம்--பெருமூச்சு!

மக்களின் இதயத்தினுள் புதைந்து கிடந்த தேவ நம்பிக்கை பீறிட்டுக் கொண்டு வெளிவருகிறது.  “நான் விசுவசிக்கிறேன்.  சர்வேசுரனை விசுவசிக்கிறேன்”--“ஆண்டவரே, காப்பாற்றும்!  சேசுவே மாதாவே!  காப்பாற்றுங்கள்!” வேத எதிர்ப்பாளரும், நாத்திகரும்கூட நடுநடுங்கினர்!  ஏன், அவர்கள்தான் அதிகம் கலங்கினர்! 

அது அத்தகைய நேரம்!  அவர்கள் இதயத்தின் அடியில் அடக்கம் செய்யப்பட்டு மறைந்து கிடந்த கடவுள் நம்பிக்கை பொத்துக் கொண்டு வெளிவந்தது.  அவர்களின் ஆங்காரம் அழிந்து, உண்மை வெளிப்பட்ட நேரம் அது.  

கடவுள்-- எல்லாம் வல்ல சர்வேசுரன் ஒருவர் இருக்கின்றார். இயற்கையையும், எல்லாவற்றையும்  ஆண்டு  நடத்துபவர் ஒருவர்  உள்ளார் என்ற உண்மையை அவர்கள் தங்களையும் மீறி ஒப்புக்கொண்டனர்.  பாவ மன்னிப்புக் கேட்டு எழுந்த ஒலி--முழங்காலிட்டு மன்றாடிய மக்களின் குரல் ஒலி--மாமரிக்கு வாழ்த்துப் பாடிய நன்றி ஒலி எல்லாம் சேர்ந்து அந்தக் காட்சியின் முழுப் பயனையும் மக்கள் உணரச் செய்தன.

கூட்டத்தைப் பார்த்துப் பாய்ந்து வந்த சூரியன் தன் வேகத்தைக் குறைத்தது.  எப்படி அங்குமிங்கும் அசைந்து கீழே பாய்ந்ததோ, அதே போல் அங்குமிங்கும் அசைந்து மேலே ஏறி தன் இடத்தை அடைந்தது.  அதன் ஆட்டம், நடுக்கம், சுழற்சி, நெருப்பு வீசுதல் எல்லாமே நின்றன.  

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கவே, அதன் ஒளியின் தன்மை மாறியது. அதைப் பார்க்க கண் கூசத்தொடங்கியது. எந்த நாளும் வரும் சூரியனைப் போல் அது இப்போது காணப்பட்டது!  ஏறக்குறைய 15 நிமிடங்கள் நிகழ்ந்த மாபெரும் அதிசய நிகழ்ச்சி, அங்கு நின்ற மக்கள் அனைவரையும் ஒரு அந்தரங்க மகத்துவம் நிரம்பிய திருப்தியில் மூழ்கடித்தது.

அப்பாடா! இப்போதுதான் மக்கள் விடுதலையுடன்--நன்றியுடன்--விசுவாசத்தால் வரும் மகிழ்ச்சியுடன்--ஆபத்து நீங்கியது, ஆண்டவரின் மகிமை தோன்றியது என்ற எண்ணத்துடன் நீண்ட ஆறுதலான பெருமூச்சு விட்டார்கள்.  ஒருவரையயாருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டார்கள். இன்னும் பேச நா எழவில்லை.  

மிகவும் இதமளிக்கிறதே இந்தத் தென்றலும் இடமும்!  ஆம், அவர்களின் உடைகள், நனைந்து ஒட்டிக் கொண்டிருந்த எல்லா உடைகளும் நன்கு காய்ந்து உலர்ந்து விட்டன!  மழை நின்றது மட்டுமல்ல, தரையும் காய்ந்து விட்டதே! கால் மணி நேரத்திலா?

குழந்தைகள் எதிர்பார்த்தபடி, அன்னை முன்னறிவித்தபடி மாபெரும் அதிசயம் நடைபெற்று விட்டது.  சேசுவின் புதுமைகள், அவருடைய கல்வாரி மரணம், உயிர்ப்பு, சேசுவின் பரலோக ஆரோகணம், இந்த வரிசையில் வைக்கப்பட வேண்டிய அற்புதம் இது!  

இத்தகைய மாபெரும் புதுமை திருச்சபையின் வரலாற்றிலேயே வேறு கிடையாது!  மூன்று மாதங்களுக்கு முன்பே முன்னறிவிக்கப் பட்டது.  ஒரு குறிப்பிட்ட வருடம், குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட நாளில், குறித்த நேரத்தில் அது நடந்தது.  

70,000 முதல் 1,00,000 பேர் கொண்ட மிகப்பெரும் ஜனத்திரள் முன்பாக அனைவரும் பார்க்கும் முறையில் நடைபெற்றது. மூன்று எழுத்தறிவில்லா இளஞ்சிறுவர் வழியாக அறிவிக்கப்பட்டு, அத்தனை ஆயிரம் மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. 

“எல்லோரும் நம்பும்படியாக” இவ்வாறு செய்வேன் என்று பரலோகத்திலிருந்து வந்த நம் தேவ அன்னையே முன்னுரைத்தபடி நடந்தது.  

கத்தோலிக்கர், வேத எதிர்ப்பாளர், வேத மறுப்பாளர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியில் தேர்ந்தோர், நாஸ்திகர் ஆகிய எல்லா தரப்பினரும் கண்டு வியந்து ஒப்புக்கொண்ட அதிசயம் அது!