பாத்திமா காட்சிகள் - அன்னையின் இரண்டாம் காட்சி

ஜூன் மாதம் ஆரம்பித்ததுமே கோவா தா ஈரியாவின் நினைவு லூஸியாவையும், மற்ற இரு குழந்தைகளையும் பற்றிக் கொண்டது. 13-ம் நாள் நடுப்பகலில் அங்கு செல்ல வேண்டும். இது அம்மாதின் அன்புக் கட்டளை. 13-ம் நாள் என்று வரும் என்று மூவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

நல்ல வேளை, இந்தக் காட்சி 13-ம் தேதியில் வந்தது! பங்கில் அர்ச். அந்தோனியார் திருவிழா. குழந்தைகள் மூவரும் மிகவும் விரும்பி உற்சாகமாகப் பங்கெடுத்து வரும் விழா. அன்று ஊரே குதூகலப்படும். பாடற்பூசை, பிரசங்கம், அர்ச். அந்தோனியார் பக்தி முயற்சிகள், இசை, விருந்து, வாண வேடிக்கை இத்தனையும் நடை பெறும் மகிழ்ச்சி மிக்க நாள். இத்தனையையும் விட்டு விட்டா இச்சிறுவர் பாழடைந்த பரல் கற்கள் நிரம்பிய கோவா தா ஈரியா வுக்குப் போவார்கள்! இவ்வாறு நினைத்தாள் மரிய ரோஸா.

ஜூன் 12-ம் நாள் காலையிலிருந்தே லூஸியாவின் சகோதரிகள் அவ்வருட அந்தோனியார் திருவிழாவின் சிறப்புகளை அவளிடம் கூறுவதில் கவனமாயிருந்தனர். "அர்ச். அந்தோனியார் ரொட்டி " ஊரிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும். அழகிய வெண்ணிறமான அந்த ரொட்டியை லூஸியா எவ்வளவு ஆவலுடன் தேடி ஓடுவாள்! போன ஆண்டு அவள் இந்தத் திருவிழா அன்று கொண்ட குதூகலம் தான் என்ன! இப்படி லூஸியா வீட்டில் நினைத்தார்கள். அவள் கோவாதா ஈரியாவையும், காட்சியையும் தன் குழந்தைக்குரிய அநேக மாய் திருவிழா உற்சாகத்தில் மறந்தே போவாள் என எதிர்பார்த் தார்கள். இறுதியில் அன்று மாலை அவர்கள் லூஸியாவிடம் , "லூஸியா, நீ நாளை எங்கும் போகமாட்டாய்தானே?'' என்று கேட்டார்கள்.

"நான் போவேன். அந்த அம்மா விரும்புகிறார்கள்'' என்று லூஸியா கூறிய பதில் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மார்த்தோவும் அவர் மனைவி ஒலிம்பியாவும் தங்கள் பிள்ளைகள் (பிரான்சிஸ், ஜஸிந்தா) பற்றிச் சிந்தித்தார்கள். யாரோ ஒரு பெண் கோவாதா ஈரியாவுக்கு வரச் சொன்னதற்காக அவர்களை இந்தப் பெரிய திருவிழாவை விட்டு விட்டு அங்கு போகும்படிச் சொன்னால் நாலு பேர் ஏளனமாக எண்ணிச் சிரிக்கக் கூடும். 

ஆனால் மறுபக்கம் இச்சிறு குழந்தைகளை மனநோகப் பண்ணவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் வேறு வகையான திட்டமிட்டார்கள். அடுத்த கிராமத்தில் ஒரு மாட்டுத் தாவணி உண்டு. அவர்களுக்கு ஒரு ஜோடி எருதும் வாங்க வேண்டியிருந்தது. அதே 13-ம் நாளில் இருவரும் அங்கு சென்று விட்டால், கோவா தா ஈரியா பற்றியோ, திருவிழா பற்றியோ கவலைப்படாமல் ஒதுங்கிக் கொள் ளலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

மரிய ரோஸா அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விட வில்லை. புதிதாக வந்திருந்த பங்குக்குரு சங். மனுவேல் மார்க் பெரேரா சுவாமியை சந்தித்துப் பேசினாள். "பிள்ளைகள் அங்கு கட்டாயம் போவதாகச் சொன்னால் விட்டுவிட வேண்டும்'' என்று அவர் கூறியிராவிட்டால், லூஸியாவைத் தடை செய்ய மரிய ரோஸா வேறு வகையாக முயன்றிருப்பாள்.

அல்ஹஸ்திரல் கிராமத்திலுள்ள ஆடு மேய்க்கும் சிறுவர் வழக்கமாக அர்ச். அந்தோனியார் திருவிழாவன்று மிக அதிகாலை யிலேயே ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று நேரத்தோடு திரும்பிவிடுவார்கள். அப்போதுதான் பாடற்பூசைக்கு நேரம் சரியாக இருக்கும். லூஸியாவும் அன்று விடியற்காலையிலேயே ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போய்விட்டாள். 

ஊருக்கு வெளியே எதிர்ப்பட்ட வயல்களில் ஆடுகள் மேய்ந்தன. ஆனால் ஏறக்குறைய காலை ஏழு மணிக்கெல்லாம் அவளுடைய மூத்த அண்ணன் ஓடி வந்து, "லூஸியா, உன்னை நிறைய ஆட்கள் தேடி வந்திருக்கிறார்கள். நீ உடனே வீட்டுக்குப் போ'' என்றான். லூஸியா ஆடுகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டு நேரே வீட்டுக்கு வந்தாள். அங்கே பலர் பல ஊர்களிலிருந்தும் அவளைத் தேடி வந்திருந்தனர். ஜூன் 13-ம் நாளன்று காட்சி தந்த பெண் மீண்டும் குழந்தைகளை வரச் சொன்னதாக செய்தி பரவியிருந்தது.

தன்னை எதிர்பார்த்து அவர்கள் கூடியிருப்பதைக் கண்டதும் லூஸியாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் இப்படி எதையுமே எதிர்பார்க்கவில்லை. வீட்டில் ஏற்கெனவே அவள் படுகிற துன்பத்தை இவர்கள் அதிகரிக்கவே வந்தது போலிருந்தது. ஆயினும் அவள் அவர்களிடம், தான் எட்டு மணி பூசைக்குச் சென்று திரும்பி வர வேண்டும் என்றும், அதன்பின் அவர்கள் விரும்பினால் தன்னுடன் கோவா தா ஈரியாவுக்கு வரலாம் என்றும் கூறினாள். இதைக் கூறி விட்டு லூஸியா பாத்திமா கோவிலுக்குப் போனாள்.

லூஸியாவைத் தேடி வந்தவர்கள் இரண்டு மணி நேரம் காத் திருந்தார்கள். மரிய ரோஸாவுக்கும், அவள் மூத்த பிள்ளைகளுக்கும், இந்த ஆட்கள் வீட்டைச் சுற்றி நிற்பதே சற்றும் பிடிக்கவில்லை. சில சாடைப் பேச்சுக்கள் வேறு பேசப்பட்டன. ஆனால் மாதாவின் காட்சி மெய்யாயிருக்கக் கூடும் என்று நம்பிய திருயாத்ரிகர்கள் மனம் தளரவில்லை . பத்து மணியளவில் லூஸியா திரும்பி வந்தாள். அவள் கோவா தா ஈரியாவுக்குப் புறப்பட மணி ஏறக்குறைய பதினொன்று ஆகிவிட்டது. அவளைச் சுற்றி இந்த ஆட்களும் புறப்பட்டார்கள்.

லூஸியாவுக்கு இதெல்லாம் மிக மிக வேதனையாக இருந்தது. அன்று நான் மிக அதிகமாகத் துன்பப்பட்டேன்" என்று அவள் கூறியுள்ளாள். அதிலும் அவள் வீட்டில் இவ்வளவு நாளும் அவளை அன்பு பாராட்டியவர்களின் சகிக்க முடியாத எரிச்சலும், பகையும் அவளை உருக்கி விட்டன. இளைய பிள்ளை என்று செல்லமாகப் பேணி வளர்க்கப்பட்டு, இப்போது திடீரென வெறுக்கப்படுவதை அவளால் தாங்க முடியவில்லை. 

"என் முந்திய நாட்களை நினைத்துப் பார்த்தேன். சற்று முன் என் வீட்டில் எனக்குக் காட்டப்பட்ட அன்பெல்லாம் எங்கே போய்விட்டது என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்' என லூஸியா கூறியுள்ளாள். இதெல்லாம் போதாதென்று இனந்தெரியாத இந்த அந்நிய மக்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டு அவளைப் புண்ணாக்க நேர்ந்ததை நினைத்தவுடன், பாவம் 10 வயதுச் சிறுமி தானே, அழுது விட்டாள், அழுது கொண்டே நடந்தாள்.

பிரான்சிஸம், ஜஸிந்தாவும் லூஸியாவோடு சேர்ந்து கொண்டனர். லூஸியாவின் முகம் அழுகையால் வீங்கி கண் சிவந் திருந்தது. முகமெல்லாம் கண்ணீராயிருந்ததைக் கண்ட ஜஸிந்தா,

"அழாதே லூஸியா. சர்வேசுரன் நமக்குத் துன்பங்களை அனுப்புவதாக சம்மனசு சொன்னாரே, நிச்சயம் அது இதுதான். அதனால்தான் நீ துன்பப்படுகிறாய். கடவுளுக்கு நிந்தைப் பரிகாரமாகவும், பாவிகளை மனந்திருப்புவதற்காகவும் இதை நீ அனுபவிக் கிறாய்" என்றாள்.

இதைக் கேட்ட லூஸியா தெளிவடைந்தாள். கண்ணைத் துடைத்துவிட்டு, மற்ற இருவருடனும் கோவாதா ஈரியாவை நோக்கி நடந்தாள். அவர்கள் பின்னால் ஒரு சிறு கூட்டம் சென்றது. அல்யுஸ் திரலிலிருந்து அரை மணி நேரத்திற்குச் சற்று அதிக நேரம் நடந்தால் கோவாதாஈரியாவை அடையலாம். இவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த போது, அங்கு முன்கூட்டியே வந்திருந்த இன்னொரு கூட்டமான மக்களைக் கண்டார்கள். ஏறக்குறைய ஐம்பது பேர் இருப்பார்கள்.

அன்னை தோன்றிய அஸின் ஹேரா மரத்திலிருந்து சுமார் ஒன்பது அடி தூரத்தில் கிழக்கு நோக்கி லூஸியாவும், அவள் இரு பக்கங்களிலும் மற்ற இருவரும் நின்றார்கள். இன்னும் நடுப்பகல் ஆகாததால், அவர்கள் அப்படியே தரையில் உட்கார்ந்தார்கள். அங்கு கூடி வந்திருந்த மக்களும் அமர்ந்து கொண்டனர். சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்ணத் தொடங்கினர். இக்குழந்தை களுக்கும் கொடுத்தனர். ஆனால் இவர்கள் அதை மறுத்து விட்டனர். 

ஆயினும் சில ஆரஞ்சுப் பழங்களைப் பெற்றுக் கொண்டனர். ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கையில் வைத்து விளையாடத் துவக்கினாள் ஜஸிந்தா. விளையாடாதே என்று லூஸியா கூறி அவளை நிறுத்தினாள். கூட்டத்திலிருந்த ஒரு பெண் ஒரு ஜெபப் புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்தாள். மரியாக ரெய்யா என்ற பெண் லூஸியாவிடம் :

"மாதா வருவதற்கு இன்னும் அதிக நேரமாகுமோ?" என்று கேட் டாள். 

"இல்லை . அதிக நேரம் ஆகாது" என்று லூஸியா பதில் கூறினாள்.

எல்லோரும் சேர்ந்து ஒரு ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை சொன்னார்கள். ஜெபமாலை முடிந்தவுடன் முன்பு ஜெபம் வாசித்த பெண், மாதாவின் பிரார்த்தனை சொல்ல ஆரம்பித்தாள். அதற்கு நேரம் இல்லை என்று அவளைத் தடுத்த லூஸியா உடனே எழுந்து, "ஜஸிந்தா! அதோ நம் அம்மா வருகிறார்கள். அதோ அந்த வெளிச்சம்!” என்றாள்.

மூன்று குழந்தைகளும் அந்த அஸின் ஹேரா மரத்தருகே ஓடினர். கூட்டம் அவர்கள் பின்னால் நகர்ந்து சென்றது. எல்லோரும் அங்கிருந்த புல்லிலும், கல்லிலுமாக முழந்தாளிட்டனர். லூஸியா ஜெபிக்கும் பாவனையில் கரங்களைக் கூப்பி,

"அம்மா, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டாள்.

''அடுத்த மாதம் 13-ம் நாள் நீங்கள் இங்கு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்ல வேண்டும். நீ வாசிக்கக் கற்றுக் கொள். நான் வேறு என்ன விரும்புகிறேன் என்பதைப் பின்னால் தெரிவிப்பேன்'' என்று அன்னை கூறினார்கள்.

இதன்பின் ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணமாக்கும்படி லூஸியா கேட்டதற்கு,

"அவள் தன் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வாளானால், இந்த ஆண்டில் குணமடைவாள்" என்று பதிலளித்தார்கள் அன்னை.

"நீங்கள் எங்களை மோட்சத்திற்குக் கொண்டு செல்லுங்களம்மா'' என்றாள் லூஸியா.

அதற்கு: "ஆம். ஜஸிந்தாவையும், பிரான்சிஸையும் சீக்கிரம் அங்கு எடுத்துக் கொள்வேன். ஆனால் நீ கூடக் கொஞ்ச காலம் இங்கே இருக்க வேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார். உலகத்தில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார்" என்றார்கள் மாதா .

"நான் தனியாகவா இங்கு இருக்க வேண்டும்?'' என்று துயரத் தோடு லூஸியா கேட்க,

"இல்லை மகளே. அது உனக்குத் துன்பமாயிருக்கிறதா? திடம் இழந்து போகாதே. உன்னை விட்டு ஒருபோதும் நான் செல்ல மாட்டேன். என் மாசற்ற இருதயம் உன் அடைக்கலமாகவும், சர்வேசுரனிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் வழியாகவும் இருக்கும்.''

இவற்றைக் கூறிய பின், "தேவ அன்னை தன் கரங்களை விரித்து, அவர்களைச் சூழ்ந்திருந்த அந்தப் பேரொளியை இரண்டாம் தடவையாக எங்களுக்குள் பாய விட்டார்கள். அவ்வொளியில் நாங்கள் சர்வேசுரனுக்குள் மூழ்கியிருக்கக் கண்டோம். ஜஸிந்தாவும், பிரான்சிஸம்விண் நோக்கிச் சென்ற ஒளியிலும், பூமியின் மீது பாய்ந்த ஒளியில் நானும் இருந்தோம். 

நம் அன்னையின் வலது உள்ளங்கையின் முன், முட்களால் சூழப்பட்ட ஒரு இருதயம் இருந்தது. அம்முட்கள் அவ்விருதயத்தை ஊடுருவிச் சென்றன. மனுக்குலத்தின் பாவங்களால் நிந்திக்கப்படும் மரியாயின் மாசற்ற இருதயம் அது என்றும், இவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்கள் உணர்ந்தோம்" என லூஸியா உரைத்துள்ளாள்.

லூஸியா தொடர்ந்து கூறுவது: "ஜூன் மாதம் நம் அம்மா எங்களிடம் ஒரு இரகசியம் கூறினார்கள் என்று நாங்கள் குறிப்பிட்டது இதைத்தான். இந்தத் தடவை நாங்கள் இதை இரகசியமாய்க் காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் கட்டளையிடவில்லை. ஆனால் அவ்வாறு செய்யும்படி கடவுளால் தூண்டப்பட்டதாக உணர்ந்தோம்.''

கடவுளுக்குள் மூழ்கியிருந்த காட்சி மறைய, தேவ அன்னை மட்டும் ஒளி சூழ காணப்பட்டார்கள். பின் அவர்களும் அம்மரத்தை விட்டெழுந்து கீழ்த்திசையில் மறைந்தார்கள். அப்போது அம்மரத்தின் உச்சி இலைகள் மாதாவின் ஆடையால் இழுக்கப்பட்டவை போல் கிழக்கு நோக்கி வளைந்ததை அங்கு நின்ற சிலர் கண்டார்கள். அவை மீண்டும் நிமிர்வதற்குச் சில மணி நேரங்களாயின.

லூஸியா கீழ்த்திசை நோக்கியே சற்று நேரம் நின்றாள். ''அவர்களை இப்போ காண முடியவில்லை. அவர்கள் மோட்சத்திற்குள் நுழைகிறார்கள். இதோ கதவுகள் சாத்தப்படுகின்றன' என்று லூஸியா கூறியதாக மரியா கரெய்யா என்ற பெண் கூறியுள்ளாள்.

அங்கு கூடியிருந்த மக்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயினர். தேவ அன்னையை யாரும் காணவில்லை. ஆனால் மிக அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது பற்றி நிச்சயமாயிருந்தனர். சிலர் குழந்தைகளிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். சிலர் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். சிலர் அஸின் ஹேரா மரத்தின் மேற்கிளைகளைக் கொய்யத் தொடங்கினார்கள். தேவ அன்னையால் தொடப்பட்ட இலைகளை விட்டுவிட்டு அடிப்பாக இலைகளை மட்டும் கொய்து கொள்ளும்படி லூஸியா கூறாவிட்டால் மரமே மொட்டையாகிப் போயிருக்கும்.

கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிலர் ஜெபமாலை சொல்லிக் கொண்டே திரும்பினார்கள். சிலர் மாதாவின் பிரார்த்தனையைச் சொல்லிச் சென்றார்கள்.