பாத்திமா காட்சிகள் - அன்னையின் இரண்டாம் காட்சி தொடர்ச்சி...

லூஸியாவும், மற்ற இருவரும் வீடு திரும்ப மணி நான்கு ஆகி விட்டது. அவர்களை ஆயிரம் கேள்வி கேட்டுக் குடைந்து எடுத்து விட்டது ஒரு சிறு கும்பல். அவர்கள் கேட்ட பல அவசியமற்ற கேள்விகள் குழந்தைகளை மிகவும் புண்படுத்தின. 

சில கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மவுனமாயிருந்தார்கள். இன்னும் சில கேள்விகளுக்கு, ''அது இரகசியம். நாங்கள் பேசக்கூடாது' என்று மட்டும் கூறி சும்மா இருந்தார்கள். ஆட்கள் அகன்ற பின்புதான் குழந்தைகள் விடுதலையோடு திரும்ப முடிந்தது.

பிரான்சிஸ் காட்சிகள் அத்தனையையும் கண்டான். ஆனால் தேவ அன்னையின் குரலைக் கேட்கவில்லை. மாதாவின் மாசற்ற இருதயத்தையும், அவர்கள் கரத்திலிருந்து புறப்பட்ட ஒளியையும் அவன் பார்த்தான். அவற்றின் பொருள் என்னவென்று அறிய மிகவும் ஆவலாயிருந்தான்.

''அம்மாவின் கரத்தில் இருதயம் இருந்ததே, ஏன் லூஸியா? உலகத்தில் ஒளி வீசியதல்லவா? நிலத்தில் படிந்த ஒளியில் நீ இருந்தாய். நானும் ஜஸிந்தாவும் வானத்தை நோக்கிச் சென்ற ஒளியில் இருந்தோம். இதன் பொருள் என்ன?" என்று கேட்டான்.

''அதன் பொருள் இதுதான் : நீயும் ஜஸிந்தாவும் விரைவில் மோட்சம் செல்வீர்கள். மரியாயின் மாசற்ற இருதயத்துடன் நான் கூடக் கொஞ்சக் காலம் உலகத்தில் இருப்பேன்" என்று பதிலளித்தாள் . லூஸியா.

''நீ எத்தனை வருஷம் இங்கிருப்பாய்?'' ''எனக்குத் தெரியாது. அநேக வருஷம்."

"நம் அம்மாவா அப்படிச் சொன்னார்கள்?''

''ஆம். நம் இருதயத்தில் வீசிய அந்த வெளிச்சத்தில் நான் அப்படிக் கண்டேன்.''

"ஆமாம். அது சரிதான். நானும் அப்படித்தான் கண்டேன்" என்றாள் ஜஸிந்தா .

"நான் சீக்கிரம் மோட்சம் செல்வேன்!'' என்றான் பிரான்சிஸ் மகிழ்ச்சியோடு. 

"நானும் ஜஸிந்தாவும் சீக்கிரம் மோட்சத்து போவோம்! மோட்சம்! மோட்சம்!'' என்று பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்தான்.

பிரான்சிஸம், ஜஸிந்தாவும் ஆனந்தமாக வீடு திரும்பினர். லூஸியா ஆழ்ந்த சிந்தனையுடன் வீடு சேர்ந்தாள்.

அதற்குச் சற்று முன்புதான் மார்ட்டோவும் ஒலிம்பியாவும் மாட்டுத் தாவணியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். ஒரு ஜோடி நல்ல எருதும் வாங்கி வந்திருந்தார்கள். சிறு பிள்ளைகள் வீட்டுக்குள் நுழைந்ததும், வீடு முழுவதும் அவர்களைச் சுற்றி வளைந்து கொண்டது.

ஜஸிந்தா அக்களிப்பால் நிரம்பி, "அம்மா, மாதாவை நாங்கள் மீண்டும் கண்டோம். நான் சீக்கிரம் மோட்சத்திற்குப் போவேன் என்று அவர்கள் சொன்னார்கள்'' என்றாள்.

"பைத்தியம். எந்த மாதா?" 

"அந்த அழகிய பெண்; அவர்கள் இன்று மீண்டும் வந்தார்கள்.''

வீட்டிலுள்ளவர்களில் ஒரு குரல் இவ்வாறு ஒரு இடைக் கேள்வி கேட்டது: "அழகிய பெண்ணா ? (ஒரு ஆளைக் குறிப்பிட்டு) இந்த ஆள் மாதிரி அழகாயிருந்ததா?"

''அதை விட மிக மிக அழகு!''

பின் கோவிலில் இருக்கும் அர்ச். கித்தேரியம்மாள் சுரூபத்தை அடையாளம் சொல்லி, "நம் கோவிலில் நட்சத்திரங்கள் பதித்து மாந்தை அணிந்த சுரூபத்தைப் போல் அழகா?''

"இல்லை . அதையும் விட மிக மிக அழகு!'' 

"ஜெபமாலை மாதா சுரூபத்தைப் போல் அழகா?'' 

“அதை விட அதிக அழகு.” 

"சரி. அவள் இந்தத் தடவை என்ன கூறினாள்?''

"தினமும் ஜெபமாலை சொல்ல வேண்டும். அக்டோபர் வரை ஒவ்வொரு மாதமும் அங்கு செல்ல வேண்டும்.'' 

''அவ்வளவுதானா?''

இந்தக் கேள்வி ஜஸிந்தா காதில் விழுந்ததும், அவள் ஏற்கெனவே தான் அதிகம் பேசி விட்டதாக உணர்ந்து,

“மீதியெல்லாம் இரகசியம்" என்றாள்.

வீட்டிலுள்ளவர்கள் இரகசியம் என்ற வார்த்தையை எட்டிப் பிடித்துக்கொண்டு, "இரகசியமா? என்ன இரகசியம்? எங்களிடம் சொல் அந்த இரகசியத்தை" என்று ஆவலுடன் கேட்டனர்.

ஆனால் ஒருவராலும் அதை அறிய முடியவில்லை . ஜஸிந் தாவும், பிரான்சிஸ் ம் அதற்கு மேல் வாயைத் திறக்கவேயில்லை.

மார்ட்டோ மட்டும் அக்குழந்தைகளின் இரகசியத்தை அறிய முயற்சிக்கவில்லை. ''இரகசியம் என்றால் இரகசியம்தான். அதை இரகசியமாகவேதான் வைத்திருக்க வேண்டும்'' என்று கூறி அவர் விட்டு விட்டார்.

லூஸியாவை அவள் வீட்டில் யாரும் நம்புவாரில்லை. இரண்டாம் முறையும் அவள் மாதாவைக் கண்டதாகக் கூறியது, அவள் கைதேர்ந்த பொய்காரி என்ற அவர்களது எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இதற்கிடையில் அல்ஹஸ்திரலில் ஒரு வீடு பாக்கியில்லாமல் லூஸியாவின் கதைதான் பேசப்பட்டது. 

காட்சி நடந்த இடத்திற்குச் சென்றிருந்த மக்கள் அது உண்மைதான் என்ற கருத்தைப் பரப்பியதால், பல இடங்களிலும் இதே பேச்சாகவே இருந்தது. இதை மரிய ரோஸாவால் சகிக்க முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் காட்சியில் தேவதாய் கூறியபடி தான் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று லூஸியா தன் தாயிடம் கேட்டது மரிய ரோஸா வுக்குப் பெரும் எரிச்சலை மூட்டியது. 

"இரு, இரு. எல்லாம் நாளைக்குப் பங்குக் குருவிடம் போய்க் கொள்வோம். இந்தத் தடவை நீ அவரிடம் உண்மையைக் கூறுகிறாயா, இல்லையா பார்ப்போம்'' என்று கோபத்துடன் இரைந்தாள் அவள்.

மறுநாள் காலையில் மரிய ரோஸாலூஸியாவை அழைத்துக் கொண்டு பங்குக் குருவிடம் சென்றாள். செல்லும் வழியில் ஒலிம்பியாவிடம் தன் வேதனைகளைச் சொல்ல வீட்டினுள் சென்றாள். 

லூஸியா ஒரே அழுகையாக அழுது கொண்டேயிருந்தாள். ஜஸிந்தாவுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பயந்து பயந்து பேசினாள் லூஸியா. ஜஸிந்தாலூஸியாவுக்குத் திடம் கூறினாள்.

''அழாதே லூஸியா. நான் பிரான்சிஸைக் கூப்பிடுவேன். நீ பங்குக் குருவிடம் இருக்கையில் நாங்கள் உனக்காக ஜெபிப்போம்'' என்றாள்.

லூஸியாகண்ணீரைத் துடைத்து விட்டுத் தன் தாயின் பின்னால் சென்றாள். பாத்திமா பங்குக் கோவிலை அடையும் வரை மரிய ரோஸா தன் பின்னால் வந்து கொண்டிருந்த தன் மகளைத் திரும்பிப் பார்க்கவுமில்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. அவள் மனம் லூஸியாவின் மீது மிகவும் வெறுப்படைந்திருந்தது. பெற்ற தாயே தன்னை இப்படி வெறுப்பதை லூஸியாவால் தாங்க முடியாதிருந்தது.

அவர்கள் பாத்திமா கோவிலுக்குப் போய்ச் சேர்ந்ததும், அங்கே பூசை ஆரம்பிக்க இருந்ததால், இருவரும் அப்பலிபூசையில் பங்கு பெற கோவிலுக்குள்ளே சென்றனர். தன் துயரங்களை யெல்லாம் லூஸியா அப்பலியுடன் சேர்த்து ஒப்புக்கொடுத்தாள். பூசை முடிந்தபின் தாயும் மகளும் பங்குக் குருவின் இல்லத்திற்கு படிக்கட்டு வழியாக ஏறிச் சென்றனர். 

அப்போதுதான் மரிய ரோஸா தன் மகளைத் திரும்பிப் பார்த்து, "இனியும் என்னைக் கஷ்டப் படுத்தாதே. சுவாமியிடம் நீ முன்பு சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லி விடு. அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் நீ பொய் சொன்னதாக எல்லோருக்கும் அறிவித்து விடுவார். அதோடு ஒரு அஸின் ஹேரா மரத்தின் முன் ஜனங்கள் போய்க் கும்பிடுவது நிற்கட்டும்" என்று கடுமையாகக் கூறினாள்.

பங்குக்குரு அவர்களை நன்றாக வரவேற்றார். லூஸியாவைத் தனியாக அழைத்து ஆயிரம் கேள்விகள் கேட்டிருப்பார்! மிக நுணுக்க மான கேள்விகள். திரும்பத் திரும்ப அதே கேள்விகள் லூஸியா எல்லாவற்றிற்கும் பதிலளித்தாள். 

இதற்கு முன்பே பங்குக் குரு ஜஸிந்தாவையும், பிரான்சிஸையும் கூப்பிட்டு விசாரித்திருந்தார். அவர்கள் கூறிய பதில்களையும் லூஸியாவின் பதில்களையும் சீர் தூக்கிப் பார்த்துக் கொண்டே வந்தார். 

முடிவில் இம் மூன்று குழந்தை களும் தாங்கள் கண்டது கேட்டது பற்றிக் கூறுவது உண்மைதான் என்று பங்குக்குரு ஒப்புக்கொண்டார். ஆனால் இறுதியில் அவர் கூறியது லூஸியாவுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக அவள் காதில் விழுந்தது. 

குரு கூறினார்: ''இது பரலோகத்திலிருந்து வருகிற ஒரு காட்சியாக எனக்குத் தோன்றவில்லை. இது பசாசின் ஏமாற்றுதலாயிருக்கக் கூடும். சரி பார்ப்போம். என்னுடைய கருத்தைப் பின்னால் தெரிவிக்கிறேன்!" இப்படிக் கூறி அனுப்பி விட்டார்.

மரிய ரோஸாவுக்கு இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? பசாசின் வேலை! அதற்குப் பலியாவது தன் மகள்! அன்று முதல் அவள் லூஸியாவை அதிகக் கொடுமையாய் நடத்த ஆரம்பித்தாள். இடைவிடாமல் அவளைத் திட்டி வசை பேசி வந்தாள். காலால் உதைத்தும் அடித்தும் தன் ஆத்திரத்தையெல்லாம் கொட்டினாள்.

காட்சி என்பது பசாசின் செயலாயிருக்கும் என்று பங்குக் குரு கூறியதாக லூஸியா கூறவும் உடனே ஜஸிந்தா :

''அது பசாசல்ல. கிடையவே கிடையாது. பசாசு மிக அசுத்தமும், அரோசிகமுமாக இருக்கும். அதுவும் மண்ணுக்குக் கீழே நரகத்தில்தான் பசாசு இருக்கும். அந்த அம்மா எவ்வளவு அழகாக இருந்தார்கள்! அவர்கள் மேலே மோட்சத்திற்குப் போனதை நாம் பார்த்தோமே!" என்றாள். பிரான்சிஸ் தன் தங்கை கூறியதை ஆமோதித்தான். ஜஸிந்தா மீண்டும் லூஸியாவைப் பார்த்து:

''இங்கே பார், நாம் எதற்கும் பயப்படவே தேவையில்லை. அந்த அம்மா நமக்கு எப்போதும் உதவி செய்வார்கள். அவர்கள் நமக்கு எப்படிப்பட்ட நண்பனாயிருக்கிறார்கள்" என்று திடமாகக் கூறினாள்.

பங்குக் குரு கூறிய கடைசி வார்த்தைகள் லூஸியாவைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. பகல் வேளைகளில் அவள் மற்ற இருவருடனும் பேசி திடன் பெற்றுக்கொள்ள முடிந்தது. வீட்டில் அவளை ஆதரிக்க ஒரு உள்ளம் கூட இல்லாததால் அச்சிறுமியின் இதயம் வாடி சோர்ந்து போயிற்று. 

'ஒருவேளை பங்குத் தந்தை கூறுகிறபடி இதெல்லாம் பசாசின் வேலைதானோ? அறியாமல் இப்படி ஒரு பெரும் தவறைச் செய்து விட்டேனோ? கடவுளின் பகைவனான பசாசின் ஏமாற்றத்துக்குள் அகப்பட்டு தேவ காரியங்கள் பழிக்கப்படும்படி நான் ஒரு கருவியாக பசாசின் கையில் சிக்கிக் கொண்டேனோ?" என்றெல்லாம் அப்பிஞ்சு மனம் எண்ணி எண்ணி அழுது ஏங்கியது. 

இரவில் இது பற்றிக் கனவுகள் கண்டு மருண்டு அவள் உருவமே மிகவும் களைத்துப் போய்விட்டது. பாவம், சிறு குழந்தைதானே! அவளால் இந்த எண்ணப் போராட்டங்களைத் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இறுதியில் பங்குக்குரு கூறியதே உண்மையாக இருக்க வேண்டும். இதெல்லாம் பசாசின் ஏமாற்றமே என்ற முடிவுக்கு வந்து விட்டாள் லூஸியா.

சிருஷ்டிகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.