சேசுவின் திரு இருதயம் வாழ்வும் தயாளமுமானது

திரு இருதய பக்தி ஒரு புது பக்தி, பார-லே-மோனியாவில் உருவாகி, புலவரது புகழ்ச்சிக்குரிய ஒரு பக்தி என்று நினைப்பவர்கள் அநேகர் உண்டு. இவ்வித நினைவு உண்மைக்கு முழுவதும் எதிரிடை யானது. சேசுவின் திரு இருதயம் வாழ்வும் தயாளமுமானது, சகல இருதயங்களுக்கும் மத்திய ஸ்தானம் என்ற அத்திரு இருதய போதகம் முழுவதும் சுவிசேஷத்தில் காணக்கிடக்கிறது. அர்ச். மார்கரீத் மரியம் மாளுக்குச் சம்பவித்த தரிசனங்களைச் சந்தேகமற விசுவசிக்கிறேன். ஆனால் திருச்சபை அதிகாரத்திற்குப் பிறகு, இதன் உண்மையை என் புத்தியில் உறுதிப்படுத்தி, என் மனதைக் கவர்ந்துகொள்ளக் காரண மாயிருப்பது சுவிசேஷ வரலாறுகளும், அர்ச். மார்கரீத் மரியம்மாள் எழுதி வைத்திருப்பவைகளும் ஒன்றோடொன்று உத்தம விதமாய் ஒத்திருப்பதேயாகும்.

மேலும், பெத்லகேமிலும், நாசரேத்திலும், கல்வாரியிலும் அதிசயத்திற்குரிய விதமாய் வெளிப்படுகிற இருதயத்தை, பீடத்தின் தேவத்திரவிய அநுமானத்தில் நம்முடன் வாழ்ந்து வருகிற இருதயத் தைக் கண்டுணர்வதற்கு, அவளது வார்த்தைகளாவது வேறெந்த உதவியாவது எனக்குத் தேவையில்லை. பார-லே-மோனியா சம்பவம் மிகுந்த பிரகாசத்தை வீசியிருக்கிறது. அது மெய்யான வெளிப்படுத்து தல்தான். ஏனெனில் அது சம்பந்தமான விண்ணப்பங்களும், வாக்குத் தத்தங்களும், அது மெய்யான போதகம் என்பதற்குத் தெய்வீக முத்திரையாய் விளங்குகின்றன - ஆனால் அந்தப் போதகம் சுவிசேஷங் களின் ஒவ்வொரு வரியிலும் காணக்கிடக்கின்றது. சேசுநாதரின் திரு இருதய வெளிப்படுத்தல் உத்தம விதமாய்த் திட்டமாய் சுவிசேஷத் தில் இருக்கிறது. அவர் பார-லே-மோனியாவில் சொன்னதெல்லாம் பின்வரும் வாக்கியங்களில் சுருக்கமாய் அடங்கியிருக்கிறது: ""என் சிநேகத்தை நம்பு, பயப்படாதே, நான்தான் சேசுநாதர்... என்னைச் சிநேகி, உன் இருதயம் முழுவதையும் எனக்குக் கொடு, என்னைப் பிறர் சிநேகிக்கும்படி செய், ஏனெனில் நானே சேசு.''

அப்போஸ்தலர்கள் திவ்விய எஜமானருடைய போதகத்தை அறிவதற்கு முன், ""ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தில் இருந்து அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்படி சொல் கிறோம்'' (லூக்.9:54) என்றார்கள். அவர்கள் தங்கள் குருவின் இருதய நோக்கத்தை இன்னும் சரியாய்க் கண்டுணராதிருந்தார்கள். ஆனால் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர்களது புத்தியைத் தெளிவித்து, அவர்களது இருதயங்களை தேவசிநேகத்தால் நிரப்பியபோது, சிநேக அக்கினி இறங்கி மனிதருடைய இருதயங்களையும், உலக முழு வதையும் சேசுக்கிறீஸ்துநாதருடைய சிநேகத்தால் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று சொன்னார்கள்.

சிலர் தங்களுக்குத் தெரிந்த தேவ இலட்சணம் ஒன்றுதான், நித்திய நீதியுள்ளவர் அவர் என்பதுதான் அது என்று சொல்வார்கள். சர்வேசுரன் சர்வேசுரனானமட்டும் மட்டற்ற நீதியுள்ளவராயிருக்க வேண்டும் என்பது வெட்டவெளிச்சம். ஆனால் அவர் நீதியுள்ளவ ரானதாலும், நம்மை உருவாக்கின களிமண்ணை அவர் அறிந்திருப் பதாலுமே நாம் இந்தப் பிரபஞ்சத்தின் கரடுமுரடான பாதையைக் கடந்து சென்று கொண்டிருக்கும் காலத்தில், அவர் கண்டிப்பா யிராமல் பட்சமாகவும், இரக்கமற்ற நீதிபதியாயிராமல் தகப்பனும் இரட்சகருமாகவும் இருக்க வேண்டும். அவர் பூலோகத்துக்கு வந்ததும், நற்கருணையிலும், திருச்சபையிலும் இன்னும் தங்கியிருப் பதும், நம்மை இரட்சிப்பதற்காகவே. நாம்தான் நிர்ப்பாக்கியமாய், அவர் நம்மைக் கண்டித்துத் தண்டிக்கும்படி அவரைக் கட்டாயப் படுத்துகிறோம். ஆத்துமங்களைத் தேவ பராமரிப்பு ஆண்டு நடத்து வதில், நீதி மாத்திரம் இருக்குமானால், அல்லது இரக்கத்தை விட நீதி மிகுந்திருக்குமானால், அல்லது நீதியின் அளவே இரக்கத்தின் அளவாகவும் இருக்குமானால், பாவசங்கீர்த்தனம், குருத்துவம், நற்கருணை முதலான இரக்கம் நிறைந்துள்ள நமது இரட்சணிய முறைகளால் என்ன பயன்? அந்த முறைகளின் அநுதின அனுசரிப்பு, அற்புதங்களில் எல்லாம் மேலான அற்புதமென்று ஆத்துமங்களைப் பற்றி அற்ப அனுபவமுள்ளவர்களுக்கும் தெரியும்.

மேலும் நம் தீய எண்ணங்களின் முடிவு இன்னதென்றும், நமது பலவீனத்துக்கும், அறியாமைக்கும் ஆரம்பம் யாதென்றும் நமது ஆண்டவருக்கு நன்றாய்த் தெரிந்திருப்பதால், அவர் நமக்குப் பயங்கரமான நடுவராயிராமல், தாயும் தகப்பனுமாயிருக்க வேண்டும். இதனாலேயே, ""தேவ நீதியில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. அவரது இரக்கத்திலிருந்து நான் எதிர்பார்க்கிற அளவு, அவரது நீதியிலிருந்தும் எதிர்பார்க்கிறேன்'' என்று குழந்தை தெரேசம்மாள் சொல்வாள். இது வேதசாஸ்திரப் படிப்பினைக்கு முழுவதும் ஒத்திருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டிலும், மகிமைப் பிரதாபம் நிறைந்த நமது அரசரின் நீதியிலும், நடுநிலையிலும் என் விசுவாசம் எந்த அளவுக்கு உறுதிப்படுகிறதோ, அதே அளவுக்கு நான் பிரசங் கிக்கிற அவரது இரக்கத்திலும் என் விசுவாசம் உறுதிப்படுகிறது. ஏனெனில், நீதி என்று சொல்லும்போது கண்டித்தல், தண்டித்தல் என்று மாத்திரம் எப்போதும் அர்த்தமாகாது. ஆனால் நடு, நியாயம் என்று அர்த்தம் கொள்ளும். ஆதலால் சர்வேசுரன் நீதியுள்ளவராயிருக்கும் காரணத் தாலேயே வேளைக்கு வேளை பரிதாபமும், பட்சமும் காட்டி, வேறு வேளைகளில் கண்டித்தல், தண்டனையைக் காட்டுவது அவசியம் என்பேன். ஆனால் உண்மையில், சிலுவையில் அறையுண்ட இந்தச் சர்வேசுரன், நாம் இந்தப் பூலோகப் பரதேசத்தில் இருக்குமளவும், கோபத்துக்கல்ல, இரக்கத்துக்குத்தான் அதிக சார்புள்ளவராயிருக் கிறார்.

இதை எண்பிப்பதற்கு வெகு சாதாரணமான ஓர் அத்தாட்சி வேண்டுமா? இதை வாசிக்கிறவன் ஒரேயொரு சாவான பாவத்தைக் கட்டிக் கொண்டவன் என்று வைத்துக்கொள்வோம். சர்வேசுரன் தயை தாட்சணியமற்றுக் கண்டிப்பாயிருக்கிறவர் என்றால், இந்த ஆத்துமம் ஏன் அதற்கு நியாயமாய் வர வேண்டிய நரக தண்டனையை இன்னும் அடையாமலிருக்கிறது? இரட்சணிய போதகத்தால் உண்டாகிற அரிய ஆசீர்களையெல்லாம் ஏன் இன்னும் சுகித்துக் கொண்டிருக்கிறது? ஆனால் மரணம் வந்து நம் கண்ணை மூடினதும், நாம் நித்திய நதியின் அக்கரையில், மகா உன்னதமானவரின் நீதி யாசனத்துக்கு முன் நிற்கும்போது நடக்கப் போவது வேறுதான். அப்போது இரக்கத்தின் அலுவல் தீர்ந்து போயிற்று. நிகரற்ற நீதியே நமது பாகமாகும்; இப்போது இவ்வுலகிலோ, ""குற்றம் பெருகின இடத்தில் வரப்பிரசாதம் அதிமிகப் பெருகிற்று'' (உரோ.5:20); இரக்கமும் பெருகிற்று.

புதுமைப் பாடுபட்ட சுரூபம் என்று மிகவும் நேர்த்தியான ஒரு சரித்திரம் உண்டு. அதன் பாதத்தினடியில் மெய்யாகவே பச்சாத் தாபப்பட்ட பெரும் பாவி ஒருவன் பாவசங்கீர்த்தனம் செய்துகொண் டிருந்தான். அவன் செய்திருந்த பாவங்களின் கனத்தையும், கணக்கையும் கண்டு, குருவானவர் அவனுக்கு மன்னிப்புக் கொடுக்க சற்று யோசித்தார்; ஆனால் அவன் சிந்தின கண்ணீரால் மனமிளகி, ""நான் உனக்கு மன்னிப்புக் கொடுக்கிறேன், இனிமேலும் தவறிப் போகாத படி எச்சரிக்கையாயிரு'' என்றார்.

சில நாட்கள் சென்று, அவன் திரும்பி வந்தான். ""சுவாமி, தைரியமாய்ப் போராடினேன். ஆனால் பலவீனமாயிருந்த ஒரு சமயம் தவறிப் போனேன். உடனே சர்வேசுரனோடு சமாதானம் செய்து கொள்ளும்படி தாழ்மையாய் இங்கு வந்திருக்கிறேன்'' என்று சொன் னான். குருவானவர், ""அது முடியாது, இந்தத் தடவை உனக்குப் பாவப் பொறுத்தல் கொடுக்க முடியாது'' என்றார். ""ஆனால் சுவாமி, என்பேரில் இரக்கமாயிருங்கள்! என் ஆத்துமம் நாட்பட்ட கனமான வியாதிக்குப் பிறகு இன்னும் மிக பலவீனமாயிருப்பதை நினைத்துக் கொள்ளுங்கள். இரக்கமாயிருங்கள், நான் சொல்வது எதார்த்தம் தான்'' என்று சொன்னான். வெகுநேரம் யோசனை செய்து, அவனைக் கடூரமாய்க் கண்டித்தபிறகு, குருவானவர் இந்தத் தடவையும் பாவப்பொறுத்தல் கொடுத்தார்.

அவன் மெய்யாகவே பச்சாத்தாபப்பட்டான். ஆனால் வெகு காலம் அவன் தன் தீர்மானத்தில் உறுதியாயிருந்த பின்னரும் கூட, பல வருடப் பாவப் பழக்கமும், அக்கிரமத்தால் கெட்டழிந்து போன அவன் சுபாவமும் ஒன்றுசேர்ந்து அவனது நல்ல தீர்மானங்களைக் குலைத்து விட்டன. தேவ இஷ்டப்பிரசாதத்தை மீண்டும் அடையும்படி, கபடற்ற மனதோடும், நம்பிக்கையோடும் குருவானவரிடம் விரைந்து போனான். ""இந்தத் தடவை உனக்குப் பாவப்பொறுத்தல் கொடுக் கவே முடியாது. உனக்கு மனஸ்தாபம் இல்லை'' என்று குருவானவர் சொல்லி விட்டார். அவனோ அழுது புலம்பினான், கெஞ்சினான். ""நான் பலவீனன், தீயவனல்ல, பிரமாணிக்கமாய் நடக்கத்தான் ஆசிக் கிறேன்... ஆனால், பாவப் பொறுத்தல் இன்றி, அந்த ஆசையை நிறை வேற்றுவது எப்படி?'' என்று நியாயம் பேசிப் பார்த்தான். ""முடியாது'' என்று குருவானவர் ஒரே உறுதியாயிருந்து, தன்னை இரு கரங்களி லும் பிடித்துக்கொண்டிருந்த பாவியை உதறிவிட்டுப் போக எழுந்தார்.

அப்போது நேசமும், பரிதாபமும் நிறைந்த பெருமூச்சு கேட்கப் பட்டது. இருவரும் உடனே கண்களை உயர்த்தி ஏறெடுத்துப் பார்த்தார்கள். அவர்கள் கண்டதென்ன? சிலுவையில் அறையுண் டிருந்தவரின் நெஞ்சம் துடித்து, கண்களில் நீர் ததும்பி, புதுமை, புதுமை, அவரது வலது கை ஆணியை விட்டுக் கழன்றிருந்தது. அப்போது அவர் அந்த வலது கையால் ஆசீர்வதித்து, ""நானே உனக்கு மன்னிப்பு அளிக்கிறேன். ஏனெனில் நான் என் இரத்தத்தைச் சிந்தியது உன் ஆன்ம இரட்சணியத்திற்காக'' என்று சாந்தமாய்ச் சொல்லக் கேட்டார்கள்.

இது மெய்யாகவே நடந்த சம்பவமா, கதையா என்று ஆராய வேண்டாம். இதில் அடங்கியுள்ள படிப்பினையும், பாடமுமே எனக்குப் பேரானந்தம்! ஆண்டவர் தமது திரு இரத்தத்தை நமக்காக சிந்தினதின் நிமித்தம், அவர் நமது புத்திக்கெட்டாத விதமாய், சாந்தம், தயை, நேசம், உருக்கம், இரக்கமுள்ளவராயிருக்கிறார்.

நம்பிக்கையின்மை பெரும் நன்றிகெட்டதனம்; தன்னைக் கையளித் தலும், கபடற்றதன்மையும் இல்லையென்று அது காட்டுகிறது. பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவிடம் பிள்ளையைப் போல் நடக்கப் பாருங்கள். உங்கள் தப்பிதங்களை ஒப்புக்கொள்ள வேண் டியதுதான். ஆனால் அவைகளின் நிமித்தம் நொந்து நொறுங்கி அதைரியப்படக் கூடாது. நமது ஆண்டவர் உங்கள் பாவங்களை முதலாய்த் தமது மகிமையில் விளங்கவும், உங்களுக்கு நன்மை விளையவும் உபயோகித்துக் கொள்கிறார். அவரைப் பின்பற்றுங்கள். அமலோற்பவக் கன்னிகை நீங்கலாக வேறு எந்த அர்ச்சியசிஷ்டவர் தான் குறைகள் இல்லாதவர்? அந்தக் குறைகளை சேசுவின் இருதயக் காளவாயில் போட்டு, அவைகளோடு உங்களைச் சுட்டெரிக்கும்படி விட்டு விடுங்கள்.

சேசுநாதருக்கும், அர்ச். எரோணிமுஸுக்கும் நடந்த உரை யாடல் உங்களுக்குத் தெரியுமா? ""எரோணிமுஸ், எனக்கு ஏதாவது கொடுக்கப் பிரியமா?'' என்று ஆண்டவர் கேட்டார். எரோணிமுஸ் மறுமொழியாக, ""ஆண்டவரே, நான் எல்லாவற்றையும் உமக்கு ஏற்கெனவே கொடுத்து விட்டேன். என் உயிர், எனது உடமைகள், என் சத்துவங்கள், எனது கஸ்தி சந்தோஷம், எனது ஆத்துமம், எல்லாம் உமக்கே சொந்தம், உமக்கு மாத்திரம் சொந்தம்'' என்று சொன்னார். ""எரோணிமுஸ், வேறு ஏதாவது எனக்குக் கொடு'' என்றார் ஆண்டவர். ""என்ன ஆண்டவரே, என்ன இருக்கிறது? உமக்குச் சொந்தமில்லாதது ஏதாவது என் இருதயத்தின் ஒரு துண்டு முதலாய் உண்டா?'' என்று எரோணிமுஸ் கேட்க, ஆண்டவர் அவரைப் பார்த்து, ""எரோணிமுஸ், எரோணிமுஸ், எனக்கு இன்னும் சொந்தமாகாத ஒன்றைக் கொடு. அதை நீயே உனக்கென்று வைத்துக் கொண்டாய். அது என்னுடையதாக வேண்டும்'' என்றார். ""அது என்ன ஆண்டவரே, சொல்லும், உமக்குப் பிரியமானதைக் கேளும்'' என, ""எரோணிமுஸ், உன் பாவங்களை எனக்குக் கொடு'' என்று ஆண்டவர் பதிலுரைத்தார்.

ஆம், அவைகளை அவருக்குக் கொடு, அவைகளையெல்லாம் அவருக்குக் கையளித்துவிடு; ஒரு வைத்தியனுக்கும், இரட்சகருக்கும் உள்ள கரிசனையோடு அவர் தேடுகிற குஷ்டம் அது. ஆண்டவரே, அவற்றை எப்போதைக்கும் எடுத்துக்கொள்ளும். உமது சிநேகத்தை நம்புகிறேன். உமது இருதயத்தின்மேல் விழுந்து கிடக்கிறேன். உம்முடைய இராச்சியம் வருக என்று சொல்.

இவ்விதம் பேசுவதால், உங்கள் குற்றங்களைத் தொகை யிலாவது, கனத்திலாவது குறைக்கப் பார்க்கிறேன் என்று எண்ண வேண்டாம். தாழ்ச்சியே உண்மையாயிருக்க வேண்டும். இன்னும் அதிகமாய்ச் சொல்ல வேண்டுமாகில், அவருக்கு உங்களை முழு வதும் ஒப்படைத்து விடுங்கள். ஏனெனில் தம்மோடு நெருங்கி உறவாடும்படி உங்களை அழைக்கிற சேசுநாதருக்கு உங்களை விட அதிகத் தெளிவாய் அவை தெரிந்திருக்கின்றன. நீங்கள் நூறு குறைகள் காண்கிற இடத்தில், அவர் ஆயிரம் காண்பார்; ஆயினும் அவர் உங்களை நேசித்துத் தம்மிடம் அழைக்கிறார். மற்ற சிநேகிதர் அல்லது காதலர்களின் விஷயத்தில் நேரிடுவதுபோல், அவருடைய நேசத்துக்கு ஆதாரம் வீண் தோற்றமல்ல, அப்படியிருக்க முடியாது. அது உண்மையில் ஊன்றி நிற்கிறது. பாசாங்கு செய்து அவரை ஏமாற்ற முடியாது. ஆதலால் உன்னிடம் இல்லாததை இருக்கிற தென்று அவர் தவறுதலாய் நினைத்து உன்னை நேசிக்க முடியாது. நீ இருக்கிறபடி, உன்னை நேசிக்கிறார். இதன் நிமித்தமே குழந்தை தெரேசம்மாள், ""ஆண்டவரே, கோர ரூபமான என்னை நீர் நேசிப்பதால் உமக்குள்ள மனச்சாய்வு விபரீதம்தான். ஆனால், எக்காரணத்தைப் பற்றியும் அந்த விபரீத மனச்சாய்வை மாற்ற வேண் டாம். இல்லாவிடில், என் ஸ்தானத்தில் ஒரு சம்மனசை வைத்துப் பார்க்கும் ஆபத்துக்கு ஆளாய்ப் போவேன்'' என்று தைரியமாய் நியாயத்துடன் பேசினாள்.

உலக நட்பு விஷயத்தில் அளவுக்கு மீறிய சகவாசம், முன்பு தெரியாத குறைகளை வெளிப்படுத்தி விடுகிறது. இதன் நிமித்தமே வெறும் வெளித் தோற்றத்தை ஆதாரமாகக் கொண்ட நட்பெல்லாம் நாளடைவில் குளிர்ந்துபோகிறது. ""சேசுநாதருக்கு உன்னைத் தெரிவது போல், வேறு எவருக்கும் தெரியாது. ஆதலால்தான் அவரைப் போல் உன்னை நேசிக்கிறவரும், மன்னிக்கிறவரும் வேறு எவரும் இல்லை'' என்று ஃபேபர் சுவாமி சொல்கிறார். அவர் ஒருவருக்கு மாத்திரம் வியப்பானது எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் புதுமைகள் செய் கிற அர்ச்சியசிஷ்டவர்களிடத்திலும் கூட அவர் இன்னும் பலவீனத் தின் பாதாளத்தைக் காண்கிறார். ஆதலால் சகலத்தையும் அறிகிறவர் பரிசுத்த, பெரிய ஆசைகளைக் கொண்டு திருப்தியடைகிறார் என்று சொல்லவேண்டும். ஏனெனில் அவை எவ்வளவு எதார்த்தமுள்ளவை களாயினும், அவைகளில் அநேகம் காரியத்தில் வெற்றியடையாது. பெரிய இந்த ஆசைகள், வெறும் எண்ணமாயிராமல், எதார்த்த மானவைகளாயிருக்கும் பட்சத்தில், நமது தயாளமுள்ள இரட்சகர் அவைகளைச் சிநேகத்தின் மெய்யான வேலையாக ஏற்றுக்கொள் கிறார். ""நல்ல மனதுள்ளோர்க்குச் சமாதானம்'' (லூக்.2:14). ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று கண்டுணர்ந்து சுகித்தவர்களுக்குச் சமா தானம்! அவரது நுகம் இனிமையானது, அவரது பாரம் இலகுவான தென்று அனுபவத்தால் அறிந்தவர்களுக்கு சமாதானம்! ஆதலால் உனது குறைகளைக் குணப்படுத்த வேண்டுமென்ற ஆசை தன்னிலே நியாயமானதாயிருந்தாலும், அதைவிட அவரது மகிமையை அதிகமாய் நாடு. ""என்னை நினைத்துக்கொள், என்னை மாத்திரம் நினைத்துக்கொள், நான் உன்னையும் உன்னைச் சார்ந்ததெல்லாவற்றையும் நினைத்துக் கொள் வேன்'' என்று சேசுநாதர் அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குச் சொன்னார்.

இதைக் கண்டுணராத அப்போஸ்தலர்கள் மிக அநேக விண்ணப்பங்கள் செய்வதில் நேரத்தையும் பிரயாசையையும் விரயம் பண்ணுகிறார்கள். தாங்கள் களைத்துத் தவித்துப் போன பிறகு மட்டும், ""உம்முடைய இராச்சியம் வருக'' என்கிறார்கள். அவர்களைப் பின்பற்றாதீர்கள். ""உமது இராச்சியம் வருக, உமது சிநேகத்தின், உமது இருதயத்தின், அரசாட்சி வருக'' என்ற ஜெபத்தைச் சொல்லி, உங்கள் அர்ச்சிப்பின் அலுவலையும், அப்போஸ்தலத்துவத்தையும் ஆரம்பியுங்கள். உடனே அவர், ""நானே உங்கள் காரியங்களையெல் லாம் கவனித்துக் கொள்வேன்'' என்று சொல்வார். சேசுவின் திரு இருதய போதகம் பெருந்தன்மையிலும், உறுதியிலும், திடத்திலும், நேர்த்தியிலும் எத்தகைய சிறப்புற்றதென்று இப்போது அறிகிறீர்கள். சகலமும் பரிசுத்த இஸ்பிரீத்துசாந்துவில் உண்மை, சமாதானம், திடன், சந்தோஷமாயிருக்கிற அந்த அடைக்கலத்தினுள் வாழ்ந்து போராடி உழைப்பது எவ்வளவு நல்ல காரியம்! வாழ்வும், தயாள சிநேகமும் தவறாது சுரக்கும் ஊற்றாகிய அந்த இருதயத்திலிருந்து பூரணமாய்ப் பானம் பண்ணுங்கள். அவரிடமே எனது இல்லமும், பள்ளிக்கூடமும், இளைப்பாறுமிடமும், மோட்சமும் இருக்க ஆசிக்கிறேன். அந்த இருதயம் எனக்குப் போதுமானது. ஏழைகளில் பரம ஏழை நான். ஆயினும் அந்த இருதயத்தில் எனக்குப் பயமில்லை.

இரட்சணியம் அடைவது, கடும் உழைப்பும் மிகுந்த சிரம மும் உள்ளது என்று அநேகர் நினைக்கிறார்கள். அதற்கு மாறாய், ஒருவன் தன் ஆத்துமத்தை இழந்து போவது எளிதல்ல என்று நான் நினைக்கிறேன்; ஏனெனில், அவ்விதம் ஆவதற்கு, இரட்சகருடைய கரங்களின் பிடியை உதறிவிட்டு, அவரது இருதயமாகிய இரட்சணியக் கோட்டையிலிருந்து தப்பித்து ஓடிப்போக வேண்டியிருக்கும். ஆத்தும தாகமுள்ள அப்போஸ்தலர்களே, பெருந்தன்மைக்குரிய இந்த போதகத்தை நன்றாகப் பருகிக் கொள்ளுங்கள். இது புதிதான போதகமல்ல. ஏனெனில் சுவிசேஷ போதகத்துக்குப் பின், புதிதானது ஒன்றும் கிடையாது. ஆனால் தேவ திருவுளத்தால், இது இக்காலத்தில், ""சேசுவின் இருதய அரசாட்சி'' என்ற பெயர்கொண்டு, உலக முழு வதையும் அளாவியுள்ள ஞான ஆகாயம் போலிருக்கிறது. இந்த சிநேக அப்பத்தையும், அளவற்ற நம்பிக்கையையும் உண்டு, உங்களைப் போ´த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நமது ஆண்டவராகிய கிறீஸ்துநாதரைப் பற்றிக் குறைவான தப்பெண்ணம் உள்ள அநேகருக்கு இந்த மன்னாவை நீங்கள் கொடுக்கக் கூடும். நீங்களே சிநேகத்தால் பற்றியெரிய வேண்டும். அப்படியானால் தான், மற்ற ஆத்துமங்களிலும் சிநேக அக்கினியைக் கொளுத்தி விடலாம். பலவீனமுள்ள, விகார புத்தி படைத்த பாவிகளிடம் திரு இருதயம் பேசுவது போலப் பேசுங்கள். தமது பாதத்தண்டையில் பணிந்து கிடக்கிற பாவியை நோக்கி, ""நானும் உனக்கு ஆக்கினைத் தீர்வை இடவில்லை. நீ போ, இனி பாவம் செய்யாதே'' என்று அவர் திருவுளம்பற்றினதைக் கேளுங்கள் (அரு.8:11). நீங்கள் அவருடைய சீடர்கள்; உங்கள் எண்ணமும் பேச்சும் உங்கள் குருவின் மாதிரியா யிருக்கப் பாருங்கள்.

குழந்தை தெரேசம்மாள் சொல்லியிருப்பவைகளில் போதகத் திலும், சாதுரியத்திலும் சிறந்த ஒன்றைச் சொல்லி இதை முடிக் கிறேன். ""நான் சாவான பாவமில்லாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதால் மட்டும், ஆண்டவரிடம் என் இருதயம் நம்பிக்கையோடும், சிநேகத்தோடும் உயர்ந்துபோவதில்லை. எவ்வித அக்கிரமம் நான் புரிந்திருந்தாலும் கூட, எனது நம்பிக்கையில் எள்ளளவும் இழந்து போகாமல், மனமடிவுடன், என் இரட்சகரின் கையில் போய் விழு வேன் என்பது நிச்சயம். அவர் ஊதாரிப் பிள்ளையை எவ்வாறு நேசித் தார் என்று எனக்குத் தெரியும். அர்ச். மரிய மதலேனாளுக்கும், விபச் சாரத்தில் அகப்பட்ட ஸ்திரீக்கும், சமாரிய ஸ்திரீக்கும் அவர் சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். ஒருவரும் என்னை அதைரியப்படுத்த முடியாது. ஏனெனில் அவரது தயாளத்திலும், சிநேகத்திலும் தங்கியிருக்கிறேன். கணக்கற்ற என் பாவங்களெல் லாம், எரிகிற உலையில் தெளித்த ஒரு துளித் தண்ணீரைப் போல் ஒரு நொடியில் மறைந்து போகும் என்பது எனக்குத் தெரியும்.''