இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 20-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் குடும்பத்தில் விளங்க வேண்டிய பக்திக்கு மாதிரிகை.

குடும்பங்களின் வாழ்வை புனிதப்படுத்தவும், பெற்றோர்களும் பிள்ளைகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றி, கிறிஸ்தவக் குடும்பங்களில் விளங்க வேண்டிய புண்ணியங்களைக் கடைப்பிடிக்க படிப்பிக்கவும், திவ்விய இயேசு தமது வாழ்நாளில் முப்பது வருடம் நசரேத்தூரில் செலவழிக்க கருணை புரிந்தார். தாய்தந்தையருக்குக் காண்பிக்க வேண்டிய மரியாதை கீழ்ப்படிதலைக் காண்பியாத பிள்ளைகள் பேரில் மிகவும் கண்டிப்பான தண்டனையிட்டிருப்பதை மோசேயென்கிற இறைவாக்கினருக்கு ஆண்டவர் கொடுத்தருளிய பழைய ஏற்பாட்டுச் சட்டத்தில் நாம் வாசிக்கிறோம். தன் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்பட வேண்டும் (வி. பயணம் 21 :17)

தங்கள் பிள்ளைகள் மட்டில் செலுத்தவேண்டிய கடமைகளைக் கவனியாமல் விட்ட பெற்றோர்களுக்கு இதேவிதமாய் பெரிய தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. புதிய ஏற்பாட்டிலும் இயேசுகிறிஸ்து நாதர் அதே கடமைகளை உறுதிப்படுத்தி தண்டனையின் பயத்தாலல்ல, அன்பால் அவைகளை நிறைவேற்றக் கற்பித்தார். இயேசுவின் திருஇரு தயத்துக்கு பல குடும்பங்கள் தங்களை முழுதும் காணிக்கையாக ஒப்புக் கொடுத்திருப்பதால் நசரேத்து வீட்டில் விளங்கின் பக்தியும் புண்ணியமும் இந்த வீடுகளில் விளங்க குடும்பத்தார் தங்களாலான முயற்சி செய்வார் களென்கிற நம்பிக்கையிருக்கிறது. தமது பிதா மட்டிலும் மரியன்னை சூசையப்பர் மட்டிலும் திவ்விய இயேசுவிடத்தில் பக்தி பற்றுதலும் மரியாதை கீழ்ப்படிதலும் பூரணமாய் விளங்கினது. தமது கடமைகளை நிறைவேற்ற அவர் கொண்டிருந்த ஆவலைப் புகழ்ந்து பாராட்டி, நசரேத்தூரில் "அவர் நடத்தின் வாழ்வை அவர் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார்" என்கிற மூன்றே வார்த்தைகளில் விவிலியம் அடக்கியிருக்கிறது.

தமது வெளியரங்க வாழ்வில் திவ்விய இயேசுவின் பிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை ஆசீர்வதித்து தேவ சட்டத்தையும், புண்ணிய அநுசரிப்பையும் அவர்களுக்குப் படிப்பித்தார். அவர்களுக்குத் துர்மாதிரிகையாயிருந்து அவர்களைக் கெடுப்பவர்கள் பேரில் வெகு கண்டிப்பான தண்டனையால் பயம் வருவித்து, அவர்களுடைய மாசற்ற தனத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்தார். இவ்விதமாய்ப் பிள்ளை களுடைய ஆத்துமத்தில் பக்தியையும் கிறிஸ்தவப் புண்ணியங்களையும் எப்படி வளர்ப்பதென்றும், அவர்கள் பேரில் கவனமாயிருந்து தீய தோழர் களின் பாவ சமயங்களிலிருந்து அவர்களுடைய பரிசுத்ததனத்தை எப்படிக் காப்பாற்றுவதென்றும் நமது ஆண்டவர் தாய் தந்தையர்களுக்குப் படிப்பித்தார்.

திருக்குடும்பமானது சொத்து சுகத்தையோ மகிமை பெருமையையோ அநுபவிக்கவில்லை. ஆனால் செபத்தையும், பக்தியையும், மாசற்றதனத்தையும், பிறரன்பையும், இவைகளாலுண்டாகும் பாக்கியத்தையுமே கனமாக எண்ணி மதித்தது. கடவுள் அந்த வீட்டுக்கு எஜமானும் அரசருமாயிருந்தார். சிந்தனை வாக்கு செயல்கள் எல்லாம் சர்வேசுரன் பாரிசமாயிருந்தன. அவர்களுடைய இருதயங்களில் உருக்கமான பக்தி குடிகொண்டிருந்தது. தாய் தந்தையரே , உங்கள் குடும்பத்துக்கு அரசராக இயேசுக்கிறிஸ்துவை ஸ்தாபித்து, உங்கள் வீட்டின் உண்மையான அரசராக அவர் அரசாளும்படி மிக்க கவனம் செலுத்துங்கள். காலையில் எழுந்ததும், சிலுவை வரைந்து உங்களிருதயத்தை இயேசுவின் திருஇருதய பக்கமாய் எழுப்பி, உங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணும் பொருட்டு இந்தப் புது நாளை ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்ததற்காக நன்றியறிந்திருப்பதே உங்களுடைய முதல் கடமையாயிருக்கவேண்டும். உங்கள் செயல்களால் மோட்சத்தில் சம்மாவனையும், ஆண்டவருக்கு மகிமைப் புகழும் உண்டாகும்படியாக உங்கள் அலுவல்களை எல்லாம் இயேசுவின் திருஇருதயக் கருத்துகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் கடைசி நாளாயிருக்கலாம். ஆதலால் பக்தியாலும் செபத்தாலும் நற்செயல்களாலும் ஒவ்வொரு நாளையும் புனிதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் மட்டில் நீங்கள் மிக கவலை கொண்டு அவர்கள் அதிகாலையில் எழுந்ததும் இருதயத்தை இயேசுமரியாயின் பக்கமாய் எழுப்பி ஒரு சிறு செபமாகிலும் செபிக்க கற்றுக்கொடுங்கள். பகற்பொழுதில் அவர்கள் தங்கள் வேதக் கடமைகளைச் சரியாய் நிறைவேற்றி தீய சகவாசத்தைவிட்டு விலகி பாவமில்லாத பாதையில் நடக்கக் கவனமாக இருங்கள். மாலையானபின் குடும்பத்திலுள்ள சகலரும் ஒன்றித்து இந்த இரவில் உங்களை யாதொரு ஆபத்தில்லாமல் காப்பாற்றும் பொருட்டு இயேசுவையும் மரியன்னையையும் நோக்கி வேண்டிக்கொண்டு, நீங்கள் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி பொறுத்தலையடைந்து நல்ல தீர்மானத்தோடு இயேசுவின் திரு இருதய ஆதரவிலும், மரியன்னையின் அடைக்கலத்திலும் தூங்கச் செல்லுங்கள். உணவுக்கு முன்னும் பின்னும் பெற்றோர்கள் பக்தியோடு சிலுவை வரைந்து கொண்டு தாங்கள் உண்ணப்போகிற உணவை திவ்விய இயேசு ஆசீர்வதிக்கும்படி கேட்பார்களாக. இதைப் பார்க்கிற பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்கள் செய்யும் செபத்தோடு தங்கள் செபத்தையும் ஒன்றித்து பக்தியில் வளருவார்கள்.

தேவாலயத்தில் நடைபெறும் வேத சடங்குகளுக்கு மரியன்னையும் சூசையப்பரும் போகத் தவறமாட்டார்கள். திவ்விய குழந்தை இயேசுவையும் தங்களோடு அழைத்துச் செல்வார்கள். கிறிஸ்தவக் குடும்பங்களிலுள்ள பெற்றோர்களனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு தெய்வபக்தியின் முன்மாதிரிகையாயிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறாமல் தங்கள் பிள்ளைகளோடு கோவிலுக்குப்போய் திருப்பலி ஒப்புக் கொடுக்கட்டும். தாய் தந்தையர் செபம் பண்ணாமலும், பக்தியில்லாமலும், தேவநற்கருணை வாங்காமலும், திருப்பலியில் பங்குக் கொள்ளாமலும் இருப்பதைக் காண்கிற பிள்ளைகள் எப்படி பக்தியாயிருக்கக்கூடும்? தாய் தந்தையரிடம் காணப்படும் இந்தத் துர்மாதிரிகை பிள்ளைகளிடத்தில் நன்றாய்ப் பதிந்து பக்திக்குப் பதில் அசட்டைத்தனம் குடும்பத்தில் குடியிருக்கும். குடும்பத்தினருடைய நிர்ப்பாக்கியத்துக்கும் தீமைகளுக்கும் இதுவே அஸ்திவாரம்.

ஒரு பங்கில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்துக்குத் தலைவனான தகப்பன் தன் வேதக் கடமைகளை நிறைவேற்றாமலும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்காமல் அசட்டைத்தனமாய் நடந்துவந்தான். பெற்ற தாய் மட்டும் தன் பிள்ளைகளோடு திருப்பலிக்கு போவாள். ஒருநாள் இப்படிக் கோவிலுக்குப் போகும்போது குடும்பத்தின் மூத்த மகன் தன் தாயை நோக்கி, அம்மா, நான் வளர்ந்து பெரியவனான பிறகு என் தகப்பனார் செய்வதைப்போல நானும் திருப்பலிக்கு போகாமலிருக்கலாமா என்றான். தகப்பனுடைய துர்மாதிரிகையால் பிள்ளைக்கு நேரிடும் பெரிய ஆபத்தைப் பாருங்கள்.

வேதத்துக்கடுத்த கடமைகளை ஒரு குடும்பம் பிரமாணிக்கமாய் கடைப்பிடிக்கும்போது திவ்விய இயேசு அந்தக் குடும்பத்தை ஆசீர்வதிக்கிறார். அது பிறரன்புக்கும் பாக்கியத்துக்கும் இருப்பிடமாயிருக்கிறது. எந்தக் குடும்பத்தில் பக்தியில்லையோ அங்கே ஒரு புண்ணியமுமில்லை. அதற்குப்பதிலாய் சமாதானமின்மை, கீழ்ப்படியாமை,துர்மாதிரிகை விளைகிறது. பரலோகத்திலிருக்கிற நமது பிதாவுக்கு மரியாதை செய்யாத தாய் தந்தையைப் பார்க்கிற பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு மரியாதைக் குறைவாய் நடந்தால் அதனால் ஆச்சரியப்படுவாருண்டோ? பெற்றோர்களே தேவ ஊழியத்தில் சுறுசுறுப்பில்லாமலும், கடவுளை அன்புச் செய்யாமலும் இருப்பதைப் பிள்ளைகள் பார்த்தால் அப்பிள்ளைகள் எப்படி தங்கள் தாய் தந்தையர் பேரில் அன்பு பற்றுதலுள்ளவர்களாயிருப்பார்கள்? பெற்றோர்களே தேவ கட்டளைகளை மீறி நடப்பதாக பிள்ளைகள் அறிந்தால், பிள்ளைகள் கீழ்ப்படியாமல் நடப்பதைப் பற்றி ஆச்சரியப்பட இடமேது? அதற்கு விரோதமாய் தாய்தந்தையர், பக்தி, கற்பு, ஒழுக்கம் முதலிய கிறிஸ்தவப் புண்ணியங்களுக்கு மாதிரிகையாயிருந்து தங்கள் பிள்ளைகளுடைய மாசற்றதனத்தைக் காப்பாற்றிக் கிறிஸ்தவ படிப்பினையில் அவர்களை வளர்க்கக் கவலை கொண்டால் இயேசுவின் திருஇருதயமானது இத்தகைய குடும்பங்களுக்குத் தமது அருட்கொடை களையும் ஆசீர்வாதத்தையும் அளித்து, அக்குடும்பத்தைப் பிறரன்புக்கும் பாக்கியத்துக்கும் இருப்பிடமாக மாற்றும். இயேசுவைப் போல ஞானத்திலும் புண்ணியத்திலும் நல்லொழுக்கத்திலும் பிள்ளைகள் வளருவார்கள். தங்கள் பெற்றோர்கள் கடவுளின் பிரதிநிதிகளென்று அவர்களை மதித்து அன்பு செய்வார்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வார்கள். கடைசியாய் இவர்களே தங்கள் பெற்றோருக்கு ஆறுதலும் மகிமையும் பாக்கியமுமாயிருப்பார்கள்.

தாய் தந்தையரே, நீங்கள் உங்கள் மகனுக்கு பெண் பார்க்கும்போது அல்லது மகளுக்கு கணவன் பார்க்கும்போது முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதென்ன? செல்வமும் மற்ற வெளிக்குணங்களுமல்ல, புண்ணியத்தையும் பக்தியையுந்தான் கவனிக்க வேண்டியது. செல்வமும் வெளிக் குணங்களும் கூடிய சீக்கிரம் அழிந்துபோகும். பக்தியும் புண்ணியமுந்தான் நிலைத்திருக்கும். அவைகளே குடும்பத்திற்கு பாக்கியத்தை விளைவிக்கும். தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் அல்லது கணவன் பார்க்கிறபோது பணத்தையே மட்டும் பார்த்துத் தீர்மானம் பண்ணுகிற குருட்டுத்தனமான தாய்தந்தையரைப் பின் பற்றாதிருக்கக் கடவோம். பல திருமணங்களின் முறிவுக்கு இதுவே காரணம்.

குருப்பட்டத்துக்கு அல்லது துறவற நிலைக்கு ஆண்டவர் தங்கள் பிள்ளைகளை அழைக்கிறதாக கிறிஸ்தவத் தாய் தந்தையர் அறிந்தால் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் எஜமானாகிய ஆண்டவருடைய சித்தத் திக்கு அவர்கள் தடை செய்ய ஒருபோதும் துணியமாட்டார்கள். தங்களை விட அதிக சொந்தமான தங்கள் பிள்ளைகளைத் தேவ ஊழியத்துக்குக் கையளிக்கத் தடை செய்வது பிள்ளைகளுடைய நிர்ப்பாக்கியத்துக்கும், குடும்பத்தில் தேவகோபத்திற்கும் காரணமாயிருக்கும். சுபாவப் பற்றுதலானது எவ்வளவுதான் போராடினாலும், தங்கள் பிள்ளைகளில் ஒன்றை இறை ஊழியத்திற்கு கொடுப்பது எவ்வளவு பெரிய மகிமை, எவ்வளவு பெரிய பாக்கியமென்று இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் எண்ணுவார்கள். இந்த காணிக்கையால் இம்மையில் இயேசுவின் திருஇருதய விசேஷ ஆசீர்வாதத்தையும் மறுமையில் தங்கள் பிள்ளை களோடுகூட நித்திய மோட்ச சம்பாவனையையும் பெற்றுக்கொள்வார்கள்.

வரலாறு.

பிரான்ஸ் நாட்டில் மார்சேய் பட்டணத்தில் மேதகு ஆயர் பெல்லுன்ஸ் என்னும் ஆயர் காலத்தில் ஒரு பயங்கரமான கொள்ளை நோயுண்டாகி பலர் நாள்தோறும் சாகும்படி நேரிட்டது. மரியன்னையின் மினவுதல் சபை மடத்தில் தன் வாழ்நாளெல்லாம் இயேசுவின் திரு இருதயப் பத்தியை அதிகரிக்கச் செய்யும்படி முயற்சி செய்த ஒரு பக்தியுள்ள அருள்சகோதரி இருந்தாள். இவளது முயற்சியால் இயேசுவின் திருஇருதயப் படத்தை ஓர் தூய வெள்ளைத் துணியில் வரைந்து, இயேசுவின் திருஇருதயம் என்னோடு இருக்கிறது, போ, என்கிற வார்த்தைகளைப் படத்தைச் சுற்றி எழுதினார். இதே சாயலான படங்கள் பல வரைந்து பட்டணமெங்கும் ஸ்தாபிக்கவே, கொள்ளை நோயின் அகோரம் தணிய ஆரம்பித்தது. என்றாலும் நோய் இன்னும் முற்றிலும் பட்டணத்தை விட்டு விலகாததால், மேற்சொன்ன பக்தியுள்ள ஆயர் இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி அவருடைய இரக்கத்தை கெஞ்சி மன்றாடினார். நவம்பர் 1-ஆம் தேதி சகல புனிதர்கள் திருநாளன்று தமது ஆளுகைகுருக்களும், விசுவாசிகளும் பட்டணத்தின் பிரதான இடத்தில் கூடும்படி செய்து இயேசுவின் திரு இருதயத் திருநாளை வருடாவருடம் வெகு ஆடம்பரத்தோடு கொண்டாடுவதாக அங்கு கூடியிருந்த அனைவர் பேராலும் மேதகு ஆயர் இயேசுவின் திருஇருதயத்துக்கு வார்த்தைப்பாடு கொடுத்தார். தவிர மனிதர் செய்த சகல பாவாக்கிரமங்களுக்கும் பரிகார முயற்சியையும் வாசித்து தமது மேற்றிராசனத்தை முழுவதும் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுத்தார். அந்த நேரத்திலே கொள்ளை நோய் பட்டணத்தை விட்டு விலகிவிட்டது.

சிந்தனை.

உன் வாழ்நாளெல்லாம் இயேசுவின் திருஇருதயத்தை அன்பு செய்து அவருடைய மகிமை தோத்திரத்துக்காக உன்னை முழுவதும் செலவழிக்க அத்திருஇருதயத்துக்கு காலையில் உன் செயல்களையும், நீ படும் இன்ப துன்பங்களையும் ஒப்புக்கொடு. இயேசுவின் திரு இருதய கருத்துக்கு விரோதமான எதையும் வெறுத்துத் தள்ளி, நீ செய்கிற சகலத்தையும் அத்திருஇருதயத்தின் கருத்தோடு ஒன்றித்து செய். இரவில் தூங்கச் செல்லுமுன் ஒன்றுபடுத்து. உன் ஒவ்வொரு அசைவையும் அத்தனை அன்பு முயற்சிகளாகவும், ஒறுத்தல் முயற்சிகளாகவும் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடு.

இனி வாழ்வது நானல்ல, இயேசுதான். அவரிடத்தில், அவரோடு , நான் வேலை செய்கிறேன், வருத்தப்படுகிறேன் , அன்பு செய்கிறேன், என்று உண்மயாகச் சொல்லக்கூடுமாகில் நமது பாக்கியமே பாக்கியம். தாழ்ச்சியும் சாந்த குணமும் விளங்கும் அன்புக்குரிய இயேசுவின் திரு இருதய மாதிரிகையாக உன் வாழ்வைச் சீர்திருத்தப் பிரயாசப்படு.

செபம்.

இயேசுவின் இனிய திருஇருதயமே! நான் உம்மை அதிகமதிகமாய் அன்பு செய்தருளும்..

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.