இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 19-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் தேவ சந்நிதானத்தை நாம் நினைக்கக் கற்பிக்கிறது.

பாவத்தில் வாழாதபடி நம்மைக் காப்பாற்றித் தேவ ஊழியத்தில் உத்தமவிதமாய் நம்மைத் தூண்டி ஏவ நம்முடைய நல்ல மனதும், நாம் செய்யும் வஞ்சகமில்லாத தீர்மானங்களும் மட்டும் போதாது; ஆண்டவருடைய அருட்கொடையோடு தேவ சந்நிதானத்தின் ஞாபகத்தையும் நமது ஆத்துமத்தில் காப்பாற்றவேண்டும்.

நமது திவ்விய மாதிரிகையாகிய இயேசுக்கிறிஸ்துநாதர் தமது வாழ்நாளெல்லாம் பிதாவின் பார்வையில் செலவழித்தார். அப்போஸ்தலர்களிடத்தில் ஓயாமல் அவரைப்பற்றி பேசுவார். யாதாமொரு புதுமை செய்த பின்னும் பிதாவுக்கு நன்றியறிதல் காண்பித்து அவரை மகிமைப்படுத்துவார். சாத்தான் தம்மைச் சோதிக்கும்போது கடவுளுக்குரிய ஆராதனையையும் ஊழியத்தையும் அதற்கு ஞாபகப்படுத்தி, அதைத் தைரியத்தோடு கண்டிக்கிறார். திருப்பாடுகளின் நேரத்தில் தமது கண்களை பிதாவின் பக்கமாய் எழுப்பி, உமது சித்தத்தின்படி ஆகட்டும் என்று சொல்லுகிறார். தாம் சிலுவையில் சாகும்போது பிதாவைக் கூப்பிட்டு தமது ஆத்துமத்தை அவர் கையில் ஒப்புக்கொடுக்கிறார்.

இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் தங்கள் திவ்விய மாதிரிகையானவரைப் பின்பற்றி ஆண்டவருடைய சந்நிதானத்திலும் அவருடைய பார்வையிலும் தங்கள் வாழ்வை செலவிட வேண்டும். நமக்கு வரும் சோதனைகளை ஜெயித்து கிறிஸ்தவப் புண்ணியங்களைத் தாராள குணத்தோடு அனுசரிக்க உதவிபுரிவதில் தேவ சந்நிதான முயற்சியைவிட அதிக சக்தியுள்ளது எதுவுமேயில்லை. ஒரு சாதாரண மனிதனுடைய சமூகம் முதலாய் நமது கடமையை நாம் நன்றாய்க் கவனித்து நிறைவேற்ற வல்லபமுள்ளதாயிருக்கிறது. ஒரு கண்டிப்பான எஜமானனின் ஊழியர்கள் தங்கள் கடமைகளை அனுசரிப்பதில் கவனக்குறைவாயிருப்பதும், அல்லது வீணான பேச்சிலும் பயனற்ற காரியங்களிலும் நேரத்தைச் செலவழிக்கிறதும் எப்போது? தங்கள் எஜமான் ஆஜராயிருக்கும்போதா? இல்லை, இல்லை. தங்கள் எஜமான் இல்லாதிருக்கும்போது, அவன் தங்களைப் பாராதிருக்கும்போதுதான். ஊதாரிப் பிள்ளை தன் சொந்த வீட்டில் தன் தகப்பன் பார்வையிலிருந்தவரையில் ஒழுங்காய் வாழ்ந்தான். அவரை விட்டுப் பிரிந்ததும் தன் செல்வத்தையெல்லாம் தீயவழியில் செலவழித்தான். மனிதர்களுடைய பார்வை நம்மைத் தீமையினின்று தடுக்க இவ்வளவு சக்தியுள்ளதாயிருந்தால், நமது சிந்தனை, வாக்கு, செயல்களைப் பார்க்கிறவரும், மிகவிரைவில் நமது கண்டிப்பான நியாதியுமாயிருக்கப்போகிற அளவில்லாத சர்வ வல்லபமுள்ள பரலோக இராஜாவாகிய இறைவனுடைய சந்நிதானத்தைப்பற்றி என்ன சொல்லலாம்! அதனால்தான் இந்த தேவ சந்நிதானத்தை நாம் நினையாதபடி தடுக்க சாத்தான் தன்னாலியன்ற முயற்சி பண்ணுகிறது. சாத்தான் இதில் அனுகூலமடையும்போது நமது ஆத்துமத்தின் நித்திய கேட்டை எளிதாய் உண்டுபண்ணலாமென்று அதற்கு நன்றாய்த் தெரியும். தூய ஆவியானவர் , பாவியானவனைப் பற்றி பேசும்போது, "அவன் கண்களுக்கு முன்பாக கடவுள் அவனுடைய வழிகளெல்லாம் அசுத்தமானது, அவனுடைய நினைவு, வார்த்தை , செயல்கள், தீமை நிறைந்தவை என்று சொல்லுகிறார். வேத சாட்சியான புனித இஞ்ஞாசியார் தமது கிறிஸ்தவர்களை நோக்கி, கடவுளை நினையுங்கள், மனது பொருந்தி எந்தப் பாவத்தையும் செய்யமாட்டீர்கள்; ஏனென்றால் கடவுளுடைய நினைவு பாவ வாயிலை அடைக்கிறது" என்றார்.

கெட்ட விஷயத்துக்குச் சம்மதிக்கும்படி பக்தியும் பரிசுத்ததனமுமுள்ள சூசானாள் என்பவரைத் தூண்டி ஏவும்போது, அக்கன்னிகை, நான் கடவுளுடைய சமூகத்தில் துரோகஞ் செய்து நித்திய நியாதிபதியாகிய அவர் கையின் கீழ் விழுகிறதைவிட மனிதர்கள் கையில் அகப்பட்டுச் சாகிறது நலம் என்னும் அழகான மறுமொழி சொல்லி கடவுளுக்குப் பிரமாணிக்கமாயிருந்தாள். சாவான பாவத்தால் கடவுளுக்குத் துரோகம் செய்ய பசாசும், நம்முடைய ஆசாபாசமும் நம்மைத் தூண்டும்போது, கடவுளுடைய சந்நிதானத்தை நினைவுகூர்ந்து, கடவுள் என்னைப் பார்க்கிறார். அவருடைய நீதியான சிம்மாசனத்துக்கு முன் என்னை அவர் உடனே கூப்பிடலாம். அவருடைய கண்ணுக்கு முன்பாக அவரை நான் நிந்திக்கமாட்டேன் என்று உறுதியாய் மறுமொழி சொல்.

பாவத்தினின்று நம்முடைய ஆத்துமத்தைக் காப்பாற்றி பரிசுத்ததனத்தில் நிலைநிறுத்த தேவ சந்நிதான ஞாபகம் இவ்வளவு சக்தியுள்ளதாயிருக்க, கிறிஸ்தவப்புண்ணியங்களை அனுசரித்து தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் சுறுசுறுப்புமுள்ளவர்களாய் நடக்கும்படி நம்மைத் தூண்ட அதன் சக்தி குறையுமா? உத்தம பாதையில் பிரவேசிக்க ஆபிரகாம் என்பவரை கடவுள் அழைத்தபோது, ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு (தொநூ 17 : 1 என்று திருவுளம்பற்றினார். தாவீ தென்கிற தீர்க்கத்தரிசியும் உம் நியமங்களையும் ஒழுங்கு முறைகளையும் நான் கடைபிடிக்கி றேன். ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை (திருப்பாடல்கள் 119 : 168) என்று பாடியிருக்கிறார்.

கடவுளுடைய அருட்கொடைகளும் அவருடைய ஞாபகமுமே வேதசாட்சிகள் தங்கள் பயங்கரமான துன்பங்கள் மத்தியில் பிரமாணிக்கமாயிருக்கும்படி செய்தது.

இயேசுவின் திருஇருதய அன்பர்கள் எல்லோரும் தங்கள் சிந்தனைகளையும் செயல்களையும் பார்க்கிற தேவ சந்நிதானத்தை அடிக்கடி நினைக்கும் படி தங்கள் விசுவாசத்தைத் தூண்டி எழுப்பவேண்டும். பக்தி ஆகாரத்தோடு ஜெபம் பண்ணவும், சுத்த கருத்தோடு வாழவும், அடக்க ஒடுக்கத்தோடு நமது உடலையும் ஐம்புலன்களையும் நடத்தவும், தேவசந்நிதான ஞாபகம் மிகவும் உதவிபுரியும். உன் மேலதிகாரிகளைக் கொண்டு உனக்கு திவ்விய இயேசு உத்தரவு கொடுக்கிறாரென்றும், உன் மீட்புப் பாதையில் உன்னை நடத்துகிற குருக்கள் ஆயர்களிடமும் இயேசுக்கிறிஸ்து இருக்கிறாரென்றும் நினைத்துக்கொள்வாயாகில் கீழ்ப்படிதல் மிக எளிதாயிருக்கும்.

நம்முடைய திவ்விய இரட்சகர் உன்னைப் பார்க்கிறாரென்றும், நீ அனுபவிக்கிற சிலுவைகளுக்கெல்லாம் சம்பாவனை அளிப்பாரென்றும் நீ நினைத்தால் . தாராள குணம் உன்னிடத்தில் பிறக்கும். மனது பொருந்தி கட்டிக்கொள்ளும் குற்றங்களைத் தவிர்க்கவும், உன் வீண் மகிமையையல்ல, சொந்த திருப்தியையல்ல, ஆண்டவருடைய மகிமையையும் அவருடைய அன்பையுமே உன் செயல்களில் தேடவும் முயற்சிப்பாய். உன் கடமைகளை யெல்லாம் உத்தமமாய் நிறைவேற்றி இயேசுவின் திரு இருதய ஊழியத்திலும் அன்பிலும் வாழ்ந்து , பாக்கியமான மரணமடைவாய்.

வரலாறு.

1. இடைக்காட்டூர் திருஇருதயநாதர் கோயில்.

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் என்ற நகரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகான இயேசுவின் திரு இருதய ஆலயம் ஒன்று உள்ளது. இவ்வாலயம் பல ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் மிகவும் பக்தியுள்ள செல்வந்தரான வெளிநாட்டு ஐரோப்பிய பெண்மணி ஒருவரால் கட்டுவிக்கப்பட்டது. அவ்வாலயம் கட்டுவதற்கான முழுச் செலவையும் அப்பெண்மணி யே கொடுத்தார்கள். இவ்வாலயத்தின் உள்ளும் புறமும் தேர்ச்சி பெற்ற கட்டிடக் கலைஞர்களாலும், சிற்பிகளாலும் விலையுயர்ந்த பொருட்களால் விசித்திர வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் அழகிய வேலைப்பாடுகளும், பக்தியூட்டும் விதத்தில் வண்ண வேலைகளும் பார்ப்போர் அனைவரையும் பிரமித்து மெய்மறக்கச் செய்கின்றது.

ஐரோப்பியர் போன்ற வெளிநாட்டினர், உள்நாட்டினர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மகமதியர்கள் இன்னும் பலர் ஜாதி, மத பேதமின்றி இவ்வழகிய ஆலயத்தைத் தரிசித்து ஆசீர்பெற மிக தூரத்திலிருந்து ஆவலுடன் வருகின்றனர். பார்ப்போர் இதயத்தில் பக்தியையும், பரவசத்தையும் வளர்க்கும் இவ்வழகிய ஆலயத்தைத் தங்கள் ஊரில் நடுநாயகமாய் கொண்டிருக்கிற இடைக்காட்டூர் நகரவாசிகளின் பாக்கியமே பாக்கியம்! இயேசுவின் திருஇருதயம் தங்களுக்குச் செய்த இந்த பேருபகாரத்துக்கு நன்றியறிதலாக அவர்கள் திரு இருதயத்தின் மட்டில் காட்டும் பக்தியும் பற்றுதலுமே இதற்கு அத்தாட்சி. மாதாந்திர முதல் வெள்ளி திரு இருதயத்துக்கு மாதாந்திர ஆடம்பரக் கொண்டாட்டம் நடை பெறும். முந்தின இரவு முழுதும் தேவநற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவின் திரு இருதய ஸ்தாபகம். சற்பிரசாதநாதரை இரவு முழுதும் ஒழுங்கு முறையாய் வந்து சந்தித்து, அவருக்கு ஆராதனை செலுத்தி நிந்தைப் பரிகாரம் செய்து, தங்களை முழுதும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறார்கள். அவ்வூர்வாசிகளும் சுற்றுப்பக்கத்திலுள்ளவர்களும் ஆராதனைக்குரிய தேவநற்கருணையை உட்கொண்டு தங்கள் காணிக்கை முயற்சியை புதுப்பிக்கிறார்கள். இடைக்காட்டூரில் அமைந்திருக்கும் இப்பக்திக்குரிய ஆலயத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களனைவரையும் இயேசுவின் திருஇருதயம் அதிகமதிகமாய் ஆசீர்வதித்துக் காப்பாற்றுவாராக.

2. திருஇருதயக் கோவில்.

திருஇருதய ஆலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தில் இயேசுவின் திரு இருதயத்துக்குப் புகழ்ச்சிக்காக கட்டப்பட்ட வேறோர் சிறந்த ஆலயம். இவ்வாலயம் 1888 - ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது மிக அழகான கூட்டுக்கோவில்: மூன்று சாலைகளுள்ளன. இந்த ஆலயத்தைக் கட்டிமுடிக்கத் தேவையான செலவை பங்கு குருவிடம் பக்தியுள்ள ஓர் ஆங்கில துரையவர்கள் கொடுத்தார்கள். இந்த கட்டுமான பணியை நடத்தின் ஆத்தும் இரட்சண்ய ஆவல் பூண்ட பங்கு குரு இத்தேவாலயத்தைப்பற்றி மிக மேலான நம்பிக்கை கொண்டிருந்தார். பிறமதத்தினர் மனந்திரும்ப இந்த இடம் ஒரு பெரிய மத்திய ஸ்தலமாயிருக்க வேண்டுமென்பதும், அநேக ஆத்துமங்கள் பிறமத இருள் நீங்கி கிறிஸ்தவ அருள் ஒளி பெற்று விளங்க வேண்டுமென்பதும் பங்கு குருவுடைய பேராவல். பல குடும்பங்கள் இவ்விடம் வந்து சேர்ந்து திருமுழுக்குப் பெற்றுக் குடியேறவே, இயேசுவின் திரு இருதய ஆசீர்வாதத்தால் தற்போது பாக்கியம் பொழியும் சிறந்த கிறிஸ்தவ கிராமமாக இந்த இடம் விளங்குகிறது.

3. இருதயபுரம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தத் திருஇருதய ஆலயம் ஏழைக் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டது. இந்த கிறிஸ்தவர்கள் பிறமத செல்வந்தர்களிடம் அடிமை வேலை செய்ததால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இயேசுவின் திரு இருதயமானது அவர்களுக்கு ஆறுதலும் உயிருமாயிருக்கும்படி அவர்கள் நடுவில் வீற்றிருக்கத் தயை புரிந்தார். திவ்விய இயேசு இவ்வாலயத்திலிருந்து, வருத்தப்படுகிற நீங்கள் நம்மிடம் வாருங்கள். உங்களுக்கு ஆறுதலாயிருப்போம்; உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்போம்; இவ்வுலகில் இல்லாவிட்டால் மறுவுலகில் உங்களை பாக்கியவான்களாக்குவோம் என்று அழைக்கிறார். இந்த ஏழைக் கிறிஸ்தவர்கள் ஆறுதல் தரும் இந்தத் தேவ தந்தையின் வார்த்தைக்குக் காது கொடுத்து இந்தத் திருஇருதய ஆலயத்தைச் சுற்றிலும் குடியிருந்து, வரவர பக்தியிலும் சுறுசுறுப்பிலும் தொகையிலும் அதிகரித்துவருகிறார்கள்.

சிந்தனை.

நமது இருதயத்தின் உண்மையான அன்பர் இயேசுக் கிறிஸ்துநாதர் ஒருவரே. நம்முடைய இருதயம் அவருக்காக மாத்திரமே உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அவரிடத்திலல்லாமல் வேறெவ்விடத்திலும் யாதொரு இளைப்பாற்றியையும் ஆறுதலையும் அடையமுடியாது.

செபம்.

தேவநற்கருணையிலிருக்கிற இயேசுவின் திரு இருதயமே! எங்களிடத்தில் விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகத்தை அதிகரித்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.