இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 15-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் தேவ வணக்கத்துக்கும் தேவ பயத்துக்கும் ஆசிரியர்.

இயேசுவின் திருஇருதயப் பக்தியானது தேவ அன்பின் பக்தி, அன்புக்கு தேவபயமும் தேவ வணக்கமும் அடித்தளம். இவற்றிலிருந்து தேவ அன்பைப் பிரிக்கமுடியாது. தன் தாய் தகப்பனை உருக்கமாய் அன்புச் செய்கிற குமாரன் அவர்களுக்குச் சகலத்திலும் கீழ்ப்படிந்து மரியாதை செய்து அவர்களுக்கு யாதொரு வருத்தம் வருவியாமலும் அவர்களுடைய துன்பத்துக்கு காரணமாயிராமலும் நடந்து தன்னாலியன்றவரையில் அவர்களின் விருப்பப்படி நடப்பான். திவ்விய மீட்பர் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவருடைய திரு இருதயமானது நடந்து கொண்ட விதத்தைக் கவனித்துப் பார். தமது திவ்விய பிதாவின் மட்டில் எவ்வளவு மரியாதை, எம்மாத்திரம் வணக்கம், ஆராதனை காண்பித்துவந்தார்; தமது பிதாவின் மகிமையைத் தேடுவதிலும், அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்றுவதிலும், தேவ மகத்துவத்துக்கு எது உகந்ததோ அதை எப்போதும் செய்வதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்!

ஆண்டவருக்கு நாம் காண்பிக்கவேண்டிய அன்பைப் பற்றிப் பேசாமல், அவருக்குக் காண்பிக்கவேண்டிய மரியாதை வணக்கத்தைப் பற்றிச் சில கன்னியர் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறதைக் கண்ட புனித மார்கரீத் மரியம்மாள் இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி ஒருநாள் முறையிடுகையில், திவ்விய இரட்சகர் புனிதையை நோக்கி : மகளே, அன்பின் பரிசுத்த பாசத்தால் நீ நமது இருதயத்தை அணுகிவர நாம் உனக்கு ஓர் விசேஷ வரமளிக்கிறோமென்பது உண்மை என்றாலும் நமது அளவற்ற தேவ மீட்பின் மட்டில் மரியாதையும், பயமும், வணக்கமும் இருக்கவேண்டும். ஆதலால் அந்தக் கன்னியர்களுடைய நடபடிக்கை உமக்கு விருப்பமானதுதான் என்று திருவுளம் பற்றினார்.

ஆதலால் தேவ பயமும், மரியாதை, வணக்கமும் நமக்குப் பயனும் தேவையுமானது. ஏனென்றால் ஒரு பக்கத்தில் பாவியானவன் எதிர்பார்க்கிற தீர்வை, நரகம் இவைகளின் பயமும், வேறோர் பக்கத்தில் அளவற்ற மகத்துவமான இரக்கம் நிறைந்த நமது அன்புக்குரிய ஆண்டவர் பேரில் நமக்குள்ள மரியாதை வணக்கமும், பாவத்தைப் பகைத்து வெறுக்க உதவுகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இந்தத் தேவ பயமானது நாம் உறுதிபூசுதல் பெறும்போது நாம் அடைகிற தூய ஆவியின் ஏழுவரங்களில் ஒன்று. இது நம்முடைய புனிதப்படுத்தலுக்கு அடித்தளமாயிருக்கிறது. மெய்யாகவே தேவபயமானது பாவத்திலிருந்து நம்மை விலக்குகிறதுமல்லாமல், நாம் தேவ அருளை அடையவும், கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை அனுசரித்து நமது ஆண்டவருக்கு மாறாத அன்போடு ஊழியம் செய்யவும் நமது ஆத்துமத்தை ஆயத்தப்படுத்துகிறது. ஆனதுபற்றியே தூய ஆவியானவர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர் திருப்பாடல்கள் 112 : 1 என்று திருவுளம்பற்றுகிறார்.

தேவபயத்தில் இரண்டுவிதமுண்டு. ஒன்று தீமையும் கெடுதலுமானது. மற்றொன்று பிரயோஜனமும் அடிமைகளுக்கு உரியது. அவர்களுடைய மனது துர்மார்க்கத்தில் மூழ்கியிருக்கிறது. என்றாலும் அடிமைகளைப்போல் கடூர தண்டனைக்குப் பயந்து குற்றம் செய்யாமலிருக்க முயற்சிப்பார்கள். இதேவிதமாய் சில கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். தேவ நீதியின் கோபாக்கினை தங்கள் மேல் விழுந்து தங்களை எங்கே நரகபாதாளத்திலே தள்ளிவிடுமோவென்று பயந்து பாவத்தைத் தவிர்ப்பார்கள். ஆனால் தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்குவார்கள், ஆனால் பாவத்தின் மேல் பற்றுதல் வைத்திருப்பார்கள். தங்களுடைய நடத்தை கடவுளுக்கு சிறிதளவும் பொருந்தாதென்று அவர்கள் அறிந்திருந்தாலும், ஆசாபாசங்களுக்கும், சாவான பாவங்களுக்கும், தங்கள் வாழ்வைக் கையளிக்க விரும்புவார்கள். இவ்வித அச்சத்தில் தேவ அன்பு என்பது கடுகளவுமில்லாததால் இது தீமையானதுதான்.

நன்மையும் பயனுள்ள தேவபயத்தில் அடிமைகளின் பயம், பிள்ளைகளின் பயம் ஆகிய இரண்டு படிகளுண்டு. அடிமைகளின் பயத்தைக் கொண்டிருக்கிற ஆத்துமமானது பாவத்தைப் பகைத்து அருவருத்துத் தள்ளுகிறது. ஏனெனில் பாவமானது தன்னை மோட்ச சம்பாவனையிலிருந்து விலக்கி முடிவில்லா நரகாக்கினைக்குத் தன்னை ஆளாக்கிவிடுமென்று ஆத்துமம் உணர்ந்திருக்கிறது. இந்தப் பயத்தை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கும் மனஸ்தாபம் அடிமை மனஸ்தாபம் எனப்படும். இந்த மனஸ்தாபம் பாவ கேடுகளை நீக்கவேண்டுமானால் குருவானவரிடமிருந்து ஒப்பரவு ஆசீர்வாதம் பெறுவது அவசியம். ஆனால் பிள்ளைகளின் பயமும் நாம் பாவத்தைப் பகைத்து அருவருக்கச் செய்கிறது. இவ்வித அருவருப்புக்குக் காரணம் நரகாக்கினையல்ல; மட்டில்லாத அன்புக்கு தகுதியான இயேசுவின் திரு இருதயத்துக்குப் பாவமானது துக்கம் வருவிக்கிறதே என்கிற நினைவே இதற்குக் காரணம். தகப்பன் தன்னைத் தண்டிக்கமாட்டாரென்று அறிந்திருந்தாலும், அவருக்குச் சற்றேனும் வருத்தம் வருவிக்கக்கூடிய எதையும் வெகு கவனமாய் விலக்குகிற அன்புள்ள பிள்ளையின் பயம் இதுவே. இந்த நல்ல பிள்ளைக்கு வரக்கூடிய பெரிய கவலை, துன்பம் ஏதென்றால், தன் அன்பார்ந்த நல்ல தகப்பனுடைய இருதயத்துக்கு வருத்தம் வருவித்தேனே என்னும் நினைவுதான்.

இயேசுக்கிறிஸ்துவின் உண்மையான அன்புள்ள உத்தம கிறிஸ்தவர்கள் தாழ்ச்சி வணக்கத்தோடு தேவ சந்நிதியில் வாழ்கிறார்கள். தாங்கள் செபம் பண்ணும்போது மகாத்துமாவாகிய ஆபிரகாம் என்பவரின் மாதிரியாக நான் சாம்பலும் தூசியுமாயிருந்தாலும் நான் என் ஆண்டவரோடு பேசுவேன் என்று வணக்கத்தோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வார்கள். நல்ல கிறிஸ்தவர்கள் மற்ற மனிதர்கள் மட்டிலும் விசேஷமாய் இயேசுவின் பிரதிநிதிகளாகவும் அவருடைய தெய்வீக அதிகாரத்திற்கு பங்காளிகளாகவும் விளங்குகிற குருக்கள் ஆயர்கள் மட்டிலும் சங்கை வணக்கம் புரிவார்கள். இவ்வித உத்தம பற்றுதல்களோடு வாழும்படி இந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவது அவர்களிடத்திலுள்ள உயிருள்ள விசுவாசமேயாகும்.

தேவ பயமில்லாத கிறிஸ்தவர்களுடைய வாழ்வு இதற்கு நேர்மாறானது! தேவ ஊழியத்தில் எவ்வளவு கவனமின்மை , ஞானக் காரியங்களை நிறைவேற்றுவதில் எவ்வளவு தாமதம்! கடவுளுக்கு மிக்க துன்பம் வருவிக்கக்கூடிய சிந்தனை, வாக்கு செயல்கள் எத்தனை? தங்கள் சுபாவ தீய நாட்டங்களுக்கு எவ்வளவு சுலபமாய் இணங்குகிறார்கள்! தனியாகவும், மற்றவர்களோடு சேர்ந்தும் கட்டிக் கொள்ளுகிற பாவாக்கிரமங்கள் எத்தனை? இந்த அக்கிரம் பாவங்களைத் தவத்தால் பரிகாரம் செய்கிறார்களா? தாங்கள் நினையாமுன்னே தானே தங்கள் ஆண்டவருக்கு தாங்கள் கொடுக்கவேண்டிய கண்டிப்பான கணக்கைப்பற்றிச் சிறிதும் கவனிக்கிறார்களா? இவ்விதமாய் வாழ்கிறவர்களைப் பற்றி தூய ஆவியானவர் ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேட்ரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வர் நீதிமொழிகள் 14 : 16) என்று திருவுளம் பற்றுகிறார்.

பெரிய திருத்தூதரான புனித பவுலடியார் விண்ணகத்தின் உன்னத பதவியில் சேர்ந்திருந்தாலும் தன் பழைய பாவங்களைப் பரிகரிக்க மிகக் கடினதபசு செய்துவந்தார். கொரிந்தியருக்கு அவர் எழுதின் முதல் நிருபத்தில் பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன் (1கொரிந்தியர் 9: 27 என்கிறார்

வரலாறு.

புனிதர்கள் அனைவரும் புனித பவுலைப் போல் நடந்தார்கள். புனிதத்திலும் தேவ அன்பிலும் அதிகமாய் விளங்கின புனித தெரேசம்மாள் வாலிபப் பிராயத்தில் சிற்சில உலக சில்லறைப் பற்றுதல்களுக்கும் ஆண்டவருடைய ஊழியத்தில் கவனக்குறைவான தன்மைக்கும் இடங்கொடுத்து வந்தார். ஒருநாள் திவ்விய இரட்சகர் தெரேசம்மாளுக்கு நரகவாசலைத் திறந்து காண்பித்து இதோபார், நீ புனிதவாழ்வுக்கும் புண்ணியப் பயிற்சிக்கும் உன்னைக் கையளிக்காத பட்சத்தில் இந்த பயங்கரமான இடத்தில் உன்னைத் தள்ளுவேன் என்றார்.
தெரேசம்மாள் இதைக்கண்டு எவ்வளவு பயப்பட்டாரென்றால் இந்தக் காட்சியை அவர் ஒருபோதும் மறந்ததேயில்லை. சோதனையால், தான் அலைக்கழிக்கப்படும்போது நரகத்தின் பயங்கரமான காட்சியை நினைவுகூர்ந்து தேவ அன்பானது பாவத்தில் விழாதபடி என்னைத் தடுக்கப் போதாதிருக்கும் பட்சத்தில் நரகத்தின் ஞாபகமாகிலும் நான் பாவத்தில் விழாதபடி என்னைத் தடை செய்யக்கடவது. அன்புக்குப் பாத்திரமான இயேசுவின் திரு இருதயத்துக்கு சொற்ப வருத்தம் வருவிக்கிறதைவிட சாகத் தயாராயிருக்கவும், இந்த நரக பயம் எனக்கு உதவி செய்யக்கடவது என்பார்.

நாமும் நம்முடைய பாவங்களால் நமக்காக நரகத்தில் தயார் செய்யப்படும் இடத்தை அடிக்கடி நினைக்கக்கடவோம். நாம் நமது பாவங்களைப் பரிகரித்து தேவ பயத்தோடு நமது ஆத்துமத்தை மீட்க கருதுவோமாகில் இயேசுவின் திரு இருதய இரக்கத்தால் அந்தப் பயங்கரமான இடத்திலிருந்து நாம் தப்பிப் பிழைப்போமென்பதற்குச் சந்தேகமில்லை .

சாகப்போகிற கிறிஸ்தவர்களின் உறவினர், நோயாளி தன் புத்தி ஞாபகத்தை இழக்குமட்டும் காத்திராமல், தக்க நேரத்தில் குருவானவரைக் கூப்பிடுவது தங்களுடைய முதல் கடமையென்று உணரக்கடவார்கள். நோயாளி புத்தி நினைவோடிருந்தால் நல்ல ஒப்புரவு செய்து கடவுளோடு சமாதானமாய்ப் போகும்படி குருவானவர் உதவி செய்வார். அவனுடைய உறவினர்களும் சாகப்போகிறவனுடைய ஆத்தும் மீட்புக்கு உதவி செய்தவர்களாகயிருப்பார்கள். கண்ணீர், அழுகைப் பிரலாபம் இவை போன்ற உதவியே வெளியடையாளங்களை விட, ஆத்தும ஈடேற்ற உதவியே தங்களுக்கு அவன்பேரிலுள்ள மெய்யான பற்றுதலைக் காட்டும். வயது சென்றவர்கள் மரணத்தருவாயிலிருக்கும் போது நேரத்தோடு குருவானவரைக் கூப்பிடுகிற வழக்கம் அநேக குடும்பங்களிலிருக்கிறது. ஆனால் எட்டு ஒன்பது வயதுள்ள பிள்ளைகள் அல்லது வாலிபர்கள் சாகுந்தருவாயிலிருக்கும்போது குருவானவரைக் கூப்பிட அநேகர் நினைக்கிறதேயில்லை. எட்டு ஒன்பது வயதுப் பிள்ளைகளுக்குக் குருவானவர் தேவையில்லையென்று நினைக்கிறது சரியல்ல. புத்திவிபரம் அறிந்த பிள்ளை சாவான பாவத்தைக் கட்டிக்கொள்ளக்கூடும். முதுமைப் பருவமுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வின் துவக்கத்தை நினைக்கையில் அப்பிராயத்தில் தாங்கள் கட்டிக் கொண்ட அநேக கனமான பாவதோஷங்களை ஞாபகப்படுத்தி, எவ்வளவு சொற்பப் பிராயம், எவ்வளவு பெரிய பாவி என்ற புனித அகுஸ்தீனுடைய வாக்கியத்தைத் தங்களுக்கும் சொல்லிக் கொள்ளலாம். பெரியவர்களுக்குக் குருவானவர் தேவையென்பதைவிட சிறுவர்களுக்கு அதிக தேவையென்று சொல்லவேண்டும். அவர்களுக்கு உத்தம மனஸ்தாபப்படத் தெரியாததால் நித்தியத்துக்கும் அவர்கள் மோசம் போகக்கூடும். தாய் தந்தையர் குருவானவரை நேரத்தோடு கூப்பிடுவதால், தங்கள் பிள்ளைகள் பேரில் தாங்கள் வைத்த உண்மையான அன்பைக் காண்பிக்கிறார்கள். குருவானவர் உடனே வரக்கூடாவிட்டால் தாய் தகப்பன் தங்கள் பிள்ளை உத்தம மனஸ்தாபப்பட உதவி செய்யவேண்டும். இவ்வகையாய் சாகப்போகிற தங்கள் பிள்ளையின் ஆத்துமத்தை மீட்க உதவி செய்யலாம். இயேசுவின் திருஇருதயப் பக்தர்களனைவரும் இந்தத் தீர்மானம் செய்து இதன்படி உறுதியாய் இருப்பார்களாக!

சிந்தனை.

சிலுவையில்லாமல் அன்பில்லை. இது நமது ஆண்டவர் சிலுவை மரத்திலிருந்து நமக்குக் கற்பித்த பாடம். பரிசுத்த பரம திவ்விய நற்கருணையிலிருந்து கொண்டும் இதைத்தான் இப்போதும் கற்பித்து வருகிறார். இந்த அன்புத் தேவதிரவிய அருள்சாதனத்திலிருந்து கொண்டு நம்முடைய வாழ்வு அவருடைய வாழ்வோடு ஒத்திருக்கவேண்டுமென்று மிக ஆசிக்கிறார். அன்புக்கு எல்லாம் எளிது. படைப்புகளுக்கு மேலாய் படைத்தவரையும், தற்காலத்துக்கு மேலாய் நித்தியத்தையும் நீ தெரிந்து கொள்ள அறிகிறவரையில் கடவுளை நீ ஒருபோதும் அன்புச் செய்யமாட்டாய். நமது முழு இருதயத்தையும், பற்றுதல்களையும், ஆசைகளையும், அவருக்குக் கொடுக்கக்கடவோம். அப்படி கொடுத்தால் நம்முடைய வெதுவெதுப்பான இருதயத்தைத் தமது அக்கினியால் பற்றியெரியச் செய்வார். அவருடைய ஊழியத்தில் நம்மைக் கவனகுறைவுள்ளவர்களாக்குகிற மனத்தளர்ச்சியை நீக்கி நம்மை உற்சாகப்படுத்துவார்.

செபம்.

இயேசுவின் இனிய இருதயமே! என் அன்பாயிரும். புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக மன்றாடும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.