இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 16-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் நமது புண்ணிய வளர்ச்சிக்கு மாதிரிகை.

நமது ஞானப் பலவீனத்தை அறிந்திருக்கும் இயேசுவின் திரு இருதயமானது நாம் நாள்தோறும் புண்ணிய நெறியில் நடந்து வளர்ச்சியடையும்படி நமக்குத் திவ்விய மாதிரிகையாயிருக்க அருள் புரிந்தார். அளவில்லாத ஞானமும், புனிதத்தனமும் அவரே என்றாலும், நம்முடைய நலனுக்காக நாம் நடக்கவேண்டிய விதத்தைப் படிப்பிக்கத் தாமே புண்ணிய பாதையில் வளர்ச்சியடைவதாகக் காணப்படச் சித்தமானார். ஆனது பற்றியே இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சி யிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்துவந்தார் லூக்கா 2:52) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.

கிறிஸ்தவர்களனைவரும் இயேசுக்கிறிஸ்துநாதர் பாவனையாக வயதிலும் பலத்திலும் அதிகரிக்க, அதிகரிக்க, புண்ணியத்திலும், ஞானக்காரியங்களிலும் வளர்ச்சியடைய வேண்டும். பிள்ளை வளராமலும் பலவீனமாயுமிருந்தால் அதனுடைய உடல்நலத்தைப் பற்றித் தாய் தந்தையருக்கு கரிசனையுண்டாகும். பல ஆண்டு பள்ளிக்கூடத்தில் படித்தபையன் சற்றும் படிப்பில் முன்னேற்றமடையாமல் முட்டாளாயிருந்தால் ஒன்றுக்கும் உதவாதவனென்று ஆசிரியர் அவனை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். நட்ட மரக்கன்று பல ஆண்டுகாலத்துக்குப் பின்பும் வளர்ச்சியடையாமலிருந்தது போலிருந்தால் விவிலியத்தில் சொல்லப்பட்ட காய்க்காத அத்திமரம் போல் தோட்டக்காரன் நட்ட மரத்தை வெட்டி வெளியே எறிவான். பக்தியில் வளர்ச்சியடையாமலும், புண்ணிய பலன் கொடாமலும் வாழுகிற கிறிஸ்தவர்களுடைய கதியும் இதுவே.
ஆனால் வளர்ச்சியடைவதும் அடையாததும் எப்படித் தெரியும்? புண்ணியப்பயிற்சியில் உண்டாகிற இடையூறுகளை உணருவதினால் நாம் வளர்ச்சியடைகிறதில்லையென்று சொல்ல முடியாது. தங்கள் பாவநாட்டங்களை அடக்கி ஜெயிப்பதில் சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட அதிகமாய்ப் போராட வேண்டியிருக்கும். அவர்கள் சிலசமயம் குற்றங்குறைகளினால் தவறினாலும் தங்கள் முயற்சியால் வளர்ச்சியடைவார்கள். நமது பாவநாட்டங்களோடு தொடர்ந்து போராடி, நமது குற்றங்களின் எண்ணிக்கையை நாளுக்குநாள் குறைத்து, விழிப்பாயிருந்து, செய்யவேண்டிய ஞான முயற்சிகளைச் சரிவரச் செய்து, தக்க ஆயத்தத்தோடு அருட்சாதனங்களைப் பெற்று, நம்மை முழுதும் தேவ ஊழியத்துக்குக் கையளிப்பதிலேதான் புண்ணிய அபிவிருத்தி அடங்கியிருக்கிறது. தீய எண்ணத்தாலும் வேண்டுமென்கிற கவனக்குறைவாலும் இல்லாமல் பலவீனத்தால் மாத்திரம் கட்டிக் கொண்ட குற்றங்களிடமாயும் நாம் பலன் அடையலாம். தவறினேன் என்று அறிந்த மாத்திரத்தில் இயேசுவின் திருஇருதயத்துக்கு முன்பாக நமது இருதயத்தை எழுப்பி, நம்பிக்கையோடும் அன்போடும் அவருடைய மன்னிப்பைக் கெஞ்சி மன்றாடி, இனி ஒருபோதும் பாவத்தைச் செய்யாமலிருக்க என்னாலான முயற்சி செய்வேனென்று முடிவு செய்வதே சிறந்த பலனை அடைய எற்றவழியாகும்.

தலைமை திருத்தூதரான புனித பேதுரு தன்பேரில் மிதமிஞ்சின நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் ஆண்டவரை மும்முறை மறுதலித்த பிறகு அவர்பட்ட மனஸ்தாபமும் வெட்கமும் அவருடைய இருதயத்தில் எம்மாத்திரம் குடி கொண்டிருந்த தென்றால் அவர் திருச்சபைக்குத் தலைவராகவும், இயேசுக்கிறிஸ்து நாதருக்குப் பதிலாளியாகவும் உயர்த்தப்பட்டாலும், தான் எல்லா திருத்தூதர்களிலும் கடைசியென்கிற தாழ்மையான எண்ணம் அவருடைய உள்ளத்தைவிட்டு ஒருபோதும் நீங்கவில்லை. இதேவிதமாய் நம்முடைய பலவீனத்தால் நாம் கட்டிக்கொண்ட பாவதோஷங்கள் நம்மிடத்தில் தாழ்ச்சியையும், விழிப்பையும், உருக்கமான ஜெபப்பற்றுதலையும் விளைவித்து, நமது பாவாக்கிரமங்களைப் பாராமல், நமது மேல் எப்போதும் இரங்கி, நமது பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அன்பு செய்கிற கடவுள்மட்டில் நன்றியையும் தாராள குணத்தையும் உண்டுபண்ணவேண்டும். ஆனால் வேண்டுமென்று மனது பொருந்தி கட்டிக்கொள்ளுகிற பாவங்களையும், சோம்பல் அசட்டைத்தனத்தையும், பகைத்து வெறுத்துத் தள்ளவேண்டும். இவைகளே தேவ அருட்கொடைக்கு முழுதும் தடையாயிருந்து நம்மை நித்திய ஆபத்துக்களாக்குகின்றன.

தங்கள் ஆத்தும் மீட்பு விஷயத்தில் நல்ல மனமுமில்லாத கிறிஸ்தவர்களைப் பின்பற்றி நாம் நடக்கலாகாது. இவர்கள் புண்ணியத்தில் வளர்ச்சியடைவதற்குப் பதிலாய் அதே பாவங்களை மனது பொருந்தி கட்டிக்கொண்டு, மனஸ்தாபப்படாமலும், இனி ஒருபோதும் பாவத்தைச் செய்யமாட்டேனென்கிற உறுதியான தீர்மானம் இல்லாமலும், ஒப்புரவு செய்து நாளுக்குநாள் பாவ வழியில் அமிழ்ந்து வாழ்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறதற்குப் பதிலாய் புனித பேதுருவையும் சகல புனிதர்களையும் பின்பற்றக்கடவோம். அவர்களைப்போல் செபத்தினின்றும், அருட்சாதனங்களிலிருந்தும் நம்முடைய ஞான வளர்ச்சிக்கு தேவையான ஞானத்தைரியத்தைப் பெற்றுக்கொள்வதோடுகூட நித்திய மோட்ச சம்பாவனைகளையும் சுதந்தரித்துக்கொள்வோம்.

இயேசு சபையை நிறுவின் புனித இஞ்ஞாசியார் உரோமாபுரியில் இயேசு சபைக்கு தலைவராயிருந்த காலத்தில் சேசுசபை மடத்தில் பதனீரா என்னும் பெயர் கொண்ட பக்தியும் சுறுசுறுப்புமுள்ள ஒரு சிறுவனிருந்தான். இவன் நாள்தோறும் குருமார்களுக்கு பூசைக்கு உதவி செய்த பிறகு சில சொற்ப வேலைகளைச் செய்துவந்தான். இவன் தன்னைச் சேசு சபையில் ஏற்றுக் கொள்ளும்படி புனித இஞ்ஞாசியாரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். புனித இஞ்ஞாசியார் வயது முதிர்ச்சியாலும் நோயினாலும் கோலைப் பிடித்து மெதுவாக நடப்பார். உடனே புனிதர் சரி, நீ இந்த ஊன்றுகோல் உயரம் எப்போது வளருவாயோ அப்போது சபையில் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்றார். சிறுவன் பேசாமல் போய் தனக்குள் ஆலோசித்தான். புனித இஞ்ஞாசியார் அறையிலில்லாத போது உள்ளே சென்று புனிதர் பார்க்காதவிதமாய் அந்த ஊன்றுகோலில் நாள்தோறும் ஒரு சிறு துண்டை அறுத்து எடுத்து அதன் உயரத்தைச் சிறிது சிறிதாக குறைத்துவிட்டான். பல நாள் இப்படி நடந்தது. புனிதர் ஒன்றும் சந்தேகப்படவில்லை. நாள் செல்லச் செல்ல ஊன்றுகோலின் அளவு குறைந்து ரிபதனீராவுடைய உயரத்தின் அளவு வந்துவிட்டது. பையன் திரும்பவும் புனித இஞ்ஞாசியாரிடம் கேட்டான். புனிதர் : இல்லை, இல்லை, நீ இன்னும் இந்த ஊன்றுகோல் உயரம் வளரவில்லை என், பையன், இல்லை, இல்லை, எங்கே அளந்து பாருங்கள், நான் வளர்ந்துவிட்டேன் என்றான். புனித இஞ்ஞாசியார் அளந்து பார்த்து அப்பையனுக்குச் சேசுசபையில் சேர இருந்த ஆவலைக்குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டார். சரி, நாம் சொன்ன வாக்குப்படி உன்னைச் சேசுசபையில் ஏற்றுக்கொள்கிறோமென்று ஏற்றுக்கொண்டார்.

வளர்ச்சி குறைவாயிருந்தாலும் அதை விடாமுயற்சியோடு தினமும் செய்துவந்தால் எப்படி அநுகூலம் அடைவோமென்பதற்கு இந்த உதாரணமே எடுத்துக்காட்டு. உன் துர்க்குணத்தின் சொற்பப் பங்கை, உன் அசட்டைத்தனத்தின் சிறு பாகத்தை நாள்தோறும் குறைப்பாயேயாகில் பதனீரா என்பவர் தான் மேற்கொண்ட காரியத்தில் சிறந்து விளங்கினார். இயேசு சபையில் படிப்பிலும், தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கினது போல் நீயும் புனிதனாவாய் என்பது உறுதி.

வரலாறு.

இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாநகரின் தேவாலயத்துக்கு இன்று நமது நினைவால் புனித பயணமாய்ப் போவோமாக. இந்தத் தேவாலயம் 1864 - ம் வருடம் கட்டப்பட்டது. என்றாலும், பிற்காலத்தில்தான் இது பெரிதாகக் கட்டப்பட்டு அழகுப்படுத்தப்பட்டது. இயேசுவின் திருஇருதயப் பக்தியில் எப்போதும் சிறந்து விளங்கியவர்களான தூத்துக்குடி நகரவாசிகள் அத்திரு இருதயத்திலிருந்து ஏராளமான அருட்கொடை களை அடைந்ததோடுகூட, புனித சவேரியாருடைய பிரமாணிக்கமுள்ள ஞானப்பிள்ளைகளாகிய அந்தப் பகுதியினர் தங்கள் இருதயத்தில் உயிருள்ள ஆழ்ந்த விசுவாசத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

1917-ம் வருடம் அம்மாநகரின் தேவாலயத்தில் சிறந்ததோர் பத்து நாள் தியானப்பிரசங்கம் நடைபெற்றது. பிரசங்கம் முடிந்த கடைசிநாளில் ஓர் விசேஷ வழிபாடு நிறைவேறியது. அந்த வழிபாட்டு நிகழ்வுக்கு திருச்சிராப்பள்ளி ஆயர் அவர்கள் வந்திருந்தார்கள். தூத்துக்குடி நகரவாசிகளெல்லோரும் தங்கள் தங்கள் குடும்பத்தை இயேசுவின் திருஇருதயத்துக்கு அர்ப்பணமாக ஒப்புக்கொடுத்தார்கள். இந்த வைபவக் கொண்டாட்டம் இயேசுவின் திரு இருதயப் பக்தியை திரும்பவும் புதுப்பிக்க ஏதுவாயிருந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் இயேசுவின் திருஇருதய சாயலான அழகிய படம் ஒன்று வெகு மரியாதையோடு நிறுவப்பட்டது. குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட நேரிட்டால் அவர் படுக்கையருகில் அவருக்கு ஆறுதலாக திரு இருதயப் படம் ஒன்று வைக்கப்பட்டிருப்பதை இன்றும் அங்கு காணலாம். நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுபோக நேரிட்டாலும் அங்கேயும் இயேசுவின் திருஇருதயப்படம் அவன் படுக்கையருகே தொங்குகிறதைக் காணலாம். பக்தியுள்ள கிறிஸ்தவன் இயேசுவின் திரு இருதய நாதரின் அருகிலிருந்து கொண்டே சாகவிரும்புகிறான். சாகுமுன் தன் அன்பராயிருந்து, இறந்தபின் தனக்கு நியாயாதிபதியா யிருக்கிறவருடைய அருகில் சாகிறது எவ்வளவு பாக்கியம்!

நீதி தீர்ப்பிடுகிற இயேசுவின் முன்னிலையில் திருஇருதயப் பக்தி மற்ற நாட்களை விட தூத்துக்குடி கிறிஸ்தவர்களின் திருஇருதயத் திருநாளன்று அதி உன்னதமாய் விளங்குகிறது. பெருவிழாவிற்கு ஆயத்தமாக நவநாள் செபமும் நவநாள் பிரசங்கமும் திரு இருதய ஆலயத்தில் நடந்தேறி வருகிறது. நவநாட்களின் கடைசி மூன்று நாட்களும் விசேஷ ஆடம்பரமாய்க் கொண்டாடப்படுகிறது. மாலைப்பொழுதில் பிரசங்கம் தொடங்குமுன் சகல கிறிஸ்தவர்களும் முழந்தாட்டியிட்டு தங்கள் இருகரங்களையும் சிலுவை அடையாளமாக விரித்து பொறுத்தருளும் கர்த்தாவே என்கிற செபத்தைப் பாடி, சேசுவின் திருஇருதய இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறார்கள். இக்காட்சியைக் கண்டவர்களுடைய இருதயம் இளகி நல்லுணர்வைப் பெறுகிறது. திரு இருதயத் திருநாள் மாலையில் ஆராதனைக்குரிய தேவநற்கருணையைத் தேவாலயத்துக்கருகிலுள்ள புனித லூர்து மாதா கெபிக்கு வெகு ஆடம்பரச் சிறப்போடு கொண்டுபோய் விலையேறப்பெற்ற ஆடை ஆபரணங்களாலும், கண்ணைப் பறிக்கும் பிரகாசம் வீசும் தீப்வர்க்கங்களாலும் அலங்காரமாய் ஜோடிக்கப்பட்ட திருப்பீடத்தின் மீது ஸ்தாபித்திருக்கிறார்கள். ஆசீர்வாதத்திற்கு முன் இயேசுவின் திருஇருதயத்துக்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் அர்ப்பண முயற்சி செபத்தை உரத்த சப்தத்தோடு குருவானவர் வாசிக்கிறார். மிகுந்த பக்தியோடும் அன்பின் ஈடுபாட்டோடும் ஒவ்வொரு வார்த்தையாய் எல்லாக் கிறிஸ்தவர்களும் உச்சரிக்கிறார்கள். இந்தச் செயல்முறை இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் அவர்களுக்கு ஆழ்ந்த பற்றுதலை வெள்ளிடைமலை போல் காண்பிக்கிறது. அன்பு நிறைந்த இயேசுவின் திரு இருதய ஆதரவில் வாழ்ந்து சாகிற கிறிஸ்தவர்கள் பாக்கியவான்கள்.

சிந்தனை.

அழகான தீர்மானம் செய்வதிலும் பக்தியைப்பற்றிப் பேசும்போது காதுக்கினிய வார்த்தைகளை உபயோகிப்பதிலும் புண்ணியம் அடங்கவில்லை. மாறாக சகலத்தையும் தேவ சித்தத்தின்படி நன்றாய் செய்வதிலும், நம்மை நாமே ஜெயிப்பதிலும், நமது ஒறுத்தலையும், ஜெபங்களையும், இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுத் தலிலும்தான் அடங்கியிருக்கிறது.

"ஓ திவ்விய இருதயமே! உமது ஊழியத்தில் நான் வாழ்ந்து சாக விரும்புவதால் என் பெயரை உமது திரு இருதயத்தில் ஆழமாய் எழுதிவைத்தருள உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஆனால் தாழ்ச்சியுள்ள இருதயமே உமது திரு இருதயத்துக்குள் நுழையக்கூடுமென்று எனக்கு நன்றாய்த் தெரியும். நமக்குத் தீர்ப்புச் செய்யப்போகிற இயேசுவின் திரு இருதயத்தின் மேல் விடாத பக்தியாயிருந்து சாகிறது எவ்வளவோ இனிமையானது.

செபம்.

எங்கள் மீதுள்ள அன்பால் பற்றியெரியும் இயேசுவின் திரு இருதயமே! எங்கள் இருதயத்தை உமது அன்பால் பற்றியெரியச் செய்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.