திவ்ய நற்கருணை உட்கொள்வதற்கான ஆசை

தேவ இஷ்டப்பிரசாத நிலை திவ்ய நற்கருணை உட்கொள்வதற்கு அவசியமானதும், இன்றியமையாததுமான நிபந்தனை ஆகும். அதன் பின் புண்ணியங்களும், தேவ பக்தியும் விரும்பத் தக்கவையாக இருக்கின்றன. ஆனால் நல்ல சித்தமும், திவ்ய நற்கருணையின் மீது ஒரு தணியாத ஆசையும் அவற்றின் இடத்தை எடுத்துக் கொள்ளத் தகுதியுள்ளவையாக இருக்கின்றன. பரிதாபமான விதத்தில் மக்கள் அரைகுறை மனதோடுதான் பெரும்பாலும் திவ்ய நன்மை வாங்கச் செல்கிறார்கள். தாங்கள் பெறப் போவது இன்னதென்று தெளிவாக அறியாமலும் இருக்கிறார்கள். எனவே, இந்தத் தவறைத் தவிர்க்கும்படியாக, திவ்ய நன்மை வாங்குவதற்குப் பொருத்தமான நிபந்தனைகளோடு, திவ்ய நற்கருணையின் முழுப் பலனையும் நமக்குப் பெற்றுத் தருவதில் முதன்மையானதாகவும் முழு முக்கியத்துவம் உள்ளதாகவும் இருக்கிற ஒரு காரியத்தைப் பற்றி இப்போது சிந்திப்போம்.  அதுதான் ஆசை ஆகும்.

சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் வர வேண்டுமெனில் நாம் பசியாயிருக்க வேண்டும்; பட்டினியால் நாம் மயங்கி விழாதிருக்க விரும்பினால், உணவு உண்ண வேண்டும் என்ற உந்துதலையும் ஆசையையும் நாம் உணர வேண்டும். ஏனெனில் உண்ணுதல் என்னும் செயல் ஒரு தொல்லையாகவும், புலன்களோடு தொடர்புள்ளதாகவும் இருக்கிறது. மேலும் சாப்பிட்ட உணவு ஜீரணமாவது பெரும்பாலும் சோர்வும் வேதனையும் தரும் ஒரு செயலாக இருக்கிறது. இதன் காரணமாக, நம் நல்ல சர்வேசுரன், உணவை நாம் விரும்பும்படியாக, நமக்குப் பசியைத் தந்திருக்கிறார்.  உணவுகளை நோக்கி நாம் ஈர்க்கப் படும் படியாக அவற்றிற்கு அவர் விதவிதமான நல்ல சுவைகளையும் தந்திருக்கிறார்.

அவ்வாறே திவ்ய நற்கருணை உட்கொள்வதற்கும் ஒரு பசி உண்டு.  அதுதான் சேசுகிறீஸ்துநாதர் மீது நாம் கொள்ளும் தாகம் ஆகும். இந்த தாகம் அல்லது ஆசையில் பல நிலைகள் உள்ளன. ஆனாலும் எந்த அளவுக்கு இந்த ஆசை தீவிரமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நாம் உட்கொள்ளும் திவ்ய நன்மை நமக்கு அதிகப் பலன் தருவதாக மாறும்.  ஆரோக்கியமான ஓர் உடல் உணவை ஏற்றுக்கொண்டு அதை எளிதாகச் சீரணிக்கின்றது.  அதே வேளையில் நோயுற்ற ஓர் உடல் அந்த உணவிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளாமல் போகிறது.

திவ்ய நன்மையின் மீதான இந்தப் பசியை சர்வேசுரன் தாமே நம் இருதயங்களுக்குத் தர வேண்டும்.  இல்லையயன்றால் நாம் அவரை உட்கொள்ள ஒருபோதும் விரும்பவே மாட்டோம். நமக்கும் சர்வேசுரனுக்கும் இடையில் வார்த்தைக்கெட்டாத ஒரு பெரும் தூரம் உள்ளது. அது எவ்வளவு அகன்றது என்றால், வரப்பிரசாதமானது ஒரு அவசரமான பசியை நமக்குள் உருவாக்கவில்லை என்றால், ஆண்டவருடைய பரிசுத்த பந்தியை அண்டிச் செல்ல நாம் துணியவே மாட்டோம்.  இந்தப் பசியோ சேசுக்கிறீஸ்துநாதருடைய எல்லையற்ற மகிமையை நாம் மறக்கச் செய்து, நமது சொந்தத் தேவையைத் தவிர வேறு எதையும் நாம் நினையாதபடி செய்து விடுகிறது.  நாம் யார், சர்வேசுரன் யார் என்பதை நாம் மறந்து விடும்படியாகவும், நம் சொந்தப் பரிதாப நிலையை மறந்து விட்டு, அவருடைய நன்மைத்தனத்தை மட்டுமே நாம் பார்க்கும்படியாகவும், நமது ஆத்துமம் தமது வரப்பிரசாதத்தினால் கிரகித்துக் கொள்ளப்படும்படி அவர் செய்து விடுகிறார்.

மனிதன் ஆசையினால் உயிர் வாழ்கிறான்.  தான் நீண்ட காலமாக விரும்பித் தேடுவதைத் தவிர வேறு எதையும் தேடுவதோ செய்வதோ இல்லை. ஒரு தெய்வீக ஆசை திவ்ய நன்மை உட்கொள்ளும்படி நம்மை வற்புறுத்துகிறது. இந்த ஆசை எவ்வளவு பலமுள்ளது என்றால், பயத்தால் இறந்து விடாமல் பரலோக பூலோக அரசரை நாம் நெருங்கிச் செல்ல அது நமக்குத் தைரியம் தருகிறது.  கடவுளின் மீதான இந்தப் பசி, நமது கண்மூடித்தனமான துணிச்சலை மன்னித்து விடுகிறது. பட்டினியால் தான் இறந்து விடாதபடி, மற்றவர்கள் அறியாமல் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துக் கொள்கிற பரிதாபத்திற்குரிய ஒரு ஏழை நிச்சயமாக ஒரு திருடன் இல்லை.  அவனது தேவை அவனை மன்னித்து விடுகிறது.

ஆனால் இந்தப் பசியை நான் உணரவேயில்லையே என்று நீ ஒருவேளை சொல்லலாம். நீ திவ்ய நற்கருணையை ஒருபோதும் உட்கொள்ளாதிருந்தால் அது சாத்தியம்தான்.  ஆனால், நீ அதை உட்கொள்கிறாய் என்றால், சர்வேசுரன் உனக்குள் அதன் மீதான ஆசையைத் தூண்டியிருக்கிறார் என்றுதான் நான் உனக்குப் பதில் கூறுவேன்.  ஏனெனில் கொஞ்சமாவது உனக்கு ஆசை இல்லையயன்றால், திவ்ய நன்மை வாங்க நீ துணியவே மாட்டாய்.

எந்த ஒரு ஏழையான மனிதன், தான் அழைக்கப்படாத பட்சத்தில், பசியால் தன் உயிர் போகும் தறுவாயிலும், தன் அரசனுடைய பந்தியில் அமரத் துணிவான்? அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  ஆயினும் சர்வேசுரனிடமிருந்து நம்மைப் பிரிக்கிற தூரம் மிக மிக அதிகமானது; அப்படியானால் நாம் திவ்ய நற்கருணையில் அவரை அணுகி வருவதற்கு எப்படித் துணிகிறோம்?  உண்மையில், பூமியில் உள்ள எந்த ஒரு பெரிய மனிதனிடமும் நாம் செய்யத் துணியாத ஒரு காரியத்தை சேசுநாதரிடம் செய்ய நாம் துணிய வேண்டுமென்றால், அதற்கு முன்பாக சேசுநாதர் தமது எல்லையற்ற தயாளத்தில், நம் கண்களைத் திரையிட்டு மறைப்பது அவசியமானதாக இருக்கிறது.   நம்மையே நாம் அவருடைய தெய்வீக விருந்துக்கு அழைத்துக் கொள்கிறோம்.

எனவே திவ்ய நன்மை உட்கொள்வதற்கான உண்மையான காரணம் ஒருவன் அதன் மீது கொள்ளும் பசி ஆகும்.  இந்தப் பசி அதிகத் தீவிரமானதாகவும், அவசரமானதாகவும் ஆகும்போது நாம் அடிக்கடி திவ்ய நற்கருணை உட்கொள்ளச் செல்கிறோம். நீ ஞான ரீதியில் வளர்ச்சியடையவில்லை என்றால், நீ அதிக பலமுள்ளவனாக ஆகவில்லை என்றால், நீ போதுமான அளவுக்கு சாப்பிடவில்லை, அல்லது பசியில்லாமல் சாப்பிடுகிறாய் என்றுதான் அர்த்தம்.  உன்னையே தூண்டியயழுப்பு; நேசத்தின் பசியை உன்னால் உணர முடியாத போதும், எப்பாடு பட்டாவது உன் தேவையை அடையாளம் கண்டு கொள்.


அவர் மருத்துவர், நாமோ நோயாளிகள்!

ஏனென்றால் திவ்ய நற்கருணையின் மீது நாம் எப்போதும் உணரக் கூடிய ஒரு பசி உள்ளது, அதன் மீது நாம் எப்போதும் கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆசை உள்ளது.  அதுதான் தன் வைத்தியருக்காகக் காத்திருக்கிற ஒரு நோயாளியின் ஆசையாகும்.  காய்ச்சலால் உடல் கொதிக்கிற நிலையில் ஒரு வாய் தண்ணீருக்காகக் கெஞ்சுகிற மனிதனின் தாகம் அது.  இவ்வாறே மோசமாகக் காயப்பட்டிருக்கிற ஆதாமின் பரிதாபத்திற்குரிய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் நம் ஆண்டவரின் சன்னதிக்கு வந்து, அவரிடம், “ஆண்டவரே என்னிடம் உள்ளதெல்லாம் விசனமும், துன்பமுமே; தேவரீர் வந்து எனக்கு உதவும்! என் கத்தோலிக்க ஜீவியத்தின் பரிதாப நிலையைக் கண்டு என் மீது கோபங் கொள்ளாதேயும்.  எனக்கு பலம் தேவையாயிருப்பதால்தான் உம்மை நான் உட்கொள்ள ஆசிக்கிறேன். ஆண்டவரே, என் தாழ்நிலையின் பேரில் இரக்கமாயிரும்!” என்று அவரிடம் கூறுகிறோம். ஏறத்தாழ தேவநற்கருணை உட்கொள்ள விரும்புகிற அனைவருடைய ஜெபமும் இத்தகையதுதான்.

உதாரணத்திற்கு, மனந்திரும்பிய இந்தப் பாவியைக் கவனித்துப் பார். இப்போதுதான் பாவசங்கீர்த்தனம் செய்து விட்டு வந்திருக்கிறான். கஷ்டப்பட்டு, தன்னையே பலவந்தப்படுத்தி இழுத்து வந்திருக்கிறான். தேவ பந்திக்கு அவன் அனுப்பப்பட்டு வந்திருக்கிறான்.  அவ்வாறு அவன் அனுப்பப்பட்டது சரியானதே. எனக்கு அப்பம் தாரும் என்று அவன் நம் ஆண்டவரிடம் கேட்கிறான். “நான் மிகவும் பசியாயிருக்கிறேன். இந்த அப்பம் இல்லாவிடில், அகன்றதும் எளிதானதுமான தீமையின் பாதையிலிருந்து இப்போதுதான் திரும்பி வந்திருக்கிற நான், கிறீஸ்தவ வாழ்வின் கடினமான, ஒடுக்கமான பாதையில் எப்படிச் செல்ல முடியும்?” என்று அவரிடம் அவன் கேட்கிறான்.  இந்தப் பசி நல்லது, அது ஆண்டவரை மகிழ்விக்கிறது. அது அவரை மகிமைப்படுத்தி, நமது உண்மையான நிலைக்கு நம்மைத் தாழ்த்துகிறது.  இந்த ஏழை மனிதனின் பசியை நீ அடிக்கடி உணர வேண்டும், திவ்ய நற்கருணை உட்கொள்ள உனக்குள்ள உரிமையை நீ எப்போதும் முன்னிறுத்த வேண்டும். உனக்கு அது தேவையாயிருக்கிறது.

ஆத்தும பரிசுத்ததனத்துடன் கூடிய இந்தத் தேவையானது, நல்ல முறையிலும், பயனுள்ள முறையிலும் திவ்ய நற்கருணை உட்கொள்ளப் போதுமானதாக இருக்கிறது என்பதற்கு பரிசுத்த சுவிசேஷத்தில் ஒரு தெளிவான சாட்சியம் காணப்படுகின்றது. ஓர் அரசன் அற்புதமான ஒரு திருமண விருந்துக்கு ஆயத்தம் செய்திருந்தான். ஆனால் பரிசுத்த வேதாகமத்தின் விளக்கவுரையாளர்கள் கூறுவது போல, இந்தத் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பரிசுகள் தர வேண்டியிருக்கும் என்பதால், அந்த விருந்துக்கு வரவில்லை.  எனவே, அரசன்  சாலைகளிலும், தெருவோரங்களிலும் உள்ள ஏழைகளை அழைத்து வரும்படி தன் ஊழியர்களை அனுப்பினான். அவர்களும் சென்று பிச்சைக்காரர்களையும், நோயாளிகளையும் அழைத்து வந்தார்கள். சேசுநாதர் ஆங்காரமுள்ளவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் பதிலாக இத்தகையவர்களையே தேர்ந்து கொள்கிறார்.  ஆனால் அவர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பாக அதன் வாசலில் அரசனின் ஊழியர்களால் தரப்படும் திருமண ஆடையை அணிந்துகொள்ள வேண்டியிருந்தது என்பதை நன்றாக மனதில் குறித்துக்கொள்.  அரசன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தான். வழக்கமாக எப்போதும் வருத்தத்தோடு இருக்கும் அந்த முகங்களில் இன்று சந்தோஷம் நிரம்பியிருப்பதைக் கண்டு தானும் மகிழ்ச்சியடைகிறான். ஆயினும், விருந்தாளிகளில் ஒருவன் தன் பழைய ஆடைகளை அணிந்தபடியே இன்னமும் அங்கிருப்பதை அவன் காண்கிறான். இதை அந்த ஏழை தனக்குக் காட்டுகிற மரியாதைக் குறைவாகக் கருதிய அவன் அந்த மனிதனை வெளியேற்றும்படி கட்டளையிட்டான். இந்த மனிதன் இவ்வாறு நடத்தப்பட உண்மையாகவே தகுதியுள்ளவனாக இருக்கிறான். திருமணப் பரிசுகள் கொண்டு வர வேண்டும் என்று அவனிடம் யாரும் கேட்கவில்லை. மாறாக தகுதியுள்ள முறையில் உடையணிந்திருக்கும்படி மட்டும்தான் அவனிடம் கேட்கப்பட்டது. ஏழைகளாகவும், ஊனமுற்றவர்களாகவும் இருந்தாலும் வெண்ணாடை அணிந்திருந்த காரணத்தால் மற்றவர்கள் மண்டபத்திலேயே இருந்தார்கள். அவர்களுடைய பரிதாப நிலையே, திருமண விருந்தில் பங்குபெறும் உரிமையை அவர்களுக்கு அளித்தது.

நாமும் ஏழைகளாகவும், துன்பப்படுகிறவர்களாகவும் இருக்கிறோம். இதன் காரணமாக நமது ஆசைகள் அதிகத் தீவிரமானவையாக இருக்கக் கடவன. நம் காயங்களை நம் ஆண்டவரிடம் காட்டும்போது, அவற்றைக் குணப்படுத்துவதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்! அவரது இவ்வுலக வாழ்வின்போது, அவர் பணக்காரர்களோடும், வலிமை படைத்தவர்களோடும் இருப்பதை நாம் வெகு அபூர்வமாகவே காண்கிறோம். இரண்டு அல்லது மூன்று பரிசேயர்களின் அழைப்புகளை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அப்படி அவர் ஏற்றுக் கொண்டதற்கு அடிப்படைக் காரணம், அவர்களது ஆங்காரம், மற்றும் அறிவுக் குறைபாடுகளிலிருந்து அவர்களைக் குணப்படுத்த முடியும் என்று அவர் நம்பியதுதான். ஏனெனில் மற்றொரு விதத்தில் அவர்களும் நோயாளிகளாகத்தான் இருந்தார்கள். ஆனாலும் ஏழைகளின் வீடுகளுக்கோ சேசுநாதர் மகிழ்ச்சியோடு சென்றார்.  அங்குள்ளவற்றைக் கண்டு அவர் அருவருப்புக் கொள்ளவில்லை.

எனவே அவரிடம் வா! பலத்திற்காகவும், கொஞ்சம் தைரியத்திற்காகவும் அவரிடம் வா! “ஆண்டவரே, இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது.  உமது இரக்கத்திற்கு என்னை நான் கையளிக்கிறேன்!” என்று அவரிடம் சொல். மீண்டும் மீண்டும் அவரிடம் வா! நீ தகுதியுள்ளவனாக உன்னைக் கருதுவதால் அல்ல, மாறாக, அவர் உனக்குத் தேவை என்பதால் அவரிடம் வா.

“ஆண்டவரே, எங்கள் அனுதின அப்பத்தை எங்களுக்கு இன்று அளித்தருளும். நாங்கள் ஏழைப் பிச்சைக்காரர்களாக இருக்கிறோம். எந்த விதத்திலும் உம்மிடம் உரிமை பாராட்ட முடியாதவர்களாக இருக்கிறோம்.  ஆனாலும் நீரே எங்களை அழைப்பதால் உம்மிடம் வருகிறோம்” என்று நம்பிக்கையோடு அவரிடம் சொல்லுங்கள். ஆண்டவரும் உங்களைத் தயவோடு ஏற்றுக் கொள்வார்.  தாமே உங்களை அழைத்திருப்பதால், உங்களை அவர் தள்ளிவிட மாட்டார். மாறாக, தமது கரங்களில் உங்களை ஏற்றுக்கொண்டு, தமது வரப்பிரசாதம், நன்மைத்தனம் ஆகியவற்றின் பொக்கிஷங்களைக் கொண்டு உங்களைச் செழிப்பாக்குவார்.