அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரை நோக்கி பதிமூன்று மன்றாட்டுகள்.

1. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, அமலோற்பவ கன்னிகையின் அடைக்கலத்தில் பிறந்தவரே! உமது தூய கற்பினால் தூய்மையான லீலியே, ஐந்து வயதிலேயே உமது கன்னிமையை தூய கன்னிகைக்கு அர்ப்பணித்தீரே! சிலுவை அடையாளத்தில் அலகைகளைச் சிதறடித்தவரே, நாங்களும் தூய கன்னி மரியாளின் மட்டில் உத்தம் பக்தி உள்ளவர்களாகும் படிக்கும், நரக சர்ப்பம் எங்களுக்குச் செய்கிற எல்லா தீங்கும் விலகும் படிக்கும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

2. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உலக மாயையை விலக்குவதற்காக உயர்குல மகிமையையும் செல்வங்களையும் துறந்து, தூய அகுஸ்தின் சபையில் உட்பட்டவரே, நாங்களும் உலக நாட்டங்களை வெறுத்து நடக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

3. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, இயேசு கிறிஸ்துவுக்காக உமது இரத்தத்தைச் சிந்த விரும்பி, தூய பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டவரே, நாங்களும் தவ முயற்சிகளை மேற்கொண்டு தூயவராக ஒழுக எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

4. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உமது அத்தியந்த தாழ்ச்சியாலும் நீர் உம்மை உலகத்திற்கு மறைத்துக் கொண்டாலும் உலகத்திற்கெல்லாம் உமது திறமை சாமர்த்தியமும் உமது தூய தன்மையும் விளங்கும்படியாய் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவரே, நாங்களும் தாழ்ச்சி எனும் புண்ணியத்தைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

5. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, சத்திய வேதபோதகத்தைப் பரப்புவதற்கு இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவரே, அனைத்து மொழிகளையும் பேசவும், வியப்புக்குரிய அருங்குறிகளைச் செய்யவும் வரம் பெற்றவரே, நாங்களும் இறைவார்த்தையை நல்ல மனதோடு கேட்டு பலன் அளிக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

6. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, இறையன்பின் மிகுதியால், திருப்பாலனை உம் கரங்களில் ஏந்தப் பேறு பெற்றவரே திவ்விய நற்கருணை திருவருட்சாதனத்தை நாங்கள் நல்ல ஆயத்தத்தோடு பெறும்படிஎங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

7. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, திவ்விய நற்கருணையிலே உண்மையாகவே இயேசுக்கிறிஸ்து எழுந்தருளி இருப்பதை எண்பிக்கும் படியாய், ஒரு விலங்கே திவ்விய நற்கருணையை ஆராதிக்கும்படி செய்தவரே, நாங்கள் திவ்விய நற்கருணையில் இருக்கிற இயேசுக்கிறிஸ்துவை உயிருள்ள பற்றுறுதியோடு ஆராதிக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

8. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, பதிதர்களும் பாவிகளும் உமது போதகங்களைக் கேளாததினால், ஆழ்கடலில் மீன்கள் உம் அழைப்பிற்குப் பணிந்து, உம் மறையுரையை விருப்புடன் கேட்கும்படி செய்தீரே, நாங்கள் இறைவார்த்தைக்கு முழு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

9. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உம்மீது பக்தியுள்ளோர்கள் எல்லாரையும் அனைத்து ஆபத்துகளினின்று மீட்கிறதுமல்லாமல், மரணத்தினின்று முதலாய்ப் பாதுகாக்கிறவரே, எங்கள் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வரக்கூடுமான எல்லா தீமைகளையும் குறிப்பாக முடிவில்லா மரணத்தையும் நாங்கள் விலக்கும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

10. மாசில்லாதவர்களுக்குப் பாதுகாவலரே, ஒரு பெண் பிள்ளையின் நற்பெயரைக் காப்பதற்காக, அவருடைய பூங்குழந்தையே பேசும்படி செய்தவரே, உலகினில் நாங்கள் படும் அனைத்து துன்பங்களிலும் திடமுள்ளவர்களாயிருக்கும் படிக்கும் எங்கள் ஆன்மாவை எந்தப் பாவக்கறையும் இல்லாமல் காப்பாற்றும் படிக்கும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

11. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உம் தந்தைக்கு அவதூறைப் போக்கவும் மரணத் தீர்வையை நீக்கவும் பதுவைப்பட்டணத்திற்கு மறையுரையாற்றிக் கொண்டிருந்த போது அற்புதமாய் லிஸ்பன் பட்டணத்திலும் இருந்தவரே, நாங்கள் எங்களுக்கு வருகிற அனைத்து நிந்தைகளையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு எங்கள் பகைவர்களை மன்னித்து அன்பு செய்யும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
1 பர.அரு.திரி.

12. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உமது செப தவங்களினாலும் ஆன்மமீ்ட்பில் உமக்குள்ள ஆவலினாலும் உமது தூய போதகத்தினாலும் ஆயிரமாயிரம் பதிதர்களையும் பாவிகளையும் மனந்திருப்பினவரே , நாங்கள் முழுதும் மனந்திரும்பி இறைவனுக்கு என்றென்றைக்கும் சொந்தமாகும் படி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
1 பர.அரு.திரி.

13. பதுவைப்பதியரான அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரே, உலக மீட்பரைப் போல உமது வாழ்நாள் முழுமையும் ஆன்மாக்களை ஈடேற்ற செலவழித்தவரே, அடி யோர் உமது நல் மாதிரிகையைப் பின்பற்றி எங்கள் வாழ்நாளில் திரு நூல்களை ஆவலோடு அடிக்கடி வாசித்து நல்ல மறையுரைகளைக் கேட்டுணர்ந்து நேரிய வழியில் நடந்து, நீர் உமது அந்திவேளையில் இயேசு, மரியைத் தரிசித்து இறந்தது போல நாங்களும் எங்கள் மரணத் தருவாயில் இயேசு மரியின் வணக்கத்துக்குரிய நாமங்களை உச்சரித்து உயிர் துறக்கும் படிக்கும் உம்மைப் பின்பற்றி அவர்களை என்றென்றைக்கும் துதிக்கும் படிக்கும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
1 பர.அரு.திரி.

ஆமென்.