நோயுற்ற குழந்தைக்கு ஆசியுரை

வீடு நுழைகையில்

குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழும் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக.

(குரு திருவுடை அணிகிறார்)

குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

(குரு தனிப்பட்ட முறையில் குழந்தையையும் பெற்றோரையும் வாழ்த்தலாம்.)

நற்செய்தி லூக்.18:15-17 

குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து. "சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்: அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று சீடர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(குரு தமது வலக் கையை அல்லது தோள்பட்டைத் துகிலின் நுனியைக் குழந்தையின் தலையில் வைக்கிறார்.)

மன்றாடுவோமாக:

சிறியோர் மேலும் எளியோர் மேலும் கனிந்த உள்ளம் கொண்ட ஆண்டவராகிய இயேசுவே, நோயுற்றிருக்கும் இக்குழந்தையை(களை) ஆசீர்வதியும். துன்ப வேளையில் இவருக்கு ஆறுதலாயிரும். இத்துன்பத்தைத் தாங்க வலிமையும், மன வேதனையில் நம்பிக்கையும் தாரும். இக்குழந்தையில் உமது புகழ் விளங்க உடல் நலனைத் தயவாய் அளித்தருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்: ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவி உங்கள்

அனைவரையும் ஆசீர்வதித்து என்றும் காப்பாராக.

எல்: ஆமென்.

(குழந்தையின் மேலும், மற்றோர் மேலும் குரு தீர்த்தம் தெளிப்பார்.)