குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
நற்செய்தி மத்.8:14-17
இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார். பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல, அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, 'அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பதிலுரைப் பாடல் திபா. 86:1-2; 3-4; 1-12; 13,16.
பல்லவி: ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்.
1. ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும். - பல்லவி
2. நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும். - பல்லவி
3. ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும். உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன். என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன். - பல்லவி
4. ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும். உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். - பல்லவி
குரு: மன்றாடுவோமாக:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே, உம்மை விசுவசிப்போர்க்கு ஆறுதல் நீரே. அன்று பேதுருவின் மாமியாரைச் சந்தித்ததுபோல், நோயுற்றிருக்கும் உம் ஊழியராகிய ……….. ஐச் சந்திக்கத் தாழ்மையோடு வந்திருக்கிறோம். நீர் இவரோடு தங்கி இவருக்குத் துணையாயிரும். இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமக்கு நன்றி கூறவும் உமது நன்மைத்தனத்தைப் பறைசாற்றவும் வருவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
(குரு தமது வலக் கையை நோயாளியின்மீது நீட்டி ….. )
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்குக் காவலாயிருக்க உங்களுக்குப் பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.
எல்: ஆமென்.
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்களை ஆசீர்வதித்து, நோயினின்று விடுவிப்பாராக.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)