வீட்டோடிருக்கும் முதியோர்மீது ஆசியுரை

குறிப்பு: 

மூப்பினால் தளர்வுற்றவர்கள் தம் வீட்டோடிருப்பார்கள் அல்லது முதியோர் இல்லங்களில் தங்குவார்கள். இந்நிலையிலும் அவர்களைக் குடும்பமும் திருச்சபைச் சமூகமும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர்கள் உணர்ந்து உள அமைதி அடையச் சகோதர அன்பும் உதவியும் அவர்களுக்குத் தேவை. இந்த ஆசியுரையின் உட்கருத்து இதுவே. அவர்கள்மேல் நமக்கு நன்மதிப்பும் நன்றியுணர்வும் உள்ளது எனக்காட்டும் வகையில், அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற அளப்பரிய கொடைகளுக்காகவும், இறையருளால் அவர்கள் புரிந்துள்ள நற்செயல்களுக்காகவும் நாம் அவர்களோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இங்குத் தந்துள்ள சடங்கு முறையிலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, திருப்பலியில் இறைவாக்கு வழிபாட்டிற்குப்பின், அல்லது திருப்பலியின் முடிவில், அல்லது முதியோருக்கு வீட்டில் நற்கருணை வழங்கும் சடங்கில் இந்த ஆசியை அளிக்கலாம். குருவும் திருத்தொண்டரும் மட்டுமல்ல, திருப்பீடப் பணியாளர் நிலை பெற்றவரும் நற்கருணை வழங்கத் தனி அதிகாரம் பெற்ற அசாதாரணப் பணியாளரும் கீழே தரப்பட்ட மாற்றங்களோடு இந்தச் சடங்கைப் பயன்படுத்தலாம்.

திருப்பலிக்கும் நற்கருணை வழங்கும் சடங்கிற்கும் புறம்பே ஆசி வழங்கும் முறை

தொடக்கச் சடங்கு

1. குடும்பத்தார் அல்லது இறைமக்கள் சமூகம் கூடியிருக்க, இறைப்பணி முதல்வர் (இ.ப.மு)சொல்வதாவது:

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே

எல்: ஆமென்.

2. இ.ப.மு. குரு அல்லது திருத்தொண்டரானால்:

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல்: உம்மோடும் இருப்பதாக.

(இத்தகைய வேறு பாடங்களையும் சொல்லலாம்.)

3. இ.ப.மு. குருவோ திருத்தொண்டரோ அல்ல என்றால், அவர் சொல்வதாவது:

சகோதரரே சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோம். சிமியோன் அவரைக் கையில் ஏந்திக்கொண்டபோது, முதியவரால் அவர் தாங்கப்பெற்றார்; முதியவரோ அவரால் ஆளப்பெற்றார். 

எல்: என்றென்றும் இறைவா போற்றி.

(திருநூலிலிருந்து வேறு பொருத்தமான பாடங்களைப் பயன்படுத்தலாம்.)

4. இ.ப.மு.முதியோரையும் கூடி நிற்போரையும் நோக்கிக் கூறுவதாவது:

அன்புச் சகோதரரே, முதுமை இறைவனின் கொடை. அதை நன்றியுடன் ஏற்கவேண்டும். வயது முதிர்ந்த இச்சகோதரர்கள் தங்கள் அனுபவம். கிறிஸ்துவ வாழ்க்கை என்னும் செல்வங்களை நமக்குப் பகிர்ந்தளிக்கலாம். அவர்களோடு சேர்ந்து நாமும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவர்களது நம்பிக்கையும் உறுதி பெறுமாறு இறையருளை வேண்டுவோம்.

நற்செய்தி

5. இப்பொழுது கூடி நிற்போரில் ஒருவர் அல்லது இ.ப.மு. திருநூல் பகுதி ஒன்றை வாசிப்பார். எ.கா. லூக்கா 2:25-32

லூக்கா எழுதிய தூய நற்செய்தியைக் கேட்போம்.

எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்; "ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப் பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

(அல்லது)

   லூக்கா 2:36-38

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


6. அல்லது வேறு வாசகங்கள்:

சீராக் 3:2-18 (பெற்றோர்பால் கடமை.) 

சீராக் 25:6-8;13-16 (முதியோர் / பெண்கள்) 

ஞானா 4:8-12(நீதிமான்களின் எதிர்பாராத முடிவு)

திபா 71:1-18(முதியோரின் மன்றாட்டு).

திபா 126:1-6 (விடுதலைக்காக மன்றாடல்).

பிலிப் 3:20-41(மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்). 

7. இ.ப.மு. சுருக்கமாக மறையுரை ஆற்றுவார்.

மன்றாட்டுகள்

8. (பொது மன்றாட்டு தொடர்கின்றது; கீழுள்ளவற்றில் இ.ப.மு. பொருத்தமானவற்றைத் தேர்ந்துகொள்ளலாம்; மேலும் முதியோருக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வேறு மன்றாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.) 

1.  எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தை தம் அருளால் நம்மை எல்லா வயதிலும் புதுப்பித்து, இளமையளித்து, உறுதிப்படுத்து கின்றார்; “எங்களைக் கைவிடாதேயும் ஆண்டவரே” என அவரை இரந்து மன்றாடுவோம்.

எல்: எங்களைக் கைவிடாதேயும் ஆண்டவரே.

2. அன்புத் தந்தையே, இஸ்ரயேலின் மீட்பை எதிர்பார்த்திருந்த சிமியோனுக்கும் அன்னாவுக்கும் உம் திருமகனைக் கருணைகூர்ந்து காட்டினீர்; நம்பிக்கையால் உமது மீட்பைக் காணவும், பரிசுத்த ஆவி அளிக்கும் ஆறுதலால் அகமகிழவும் இந்த உம் அடியாருக்கு அருள்வீராக.

எல்: எங்களைக் கைவிடாதேயும் ஆண்டவரே.

3. இரக்கமுள்ள இறைவா, உடலிலும் உள்ளத்திலும் துன்புற்று வருந்துவோருக்குப் புத்துயிர் ஊட்டி அமைதி அளிப்பதாக உம் திருமகன் வழியாக வாக்களித்தீர்; இவ்வடியார்கள் தங்கள் சிலுவையைப் பொறுமையோடு சுமக்க அருள்வீராக.

எல்: எங்களைக் கைவிடாதேயும் ஆண்டவரே.

4. எங்களைப் பராமரித்தாளும் பரமனே, கருணைக் கடலாகவும், அருள்கொடை வள்ளலாகவும் உம்மை என்றும் காட்டுகின்றீர்; இந்த உம் அடியார்கள் தம் உற்றார் உறவினரிடமிருந்து எப்பொழுதும் அன்பும் ஆறுதலும் பெற அருள்வீராக.

எல்: எங்களைக் கைவிடாதேயும் ஆண்டவரே.

ஆசியுரை

9. இ.ப.மு. குரு அல்லது திருத்தொண்டரானால், முதியோர் அனைவர்மீதும் கைகளை விரித்து. அல்லது ஒவ்வொருவர் தலைமீது கை வைத்து, அல்லது ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவைக் குறியிட்டுச் சொல்வதாவது:

ஆண்டவரே, எங்கள் இறைவா, உலக வாழ்வின் மாறுதல்களுக்கிடையில் உம்மீது நம்பிக்கை வைக்கவும் நீர் எத்துணை நல்லவரெனச் சுவைத்து உணரவும் இவ் விசுவாசிகளுக்கு அருள் வழங்கியுள்ளீர்; பல்லாண்டுகளாக இவர்கள்மீது உம் கொடைகளைப் பொழிந்துள்ளீர்; எனவே உம்மைப் போற்றுகின்றோம். இவர்கள் இளமை உணர்வால் புதுப்பிக்கப் பெறவும் உடலாற்றல்கள் திடம் அடையவும் தம் இனிய வாழ்க்கை முறையால் அனைவருக்கும் நன்மாதிரியாகத் திகழவும் வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(அல்லது)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலேதான்; இவ்வடியாருக்கு நீடிய வாழ்வைத் தந்தீர்; இவர்கள் நம்பிக்கையிலும் நற்செயலிலும் நிலைத்திருக்கச் செய்தீர்; எனவே உமக்கு நன்றி கூறி உம்மைப் போற்றுகின்றோம்.

ஆண்டவரே, இவர்கள் தம் உற்றார் உறவினரின் பரிவன்பால் ஆறுதல் பெறவும், உடல் நலத்தால் மகிழவும், நோயால் மனந்தளராதிருக்கவும் அருள்கூரும். இவ்வாறு, உமது ஆசீர்வாதத்தால் இவர்கள் புதுப்பிக்கப்பெற்று, தங்கள் முதுமைக் காலத்தில் உம்மைப் புகழ்ந்தேத்துவதில் ஈடுபடுவார்களாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

10. இ.ப.மு. குருவோ திருத்தொண்டரோ அல்ல என்றால், அவர் கை கூப்பிச் சொல்லும் செபம்:

ஆண்டவரே, எல்லாம் வல்ல இறைவா, நீண்ட கால முதுமையை இவ்வடியார்களுக்கு அளித்துள்ளீர்; நீர் இவர்களோடு இருப்பதை இவர்கள் உணருமாறு உமது ஆசியை இவர்களுக்கு அளித்தருளும். இவ்வாறு, கடந்த காலத்தைக் காண்பதால் எழும் கவலைகளை உமது இரக்கத்தால் போக்கி, வருங்காலத்தை இவர்கள் உறுதியான நம்பிக்கையோடு எதிர்நோக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

சடங்கின் முடிவு

11. குரு அல்லது திருத்தொண்டர் முதியோர் பக்கம் திரும்பிச் சொல்வது: 

கு/தி: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்களோடு இருப்பாராக.

எல்: ஆமென்.

கு/தி: அவர் உங்களை வழிநடத்த உங்கள் முன்னும், உங்களைத் திடப்படுத்த உங்களுக்குப் பின்னும் இருப்பாராக.

எல்: : ஆமென்,

கு/தி: அவர் உங்களைக் கனிவுடன் கண்ணோக்கி, ஆதரித்து, ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

கு/தி: இங்கு ஒன்றுகூடியிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

12. இ.ப.மு. குருவோ திருத்தொண்டரோ அல்ல என்றால், அவர் கை கூப்பிச் சொல்வது:

ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீங்கு அனைத்திலுமிருந்து பாதுகாத்து, முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக. 

எல்: ஆமென்.